மினசோட்டாவில் வைகாசி விசாக முருகர் வழிபாடு
மினசோட்டா மாநிலத்தில் வசிக்கும் முருகப் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நடத்திய வைகாசி விசாகத் திருவிழா மே 31, 2026 அன்று ஹப்கின்ஸ் ஆக்டிவிட்டி சென்டரில் (Hopkins Activity Center) பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
அன்று மதியம் 3:00 மணிக்கு வைகாசி விசாக சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. மினசோட்டா ஹிந்து மந்திர் அர்ச்சகர் கௌரி சங்கர் அவர்கள் முருக வழிபாட்டுச் சடங்குகளை முறைப்படி முன்னின்று நடத்தினார். பூஜையின் போது, திரளாகக் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முருகப் பெருமானின் புகழ்பாடும் பக்தி பஜனைகள் மற்றும் திருப்புகழ் பாடல்களைப் பாடினர். அரோகரா கோஷங்களுடன் ஒட்டுமொத்த அரங்குமே ஆன்மீக அதிர்வலையால் நிறைந்து காணப்பட்டது.
பூஜை வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதமும், இரவு உணவும் பரிமாறப்பட்டது. இந்த உணவுகள் அனைத்தையும் இங்கு வசிக்கும் முருக பக்த தன்னார்வலர்களும் அவர்களது குடும்பத்தினரும் இணைந்து, தங்களின் இல்லங்களிலேயே சிறப்பான முறையில் தயாரித்து வழங்கினர்.
இந்நிகழ்வின் போது, மினசோட்டா முருகன் ஆலய அறக்கட்டளை (Minnesota Murugan Temple Foundation) சார்பில் ஒரு முக்கியத் தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் மினசோட்டா பகுதியில் ஒரு புதிய முருகர் கோவிலைக் கட்ட வேண்டும் என்ற தங்களின் உயரிய விருப்பத்தை அறக்கட்டளையினர் பக்தர்களிடம் தெரிவித்தனர்.
இந்த ஆன்மீகக் கனவை நனவாக்குவதற்குக் கூட்டு முயற்சி அவசியம் என்பதைக் குறிப்பிட்ட நிர்வாகிகள், இதற்கான முதற்கட்டப் பணிகளுக்குப் பேராதரவு வழங்குமாறும், தங்களால் இயன்ற நன்கொடைகளை அளிக்குமாறும் பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். திரளான உள்ளூர் தமிழ் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, மினசோட்டாவில் ஒரு புதிய கோவில் உருவாவதற்கான முதற்கட்டப் புள்ளியாக அமைந்துள்ளது.
இத்திருவிழா குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கும், மினசோட்டா முருகன் ஆலய அறக்கட்டளையின் எதிர்கால நிகழ்வுகள் மற்றும் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளைப் பெறுவதற்கும் www.mnmurugar.org என்ற இணையதளத்தைக் காணலாம்.
- சரவணகுமரன்






