Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை

உலக வரலாற்றினை நோக்குமிடத்து, தமிழரின் வரலாறும் பண்பாடும் தனித்துவம் வாய்ந்தது. மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கும் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் முன்னோடிகள் தமிழர்களே! இதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இவ்விலக்கியங்கள் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறத்தையும் நீதியையும் எடுத்துரைப்பதோடு, அவன் உயிர் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாகிய நீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும் கூறுகின்றன. அவ்வகையில், நீதி இலக்கியமென்று போற்றப்படும் நான்மணிக்கடிகை நீர் சேகரிப்பின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் முன் வைக்கிறது. இதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

நீர் மேலாண்மை

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்கள் இயக்கத்திற்கும் நீரே முதன்மை ஆதாரமாகும். இதனையே, 

நீர்இன் றமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

வான்இன் றமையா தொழுக்கு (குறள். 20) 

என்று வள்ளுவரும் நீரின் தேவையை அன்றே பதிவு செய்துள்ளார். மானுட வாழ்வின் உயிர்நாடியே நீர் வளம். அதனை அன்றும் இன்றும் என்றும் நமக்குப் பயனளிக்கும் வகையில் சேமிப்பதற்கான உத்திகளைச் செயல்படுத்துவதே நீர் மேலாண்மையாகும். அவ்வகையில் நம் தமிழர்கள் நீர் மேலாண்மையில் மற்ற நாட்டவருக்கு முன்னோடியாய் வாழ்ந்துள்ளனர். ஒரு நாட்டின் வளத்தை அறிய நீர் நிலையே மையமாகிறது. இதனை,

வரப்புயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்

நெல்லுயரக் குடியுயரும்

குடியுயரக் கோலுயரும்

கோலுயரக் கோனுயர்வான் (ஒளவையார்) 

என்று ஒளவையாரின் பாடல் நீரின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. இத்தகைய நீரின் மகத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள் பல்வேறு உத்தி முறைகளைக் கையாண்டுள்ளதை நான்மணிக்கடிகை எடுத்தியம்புகிறது.

மடை

மடை திறந்த வெள்ளம் போல என்ற முதுமொழிக்கேற்ப, மடை என்பது நீரினை சேமித்து, தேவைப்படும்பொழுது அதனைப் பயன்படுத்துவதற்குரிய நீர்த்தேக்க நிலையாகும். இத்தகு நீர் சேகரிக்கும் மடை ஒரு நாட்டில் இல்லையெனில், அந்நாட்டின் இயற்கை வளம் அழியும் என்பதை,

போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த

வேரின்றி வாடும் மரமெல்லாம் – நீர்பால்

மடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி

 மன்னர்சீர் வாடி விடும்       ( நான்மணிக்கடிகை 44 ) 

என்ற பாடல் உணர்த்துவது இயற்கை வளத்தைப் பாதுகாப்பது நீர்நிலை. அதனைச் சேமிப்பதற்கான வழியினைக் கையாண்டால் மட்டுமே அவ்வளம் குன்றாது. ஒரு நாட்டிற்கு எதிரியின் படைகளால் அழிவு ஏற்படாவிட்டாலும் நீர் சேகரிக்கும் மடை இல்லையெனில் பெரும் அழிவு ஏற்படும் என்பதை எச்சரிப்பாகக் கூறுகிறது. மேலும், 

பொறிகெடும் நாணற்ற போழ்தே – நெறிபட்ட

ஐவரால் தானே வினைகெடும் – பொய்யா

நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் – நலமாறின்

நண்பினார் நண்பு கெடும்       ( நான்மணிக்கடிகை 46 ) 

என்பதாவது, மனிதர்கள் எவ்வாறு முறைப்படி வாழவேண்டும் அவ்வாறு வாழாவிடில் கெடுவது யாது? என்பதைக் கூறுவதோடு, நீர் இல்லையானால் பசுமையான பயிர்கள் பட்டுவிடும் நம் வாழ்வினைப் போல் என்று உள்ளார்ந்த அர்த்தத்துடன் நயம்பட விளக்குகிறது இப்பாடல்!

ஆறுள் அடங்கும் குளம் (ஏரி)

ஒரு நாட்டில் நீர் வரத்து மிகுந்து, வருங்காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அதனை உள்வாங்கும் பெரிய குளங்கள் இருப்பதே நன்மை பயக்கும். இவ்வெள்ளப் பெருக்கு அபாயத்திலிருந்து மக்களைக் காப்பதற்காகவும் நீரில்லாத காலங்களில் தேவைப்படும் நீரினைப் பாசனத்திற்குப் பயன்படுத்தவுமே இத்தகைய ஏரிகளை அக்காலத்திலேயே உருவாக்கினர். இதனை,

யாறுள் அடங்கும் குளமுள வீறுசால்

மன்னர் விளையுங் குடியுள – தொன்மரபின்

வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை

வேள்வியோ டொப்ப உள        (நான்மணிக்கடிகை 54 ) 

எனும் பாடல் வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த உண்மையை,

காவிரி கொள்ளிடம் ஆறுகளிலுள்ள சோழநாட்டின் மூன்று பெரிய அணைகளிலிருந்து வெளியேறும் வெள்ளநீர் அனைத்தும் வீரநாராயணப் பேரேரியைச் சென்றடையுமாறு திட்டமிட்டுள்ள நீர் மேலாண்மைச் செயல்திறன் தமிழர்களின் ஈடு இணையற்ற சாதனையாகும். இதனை நோக்குமிடத்து நான்மணிக்கடிகை கூறும் பாடலடிகளுக்கு ஏற்ப இந்நீர் மேலாண்மைத் திறம் அமைந்துள்ளதை அறிய இயலுகின்றது. பெருவெள்ளம் ஏற்படும்பொழுது அந்நீரினை உரிய முறையில் சேமித்து நீர்வரத்து இல்லாக் காலங்களில் பயன்படுத்தக்கூடிய நீர் மேலாண்மைத் திறத்தை, யாறுள் அடங்கும் குளமுள வீறுசால் என்ற பாடல் கூறுவதுபோல் சோழப் பெருவேந்தன் முதலாம் பராந்தக சோழன் செயல்முறையில் சாதித்துள்ளதைக் கள ஆய்வின் வழிக் காண முடிந்தது என்று முனைவர் மணிமாறன் தமிழ்ப் பண்டிதர், அவர்கள் தமிழரின் நீர் மேலாண்மை எனும் தனது நூலில் மேற்கண்ட உண்மையைப் பதிவு செய்துள்ளார். 

நீர் வரத்தில்லா ஏரியின் விளைவு

நீர் வரத்தின் அளவினைப் பொருத்தே பயிரிட வேண்டும். அவ்வாறு நீர் வரத்தில்லா ஏரியினை நம்பி பயிரிடுவதை,

நலனும் இளமையு நல்குரவின் கீழ்ச்சாம்

குலனும் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம்

வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப்

பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு        (நான்மணிக்கடிகை 83 ) 

என்ற பாடல் நீரில்லாத ஏரியினை நம்பி பயிரிடப்படும் நெற்பயிர் ஒன்றுக்கும் உதவாத சாவியாகும். இந்நெற்பயிர் விளைச்சலில்; வரும் வைக்கோலின்மையால் எருதுகள் சாகும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

ஏரியின் அளவும் விளைவும்

 ஏரி என்பது பரந்த அகலமும் நிறைந்த ஆழமும் உடையதாய் இருக்க வேண்டும். அவ்வாறின்றி சிறிய அளவில் இருந்தால் நீர் தங்காமல் வெளியேறிவிடும். இதனை,

 ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து

 வாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலை (நான்மணிக்கடிகை 102 ) 

எனும் இப்பாடலின் நுணுக்கத்தை நோக்குங்கால் ஏரி, மடை, குளம் என எதுவாக இருந்தாலும் பெரிய அளவில் அதற்குரிய அளவை முறையில் வெட்டப்பட வேண்டும். இல்லையெனில் அதனையே நம்பி பயிர்த்தொழில் செய்யும் உழவர்களின் குடும்பங்களில் வருவாய் குறையுமெனக் கூறுகிறது. இதன் மூலம் அன்றைய நீர் மேலாண்மையில் தமிழர்கள் கையாண்டுள்ள பல்வேறு தொழில் நுட்ப உத்திகளை அறியமுடிகிறது. மேலும்,

குளத்து அனைய தூம்பின் அகலங்கள் தம்தம்

வளத்து அனைய வாழ்வார் வழக்கு (நான்மணிக்கடிகை 73 ) 

மெல்லென்ற நீரான் அறிப மடுவினை (நான்மணிக்கடிகை80 ) 

நீரான் வீறு எய்தும் விளைநிலம் (நான்மணிக்கடிகை86 ) 

போன்ற பாடலடிகள் அக்கால நீர் மேலாண்மையின்முறையான நெறிகளையும் நமக்கு வெளிப்படுத்துகின்றன. 

நீர் இடும்பை அறிந்த புள்

நீர் இல்லையெனில் மனிதர்கள் மட்டுமல்ல, ஏனைய உயிரினங்களும் அழிய நேரிடும் என்பதை,

நீர் இடும்பை புள்ளினுள் ஓங்கல் அறியும் (நான்மணிக்கடிகை 97 ) 

நீர் இல்லாமையால் உண்டாகும் துன்பத்தை வானம்பாடிப் பறவை அறியும். இந்த நுட்பத்தை அறிவியல் சிந்தனையுடன் அன்றே பதிவு செய்தவர்கள் நம் தமிழர்கள்! வானம்பாடிப் பறவை மழை நீரினை மட்டுமே பருகும் இயல்புடையது. நீர்த் தேக்கங்களும் அதன்வழி இயற்கை வளங்களும் செழிக்குமிடத்தில் மழை நீருக்குப் பஞ்சமில்லை. ஒரு பறவையே நீரின் அவசியத்தை அறிந்திருக்கும்போது,ஆறறிவு உடைய மனிதர்களாகிய நாம் நீர் சேமிப்பின் அவசியத்தை அறிந்து அதனை நுட்பத்துடன் செயல்படுத்த வேண்டும் என்பதையும் ஆறு, ஏரி,குளம், மடை, தூம்பு,வாரி போன்றவைகள் வழி அக்கால மக்கள் கையாண்டுள்ள நீர் மேலாண்மைத் திறத்தையும் நாண்மணிக்கடிகை விரித்துரைக்கிறது இன்றும் நம் முன்னோர்கள் கூறிய வழி முறைகளைக் கடைப்பிடித்தாலே, இன்றைய நீர் பற்றாக்குறையிலிருந்து நிரந்தரத் தீர்வினை அடையலாம்!…..

பார்வை நூல்கள்

  1. விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை, உரையாசிரியர் தி. சு.பாலசுந்தரம் பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,திருநெல்வேலி.1965 
  2. தமிழரின் நீர் மேலாண்மை, முனைவர் மணி.மாறன்,ஏடகம் வெளியீடு, தஞ்சாவூர். 2019

  முனைவர் சு. சத்தியா

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad