\n"; } ?>
Top Ad
banner ad

இங்கேயும் … இப்போதும் ….

“டேய்… உங்க பாண்டிச்சேரியில தெருவுக்கு நாலு ஆஸ்பிட்டல் கூட இருக்கலாம். ஆனா… அங்க எத்தன  ஆஸ்பிட்டல் இருந்தாலும், பெரியப் பெரிய சர்ஜெரிக்கெல்லாம் அங்க இருந்து பெரும்பாலானவங்க  சென்னைக்குத்தாண்டா  வராங்க. மாஸ்டர் செக்-அப் செஞ்சிக்கப்போறேன்னு சொல்ற…. பேசாம கெளம்பி இங்க வாடா. ஒரே நாள் தான். எட்டு ரூவால இருந்து பத்து ரூவாக்குள்ள முடிஞ்சிடும். ” குமரேசன், சந்தானத்திடம் வம்படித்தான்.

“குமரேசா… நீ சொல்றதெல்லாம் சரிதான். இங்கியே கூட எனக்கு தெரிஞ்ச நர்ஸ் ஒருத்தவங்க, சென்னைல போய் செய்துக்கிட்டா… ரிசல்ட் கொஞ்சம் நம்பகத்தன்மையா இருக்கும்னு சொன்னாங்க. எனக்கு தான்டா உங்க ஊருக்கு வரதுனாலே பயம். இதுவரைக்கும் என் வாழ்நாளுல ரெண்டு தடவையோ… மூணு தடவையோ தான் வந்திருக்கேன். ஒவ்வொரு தடவையும் ஒரு கசப்பான அனுபவம். உன்கிட்டதான் ஏற்கனவே சொல்லியிருக்கேனில்ல… பாரீஸ் கார்னர்ல பழைய பஸ்டாண்டு இருக்கும்போது, ஒரு பழக்கடக்காரன் ஏமாத்தனது… அப்புறம் ஒரு  முற வந்து ஆட்டோக்காரன்கிட்ட ஏமாந்தது. ஐயையோ… சென்னைன்னாலே எனக்கு அலர்ஜிப்பா.”

“அடப்போடா… இவுரு எப்பையோ ரெண்டு தடவ ஏமாந்துட்டாராம்.. அதனால இங்க வரமாட்டாராம். தமிழ்நாட்டோட எல்லா  மாவட்டத்துலேர்ந்தும், ஏன்…  நம்ம நாட்ல இருக்க எல்லா மாநிலத்துல இருந்தும் படிக்கவும் வேலத் தேடியும்  சென்னைக்கு வந்து, இந்த ஊரு புடிச்சிப் போய் இங்கயே கல்யாணம் பண்ணிக்கிட்டு கொழந்த குட்டின்னு செட்டில் ஆனவங்க எத்தன பேருன்னு தெரியுமா உனக்கு ? வெள்ளி சனில கோயம்பேடு பஸ்டாண்டுக்கு வந்துப் பாரு . இங்க இருந்து வெளியூருக்கு போற மக்க கூட்டத்த பார்த்தா பிரமிப்பா இருக்கும். தொண்ணூறு லட்சத்த தொடப்போவுது ஜனத்தொக.  இங்க மக்க மனுஷாலே இல்லாத மாதிரியும் இல்லனா … இருக்கிற அத்தன பெரும் ஏமாத்துப் பேர்வழி மாதிரியும் பேசற..”

“அதுக்கில்ல… குமரேசா. சரி விடு. நான்  ரெண்டு நாள்ல யோசிச்சி சொல்றேன்  ”

குமரேசன் நூறு சதவிகிதம் நம்பினான். சந்தானம் நிச்சயம் சென்னைக்கு வரப்போவதில்லை என்று. ஆனால் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. எத்தனைப் பேரிடம் யோசனை கேட்டான் அல்லது விவாதித்தான் என்று புரியவில்லை.  இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருந்த  சந்தானம்  மறுநாளே செல்போனில் பேசினான்.

“ஏம்ப்பா…குமரேசா … நான் நாளைக்கே சென்னை வரேன்.  சாயங்காலம் நாலு மணிக்கு மேல கெளம்பி வரேன். நாலு மணி நேரமாகும்னு சொல்றாங்க. நைட்டு எட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடறேன். அப்புறம்… மாஸ்டர் செக்–அப் பண்ணிக்கிட்டு அப்படியே டி- நகர் வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வருவோம். இவ அக்கா வீட்டு விசேஷம் வருதில்ல…. அதுக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும்.  வெறும் துணி மணிங்க தான். என்ன சொல்ற?  ”

“ரொம்போ சந்தோஷம்டா . வாடா. வாடா. நீ மொதல்ல கெளம்பி இங்க வாடா. மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன். தோ பாருடா… பாண்டிச்சேரில இருந்து சென்னை வர பஸ் தாம்பரம் வராது. மதுரவயல் பை-பாஸ் புடிச்சி கோயம்பேடு போயிடும். அதனால நீ பெருங்களத்தூர்ல எறங்கி… ஆட்டோ    புடிச்சி வந்துடு. அட்ரெஸ்ச மெசேஜ் அனுப்பினனே… வச்சிக்கிற இல்ல… அத ஒரு தாள்ல தெளிவா எழுதி கைல வச்சிக்கோ. ”

புதுச்சேரியில் (பாண்டிச்சேரி) இருந்து புறப்படுவதற்குள், சந்தானம், ஐந்தாறு முறை போன் செய்துவிட்டான். ஒவ்வொரு முறையும் புதுப்புது சந்தேகம் கேட்டான்.  குமரேசனும் சலைக்காமல் பேசிப்பேசி அவனது சந்தேகங்களை தீர்த்துவைத்தான்.

ந்த மாலைப்பொழுதில் அவ்வளவாக கூட்டம் இல்லாமல், புதுச்சேரி பேருந்து நிலையம் இளைப்பாறிக்கொண்டிருந்தது.  வழக்கமாக வார இறுதி நாட்களில் காற்று புகக்கூட இடம்விடாமல் மக்கள் ஏறிவிழும், சென்னை பேருந்துகள்  நிற்குமிடம், இன்று வெறிச்சோடி கிடந்தது. ஓட்டுநர் நடத்துநர் உள்ளிட்ட ஏழெட்டு பேரிடம் விசாரித்து  ஒரு வழியாக சந்தானம் சென்னை பேருந்தில் ஏறி அமர்ந்தபோது மணி ஆறு பத்து.  இரண்டு பேர் இருக்கையில் ஜன்னலோர சீட்டு. பக்கத்தில் ஒல்லியாக ,  இருவது வயது மதிக்கத்தக்க ஒருவன் சக பயணியாக அமைந்ததை எண்ணி நிம்மதியடைந்த அதே வேளையில், தன் காலிற்கடியில் இருந்த ட்ரேவல் – பேக்கை நகர்த்தி நகர்த்தி அதை எந்த வாக்கில் வைப்பது பாதுகாப்பு என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தான். சென்னையில் போய் வாங்க பயந்துகொண்டு,  இனிப்பு பழம் பூ என்று எல்லாவற்றையும் இங்கேயே வாங்கி வைத்துக்கொண்டதில், அந்த பை காவல்துறை நண்பர்களின் தொப்பையைப் போல் ஆங்காங்கு பிதுங்கிக்கொண்டு இருந்தது.

தனக்கு முன் சீட்டில், பின் சீட்டில், அமந்திருந்தவர்களின் முகங்களையெல்லாம் ஒருமுறை பார்த்துக்கொண்டான். மிரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய். யாருடைய முகமும் சந்தானத்திற்கு நம்பிக்கையைத் தரவில்லை.

பயணத்திலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியை கழிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இதுபோன்ற அசௌகரியம் ஏற்படுவதில்லை. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நூறு கிலோமீட்டர் தூர பயணம் செய்பவர்கள்தான் சந்தானத்தைப்போல தவிப்பார்கள். சந்தானத்தின் மனம்  இப்படி அமைதியற்று அல்லாடியதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

பேருந்து மேல்மருவத்தூரை கடந்த சில நிமிடத்திற்குள், சந்தானத்தின் கைப்பேசி கூவியது. பச்சை நிற பொத்தானை அழுத்தியதும்,

“எங்கடா வர… ? மதுராந்தகமா? செங்கல்பட்டா ?” குமரேசன் கேட்டான்.

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவன், என்ன சொல்வதென்று தெரியாமல், “க்கும்… என்ன கேளு .. எனக்கு பகல்லையே பசுமாடு தெரியாது. பஸ் போகுதா நிக்குதான்னே தெரியல…  ரொம்போ வருஷம் கழிச்சி இப்போதான் நானே…”  வார்த்தைகளை நீட்டிய  சந்தானத்திடம் , ” அடேயப்பா… பக்கத்துல யாருகிட்டையாவுது கேட்டு சொல்லேண்டா..” என்று குமரேசன் சொல்ல, பக்கத்திலிருந்த வாலிபனிடம் கேட்க , அவன் சொன்ன பதிலே குமரேசனுக்கு கேட்டு, ” டேய் .. மதுராந்தகத்துக்கு வரவே இன்னும் பத்து நிமிஷம் ஆகும் போல. சரி… அப்போ நீ பெருங்களத்தூர் வந்து சேர ஒன்பது ஒன்பதர ஆயிடும். ஆகட்டும் விடு. சரி… எதுக்கும் டென்ஷன் ஆகாத..”

எப்படி ஆகாமல் இருக்க முடியும்? குமரேசனிடம் பேசி முடித்த நொடியில், ‘ சென்னை நெட்வொர்க் தங்களை அன்புடன் வரவேற்கிறது ‘ செல்பேசி சேவை மையத்திலிருந்து வந்த ஒரு குறுஞ்செய்தி சந்தானத்தை பதட்டப்படுத்தியது.

ஒரு சிலருக்கு மருத்துவமனையின் பினாயில் வாடை அடித்தால், ஒரு சிலருக்கு நீதி மன்றத்தின் சுத்தியல் சத்தம் கேட்டால் , ஒரு சிலருக்கு காவல் நிலையத்தின் வாயிற்படி மிதித்தால் இனங்கண்டு கொள்ள முடியாத ஒருவித பதட்டம் தொற்றிக்கொள்ளும். சந்தானத்திற்கு சென்னை என்றாலே அப்படி ஆகிவிடுகிறது.

மாமண்டூர்  அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான உணவகத்துடன் கூடிய பேருந்து நிறுத்தத்தில் போய் நின்றதும், ‘ பஸ் கால் மணி நேரம் நிக்கும் ‘ என்று சொல்லிவிட்டு நடத்துனர் கழிப்பறை நோக்கி வேகமாக  ஓடினார். பயணிகள் பலரும் கீழே இறங்கி பல திசைகளிலும் நடந்தனர். சந்தானத்திற்கு, சற்று கீழே இறங்கி நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு , கைகால்களை நீட்டி திமிர் முறிக்கவேண்டும் போல் இருந்தது. ஆனால்… இறங்கவில்லை. தன் காலிற்கிடையில் இருந்த பையை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக பிடித்தான்.

இருபது நிமிடமும் இருக்கையைவிட்டு நகராமல் இருந்தவனுக்கு , பேருந்து அங்கிருந்து நகரத்தொடங்கியதும் சற்று நிம்மதியானது. திடீரென, நாளை தான் செய்துகொள்ளப்போகும் மருத்துவ பரிசோதனை பற்றி சிந்திக்கத்தொடங்கியது சந்தானத்தின் மனது. நாற்பத்தைந்து வயதில் இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று ஒரு சாராரும், இப்போது  இருக்கும் உணவு முறைக்கு நாற்பது வயது தாண்டும்போதே உடம்புக்கு ஒரு முழு மருத்துவ பரிசோதனை கட்டாயம் செய்துக்கொள்ளவேண்டும் என்று வேறு பலரும் கூறக் கேட்டு குழம்பிப்போய், தன் மனைவியின்  ஓயாத வற்புறுத்தலால் பரிசோதனை செய்துகொள்ள முடிவெடுத்த தருணங்களை  எண்ணம் வரிசையாய்  அசைப்போட்டது. இதுவரை சர்க்கரை நோயோ அல்லது ரத்த அழுத்தமோ இல்லாமல் இருக்கும் சந்தானத்திற்கு மருத்துவ பரிசோதனைக் குறித்த பயமெல்லாம் இல்லை . அவன்  பயமே வேறு….

பேருந்து ஊர்ந்துக்கொண்டிருந்தது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்து  எரிச்சலுற்றான் சந்தானம். கண்ணுக்கு எட்டிய தூரம், நான்கு சக்கர ஊர்திகளும்  இரண்டு சக்கர வாகனங்களுமாய் தெரிந்தது. அதில் எதுவும் தொடர்ந்து நகரமுடியாமல் இன்ச் இன்ச்சாக முன்னேறியது. இவ்வளவு பேரும் எங்கே போகிறார்கள்? எங்கிருந்து போகிறார்கள் ? என்கிற கேள்வி அவனுக்குள் உதித்தது.

தன் பக்கத்துக்கு இருக்கையில் இருந்தவன் இறங்குவதற்காய் எழுந்து நின்று, ” இது வண்டலூர்… நான் இங்க எறங்கப்போறேன். அடுத்த ஸ்டாபிங் தான் பெருங்களத்தூர். பயப்படாதீங்க. அங்க பாதி பஸ் காலியாயிடும். நெறைய பேர் எறங்குவாங்க ‘ தெளிவாக சொல்லிவிட்டு நகர்ந்தான். நகர்ந்தவனின் கையையும் சந்தானத்தின்  காலுக்கடியில் இருந்த பையையும் ஒருமுறை பார்த்துக்கொண்டு, ‘ சரிப்பா.. நன்றி’ என்றான்.

சந்தானத்திற்கு இதயம் சற்று வேகமாய் துடிக்கத்தொடங்கியது. குமரேசன் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்திற்கே வந்து  அவனை அழைத்துப்போவதாக சொல்லியிருந்தால் கூட இந்த அளவு அச்சமிருந்திருக்காது. ஆனால் குமரேசனோ, அவனது பைக்கை மகன் நைட்-ஷிப்ட் போகும்போது மட்டும் கொண்டு செல்கிறான் என்றும் இந்த வாரம் அவனுக்கு  நைட்-ஷிப்ட் என்றும் விளக்கிவிட்டுத்தான்  இவனை ஆட்டோவில் வீடு வந்து சேர சொல்லியிருந்தான்.

ஒலித்த செல்பேசியை எடுத்துப் பேசினான்.

“குமரேசா… பெருங்களத்தூர் வரப்போவுதுடா …”

“பெருங்களத்தூர் வரலடா… நீ தான் பெருங்களத்தூர் வரப்போற ”  சந்தானத்தின் மனநிலை புரியாமல் குமரேசன் கடி ஜோக் அடித்தான்.

‘பெருங்களத்தூர்… தாம்பரம்… ஏர்ப்போர்ட் போரவங்கல்லாம் எறங்குங்க.. ‘ நடத்துனரின்  ஒலிபெருக்கிக் குரல்   சந்தானதிற்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. கடகடவென கீழே இறங்கி நின்றான். திசைகள் எட்டும் திருவிழாக்கூட்டம். பையை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைகடிகாரத்தை பார்த்தான். மணி ஒன்பது நாற்பது.

“ஆட்டோ வேணும்மா சார் ?” என்கிற கேள்வி இரண்டு மூன்று குரலில் கேட்டது.

யாரை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் சில மணித்துளிகள் தடுமாறிய சந்தானம் சற்று தொலைவு நடந்தேப்போய், அங்கு நின்றிருந்த காக்கிச் சட்டை ஆசாமியிடம்   ” ஆட்டோ … இரும்புலியூர் போகணும் .. வருமா?” என்றான்.

“போலாம் சார்.. இரும்புலியூர்ல எங்க?”

“செல்லியம்மன் கோயில் தெரு ”

“ஓ … ட்ராக்குக்கு அந்த பக்கம்…  போலாம் சார். எண்பது ரூவா.”

“அம்பது ரூவா தான் கேப்பாங்கன்னு சொல்லி இருந்தாங்களே…”

“சார்.. ஊருக்கு புதுசா?.. நைட்டு சார்…  உன்ன உட்டுட்டு திரும்ப அங்கருந்து நா காலியாத்தான் சார் வரணும். ”

“சரி…அறுவது வாங்கிக்கோ ”

“இல்ல சார்… கட்டுப்படி ஆகாது. ”

இது வரைக்குமே  அவன் தைரியாமாய் பேசிகொண்டிருப்பதாய்  நம்பினான் சந்தானம்.

“இருவது ரூவாக்கு யோசிக்காத சார் …”

ஆமாம். இருவது  ரூபாய்க்கெல்லாம் இந்த சென்னையில் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தால், சரிவராது.என்று முடிவு செய்து, ” சரி வா போலாம் ” என்று ஆட்டோவினுள் ஏறி அமர்ந்தவன், பையை தன் பக்கத்தில் வைத்து  அணைத்துப் பிடித்துக்கொண்டான்.

ஆட்டோ நகர்ந்தது. சிக்னலில் வந்து நின்று வலதுபுறம் திரும்பிய சற்று நேரத்தில் ஆட்டோ ஓட்டுனரின் செல்பேசி ஒலித்தது. ” கோச்சிக்காத சாரே… வூட்லர்ந்து போன்… ஒரு நிமிஷம் பேசிடறேன் ” என்று ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு பேசினான். முதன்முறையாக ஓட்டும் வண்டியை நிறுத்திவிட்டு ஒரு ஆட்டோ ஓட்டுனர் செல் பேசுவது ஆச்சரியமாய் இருந்தது.

கவனிக்கக்கூடாது என்று சந்தானம் நினைத்தாலும்கூட அவன் காது நீண்டே நின்றது.

“என்ன இன்னா பண்ணசொல்ற நீ..? கேட்ட எடத்துல துட்டு சாயல. காத்தால போய் மிஸ்சாண்ட ரெண்டு நாளு டைம் கேட்டுக்கோ… நாளிக்கி சேட்டாண்டையாவது கேட்டு பாக்கறேன்… ஒர்ரூவா ரெண்ட்ரூவாவா இருந்தா பரவால்ல. அந்த பீசு இந்த பீசுன்னு பத்து ரூவா கேட்டா?… சரி வைய்யி வைய்யி.. சவாரில இருக்கேன்  ”  போனை வைத்துவிட்டும் அவன் தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

‘பேசாம கவர்மண்ட் பள்ளிக்கூடத்துலையே சேத்திரிக்கலாம் கான்வென்ட்ல சேத்துப்புட்டு.. ரோதனை…’

“சார்… செல்லியம்மன் கோயில் தெருவேவா.. இல்ல உள்ளார்க்க போணுமா ?”

“இது என்ன தெரு?”

“இது பழைய  ஜி.எஸ்.டி ரோடு.. த்தோ… இப்போ போட்டு கொழப்பிக்கினு கெடக்கரானுவுளே… அந்த ஜி.எஸ்.டி  இல்ல… இது பை-பாசு போடறதுக்கு முன்னாடி பொழங்கிய மெய்ன் ரோடு”

சந்தானம் தன் பையை திறந்து துழாவினான். கையில் தட்டுப்பட்ட அந்த பாலித்தீன் கவரை வெளியே எடுத்து , அதற்கடியில் கிடந்த துண்டு தாளை எடுத்து முழு விலாசத்தையும் படித்தான். துணைக்கேள்விகள் ஏதுமே கேட்காமல் குமரேசன் வீட்டில் சந்தானத்தை கொண்டுவந்து சேர்த்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தான் அந்த ஆட்டோக்காரன்.

ஆவலோடு காத்திருந்த குமரேசனின் அன்பு விசாரிப்புகளில் அகமகிழ பதில் சொல்லிக்கொண்டிருந்த சந்தானத்தை  திடீரென ஒரு எண்ணக்கீற்று குறுக்கே வெட்டியது. விலாச துண்டு சீட்டு எடுக்கும் போது வெளியே எடுத்த பாலித்தீன் கவரை பையின் உள்ளே திரும்ப வைத்தோமா என்று. பையை திறந்து பார்த்து அதிர்ந்தான். உள்ளே இல்லை . ஆட்டோவுக்குள்ளேயே…   

“டேய்… குமரேசா… தப்பு பண்ணிட்டேன்டா ” என்று அலறினான். அவன் அலறலுக்கான காரணத்தை சொல்லிக்கொண்டே ,தலையை திருப்பி பின்புறம் மாட்டியிருந்த கடிகாரத்தை பதட்டத்தோடு சந்தானம் பார்த்தபோது, மணி பத்து ஐந்து. விடியும்வரை நிச்சயம் காத்திருக்க முடியாது. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உறுதியோடு எழுந்து நின்ற, சந்தானத்திற்கு ஒன்றும் புரியவில்லை..   இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்றுதான் கடந்த நான்கு மணி நேரமாக  சிக்கிம் மாநில சீன எல்லையில் நிற்கும் சிப்பாய் போல விழிப்போடு இருந்தான்,  அவன். ஆனாலும்…

அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி அவன் யோசித்தப்போது,  “இப்படிச் செய்”, “அப்படிச் செய்” என்ற கட்டளைகள் அடுக்கடுக்காய் நினைவுப்பரப்பில் வந்து விழுந்து அவனை  தீவிரமாய்க் குழப்பின.

இதற்கிடையில் சென்னை மீது சந்தானத்துக்கிருந்த வெறுப்பும் கோவமும் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்ததையும் அவனால் உணரமுடிந்தது.

“என்னடா … இப்படியே பேந்தப் பேந்த முழிச்சிக்கிட்டு நின்னுகிட்டே இருக்கறதுனால,  ஒன்னும் ஆகப்போறதில்ல . என்ன செய்யலாம்ன்னு  சட்டுன்னு  சொல்லு …”  குமரேசன் அவரசப்படுத்தினான்.

தன்னுடைய வற்புறுத்தலால்தான், சந்தானம் சென்னைக்கு வந்தான் என்றும், வந்த இடத்தில் இப்படி ஆயிற்றே என்கிற குற்ற உணர்வும் குமரேசனுக்கு மனவலியை ஏற்படுத்தியது. இதனால் யார் யாருக்கு என்னென்ன பதில் சொல்ல வேண்டியதாய் இருக்குமோ என்றும் , இந்தப் பிரச்சனை மட்டும் தீரவில்லை என்றால், சந்தானம் புலம்பிப் புலம்பி தானும் பைத்தியமாகி தன்னையும் பைத்தியமாக்கிவிடுவான் என்ற பயமும் உள்ளுக்குள் பரவியது.

“டேய் … சந்தானம், நாம …”   குமரேசன் சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்குள்,  ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்கவே, , இருவரும் துடித்து பிடித்து வாசல் நோக்கி ஓடினார்கள்.

ன்னா மனுஷன் சார் நீ ? பணப்பைய ஆட்டோலையே போட்டுப்பூட்ட… அதுவும்.. ரெண்டாயிர ரூவாத்தாளா.. கத்தையா.  இந்தா… தொறந்து கரீட்டா இருக்குதான்னு பாத்துக்கோ ?” ஆட்டோக்காரன் கொட்டாவிவிட்டபடியே  சலனமின்றி பேசி  சந்தானத்திடம் கொடுத்தான்.

“அது சரியா இருக்கும்ப்பா. உன்ன… உனக்கு… எப்படி நன்றி சொல்றது… அவன் கையை பிடித்து சந்தானம் தழுதழுக்க… ‘ அட… போ சாரே.. ‘ என்று சொல்லிவிட்டு மீண்டும் மின்னல் வேகத்தில் மறைந்தான்.

இப்படியும் சில மனிதர்கள் இன்னும் இருந்துகொண்டிருக்கிறார்கள். சாதி மதம் இனம் மொழி என்கிற பாரபட்சம் பார்க்காமலும்,  பதிலுக்கு உதவி ஏதும் எதிர்பார்க்காமலும்  பிறருக்கு உதவி செய்துக்கொண்டே இருக்கும் இந்த ஆட்டோ ஓட்டுனர் போன்றோர்களால் மனிதநேயம் என்னும் சொல் இன்னும் அர்த்தமிழக்காமல் இருக்கிறதோ என்று சிந்தித்தபடி, சந்தானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்  குமரேசன்.

புதுவைப் பிரபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad