\n"; } ?>
Top Ad
banner ad

நிழல் படங்களும்….  நிஜ  ஜடங்களும்….!

இந்தச்  சிறுகதையானது, தமிழர்  வாழ்வியலில், வசதி – வாய்ப்புக்களின்  அடிப்படையால், தோன்றும்  போலித்தனமான  ஏற்றத்தாழ்வு  மனப்பான்மையானது,  ஆங்கே  கீழ்மட்ட நிலை  சார்ந்தோரை, உண்மையிலேயே  எப்படியெல்லாம்  பாதிக்கிறது  என்பதையும்…..

ஆங்காங்கே, பரவலாகப்  பட்டுக்கொண்ட – கேள்விப்பட்ட – சொரியலான  அனுபவங்கள்,  ஆகியன  உள்ளத்தில்  தோற்றுவித்த  வலிகளின்  உந்துதலாலும், பிறந்த  கற்பனையாகும்.  


“பாரும்மா…. இன்னைக்கு  நாங்க  உமேசுவீட்டுக்கு  வெளையாடப் போனோமா, அப்போ என்னையும் தம்பிப் பயலையும் பாத்து பசங்க  எல்லாரும் , “கிழிஞ்ச சட்டை…. கிழிஞ்ச சட்டை”ன்னு  சொன்னாங்கம்மா….”

ஏழுவயசுக் குழந்தை திவ்யா, தனது தாயார் வைரமணியிடம் கூறுவது தெளிவாகக் கேட்டது. கடிகாரத்தை நோக்கினேன். இரவு பத்தரை.

வைரமணி அக்காவின் வீடும், நான் தங்கியிருக்கும் ரூமும் சற்று பக்கத்திலேதான் உள்ளன. கணவர் சண்முகம் ஒரு தனியார் கம்பெனியில் லாரி டிரைவராக பணி  புரிந்தவர்.  அவர்  காலமாகி நான்கு ஆண்டுகள்  ஆகிவிட்டன.

கட்டிட வேலைகள்  நடக்குமிடங்களில்  கொத்தனாருக்கு  சித்தாள் வேலை பார்க்கச்  செல்கின்றாள் வைரமணி அக்கா.வீட்டிலிருக்கும்போது, பீடி சுற்றும் தொழிலிலும் கவனம் காட்டுகிறாள். சண்முகம் குடித்துக் குடித்து  தலைக்குமேல் வைத்துவிட்டுப் போன  கடன் அனைத்தும் கட்டி முடிக்கவேண்டிய பொறுப்பும் வேறு.

ஆயினும் எந்த சூழ்நிலையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத பிடிவாதத்தோடு வாழும் கொள்கை…., எனக்கு அவள்மீதிருந்த மதிப்பை இன்னும் உயர்த்தியிருந்தது.

மகளின் வேதனையைக் கேட்ட மறுகணமே அவளிடமிருந்து பதில் வந்தது.

“நாளைக்கு கலையில ஜவுளி யாவாரி வீட்டுக்குப் போறோம்…. ரண்டு செல்லக்குட்டிக்கும் சட்டை வாங்கிட்டு வாரோம் ….சரியா…..”

பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் திவ்யா.

“அதுமட்டுமில்லம்மா…. உமேசிட சொந்தக்காரங்க வந்திருக்காங்களா  …. அவுங்க, சோப்பு டப்பா சயிசில போட்டோ புடிக்கிற மிசின் வச்சு, பளிச்சு பளிச்சுன்னு லயிட்டு அடிச்சுகிட்டே போட்டோ புடிச்சாங்களா  …. எங்களுக்கும் ஆசையா இருந்திச்சா …. நாங்களும் போயி அவங்ககூட நின்னோம்மா….  சட்டுன்னு அவுங்க பாட்டி வந்து, எங்களை தரதரன்னு இழுத்து தூர தள்ளிப்புட்டாங்க…. பாவம்….தம்பி அழுதிட்டாம்மா….”

தொடர்ந்தாள் திவ்யா.

“அப்பா இருக்கிறப்பகூட  நாம எல்லாரும் சேந்து போட்டோ புடிக்கல…. இப்ப நாம மூணு பேருமாவது சேந்து போட்டோ புடிச்சுக்கலாமாம்மா….”

வைரமணி அக்காவின் விசும்பல் கேட்டது. அதுவும் சில நொடிகள்தான்.

“இந்தா  பாருகுட்டி…. அம்மா வாங்கிட்டு வந்த சம்பளப்பணம் போதாதம்மா…. நாளைக்கு என் செல்லக்குட்டிகளுக்கு ஜவுளியை வாங்கிடுவோம்…. ரண்டு நாள் கழிச்சு,பீடிக் கம்பெனியில  எடுக்கிற சம்பளக் காசில, நாம மூணுபேரும் போய் போட்டோ ஸ்டூடியோல படம் புடிச்சுக்குவோம்..சரியா..”

“ஹேய் …. ஜாலி… ஜாலி…..”  மகிழ்ச்சியுடன் துள்ளிய திவ்யா கேட்டாள்.

“ஏம்மா…. பக்கத்து ரூமில இருக்கிற மாமா, போட்டோ  ஸ்டூடியோலதானே வேலை பாக்கிறாங்க…. அவங்ககிட்ட சொல்லி, நாளைக்கே போட்டோ புடிச்சிடுவோம் …. ரண்டு நாள் கழிச்சு  சம்பளம் எடுத்த கையோட  துட்டைக்  குடுத்துப்புடலாமே….”

சிறியதொரு  ஆவல்கோளறு அவளிடம் தெரிந்தது.

கடைசியாக  அவள்  குறிப்பிட்டது  என்னைத்தான். அருகாமையிலுள்ள போட்டோ ஸ்டூடியோவில் சம்பளத்திற்கு வேலைபார்க்கும் போட்டோகிராபர் நான்.

வைரமணி அக்கா சற்றுக் கடுப்பாகியதை அவள் குரல் காட்டியது.

“அம்மா சொன்னாக் கேக்கமாட்டீங்களா…. அப்பாமாதிரி நாங்களும்  கடன்காரப் பேரு  வாங்கணுமா….?”

ஸ்டூடியோ திறந்து பெருக்கித் துடைக்கின்ற வேலையும் என் பொறுப்புத்தான். ஒரு சாவி என் கையில்.

ரூம் கதவை அடைத்துவிட்டு புறப்படும்போது, வெளி கேட் வாசலில் பைக்கில் வந்து பிரேக் போட்டான் வசீகரன்.

கையிலிருந்த பெரிய கவர் ஒன்றைத் திறந்து எடுத்தான். அது அவனது திருமணப் பத்திரிகை. என் கையிலே திணித்தான்.

“போட்டோவுக்கு உங்க ஸ்டூடியோலதான் ஆடர் குடுத்திருக்கேன்…. நேத்து நயிட்டு உங்க முதலாளியைப் பாத்து அட்வான்சும் குடுத்திட்டேன்….”

“அப்புறம் எனக்கு எதுக்கு பத்திரிகை…. போட்டோகிராபராக  நான்தானே வந்து எடுக்கணும்….”  கேட்டேன் நான்.

“நல்லாயிருக்கு …. அது நீங்க உங்க டியூட்டியா வர்றிய ….  இது நம்ம பிரென்ட்சிப்பா குடுக்கிறேன் சார்…. சொல்லவேண்டியது கடமையில்லியா… மறந்திடாதிங்க …நாளை மறுநாள், நம்ம சந்தைக்கு பக்கத்திலயுள்ள கல்யாண மண்டபத்திலதான்……”

சொல்லியபடி பைக்கை ஸ்ராட் செய்யப் போன வசீகரன்  நிமிர்ந்து தெருவை நோக்கினான்.

அங்கே வைரமணி அக்காவும், குழந்தைகள் இருவரும் மெதுவாக நடந்து  வந்துகொண்டிருந்தனர்.

“வைரமணி அக்கா …. உங்களுக்கு ஆயுசு நூறு…. இப்பிடியே புறப்பட்டு  உங்கவீட்டுக்கு வரணும்னு நினைக்கிறப்ப  வந்திட்டிய…. தெருவில வெச்சு சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க…    நாளை மறுநாள்  புதன்   கிழமை  எனக்கு கலியாணம்…. காலையில  ஒம்பதரைக்கு முகூர்த்தம்….      குழந்தைங்களையும்    கண்டிப்பா கூட்டிக்கிட்டு   வந்திடணும் ….”    பத்திரிகையைக் கொடுத்தான்.

“ரொம்ப சந்தோசம்பா….   இதுக்கெல்லாம் எனக்குப்போய் பத்திரிகை வெச்சுகிட்டு….”     கூசிக் குறுகினாள் வைரமணி அக்காள்.

“இந்தா பாருங்கக்கா…. அப்புறம் நான் பேசவே மாட்டேன்…. பத்திரிகை வைக்கிறது நான்…. எனக்காக வர்ரிய….”

வசீகரன்  அப்படியே செல்ல, நான் என் வேலைக்கு புறப்பட்டேன்.

காலை  ஒன்பதரைக்குமேல் முகூர்த்தம். கூட்டம் நிரம்பி வழியாது போயினும், குறைசொல்ல முடியாதளவுக்கு இருந்தது.

பெண் வீட்டார்  கொஞ்சம் வசதியான பகுதி என்பது பார்க்கும்போதே தெரிந்தது. அவர்களது தகுதிக்குள்ள  மாப்பிள்ளைகளின்  ஜாதகம் பொருந்தாததாலும் ,வசீகரனின்  ஜாதகம் பொருந்திவந்த  பட்சத்திலும்  இவர்களை நாடியிருக்கிறார்கள் என்பதை, வந்திருப்போர் பேசுவதன்  மூலம் தெரிந்துகொண்டேன்.

சரி. எது எப்படியோ…!    நமக்கு குறைஞ்ச பட்சம்  அஞ்சு ரோலாவது ஓடணும்.  அதனால்  நான் அங்குமிங்கும் ஓடியோடிக்  கேமராவைக்  கவனமாக இயக்கினேன்.

மாப்பிள்ளை வசீகரன்  இப்போதே பெண் வீட்டார்பக்கம்  சாய்ந்துவிட்டான்.

பாவம்:அவனது அப்பாவும்,அம்மாவும்….!   தாலிகட்டு முடிந்த கையேடு, திருமண  மேடையைவிட்டுக்   கீழே இறங்கியவர்கள்தான் ….!   முகத்திலே இயலாமையின் சாயல் தெரிய, சிரமச்சிரிப்பை உதிர்த்தபடி, மண்டப வாசலில் நின்று வரவேற்பில் ஈடுபட்டிருந்தனர்.

பெண்ணின் தகப்பனார்தான் அங்குமிங்கும் ஓடியோடி நாட்டாமை பண்ணிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி நடப்பதே அவர் பணத்திலல்லவா.

அவர் என்னைக்கூட விட்டுவைக்கவில்லை.

“சார்…. வழவழன்ணு  நிறைய போட்டோவை பிடிச்சுத் தள்ளிடாதீங்க…. முக்கியமானவங்களா பாத்து எடுங்க….”

எனக்கு நறுக்கென்றிருந்தது.

“என் ஐந்து ரோல் கணக்கு அவுட்டா….?”

நானும் விடவில்லை. கேட்டேன்.

“முக்கியமானவங்கன்னு  யாரை சொல்றீங்கன்னு தெரியல்லியே  சார்…. முக்கியமில்லாதவங்களுக்கு  பத்திரிகை வைக்கமாட்டீங்க…….   இல்லியா….!”

ஒருகணம் அவர் சிந்தித்தவராக,  சிரித்துச்  சமாளித்தார்.

“ஓகே…. ஓகே….. நான் மாப்பிள்ளைகிட்ட  டீட்டேல்சா  சொல்லிடுறேன்….  அவங்க சொல்றதை மட்டும் கவனிச்சு எடுங்க….”

என் பதிலுக்கு  காத்திருக்கவில்லை. மாப்பிள்ளை பக்கம் நகர்ந்தார்.

திருமணம் நடக்கும்  மெயின் ஹாலுக்கு  இடதுபுறமுள்ள ஹாலில்தான், பந்தி பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது. திறமைமிக்க சமையல்காரர்களின்  கைவண்ணத்தில் உருவான ” வெஜிட்டபிள் பிரியாணி ” யின் வாசனை மூக்கைத் துளைத்தது.

புதிதாக வருபவர்கள் சாப்பிடச் செல்வதும், சாப்பிட்டு முடித்தவர்கள்  வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுமாக கதை ஓடிக்கொண்டிருந்தது.

அந்தக் கதையை மீறி, என் கண்களும்,உள்ளமும்  வைரமணிஅக்காவையும், குழந்தைகளையும் தேடிக்கொண்டிருந்தன.

காரணம்…. நேற்று நடந்த ஒரு சிறு சம்பவம்…..!

நேற்று மாலை, ஐந்து மணியிருக்கும். போட்டோ ஸ்டூடியோவிலிருந்து , அவசரமாக எனது ரூமுக்கு,  நான்  வரவேண்டியிருந்தது.

வந்தபோது, வைரமணி அக்காவின் பிள்ளைகள் இருவரும், எனது ரூம் வாசலில் விளையாடிக்கொண்டிருன்தனர். இது வழமையான சம்பவந்தான்.

“மாமா…. நீங்க வர்றப்போ  வழியில எங்கம்மாவ பாத்தீங்களா…?”

திவ்யா கேட்டாள்.

“இல்லை…. நான் பாக்கலியே…. உங்கம்மா எங்கே போனாங்க….?” கேட்டேன் நான்.

“கடைக்குத்தான் போனாங்க…. நேரமாச்சு…. லேட்டானா, தம்பிப் பய  அழ ஆரம்பிச்சிடுவான்….”

“பயப்பிடாதீங்க…. வந்திடுவாங்க…..” ஆறுதல் சொன்னேன்.

“மாமா……….”

திவ்வியா தயக்கத்தோடு அழைத்தாள்.

“என்னம்மா…..” வாஞ்சையோடு கேட்டேன் நான்.

அவளது பார்வை ஒருதடவை தெருவை நோக்கியது.

“மாமா….   நாளைக்கு   வசீமாமா  கலியாணத்துக்கு  நீங்கதானே  போட்டோ பிடிக்க வருவிய….”

“ஆமா…. ஏம்மா கேக்கிரே….?”

“இல்லே…. நாங்க மூணுபேரும்  உங்க  ஸ்டூடியோக்கு  வந்து போட்டோ புடிக்கனும்னு  அம்மா   நூறுரூவா சேத்து வெச்சிருந்தாங்களா….  நேத்தைக்கு   வசீமாமா வந்து,  கலியாணப்  பத்திரிகை வெச்சாங்களா….  அந்த நூறு ரூவாய எடுத்துகிட்டுத்தான்  நாளைக்கு கலியாணத்துக்கு போகனும்னு  சொல்றாங்க….”

“சரிம்மா…. அதுக்கென்ன….?’’   எதுவுமே தெரியாததுபோல கேட்டேன்.

அந்தப் பிஞ்சு உள்ளத்திடம் நடிப்பதை நினைத்து, உள்ளூர வலித்தது. திவ்யா தொடர்ந்தாள்.

“அதுதான் மாமா…. கலியாண வீட்டுக்கு வர்றவங்களை, பொண்ணு மாப்பிள்ளைகூட வெச்சு , போட்டோ பிடிப்பீங்க இல்லியா….”

“ஆமா….  அதுதானேம்மா எனக்கு வேலை….”

“அப்பிடீன்னா …. நாங்களும் பொண்ணு,மாப்பிள்ளை கூட நிண்ணு  போட்டோ  புடிச்சுக்கலாமில்லியா…? ”

அவள் முகத்திலே ஒரு ஏக்கம். எனக்குள்ளே இலேசான குழப்பம்.

“எதுக்கு  இப்பிடியெல்லாம் கேக்கிறே…. உங்களையெல்லாம்  போட்டோ  புடிக்கக் கூடாதுன்னு  யாராச்சும் சொன்னாங்களா….? ”

அந்தக் குழந்தையின் முகம் வாடிப்போனது. மௌனமாக நின்றாள். நானோ விடவில்லை.

“யாராச்சும் ஏதும் சொன்னாங்களா…. சொல்லும்மா….”

தயக்கத்தோடு பதில் சொன்னாள்  அவள்.

“யாரும்  ஒண்ணும்  சொல்லல்லை மாமா….  அப்பிடிப் போட்டோ புடிச்சுக்கிட்டா, உங்ககிட்ட சொல்லி  ஒரு காப்பி எடுத்துக்கணும்னு அம்மா சொல்லிகிட்டிருந்தாங்க….”

“ஒருகாப்பியென்ன , நூறு காப்பிகூட எடுக்கலாமே…. இதில யோசிக்கிற அளவுக்கு என்ன இருக்கு….? ”

“ரண்டு நாளைக்கு முன்னாடி, உமேசு வீட்ல போட்டோ புடிச்சாங்க…. அவங்ககூட நானும் தம்பிப்பயலும்  நின்னோம்…. அப்போ அவங்க பாட்டிவந்து, எங்க ரண்டுபேரையும் புடிச்சு இழுத்து தூர தள்ளிப்புட்டாங்க ..”

ஏற்கனவே இது என் காதில் விழுந்த சமாச்சாரந்தான். ஆனால், காட்டிக்கொள்ள முடியாதே….!

“அப்பிடியா….  சரி, அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்மந்தம்…? ”

“நாங்க காசுபணம் இல்லாதவங்கன்னுதானே,  எல்லாரும் எங்களை  தூரத் தள்ளுறாங்க…. …. உமேசு வீட்டில எங்களை ஒதுக்கினாங்க…. பரவாயில்லை… ஆனா, நாளைக்கு கலியாண வீட்டிலவெச்சு  நாங்க போட்டோ புடிக்க வர்றப்போ,  என்னைய ஒதுக்கின மாதிரி எங்கம்மா மனசு  கஷ்டப்பட   பேசிட்டாங்கன்னா…. அப்புறம் என்னால தாங்கிக்க முடியாது மாமா….”

இதயத்துக்குள் பயங்கர வலி தெரிந்தது. சில நொடிப்பொழுது அமைதிக்குப் பின்  அவளுக்கு ஆறுதல் சொன்னேன்.

“இந்தாபாரு  திவ்யா குட்டி…. இந்தக் கலியாணத்துக்கு நீங்களாப் போகல்ல….  உங்களை வரச்சொல்லி அவங்கதான் பத்திரிகை வெச்சாங்க…. அதுமட்டுமில்லாமே நீங்க சும்மா வரப்போறதில்லையே…. உங்கம்மா நூறு ரூவா மொய் வெக்கத்தானே போறாங்க…. அப்புறமென்ன…. எந்தப்பய என்னசொல்ல முடியும்…. சொல்லு பாக்கலாம்….”

அவளின் முகத்தில் இலேசான மலர்ச்சி தெரிந்தது.

“நீங்க நாளைக்கு பொண்ணு மாப்பிள்ளைகூட  எங்களை வெச்சு புடிக்கிற போட்டோல, என் தம்பிப்பய  மாப்பிள்ளை  மாதிரி   அழகா இருக்கணும்….”

அந்தப் பிஞ்சு உள்ளத்தில் நிரம்பிக்கிடக்கும் சகோதர பாசமும், குடும்ப

கெளரவ உணர்வும்   என் கண்களை ஈரமாக்கின.

வாசலைவிட்டு வெளியே இறங்கும்போதுதான் கவனித்தேன், பக்கத்துவீட்டுச் சுவர் மறைவில் நின்று எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தாள்  வைரமணி அக்காள்.

அவளைக் கவனியாததுபோல நடந்தேன் நான்.  அதுதான் நாகரிகமாகப் பட்டது எனக்கு.

நேற்றைய இந்த சம்பவம், மனதுக்குள் குடைச்சல் கொடுக்க, அவர்களை  எதிர்பார்த்தபடி போட்டோக்களைக்  “கிளிக்” பண்ணிக்கொண்டிருந்தேன்.

என் எதிர்பார்ப்பு  வீண்போகவில்லை.

வைரமணி அக்காவும் பிள்ளைகளுடன்   வந்து, மணமக்கள் மேடையில் ஏறி  மொய்கவரை நீட்டிய  போது, வசீகரன்  சிறிது சத்தமாகவே சொன்னான்.

“அக்கா…. முதல்ல நீங்களும், பிள்ளைகளும் போய் சாப்பிட்டிட்டு

வாங்க…! ”

கூட்டம் கொஞ்சம் களைகட்டத் தொடங்கியது. சாப்பிட்டு முடித்து வருபவர்கள்,  “குரூப் போட்டோ ” வில் அழகு காட்டினார்கள்.அவர்களை வரிசைப்படுத்தி நிறுத்துவதில்  சில நொடிப் பொழுதுகள் தாமதமாகின.

அடுத்தடுத்து வருபவர்கள்,  நேராக புதுமணத் தம்பதிகளிடம் மொய் செலுத்திவிட்டு,போட்டோவுக்காகத் தாமதித்து நின்றனர்.

வரிசைப்படி வைரமணி அக்காவும், பிள்ளைகளும் வந்து நின்றபோது, பிள்ளைகள் குதூகலத்தில் நிறைந்திருந்தனர். மகிழ்வுடன் “கிளிக்”செய்தேன்.

அடுத்தடுத்து வருபவர்களமீது என் கவனம் சென்றது.

மாப்பிள்ளை வசீகரன் எழுந்துவந்து, என்னை அந்த மேடையின் ஒரு ஓரமாய்க்  கூட்டிச் சென்றான்.

“தப்பா நெனைக்காதீங்க சார்….   நீங்க பிடிக்கிற போட்டோல, ஒருசில வேண்டாத போட்டோக்கள் இருக்கு…. நான் செலெக்ட் பண்ணித் தர்ரேன்…. அதுகளை டெலிட் பண்ணிடுங்க…. முக்கியமா இப்போ லாஸ்ட்டா வந்திட்டுபோன வைரமணி குரூப்….”

எனக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது. ஏழுவயசுக் குழந்தை திவ்யாவின் தீர்க்கதரிசனம் என்னை திகைக்கவைத்தது.

ஒரு சிறு வித்தியாசம்.உமேஷ் வீட்டில் நேரடியாக நெஞ்சிலே குத்தினார்கள். இவர்களோ,மறைமுகமாக முதுகிலே குத்துகிறார்கள்.

அடிப்படையில் , அந்தக் குழந்தையின் சிந்தனை உணர்வுகள் சரியானவையே…!

என்னால் வெறுமனே தலையாட்ட முடியவில்லை.

“என்ன பேசுறீங்க வசீ….  என் கண்ணு முன்னாலதானே அவங்ககிட்டை பத்திரிகை குடுத்து, கண்டிப்பா குழந்தைகளோட வரணும்னு  அந்தத் தாங்கு தாங்கிட்டு வந்திய….”

“வாஸ்தவந்தான் சார்…. அவுங்க வீட்டுக்காரன் சண்முகமும் நானும் ஒருகாலத்தில, ஒரே கம்பனியில டிரைவரா வேலை பாத்தோம்…. அப்போ அவுங்க வீட்டுக்கு போனதால, அந்தக்  குடும்பத்தை எனக்குத் தெரியும்…. அக்கம் பக்கத்தில  பத்திரிகை வைக்கிறப்போ  தங்களுக்கு பத்திரிகை  வைக்கல்லைன்னு அந்தப் பொம்பிளை ஊரெல்லாம் தம்பட்டம் பண்ணியிடுவான்னு பயந்துதான் வெச்சேன்…. ஏதோ ஒரு பார்மால்டிக்கு வாங்கிடுவான்னு நெனைச்சா, சொன்னபடி பட்டாளத்தோட  வந்திட்டா….”

என் கைகள் பதறின. ஆனால், உணர்வுகளை வெளியே தெரியும்படி  காட்டிக்கொள்ளாமல் – அமைதியாக கேட்டேன்.

“ஒகே  வசீ …. ஆல்பத்தில அவங்க போட்டோ ஒரு ஓரமா கிடக்கிறமாதிரி செட்பண்ணித் தர்ரேன்….  அதைவிட்டு,  டெலிட்டு  அது  இதுன்னு  எதுக்கு வேண்டாத வேலை….”

“நீங்க ஒண்ணு சார்…. இது மாதிரி குரூப்புகளை என் மாமனாருக்கு  பிடிக்கவே பிடிக்காது….  பொண்ணுவீட்டார்  சார்பில வந்தவங்களைப் பாருங்க…. ஆளுக்கு   ஐநூறு, ஆயிரம்னு  மொய்யும், பிரசெண்டேசணும் பண்ணிட்டு போறாங்க…. இதுங்க மொட்டைக் கழுத்தும், மூளி நெத்தியுமா  நூருரூவாய மொய் பண்ணிட்டு,   மூக்குப்பிடிக்க மூணும்  முழுங்கிட்டு போகுதுகளே…. இது போதாதா …. நாளைக்கு இதுமட்டும்  என் மாமனார்  வீட்டாருக்கு தெரிஞ்சா, அப்புறம் என்னையப்பத்தி  என்ன நெனைப்பாங்க…. சொல்லுங்க….”

கூறிவிட்டு, தன்  இருக்கையில் மனைவியுடன்  அமர்ந்துகொண்டான்.

மனிதர்கள் ஒவ்வொருவரையும் பற்றி நினைக்கும்போது தலைவலித்தது. சமையல் கட்டிலிருந்து வந்த பிரியாணி வாசனை, இப்போது சாக்கடை போல நாறியது.

“இவன் வீட்டு பிரியாணியை சாப்பிட்டால் ஏழு ஜென்மத்துப் பாவமும் ஒண்ணாச் சேந்து வந்து ஒட்டிக்கும்….”

முடிவு செய்தபடி, நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு  திரும்பினேன். திரைச்சேலை ஓரமாய் நின்று, கண்களைத் துடைத்தபடி  பின்புறமாய் சுற்றிச் சென்றாள் வைரமணி அக்காள்.

அப்படியானால், இத்தனை நேரமும் வசீகரன் என்னோடு பேசிய அனைத்தும் அவள் காதில் தெளிவாக விழுந்துவிட்டது என்பது உறுதி.

அன்றைய பணிகள் எப்படி முடிந்தன என்று எனக்கே தெரியவில்லை. மாலை ஐந்து மணிக்கெல்லாம் மண்டபத்தைக் காலி செய்துவிட்டார்கள்.

ஸ்டூடியோவில் கேமராவை ஒப்படைத்துவிட்டு, எனது ரூமுக்கு சென்றுவிட்டேன். மணியோ ஆறு முப்பது ஆகிவிட்டது.

நடந்த சம்பவங்கள்  நெஞ்சுக்குள் நெருடல் தர, சமாளிக்க முடியாத  பட்சத்தில், வைரமணி அக்காளுடன்  நேரிலே பேசிவிட வேண்டும் என்னும் முடிவுடன் அவர்களின் வீட்டுக்குச் சென்றேன்.

பிள்ளைகள் இருவரும் வீட்டுக்குள்ளிருந்து படித்துக்கொண்டிருந்தார்கள். வெளி வராண்டாவிலிருந்து பீடி சுற்றிக்கொண்டிருந்தாள்  வைரமணி அக்காள்.

பிள்ளைகளின் கவனம் வெளியே விழுந்துவிடாதிருக்க நான் மெல்லவே பேசினேன்.

“சாரிக்கா…. இப்பிடி  ஆகும்னு நான் எதிர்பாக்கலை….”

என்தலை குனிந்தது. வைரமணிஅக்காளின் முகத்தைப் பார்க்கும் தைரியம் எனக்கில்லை.

அவளோ எதுபற்றியும் கவலைபடாதவளாய், இலேசான புன்னகையைச் சொரிந்தாள். அதிலே வலியின் கலப்பு  ஒளிந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

“இதுக்காக  நீங்க எதுக்குசார் வருத்தப்படுறீங்க…. அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல….ன்னு ஒருகாலத்தில ஒளவையார் பாடிவெச்சாங்க …. இப்போ இது வத்திப்போன குளம்சார்….’’

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இவர்கள் இன்று அந்த கல்யாண மண்டபத்தை  விட்டுப் போனபின், வைரமணி அக்காவின் கணவர் சண்முகத்துக்கும், வசீகரனுக்குமுள்ள தொடர்புபற்றி  நான் அறிந்தவை  என் நினைவில் வந்தன.

“இவனுக்கு  உங்க வீட்டுக்காரர்தான்  டிரைவிங்கே சொல்லிக்குடுத்தாங்க  அப்பிடீன்னும்….  இவனு வீட்டில ரொம்ப  கஸ்டமான சிட்டிவேசன்  இருந்ததால, மதியச் சாப்பாடு  உங்க வீட்டுக்காரரோட  இவனுக்கும் சேத்து  எடுத்துக்கிட்டு, கம்பெனிக்குப் போவீங்கன்னு அறிஞ்சேன்….”

“அதை விடுங்க சார்…. மனசுவெச்சு நாம பண்ற ஒதவிகளையெல்லாம்  சொல்லிக்காட்டிறது நாகரிகமில்லை….  இனத்தோட இனம் சேரும்…. பணத்தோட பணம் சேரும்னு சும்மாவா சொன்னாங்க…. அந்தப் பையனா வந்து பத்திரிகை வெச்சான்…. பழகின பாசத்துக்காக போனேன்….  பணம், பாசத்தை முழுங்கிடிச்சு….    இத்தனை வயசாகியும் என்ன பிரயோசனம்….  பாசத்துக்கும், வேசத்துக்கும்  வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாத முட்டாளா வாழ்ந்திட்டேன்னு நினைக்கிறப்போதான்  கொஞ்சம் சங்கடமாயிருக்கு…. என்னயபத்தி மட்டும் பேசியிருந்தா பரவாயில்லை….  என் புள்ளைங்க  சாப்பிட்டதைக்கூட  உங்ககிட்ட சொல்லிப் பேசினதைத்தான் என்னால தாங்கிக்க முடியல்ல….”

இடதுகை  சுட்டு விரலால்  தன்  இருகண்களையும்  துடைத்துக் கொண்டாள்.

“இப்பிடிப்பட்டவனுக்கு போட்டோ பிடிக்க ஏன் போனோம்னுதான் எனக்கு தோணுது….”

என் உள்மன ஆதங்கம் வார்த்தையில்   வார்த்தையில் வெளிப்பட்டது.

“தொழிலிண்ணு வர்றப்போ, நல்லவன் கெட்டவன்னு பாத்து செய்யமுடியுமா சார்….  அவன் துட்டுக்குடுக்கிறான்…. நீங்க தொழில் செய்து குடுக்கிறிய…. அவன் யார்யாரை பிடிக்கணும்னு சொல்றானோ, அவங்களைப் புடிக்கிறதும், யார்யாரைக் கழிக்கணும்னு சொல்றானோ , அவங்களை டெலிட்டு செய்து கழிக்கிறதும், போட்டோ பிடிக்கிறவங்க செய்யிற வேலைதானே….   என்னமோ  நீங்க பக்கத்து வீட்டுக்காரரா இருக்கிறதால, இண்ணிக்கு எங்களுக்கு நடந்த அவமானத்தக் கண்டு வருத்தப்பட்டுப் பேசிறீங்க…. என்வீட்டுக்காரங்க எப்போ எறந்துபோனாங்களோ அண்ணேலயிருந்து, அப்பப்போ இதுமாதிரி வலிக , அவமானங்க, வம்புக வந்துகிட்டுத்தான் இருக்கு…. ஆனா என்மனசாட்சிக்கு  தப்பில்லாமே நான் நடக்கிற வரைக்கும் யாரைப்பத்தியும்  எனக்கு கவலையில்லை சார்….”

சில நொடிப்பொழுது நிசப்தம். மௌனத்தைக் கலைத்து  சமாளித்தேன்.

“அக்கா…. அவன்தான் உங்க போட்டோவை வேண்டாம்னு  சொன்னான்…. நானும் குடுக்கல்ல…. ஆனா நீங்க சும்மா வரல்ல…. அவன் வலிஞ்சு கூப்பிட்டதால  வந்தீங்க…. உங்க தகுதிக்கு ஏத்தாப்போல மொய் செஞ்சீங்க.. இது எனக்கு நல்லாத் தெரியும்…. அதனாலதான்  சொல்றேன், அந்தப் போட்டோல, பொண்ணு மாப்பிள்ளையக்  கட்பண்ணிட்டு, நீங்க மூணு பேரு  நிக்கிற சைட்டை மட்டும், தனிப் பிரேமில செட்டிங் செய்து,    ஒரு காப்பி போட்டு உங்களுக்குத் தர்ரேன்…. உங்க  பிள்ளைங்க ரண்டும்  எம்புட்டு ஆசைப்பட்டாங்கன்னு  எனக்கும் தெரியுமில்லியா…. நான் சும்மா தரல்லை…. உங்ககிட்ட துட்டு வாங்கிக்கிறேன்….”

முகத்தை நிமிர்த்தி, நேருக்கு நேராக என்னை நோக்கினாள். அவளது கண்கள் எனது கண்களில் நிலை குத்தின. அதிலே  ஒளிவிட்டுக்கொண்டிருக்கும் தன்மானச் சுடரின் வைர வடிவத்தை என் கண்களால் பார்க்க முடியவில்லையே தவிர, இதயத்தால் உணர முடிந்தது.

“வேணாம் சார்…. மூஞ்சிக்கு முன்னால தேனாப் பேசிட்டு, முதுகுக்குப் பின்னாடி குத்துறவங்க உறவுக தேவையே இல்லை…. அவுங்க உருவத்தைக் கழிச்சிட்டு எங்களை மட்டும் நீங்க போட்டுத் தந்தாலும், அந்தப் படத்தை பாக்கிற நேரத்திலையெல்லாம், அதோட சேந்த சம்பவமும் நெனைவுக்கு  வரும்….  அப்போ  நெஞ்சில வலிக்கும் …. இல்லியா….”

“நீங்க எங்கமேல இம்புட்டு  அக்கறை வெச்சதுக்கு ரொம்ப சந்தோசம்…. இன்னும் ரண்டு நாளில எனக்கு கொத்தனார்கிட்டயிருந்து சம்பளம் கிடைக்கும்…. பிள்ளைங்களை கூட்டிக்கிட்டு நீங்க வேலை பாக்கிற ஸ்டூடியோவுக்கே வர்ரேன்…. எங்க மூணு பேரையும் வெச்சு, அழகா  பெரிய சைசில போட்டோ  புடிச்சு பிரேமும் பண்ணிக் குடுத்திடுங்க….”

சரியென்று  தலையசைப்பதைத் தவிர, வேறு எதுவும் செய்ய முடியவில்லை. புறப்படத் தயாரானேன்.

நோக்கத்தைப் புரிந்து கொண்ட வைரமணி அக்காள், கொஞ்சம் அழுத்தமாய்ச் சொன்னாள்.

“சார்…. தப்பா நெனைக்காதீங்க…. எங்களுக்காக மட்டுமில்லை., யாருக்கானாலும் சரி …. உங்களுக்கு  துட்டுக்குடுத்து ஆடர் பண்ணிக் கூப்பிடுறவங்க பர்மிசன் இல்லாமே, அவங்க பங்சன் சம்மந்தமான  எந்தப் போட்டோவையும் யாருக்கும் காப்பி பண்ணிக் குடுத்திடாதீங்க….  அது கிட்டத்தட்ட உங்க தொழிலுக்கு நீங்க பண்ற துரோகம் மாதிரி…. வசீகரன் சொன்னது போல…. அதை டெலிட் பண்ணுறதுதான் அவனுக்கு   மட்டுமில்ல….  எங்களுக்கும்  பண்ற பெரிய ஒதவி…. உங்க தொழிலைப்  பொறுத்தவரையில வசீகரன் குடும்பமும், நாங்களும் சேந்து புடிச்சது சாதாரண  நிழல் படங்கள்…. ஆனா என் மனசைப் பொறுத்தவரையில  அது    நிஜ ஜடங்கள்…..  நீங்க நிழல  டெலிட் பண்ணுங்க….  நான் நிஜத்தை  டெலிட் பண்ணிக்கிறேன்…. ஆமா சார்…. இவன் மாதிரியானவங்க உறவுகளை….”

ஆக்கம் :  இரத்தினசிங்கம். விக்னேஸ்வரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad