banner ad
Top Ad
banner ad

கிறிஸ்துமஸ் பெருவிழா

எங்கும் சில்லென்ற குளிர், பனி படர்ந்த புல்வெளி. நீண்ட விடுமுறைக்காகவும், அன்பைப் பகிர்ந்துகொள்ளும் சாண்டா  கிளாஸின் பரிசுக்காக ஆவலோடு காத்திருக்கும் குழந்தைகள்…!!! இவ்வாறு உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு எதிர்பார்த்திருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

டிசம்பர் 25 ம் தேதி,  இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழா ஆகும்,  இயேசு கிறிஸ்து மனிதகுலத்தை, பாவ நிலையிலிருந்து மீட்க மனித உருவத்தில் உலகத்திற்கு வந்தார்.

இவ்வுலகத்தில் ஒரு மனிதன் தனது வாழ்வை தொடங்கும் முதல் நாள்தான் அவர்களுடைய பிறந்த நாள். இந்த நாளில்தான் ஒரு மனிதன், உலகில் தன்னுடைய முதல் மூச்சை சுவாசிக்கிறான்.    இது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான நாள். இந்த வாழ்வை, கடவுள் நமக்கு தந்திருப்பதற்கான காரணம்: இறைவனின் விருப்பத்தை உணர்ந்து, நாம் இறைவனோடு நித்திய ராஜ்யத்தில் வாழ்வதற்கு நம்மை தகுதியுள்ளவர்களாக மாற்றிக்கொள்வதற்கே !

இயேசுவின் பிறப்பு தீர்க்கதரிசனமாக முன்னரே அறிவிக்கப்பட்டது.  அதற்கான அடையாளங்களை ஆண்டவர் வெளிப்படுத்தினார். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவீர் ” என்று இசையாஸ்  7: 14இல் சொல்லப்பட்டிருந்தது.  


இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு

             மாசற்ற கன்னிகையான புனித மரியாள்தான், உலக இரட்சகரான இயேசுவை ஈன்றெடுக்கும் தாயாக, கடவுளால்  தேர்ந்தெடுக்கப்பட்டார். கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஊரில் மரியாள் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்கு தாவீதின் சந்ததியரான ஜோசப் என்பவரோடு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.

           ஒருநாள், மரியாள் ஜெபத்தில் இருந்தபோது தேவதூதர் மரியாளிடம் தோன்றி, ” அருள் நிறை பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்முடன் இருக்கிறார்” என்றார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, “இந்த வாழ்த்து எத்தகையதோ” என்று எண்ணிக்கொண்டிருந்தார்.  வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். அவர் பெரியவராய் இருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடையத் தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள்  அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது”  என்றார்.

அதற்கு மரியாள் வானதூதரிடம், “இது எப்படி நிகழும்?  நான் கன்னியாயிற்றே !” என்றார்.   வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்க போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறை மகன் எனப்படும். உன் உறவினராகிய எலிசபெத்தும் தன் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்.  கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை“.

பின்னர் மரியாள், “நான் ஆண்டவரின் அடிமை; உம்  சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார் .  அப்போது வானதூதர் அவரைவிட்டு அகன்றார்.

பண்டைய யூதர்களின் பழக்கவழக்கங்களின்படி, திருமணம் பெற்றோர்களால்  ஏற்பாடு செய்யப்படும். திருமணம் நிச்சயிக்கப்பட்டபின் மணமகள் அவருடைய பெற்றோரின் வீட்டில்  ஒரு வருடம் தங்கியிருப்பார். பின்பு மணமகன், மணமகளைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்த சில நாட்களுக்குப் பின்பு திருமணம் நடைபெறும்.  திருமண விழா ஒரு வார காலம் வரை நீடிக்கும்.

மலட்டுதன்மை கொண்ட  பெண் என்று கருதப்பட்ட எலிசபெத்  ஒரு குழந்தையைக் கருத்தரிக்கிறார்.  ஒரு கன்னி இறையருளால் கருத்தரிக்கிறார். இறைவன் ஒரு குழந்தையாக மனித வரலாற்றில் நுழைகிறார்.  இவையெல்லாம் “கடவுளால் முடியாதது எதுவுமில்லை” என்ற தேவதூதர்  காபிரியேலின் வார்த்தைகளை உறுதிப்படுத்தும் சான்றாகும்.

         “நீங்கள் கூறியது போல் எனக்கு அப்படியே நடக்கட்டும்.” என்று மரியாள்  கடவுளின் சித்தத்தை ஏற்றுக்கொண்டார்.  எல்லாம் வல்ல இறைவனின் விருப்பத்தின்படி “அப்படியே நடக்கட்டும்” என்ற ஏற்றுக்கொண்டதனால் புனித மரியாள் தாயானாள்.

இறைவன் மேல் புனித மரியாளுடைய விசுவாசம்  மற்றும் கீழ்ப்படிதலினால்தான் இந்த இறைசெய்தியானது  தேவதூதுவர் மூலம் அறிவிக்கப்பட்டது. மக்களை இரட்சிப்பதற்கான கடவுளுடைய  திட்டத்திற்கு புனித மரியாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். எந்த சூழ்நிலையிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தவராக புனித மரியாள் நாம் எல்லாருக்கும் கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துரைக்கும் முன்மாதிரியாக இருக்கிறார்.

புனித மரியாள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் குழந்தையைக் கருத்தரிப்பார் என்ற செய்தியை அறிவித்த பின்பு தேவதூதர் புனித ஜோசபின் கனவில் தோன்றி, “மரியாள் ஒரு மகனைப் பெற்றெடுப்பார், நீர்  அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர், அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து காப்பாற்றுவார்” (மத் 1:21).  என்று அறிவித்தார்.  மேலும் தேவதூதுர் ஜோசப்பிடம் மரியாளை,   சட்டப்பூர்வமாக மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

புனித மரியாள் கருத்தரிப்பதை அறிந்த புனித ஜோசப் மனகுழப்பத்தில் இருந்தார்.  அப்போது தேவதூதர் ஜோசப்பிடம் “மரியாள் கருத்தரிப்பது  கடவுளின் அருளால்தான், அஞ்ச வேண்டாம் ” என்றுரைத்தார்.

சர்வ வல்லமையோடு அண்ட சராசரத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுளின் மகன்  இயேசு கிறிஸ்து தன் தெய்வத்தன்மை இழக்காமல், நசரேயனாகிய ஜோசப்பின் மகனாக மனித இயல்பை எடுத்துக்கொண்டார்.  

மரியாள் உறவினர் எலிசபெத்தைச் சந்தித்தல்.

            மரியாளின் உறவினர் எலிசபெத் கருத்தரித்து குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட மரியாள், எலிசபெத்தை  சந்திக்க யூதேயா மலைத்தொடரில் உள்ள எலிசபெத்தின் ஊருக்குப் புறப்பட்டார். அது நசரேயிலிருந்து நூறு மைல்கள் தொலைவில் உள்ளது. சிலநாள் பயணத்திற்குப் பிறகு மரியாள், எலிசபெத்தின் கணவர் சக்கரியாவின் வீட்டிற்கு வந்தார்.    அங்கு எலிசபெத் மரியாளை வரவேற்றார்.

மரியா எலிசபெத்தை வாழ்த்தியபோது, எலிசபெத் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. இது, மரியாள் தெய்வத்தன்மை கொண்ட இறைமகனைக் கருத்தரித்திருக்கிறார் என்பதற்குக்கான   அடையாளமாகும்.

அப்போது, எலிசபெத் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசீர் பெற்றவர். உம்  வயிற்றில் வளரும் கனியாகிய குழந்தையும் ஆசீர் பெற்றதே!.  என் ஆடவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றிளுள்ளே குழந்தை பேறுவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பி நீர் பேறுபெற்றவர்”  என்றார்.

இயேசுவின் பிறப்பு

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.

தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.  தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்

அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. எந்த விடுதியிலும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. நீண்ட முயற்சிக்குப் பிறகு இறுதியாக அவர்கள் தங்குவதற்கு ஒரு மாட்டுத்தொழுவம்தான்  கிடைத்தது.

அந்த மாட்டுத்தொழுவத்தில்தான் மரியாள் குழந்தை இயேசுவை பெற்றேடுத்தார். மாட்டுத்தொழுவத்தில் பிறந்த குழந்தையை கிடத்துவதற்கோ நல்ல இடம் கிடைக்கவில்லை. அப்போது அருகிலிருந்த மாட்டுத் தீவனத்தொட்டி வெறுமையாக இருப்பதைக் கண்டார்கள். மரியாள் குழந்தை இயேசுவை துணிகளில் போர்த்தி  அந்த தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

இடையர்களும் தேவதூதுவர்களும்

அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.

வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.  இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்றார்.

மேலும், வானதூதர் “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.

உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!  உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள்.

வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள்.

பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.

ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறெல்லாம் நிகழ்ந்திருந்தது.

மேய்ப்பர்கள் போன்றவர்களுக்குத் தேவதூதர், மீட்பருடைய வருகைக்கான நற்செய்தியைத் தெரிவித்தார்.  அதற்கு அவர்கள் செவிகொடுத்தார்கள், தங்களுடைய பயன்களையும் கடந்து, உலகில் மற்றவர்களுக்கு அந்த சந்தோஷமான செய்தியை எடுத்து  சென்றார்கள்.

இயேசு பிறப்பின் முக்கியத்துவம்

இயேசுபாலன், இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பரலோகத் தந்தையின் மகன் ஆவார்.  இருந்தாலும் ஒரு ஏழையாகப் பிறக்க விரும்பினார். இவ்வாறு, அவர் தன்னை தாழ்த்திக்கொண்டார்.

இறைமகனான மீட்பர் பிறந்தவுடன் அவரைக் காண முதலில் அழைக்கப்பட்டவர்கள் எளிய, வறிய, கபடமற்ற மேய்ப்பர்கள். ஆகையால், ஏழை எளிய மக்களில் இயேசு தம்மை அடையாளப்படுத்தினார்.

இயேசுபாலன் பிறந்தபோது, வானதூதர்கள் எல்லாம் வல்ல இறைவனைப் போற்றி புகழ்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (லூக்காஸ் 2:14) என்று கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள்.

பிறந்தவுடன் குழந்தை இயேசு துணியால் போர்த்தப்பட்டு மாட்டுத்தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார். அந்த தீவனத் தொட்டியில்தான் மாடுகளுக்கு உணவு தானியங்கள் கொட்டப்படும்.  இது, மீட்பராகிய இயேசுபாலன், உலக மக்கள் அனைவருக்கும் தம்மைத் தூய ஆவிக்குரிய உணவாக தந்துள்ளார், என்பதைக் குறிக்கும்.

கிறிஸ்துமஸ் என்றால் என்ன?  

கிறிஸ்துமஸ் என்பது உன்னத வெளிச்சம். மற்றும், ஆன்மீக ஒளி என்று பொருள். மேலும், இது மனிதகுலத்தின் மேல் இறைவனுடைய அருளையும், அன்பையும், சமாதானத்தையும் குறிக்கிறது. இதன்மூலம் கடவுள் மனித இயல்பை எடுத்துக்கொண்டார்.

கிறிஸ்துமஸ் என்பது அன்பின் வெற்றி.  அன்பையும் சமாதானத்தையும் கொண்டு உலகில் உள்ள மனிதகுலத்தை ஒன்றாக இணைக்க முடியும் என்பதற்கான சான்று இது.  நமக்குள்ளே இயேசு என்ற அன்பு என்ற ஒளி இருக்கிறது. அதன்மூலம் நம்மால் உலகத்தில் உள்ள இருளை அகற்றிவிடமுடியும்.  அன்பென்ற ஒளியைக் கொண்டு, இயேசுவின் கிருபையினால் வறுமை, அநீதி, வன்முறை மற்றும் தீமை போன்றவற்றை நம்மால் நீக்கமுடியும்.  

கிறிஸ்துமஸ் என்பது கடவுள் தமது இறைநோக்கங்களை நிறைவேற்றுகிறார் என்பதாகும். உலகில் கிறிஸ்து இரட்சகராக, மீட்பராக பிறந்தார்.  கிறிஸ்துமஸ் என்பது, கடவுளின் கிருபையினாலும் பிறப்பினாலும், தேவனோடு நமக்கு சமாதானம் கிடைக்கிறது என்பதை உணர்த்துகிறது. நாம் கடவுளுடன் சமாதானமாக இருந்தால், மற்றவர்களுடனும்  சமாதானமாக இருப்போம்.

கிறிஸ்துமஸ் நமக்கு தரும் செய்தி  

கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களின்  புனித நாள் என்பது மட்டுமல்ல மதங்களையும் கடந்து  கொண்டாடப்படும் ஒரு ஒளித்திருவிழா. குடும்பமாக அனைவரும் சேர்ந்து நம்முடைய அன்பைப் பரிசுகளாக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நாள்.    இதன் மூலம் நம்முடைய அன்பின் உறவை மேம்படுத்தலாம்.

உலகமுழுவதும், கிறிஸ்தவத்தில் இயேசுவின் பிறப்பு இருள் சூழ்ந்த உலகில் அன்போடு தோன்றிய ஒளியாக நம்பப்படுகிறது. மற்றவர்களோடு பரிசுகளைப் பகிர்ந்து கொள்வது, இறைமகன் தன் ஒரே மகனான இயேசுவை இந்த மனிதகுலத்திற்குப் பகிர்ந்து கொண்ட மிகப்பெரிய அன்பின் வெளிப்பாட்டைக் குறிப்பதாகும்.  

எல்லாம்வல்ல இறைமகன், எளிமையாக ஏழ்மைப்பட்ட மனிதர்களில் ஒருவராக இந்த மனிதகுலத்தில் பிறந்த போது, எளிய மக்களின்  மீதான இறைவனின் அன்பை வெளிப்படுத்தினார்.

இறை இயேசு ஒளியாக பிறந்தார்.  காரணம், இறை வாழ்வில் குருடராக இருக்கும் நம்மை மீட்கவே. இயேசு நமக்காகத் தன்னை அளித்ததுபோல நாமும் நம்மை இறைவனுக்கு உகந்தவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

உலகின் இருள்

          கிறிஸ்துமஸ் பல ஆவிக்குரிய சத்தியங்களைக் கொண்டுள்ளது. உலகம் ஒரு இருண்ட இடம், இயேசு என்ற ஒளிமட்டுமே நமக்கு வழிகாட்டும்.   “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகம் அவரால்தான் உண்டானது. ஆனால் உலகம் அவரை அறிந்து கொள்ளவில்லை “(யோவான் 1: 9-10).

பைபிளில் “இருள்” என்ற வார்த்தை தீமையையும் அறியாமையையும் குறிக்கிறது.  உலகம் முழுவதும் தீமையும், துன்பமும் நிறைந்ததாக இருக்கிறது. வன்முறை, அநீதி, அதிகார துஷ்பிரயோகம், வீடற்ற தன்மை, அகதிகள், குடும்பங்களில்  பிளவு என்ற இருள் மனிதகுலத்தைச் சூழ்ந்துள்ளது.

        “இருளில் நடக்கிற மனிதர்கள் பேரொளியைக் கண்டார்கள்”  (ஏசாயா 9: 2).  இதுவே, கிறிஸ்துமஸ் என்ற வார்த்தைக்கான பொருள்.

இயேசு மனிதனாக இருக்கிறார்   

இறைவனாகிய  இயேசு நம்மில் ஒருவராக நிறைந்துள்ளார்.  கிறிஸ்தவ கோட்பாட்டில் இயேசுவின் அவதாரத்தில், இயேசு மனிதராக பிறந்தாலும் உண்மையில் அவர் முழுமையான இறைவனே.  

கிறிஸ்துமஸ் கோட்பாடு என்பது, இரக்கத்தினால் கிடைத்த விடுதலை  

         கிறிஸ்துமஸ் என்பது இறைவனின் கருணையால் மனிதகுலத்திற்குக் கிடைத்த இரட்சிப்பு. இறைவனின்  கருணையால் மட்டுமே நம்மால் கடவுளுடன் சேர முடியும்.   1 யோவான் 1: 1ல்  இயேசு “ஜீவ வார்த்தை” என்றும்    “நித்திய ஜீவன்” என்றும் அழைக்கப்படுகிறார்.  

நாமும் மகிழ்வோம்          

         கிறிஸ்துமஸ் என்பது, நமக்காக நம்மில் வந்த மகிழ்ச்சியைக் குறிக்கிறது. புனித யோவான் “நீங்கள் கடவுளோடு நிறைந்திருப்பதே உண்மையான மற்றும் முழுமையான மகிழ்ச்சி” என்கிறார். யோவான் 16:22-ல் “இயேசுவினுடைய  சீடர்களின் மகிழ்ச்சி அசைக்கமுடியாது” என்று கூறப்பட்டுள்ளது.

         கிறிஸ்துமஸ் என்பது கடவுளின் மீதான நம்முடைய மகிழ்ச்சியையும், நம்மேல் கடவுளுடைய அன்பையும், அக்கறையையும் உறுதிப்படுத்துகிறது.

கிறிஸ்துவர்களுடைய வாழ்வானது, மிகப்பெரிய செயல்கள் மற்றும் சாதனையால் ஆனதல்ல.  ஆரம்பத்தில் எளிய, சாதாரண, பணிவான செயல்களால்தான் தொடங்குகிறது. நம்முடைய வாழ்வில் தினமும் கீழ்ப்படிதல், ஜெபம் செய்தல் மேலும்   ஒருவர் ஒருவருக்கு இடையேயான சகோதர சேவை செய்வதன் மூலம் கிறிஸ்துவில் நம் விசுவாசம் சிறிது சிறிதாக வளரும். அதன் மூலம், நமது வாழ்வின் அஸ்திவாரம் ஆழ்ந்த ஆற்றலுடன் அமையும்.

கிறிஸ்துமஸ் பிரகடனம்  

கிறிஸ்துமஸ் பிரகடனம் என்பது, “கடவுள் பாவிகளை இரட்சிப்பதற்காக வந்தார்” என்பதே. நாம் பழைய பாவ வாழ்க்கையை விட்டுவிலகி கடவுளின் இரட்சிப்பைப் பெறுகிறோம்.

கிறிஸ்துமஸ் நம் அனைவருக்கும் சமாதானத்தைத் தருகிறது. இயேசு தனது மலைப் பிரசங்கத்தில் தம் சீடர்களிடம் “சமாதானம் பண்ணுகிறவர்கள் பேறுபெற்றோர்” (மத் 5: 9) என்று கூறுகிறார்.

நாம் ஒருவர் ஒருவருடன் சமாதானம் செய்வதன் மூலம், மனச்சோர்வு நீங்கி, நம் பலவீனத்தை ஒப்புக்கொண்டு, நம்முடைய தற்பெருமையைத் தவிர்த்து நம் வாழ்க்கை சூழலைச் நமக்காக மாற்றிக்கொள்ளலாம்.   ஒருவர் ஒருவரை அன்பு செய்பவர்கள் சமாதானம் பெறுகிறார்கள்.

 

அன்பும் சமாதானமும் மக்களிடையே மோதல்களைத் தவிர்த்து, நல்லிணக்கத்தை உருவாக்கும் மகத்தான சக்தியைக் கொண்டுள்ளது. கிறிஸ்துமஸின் மூலம் உலகம் முழுவதும் குடும்பங்களுக்குள்ளும், அண்டை  நாடுகளுக்குள்ளும் சமாதானம் நிரம்ப வேண்டும்.

ஏழைப் பெற்றோருக்கு இயேசு பிறந்தார். அவரது பிறப்பு குறிப்பிடத்தக்கது. அவருடைய பிறப்பு பெத்லகேமில் ஒரு மாட்டுத்தொழுவத்தில் நடந்தது. ஏழைகளோடு தன்னை அடையாளம் கண்டுகொண்டு, மக்களை இரட்சிப்பதற்காக ஆவிக்குரிய உணவாக இறைமகன் இயேசு இந்த உலகில் அவதரித்ததை உலகெங்கும் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகிறோம்.

இயேசுவின் பிறப்பால் மனிதகுலத்தின் மேல் இறைவனின் எல்லையற்ற அன்பு வெளிப்படுகிறது.

கிறிஸ்துவின் மேலாதிக்கம் (கொலோசியர் 1: 15-20)

    “அவர் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் உருவம், எல்லா படைப்புகளுக்கு முன்பாக தோன்றியவர்.   பரலோகத்திலும் பூலோகத்திலும் காணப்படுகிற சிம்மாசனங்களோ, ஆட்சிசெய்பவர்களோ, அதிபதிகளோ, அதிகாரங்களோ, சகலமும் அவரால் அவருக்காக உண்டாக்கப்பட்டவை.     அவர் எல்லாவற்றிற்கும் மேலானவர். துவக்கமும் முடிவும் அவரே. எல்லாம்வல்ல இறைவனே சகலத்தையும் இணைக்கிறார். பூமியில் தம்முடைய சிலுவையின் இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கினார்.”

 

உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும்

இயேசு பாலனின் இறை அருள் நிரம்ப,

அன்பின் விழாவான, சமாதானத்தின் விழாவான,

ஒளியின் விழாவான

கிறிஸ்துமஸ் பெருவிழாவின்  வாழ்த்துக்கள்.

Dr. அந்தோனி தாமஸ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad