\n"; } ?>
Top Ad
banner ad

அமெரிக்காவில் தலையெடுக்கும் ‘புனிதப் போர்’

நவீன அமெரிக்க அரசியல் இன்று ஒரு வினோதமான திருப்பத்தில் வந்து நிற்கிறது. தனிமனித நம்பிக்கையாக இருக்க வேண்டிய மதம், அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளையும், போர் முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறி வருவதைப் பார்க்க முடிகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான தற்போதைய ஆட்சியில், ‘கிரிஸ்துவ தேசியவாதம்’ (Christian Nationalism) என்ற சித்தாந்தம் வலுப்பெறுவதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். கூடவே இந்த சித்தாந்த நகர்வு உள்நாட்டு அரசியல் கருவியாக மட்டுமல்லாமல், ஒரு சர்வதேச ஆயுதமாகவும் பரிணமித்து வருவது அபாயம் மிகுந்தது. 

வரலாற்று வேர்கள்: அரசியலில் கலந்த மதம்

அமெரிக்க வரலாற்றில் “கிறிஸ்துவ தேசியவாதம்” என்பது ஒரு புதிதல்ல. அமெரிக்கா ஒரு “கிறிஸ்துவ தேசம்” என்றும், அதன் சட்டங்கள் விவிலிய அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கருதும் போக்கு பல்வேறு காலக்கட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. 1860களில் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான உள்நாட்டுப் போர் நடந்தபோது, வட மாநிலங்களைச் சேர்ந்த (Union) பல மதத் தலைவர்கள், நாடு கடவுளை மறந்துவிட்டதால் தான் இந்தத் தண்டனை கிடைப்பதாக வாதிட்டனர். ஏறக்குறையே அதே காலக்கட்டத்தில் உருவான “தேசிய சீர்திருத்த சங்கம்” (National Reform Association) அமெரிக்க அரசியலமைப்பில் இயேசு கிறிஸ்துவை “நாட்டின் ஆட்சியாளர்” என்று அங்கீகரிக்க வேண்டும் எனப் போராடியது. அதன் விளைவாக அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், 1864-ல் அமெரிக்க நாணயங்களில் முதன்முதலாக “In God We Trust” என்ற வாசகம் அச்சிடப்பட்டது. 

பின்பு, 1950களில், அமெரிக்க-ரஷ்யப் பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, சோவியத் யூனியனின் ‘கடவுள் மறுப்புக் கொள்கை’ கொண்ட கம்யூனிசத்திற்கு எதிராக அமெரிக்காவை நிலைநிறுத்த மதம் ஒரு முக்கியக் கருவியாகப் பயன்பட்டது. இதன் எதிரொலியாக அமெரிக்க உறுதிமொழியில் ‘கடவுளின் வழிகாட்டுதலுக்கு உட்பட்ட தேசம்’ (“One Nation Under God”) எனும் வாக்கியம் சேர்க்கப்பட்டது. ‘கடவுளையே நாம் நம்புகிறோம்’ (‘In God We Trust’) எனும் வாக்கியம் அதிகாரப்பூர்வ தேசிய முழக்கமாக அறிவிக்கப்பட்டது.

மதவாத வலதுசாரிகளின் எழுச்சி

1980களில் ரொனால்ட் ரீகன் காலத்தில், கிறிஸ்துவ தேசியவாதம் ஒரு வலிமையான அரசியல் சித்தாந்தமாக, “மதவாத வலதுசாரிகளின் எழுச்சி”யாக (Rise of the Religious Right) உருவெடுத்தது. ஜெர்ரி ஃபால்வெல் (Jerry Falwell) போன்ற மதபோதகர்கள் “தார்மீகப் பெரும்பான்மை” என்ற அமைப்பை உருவாக்கி, ரொனால்ட் ரீகனின் பிரச்சாரங்களில் கிறிஸ்துவ வாக்காளர்களை ஒருங்கிணைத்து, “அமெரிக்காவை மீண்டும் ஒரு கிறிஸ்துவ தேசமாக மாற்ற வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்தனர். ரீகன் அதிபரான பின்பு, கருக்கலைப்பு எதிர்ப்பு, பள்ளிகளில் கட்டாயப் பிரார்த்தனை போன்ற விவிலியக் கோட்பாடுகளைச் சட்டமாக்க இவர்கள் ரீகனுக்கு ஆதரவு அளித்தனர். குடியரசுக் கட்சிக்கும் (Republican Party) தீவிர கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பு இங்கிருந்துதான் தொடங்கியது.

ரொனால்ட் ரீகன் காலத்தில் உச்சத்தில் இருந்த கிறிஸ்துவ மதவாதம் (Christian Right) முழுமையாக மறைந்துவிடவில்லை என்றாலும், 1990-களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சி, பில் கிளிண்டனின் பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள், மதவாதத் தலைவர்களின் வீழ்ச்சி, உலக மயமாக்கலின் தொடக்கம் போன்ற காரணங்களால் வேகம் தளர்ந்தது. 2001 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவின் கவனம் “உள்நாட்டு தார்மீகப் போரில்” இருந்து “பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு” மாறியது. மதச்சார்பற்றவர்களின் (Nones) எண்ணிக்கை அதிகரித்ததும் இந்த மாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.

இந்தத் தளர்வு என்பது ஒரு தற்காலிக இடைவெளி மட்டுமே. 2010-களின் இறுதியில், பொருளாதார நெருக்கடி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பின்மை காரணமாக, அதே பழைய கிறிஸ்துவ தேசியவாதம் மீண்டும் ஒரு புதிய வேகத்துடன் ட்ரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் உருவெடுத்தது. இது பழைய “தார்மீகப் போரை” விட இப்போது அதிக “அரசியல் அதிகாரப் போராக” மாறியுள்ளது.

போப் vs ட்ரம்ப்: இரு துருவங்களின் மோதல்

குறிப்பாக, தற்போதைய போப்பாண்டவரான போப் லியோ XIV-க்கும், அதிபர் ட்ரம்பிற்கும் இடையிலான உறவு வெறும் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி ஒரு பனிப்போராகவே உருவெடுத்துள்ளது. வாடிகனின் முதல் அமெரிக்கப் போப்பான லியோ XIV, தனது முன்னோடியான போப் பிரான்சிஸின் முற்போக்கான கொள்கைகளையே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். இதனால் ட்ரம்ப் நிர்வாகத்துடனான மோதல் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

கடந்த 2016-ல், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அப்போதைய போப் பிரான்சிஸ், “பாலங்களை அமைப்பதற்குப் பதிலாக, சுவர்களைக் கட்டுவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ஒருவர் கிரிஸ்துவர் அல்ல” என்று கூறினார். இதற்குப் பதிலடியாக, “ஒரு மதத் தலைவர் ஒரு நபரின் நம்பிக்கையைக் கேள்வி கேட்பது வெட்கக்கேடானது” என்று ட்ரம்ப் சாடினார். மேலும், “வாடிகன் ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகளால் தாக்கப்படும்போது, டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்திருக்க வேண்டும் என்று போப் பிரார்த்தனை செய்வார்” என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

அடிப்படையில், மறைந்த போப் பிரான்சிஸ் மற்றும் தற்போது பதவியில் இருக்கும் போப் லியோ XIV ஆகிய இருவரும் கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் மிகவும் முற்போக்கான (Liberal) தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் ஏழைகள், அகதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது ‘அமெரிக்காவுக்கே முதலிடம்’ மற்றும் ‘தேசியவாதம்’ பேசும் டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. இவர்களுக்கு இடையிலான இந்தப் பிணக்கு, இன்று அமெரிக்காவில் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்கர்களிடையே யாருக்கு அதிக செல்வாக்கு எனும் ஒரு தார்மீக மோதலாகத் தொடர்கிறது.

சமீபத்திய ஈரான் மோதல்களின் போது, போப் லியோ XIV விடுத்த அமைதி அழைப்பை ட்ரம்ப் நிர்வாகம் “பலவீனமான நிலைப்பாடு” என்று விமர்சித்தது. அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு போப்பாண்டவரே ட்ரம்பின் ‘புனிதப் போர்’ (Crusade) போன்ற சொல்லாடல்களைக் கண்டிப்பது, உலக அரங்கில் இருவருக்கும் இடையிலான இடைவெளியை இன்னும் அதிகரித்துள்ளது.”

எவாஞ்சலிக்கல் அரசியல் சூட்சுமம்

அதிபர் டிரம்ப், ‘எவாஞ்சலிக்கல்’ பின்னணியில் இருந்து வராதவர் என்றாலும்,  அந்த பிரிவினரைத் தனது மிக முக்கியமான அரசியல் அடித்தளமாகக் கருதி அவர்களைத் தீவிரமாக ஆதரிக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே போல், அந்த மதப்பிரிவினரும் அவருக்குப் பெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர். 2016 மற்றும் 2020 தேர்தல்களில் 80% அதிகமான எவாஞ்சலிக்கல் வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவளித்துள்ளதாக தரவுகள் சொல்கின்றன. இவர்களின் ஆதரவைத் தக்கவைக்க, அவர்களின் மத மற்றும் சமூகக் கொள்கைகளை டிரம்ப் முன்னெடுக்கிறார்.

கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததில் முக்கிய பங்கு வகித்த பழமைவாத நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தில் நியமித்தது, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது, மத நிறுவனங்கள் அரசியல் பேசவும், செயல்படவும் அதிக சுதந்திரம் அளிக்கும் சட்டங்களுக்கு ஆதரவளித்தது போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். தனது நிர்வாகத்தில் பல எவாஞ்சலிக்கல் போதகர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ள்தும், பிரச்சாரக் கூட்டங்களில் அவர்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதன் மூலம் அவர் அந்தப் பிரிவினருடன் ஒரு நெருக்கமான உறவை வெளிப்படுத்திக் கொள்கிறார். 

டிரம்ப் தன்னை “மதப்பிரிவு சாராத கிரிஸ்துவர்” என்று அறிவித்துக் கொண்டாலும், எவாஞ்சலிக்கல் பிரிவினரை ஆதரிப்பதில் அரசியல் சூட்சுமம் உள்ளது. எவாஞ்சலிக்கல் பிரிவினர் பெரும்பாலும் தேசியவாதத்தையும் (Nationalism), கத்தோலிக்கத் தலைவரான போப் ஆண்டவர் உலகளாவிய மனிதாபிமானத்தையும் (Globalism) முன்னிறுத்துகிறார்கள். எவாஞ்சலிக்கல் பிரிவினரை ஆதரிப்பதன் மூலம் தனது அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்கிறார் டிரம்ப்.

அமெரிக்காவின் மிகப்பெரிய வாக்காளர் குழுவான எவாஞ்சலிக்கல் கிறிஸ்துவர்கள் தங்களை ஆதரிப்பது இஸ்ரேலுக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் மற்றும் இராணுவப் பாதுகாப்பைத் தருகிறது. எவாஞ்சலிக்கல் பிரிவினரில் பெரும்பாலோனோர் இஸ்ரேல் நாடு யூதர்களுக்கே சொந்தமானது என்றும், அது கடவுளால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம்” என்றும் கருதுகிறார்கள். ஜெருசலேம் நகர் யூதர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற இவர்களது நம்பிக்கையை நிறைவேற்றியதில் டிரம்புக்கும் பங்குண்டு. 2017ஆம் ஆண்டு, டிரம்பின் நிர்வாகம், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து, அது வரையில் டெல்-அவிவில் இருந்த அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியது, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததும் இந்த எவாஞ்சலிக்கல் – இஸ்ரேலிய கூட்டணியை மேலும் பலப்படுத்தியது. டிரம்பின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் இந்த எவாஞ்சலிக்கல் குழுக்களின் அழுத்தம் மிக அதிகமாக உள்ளதைப் புறந்தள்ளிவிட முடியாது. 

‘புனிதப் போர்’ எனும் அபாயம்

ஈரானுடன் ஏற்பட்ட மோதல்கள் வெறும் எண்ணெய் அல்லது அணுசக்தி தொடர்பானவை மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு மதவாதப் போர் முழக்கம் ஒளிந்துள்ளது. தற்போதைய பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் போன்றவர்கள் ஈரானுடனான போரை ஒரு “புனிதப் போர்” அல்லது “சிலுவைப் போர்” (Crusade) போன்றே சித்தரிக்கின்றனர். ஈரானை விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘தீய சக்தியாக’ உருவகப்படுத்தி, அதனுடனான போர் உலக முடிவுக்கான தொடக்கம் என்றும் ‘இறுதி காலப் போர்’ (Armageddon) என்றும் சில தீவிர மதவாதக் குழுக்கள் வாதிடுகின்றன. இதன் மூலம் இராணுவ வீரர்களிடையே மத ரீதியான உந்துதலை ஏற்படுத்துவது பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

பள்ளிகளில் நுழையும் மதம்

அதிபர் டிரம்பின் மதப் பின்னணி நடவடிக்கைகள், சில மாநில அரசுகளுக்கு புதிய உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளித்துவருவதை காணமுடிகிறது. சமீபத்தில், டெக்சாஸ் மாநில அரசுப் பள்ளிகளில் ‘பத்து கட்டளைகளை’ (Ten Commandments) ஒரு பாடமாகவோ அல்லது வகுப்பறைகளில் காட்சிப்படுத்துவதையோ கட்டாயமாக்க எடுத்துவரும் முயற்சிகள் தற்போது அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. டெக்சாஸ் மாநில சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை ஆதரிக்கும் பழமைவாத உறுப்பினர்கள், ‘இது வெறும் மதப் போதனை மட்டுமல்ல; மேற்கத்திய சட்ட அமைப்பிற்கும், அமெரிக்காவின் விழுமியங்களுக்கும் அடிப்படையாக விளங்கிய ஒரு வரலாற்று ஆவணம். பள்ளிகளில் தார்மீக ஒழுக்கத்தையும், மத பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க இது உதவும்’ என்று வாதிடுகிறார்கள். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல மதத் தலைவர்கள் ‘அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தம் (First Amendment), அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை உயர்த்திப் பிடிக்கக்கூடாது என்று கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தின் கட்டளைகளைப் பள்ளிகளில் வைப்பது இதற்கு எதிரானது’ என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டை மட்டும் முன்னிறுத்துவது மற்ற மாணவர்களிடையே அந்நியப்பட்டு இருக்கும் உணர்வை ஏற்படுத்தும்.

Stone v. Graham வழக்கு

டெக்சாஸ் மாநிலத்தின் இந்த முயற்சி புதிதல்ல. ஏற்கனவே 1978-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் கென்டக்கி (Kentucky) மாநிலம், அங்குள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளிலும் கிறிஸ்துவ மதத்தின் ‘பத்து கட்டளைகளை’ ஒரு சுவரொட்டியாக ஒட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கியது.

இதனை எதிர்த்து  ‘சிட் ஸ்டோன்’ மற்றும் சில பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில் (Stone v. Graham) உச்ச நீதிமன்றம், ‘பத்து கட்டளைகள்’ என்பது அடிப்படையிலேயே ஒரு மதக் கோட்பாடு. அதை வகுப்பறையில் வைப்பதன் நோக்கம் மாணவர்களை மத ரீதியாகத் தூண்டுவதே தவிர, வரலாறு கற்பிப்பது அல்ல என்று நீதிமன்றம் கருதியது. தொடர்ந்து இது போன்ற சட்டங்களைக் கலிஃபோர்னியா போன்ற மாநிலங்கள் கொண்டு வந்தபோதும், அது அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் டெக்சாஸ், லூசியானா போன்ற மாநிலங்கள் மீண்டும் இவ்வித மதக்கோட்பாடுகளை பள்ளிகளில் நுழைக்க முயல்வது ஆபத்தானது. 

மினசோட்டா மாநில கேபிட்டல் மற்றும் புனித பால் கதீட்ரல் ஆகியவற்றின் உயர வேறுபாடு (223 அடி vs 306 அடி) ஒரு தற்செயலான நிகழ்வல்ல. இது “சட்டத்தை விட ஆன்மீகம் உயர்ந்தது” என்ற குறியீடாகவே மக்களால் பார்க்கப்படுகிறது. இத்தகைய குறியீடுகள் தான் இன்று ‘பத்து கட்டளைகளை’ பள்ளிகளில் கட்டாயமாக்கும் சட்டங்களுக்குத் தார்மீகத் துணிச்சலைத் தருகின்றன. இது ஒரு “அலை” போல மற்ற மாநிலங்களுக்கும் பரவுமோ என்ற அச்சம் பரவலாக உள்ளது என்றாலும் இதனை எதிர்த்து ACLU மற்றும் Americans United for Separation of Church and State போன்ற அமைப்புகள் ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இத்தகைய சட்டப் போராட்டங்கள் தான் பிற மாநிலங்கள் இதனைப் பின்பற்றுவதற்குத் தடையாக இருக்கும்.

இந்திய நிலையும் உலகளாவிய போக்கும்

மதக் கோட்பாடுகளை அரசியலில் திணிக்கும் முயற்சி என்பது இன்று பல நாடுகளில் ஒரு சர்வதேசப் போக்காகவே மாறியுள்ளது. அமெரிக்காவைப் போலவே, பல நாடுகள் தங்களின் தேசிய அடையாளத்தை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் பிணைக்க முயல்கின்றன. 

இந்திய அரசியலமைப்பின்படி அது ஒரு மதச்சார்பற்ற (Secular) நாடாக இருப்பினும், சமீபகாலமாக இந்திய அரசியலிலும் மதத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவு குறித்த விவாதங்கள் உலக அளவில் உற்று நோக்கப்படுகின்றன. 

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மாநிலப் பாடப்புத்தகங்களில் மத இதிகாசங்கள் அல்லது கலாச்சார விழுமியங்களைச் சேர்ப்பது குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுகின்றன. சில மாநிலங்களில் பகவத் கீதை போன்ற நூல்களை தார்மீகக் கல்வியின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் தற்போது நிலவும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code – UCC) விவாதம் முக்கியமானது. திருமணங்கள் மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் மத அடிப்படையில் (Personal Laws) வெவ்வேறு பிரிவினருக்கு வெவ்வேறாக உள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சி, மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு தரப்பினராலும், மத அடையாளங்களைச் சிதைக்கும் நடவடிக்கையாக மற்றொரு தரப்பினராலும் பார்க்கப்படுகிறது. 

துருக்கி, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் அரசு செயல்பாட்டிலும் மதவாதம் நுழைந்துள்ளதை காணமுடிகிறது. மேலும் பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா போன்ற பல நாடுகள் தங்களை இஸ்லாமிய குடியரசாகவே பிரகடனம் செய்துக் கொள்கின்றன.

மதக் கோட்பாடுகள் அரசு நடவடிக்கைகளில் திணிக்கப்படும்போது, அந்தத் தேசம் சந்திக்கும் எதிர்மறை விளைவுகள் மிகக் கடுமையானவை. மதத் தீவிரவாதம், சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுதல், கல்வி மற்றும் அறிவியலில் பின்னடைவு என்ற உள்நாட்டு பிரச்சனைகள் மட்டுமல்லாமல் சர்வதேச உறவுகளிலும் விரிசல்களை உண்டாக்குகின்றன. இக்கோட்பாடுகளை அரசியலில் புகுத்தும் எந்த ஒரு நாடும், காலப்போக்கில் தனது பன்முகத்தன்மையையும் ஜனநாயகப் பண்புகளையும் இழந்துவிடுகிறது. ஜனநாயகம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. அங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் ‘புனிதப் போர்’ கனவுகளுக்கு இடமிருக்கக் கூடாது. மதவாதம் என்பது ஒரு தேசத்தைப் பல கூறுகளாகப் பிரித்துச் சிதைத்துவிடும் ஒரு நச்சு. அமெரிக்கா தனது மதச்சார்பற்ற அடையாளத்தை இழந்தால், அது உலக நாடுகளின் அமைதிக்கே பெரும் அச்சுறுத்தலாக முடியும். விழிப்புணர்வுள்ள குடிமக்களாக, இந்த மதவாத ஊடுருவலை முளையிலேயே அடையாளங்கண்டு கிள்ளியெறிவது காலத்தின் கட்டாயம்.

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad