banner ad
Top Ad
banner ad

யார் அந்த இராவணன் பகுதி – 1

ravanan_620x829வலவன் ஏவா வான ஊர்தி

விமானம் அல்லது வானூர்தி என்பது புவியின் வளிமண்டலத்தின் உதவியுடன் பறக்கக்கூடிய ஓர் உந்துப்பொறியாகும். இது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கிறது. புவியீர்ப்பு விசையை மீறி வானில் பறக்கக் காற்றிதழின் நிலை ஏற்றத்தையோ இயக்க ஏற்றத்தையோ பயன்படுத்துகிறது. சுமார் 1890களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு ஆர்வில் ரைட்  (Orville Wright)  வில்பர் ரைட் (Wilbur Wright) என்னும் இரு உடன்பிறந்தார்கள் (Wright brothers) முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் படைத்தார்கள். அமெரிக்காவில் உள்ள வட கேரோலைனா (North carolina) என்னும் மாநிலத்தில் உள்ள கிட்டி ஹாக் (Kitty Hawk) என்னும் இடத்தில் இது நடந்தது.

இது இவ்வாறிருக்க தமிழ் இலக்கியங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே வானூர்தி பற்றிய பல குறிப்புக்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது. சங்க இலக்கியமான புறநானூறில் வரும் பாடல் ஒன்றைக் கீழே பாருங்கள் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அவர்களால் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பொதுவியல் திணையில் பாடப்பட்ட பாடல் இது.

சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,

நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,

வேற்றுமை ‘இல்லா விழுத்திணைப் பிறந்து,

வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,

உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:

‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

“வலவன் ஏவா வான ஊர்தி“

எய்துப என்ப, தம் செய்வினை முடித்து’ எனக்

கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!

தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,

மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,

அறியா தோரையும், அறியக் காட்டித்,

திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,

வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,

அருள வல்லை ஆகுமதி; அருளிலர்

கொடா அமை வல்லர் ஆகுக;

கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.

(புறநானூறு – 27)

வலவன் ஏவா வான ஊர்தி ” என்ற வரி விமானத்தை ஓட்டுபவர் இல்லா வானவூர்தியைக் கொண்டிருந்தான். என்று கூறுகின்றது. புறநானூறு, விமான ஓட்டியை (PILOT) ”வலவன்” எனஅழைக்கின்றது. விமானம் பற்றிய குறிப்பே ஆச்சரியத்துக்குரியதாக இருக்கும் போது ஆளில்லாமல் பறக்கும் விமானம் (Drones) பற்றிய குறிப்பு மிகவும் கவனிப்புக்குரியது.

சங்கமருவிய காலத்து மணிமேகலை மற்றும்  சீவகசிந்தாமணி, பெருங்கதை, போன்றவற்றிலும் விமானம் பற்றிய கருத்துக்கள்  காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக ஒரு காட்சியினை இளங்கோவடிகள் (சிலம்பு 3:196 – 200 ) காட்டுவதினால் விமானம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே தமிழன் விமானத்தில் பறந்ததது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் குறிப்பிட்ட மயில்பொறியின் (மயில் போன்ற பறக்கும் பொருள்) செய்தியானது விமான அறிவை வெளிப்படுத்துகிறது.

“எஃகு என விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்

அஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்

வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப

எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள்”

(சீவ.சி.299)

“அதன் பொறியினை வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக ”திருகுவதன் மூலம் அம்மயிற் பொறியை வானமேகங்களிடையே பறக்கவோ தரையில் இறக்கவோ முடியும் என்று விமானம் இயக்கும் முறை பற்றியும் திருத்தக்கதேவர் குறிப்பிடுகின்றார்.

ravanan_2_620x620இராமாயணத்தில் இராவணன் செலுத்திய புஷ்பக விமானம் சீவகசிந்தாமணியில் விவரித்த மயில்பொறி விமானத்தை விட எல்லாவகையிலும் மேம்பட்டது என்கின்றனர் சான்றோர். மணிமேகலையிலும் கூட வான்வழிப் பயணங்கள் பற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இராமாயணத்தில் இராவணன் புஷ்பக விமானத்தில் பறந்ததாகவும். மயன் என்பவனின் கைவண்ணத்தினால் இது உருவாகியதாகவும். குபேரன் என்னும் மன்னனுக்கே இப்புஷ்பக விமானம் சொந்தமானது எனவும் இதை இராவணன் கைப்பற்றி உலகை வலம் வந்தான் எனவும் கம்பராமாயணம் குறிப்பிடுகின்றது.

இதன் ஆதாரமாக இலங்கையிலுள்ள நுவரேலியாவில் இராவணன் இராமரின் மனைவியான சீதையை சிறை வைத்ததாகக் கூறப்படும் சீதாஎலிய என்று ஒரு இடம் உண்டு. இந்த இடத்திலிருந்து உலகத்தின் முடிவு (World End) என்று அழைக்கப்படும் இடம் நோக்கிக் கிட்டத்தட்ட 8 மைல் தூரம் வரை சென்றால் குவான் பொல (Guvaan Pola) என்ற இடத்தை அடையலாம். இச் சிங்களப் பெயரின் தமிழ் வடிவம் விமானச்சந்தை என்பதே இந்த இடத்தில் விமானத்தின் இரு ஓடுபாதைகள் இருந்ததற்கான அடையாளங்களாக மலையில் நீண்ட மலைச் சமவெளிகளைக் கொண்ட இரு பிரதேசங்கள் உண்டு. இது இராவணன் பயன் படுத்தியதாகக் கூறப்படும் புஷ்பக விமானத்தின் ஓடுபாதை என்பது பலரது கூற்று.

ராவணனின் புஷ்பக விமானம் எண்ண அலைகளால் பறந்ததாக வான்மீகி ராமாயணம் குறிப்பிடுகின்றது. நினைத்த மாத்திரத்தில் பறக்க வல்லது. என்று இராமாயணம் குறிப்பிடுகின்றது. இதனை நிரூபிப்பதுபோல் 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மினசோட்டாப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த ஆய்வு ஒன்றில் மாணவன் ஒருவன் தனது தலையில் “எலக்ட்ரோட்ஸ்’’ இணைக்கப்பட்ட தலைக் கவசத்தை அணிந்து கொண்டு “ விமானமே பற…. விமானமே திரும்பு… விமானமே இறங்கு…” எனப் பல கட்டளைகளை மனத்தால் நினைத்த மாத்திரத்தில் மூளையில் இருந்து கிளம்பிய எண்ண அலைகள் தலைக் கவசத்தில் உள்ள இணைப்புகள் மூலம் அனுப்பப்பட மாதிரி விமானம் தானாகப் பறக்கிறது என்று நிரூபித்தான். இந்த நிகழ்வானது இராமாயணத்தில் சொல்லப்பட்ட இராவணனின் புஷ்பக விமானத்துடன் ஒத்துப் போவதை நான் வியந்து பார்க்கிறேன்.

இன்னும் வளரும்…

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad