Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கடிதம்

Filed in கதை, வார வெளியீடு by on June 22, 2020 0 Comments

அம்மா இண்டைக்கு போஸ்மென் கெம்பஸ் செலக்சன் லெற்றர் கொண்டு வருவான், கொஞ்சம் கவனமா இருங்க“. “சுமன் மஞ்சுக்கிட்டயும் சொல்லப்பா”. மஞ்சுவை சுமன் அழைத்தபோதுஅண்ணா நேற்றுப் புள்ளா அம்மாவும் நானும் கடப்பில காவல் இருந்தனாங்க, இண்டைக்கும் அப்பிடித்தான், அத நீ சொல்லயா வேணும்“. “அதுதானே வாயாடிஎனக்கூறி சுமன் கடைக்குப் புறப்பட்டுச் சென்றான். “அம்மா லெற்றர் வருதோ இல்லையோ றோட்டால போற எந்தப் போஸ்மெனயும் நான் விடுறதாயில்லஎனக்கூறிக் கதிரை ஒன்றைத் தூக்கிக்கொண்டு வீதியில் உள்ள மரநிழலிற்குச் சென்று கதிரையில் அமர்ந்தாள். “காரல், சூட, நெத்தலி மீன்மீன்“. என உரத்த குரலில் சத்தமிட்டுக்கொண்டு ஒரு மீன் வியாபாரி வந்துகொண்டிருந்தார். அவர்; அங்குமிங்கும் சூரிய ஒளியில் உலர்ந்ததும் உலராததைப்போன்ற ஆடை அணிந்திருந்தார். மெல்லிய உடல், நீண்ட கால்கைகள், சுருண்ட முடிகள் உடையவர் அது மாத்திரமல்லாது தனக்கேற்றாற்போன்றே  ஒல்லியான மீன்களை விற்று வந்தார். அவரைக்கண்ட மஞ்சுமீனக் கொண்டு வாங்க…” எனச் சத்தமிட்டாள்

அவளது சத்தத்தில் அவர் அவ்விடம் வந்து விட்டார். மஞ்சு தாயை அழைத்துநெத்தலி மீன் வாங்கம்மா“. “என்ன இண்டைக்கும் சூட, காரல், நெத்தலி தான் கொண்டு வந்திருக்கிறாரு“. “நெத்தலி மீன் நல்லம் தானேஎன்றான் மீன்வியாபாரி. எந்த நாளும் சாப்பிடேலாது, கடல் நண்டுகள் இல்லையா?”. “வந்து பட்டா கொண்டு வாறன், கொளுத்த மீனெல்லாம் எனக்கிட்ட வரக்கூடா எண்டு எண்ணித்துப் போலஎன நகைத்துக்கொண்டு மீண்டும் சத்தமிட்டுக்கொண்டு சென்றார். “என்ன பீயோன் போறானா?”. “இல்ல அம்மா“. “நான் மீன வச்சித்து வாறன், அந்த றோட்டுக்கும் போய்ப் பாப்பம்“. சமையலறைக் கட்டினுள் சென்று மீனை வைத்து விட்டு கதவைச் சாத்திவிட்டு யன்னலைச் மூட மறந்துபோய் வந்தாள். இருவரும் சேர்ந்து வீதிவீதியாக அலைந்தனர். “கண்ணுக்கு எட்டின வரை ஒரு போஸ்மெனயும் காணல்ல அம்மா“. “மஞ்சு அந்நா ஒரு பீயோன் வாறான்“. “அது போஸ்மென் இல்லம்மா, மாநகர சபையில வேலசெய்ராக்கள்“. “மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரித்தான் இருக்கி“. 

மீன் கெட்டுப்போயிரும்போல வீட்ட போய் நெத்தலிய ஒரு சொதி வச்சிப்போட்டு, சாப்பிட்டுத்து வந்து பாப்பம் வா“. என கோமதி கூற மஞ்சுவும் வீடு நோக்கி நடக்கலுற்றாள். சட்டென்று ஒரு போஸ்மென் தொலைவில் நிற்பது அவளுக்குத் தெரிந்தது. “அம்மா நீ மெல்ல மெல்ல வீட்ட போ நான் லெற்றறோட வாறன்“. எனக்கூறி ஒலிம்பிக்கில் ஓடும் வீராங்கணையைவிட வேகமாக அங்கிள் நில்லுங்க நில்லுங்க எனக் கூறிக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். குறித்த போஸ்மென் துவிச்சக்கரவண்டியில் பறந்து கொண்டிருந்தார். “இந்த வயது போன மனிசனுக்கு இவளவு சத்தமா கூப்பிட்டும் எண்ட சத்தம் கேக்கலயா“. கூப்பிட்டுக் கூப்பிட்டு அவளுடைய தொண்டை கம்மியதுதான் மிச்சம். மஞ்சுவால் இயலவில்லை. தனது ஓட்டத்தின் வேகமும் குறைந்ததுஅவளின் அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது. அதில் இருந்தவரை அழைத்தார். அவருக்கு அவளின் சத்தம் கேட்டது. அவரிடம்அந்த போஸ் மெனக் கொஞ்சம் நிக்கச் சொல்லுங் சேர் உங்களுக்கு புண்ணியமாப் போகும்“. “அவள் கூறியதைக்கேட்ட அவர் சிரித்துக்கொண்டு வேகமாக் சென்று போஸ்மெனை நிறுத்தி அவரிடம்பின்னால் ஒரு பிள்ள உங்களத் துரத்தி வருது“. எனக்கூறினார்

அதைக்கேட்ட போஸ்மென் திரும்பிப் பார்த்தார். மஞ்சு அவளை அழைத்தவாறு நின்றாள். அவளின் அருகில் வந்த போஸ்மென்என்ன புள்ள கடுமையான ஓட்டம் ஓடினனீயா“.  “அது இருக்கட்டும், சுமன் எண்ட பேரில ஒரு கடிதம் வந்ததா?”. “நீ முதல் எந்த ஏரியா தாண்டியடி ஒண்டு என மூச்சுத்திணறியபடி பதிலளித்தாள்“. “நான் உங்கட ஏரியா இல்ல, தாண்டியடி ஒண்டுக்கு சுப்பிரமணி அவன் இப்பதான் புதிசா வந்திருக்கிறான். “என்ன இது புதுசாவா பழைய ஆளே ஒரு கடிதத்த ஒரு கிழமைக்குப் புறகுதான் கொண்டு வருவாரு“. என புலம்பியபடியே அருகில் இருந்த புளியமர நிழலில் அமர்ந்தாள் மஞ்சு. அதிகரித்த வெயிலில் தலையில் சேலை முந்தாணையைப் போட்டுக்கொண்டு அவளுடைய வள்ளிப் பெரியம்மா வந்தார். அவளைக் கண்டதும்என்ன சுமதி இவடத்தில இருக்கிறா?”.  “போஸ் மென பாக்க வந்தனான் பெரியம்மா, நீங்க எங்க போய் வாறீங்க இந்த மதிய நேரம்”.தண்ணி எடுக்க சமுர்த்திக் காராக்களுக்கிட்ட கடிதம் ஒண்டு குடுத்துத்து வாறன்“. “அம்மாவும் குடுத்தவதான் இன்னும் தரல்ல, ஆத்துக்கு தண்ணி எடுக்கப்போய் காலும் வலிச்சிகுடம் வச்சி வச்சி இடுப்பும் தேஞ்சிபோயித்து அம்மாவுக்கு தண்ணியுமில்ல, ரவுணுக்குப் போறண்டா இங்க இருந்து மெயினுக்கு ஆட்டோ புடிச்சிப் போக இருநூறு வேணும், அதுதான் பெரியம்மா நான் ஓயலுக்கு கொஸ்ரல் போய் படிக்கப்போறன்“. “சுமன் மட்டக்களப்பு கடையில வேல பாக்கிறானாம் எண்டு கேள்விப் பட்டன்“. 

அவன்ர கடிதம் ஒண்டுக்குத்தான் பெரியம்மா இப்பிடி ஓட்டம், அவனும் ஏயல் முடிச்சித்து வீட்ட வந்து ஒரு வருசத்துக்கிட்ட வந்துத்து கெம்பஸ்  படிக்கப்போகத் தெரிவாகித்தான், அந்த லெற்றர்தான் பெரியம்மா இப்பிடி எங்கள சாகடிக்கிது பசிவேற வயித்தக்கிள்ளுது நான் வீட்டபோய் சாப்பிட்டுத்தான் மற்ற வேல“. வெயிலில் அங்கும் இங்கும் அலைந்து வீடு வந்து சேர்ந்தாள் மஞ்சு. “என்ன வாய் காஞ்ச புலி போல வந்திருக்கிறா?”. “அந்த போஸ்மனுக்கிட்டயும் கடிதம் வரலயாம், கடிதத்த புறகு பாப்பம், நெத்தலி மீன் கறி சோறு தாம்மா“. “புள்ளே அந்தக் கதயக் கேட்டால, யன்னல அடையாம வந்துத்தன் பூன பூந்து நெத்தலி மீன் முழுதயும் திண்டு போட்டுது“. “எனக்கு வாற கோபத்துக்கு முதலில அந்த போஸ்மென், இரண்டாவது அந்தப் பூனஎன கோபத்தில் கத்தினாள். “இந்தா ரின்மீன் வாங்கிச் சமச்சுத்தன், சோறு போடுறன் கை காலக்  கழுவித்து வா“. “கொதிக்கட்டும் கறி அவசரப்பட்டு இறக்காதங்க, நான் படம் பாக்கிறன்“. எனக்கூறி உறங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை விளிக்கச் செய்தாள்

அவளுக்கு ஏற்றவாறே திரைப்படமும் காட்சியளித்தது. சக்தி ரீவியில்ஆசையில் ஓர் கடிதம்என்னும் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. “சந்தர்ப்பம் பார்த்து ரீவியும் கொல்லுதே, வசந்தம் ரீவியில்ஒரு கடிதம் எழுதினேன்…’ என்னும் பாடலும் காட்சிப்படுத்தப்பட்டது இண்டைக்கு ரீவியயும் அடிச்சி உடைக்கப்போறன். “உடைச்சுட்டுறாத, வந்து சாப்பிடு, அம்மா அண்ணா வந்ததும் நாளைக்கு நேரத்தோட போய் ரவுண் போஸ்ட்ஒபிசில லெற்றர பாக்கச் சொல்லுவம்“. “ அப்பிடித்தான் செய்வம்“. சாப்பிட்டு முடித்ததும் இரண்டு மணி தொடக்கம் நான்கு மணிவரை வீதியில் உள்ள மரநிழலில் நித்திரை தூங்கித் தூங்கி போஸ்மெனப் பார்த்து அவளுக்கு கண்கள் பூத்துப்போயே விட்டன. மாலையில் சுமனும் வீடு வந்தான். “மஞ்சு நடந்தவற்றைக்கூறி அண்ணா நாளைக்கு ரவுண் போஸ்ட் ஒபிஸ் போய் லெற்றறக்கேளு“. “அதுதான் சரி நாளைக்குக் கடைக்குப் போறல்ல சைக்கிலக்கொண்டு மெயினில இரிக்கிற ஒரு வீட்டில போட்டுத்துப் போறான்“. “அப்பிடித்தான் செய் சுமன் நாங்க பீயோனத் தேடித் தேடி ஓடி ஓடி களச்சிப் பொயித்தம்எனக் கூறினாள் கோமதி.

மறுநாள் சுமன் போஸ்ஒபிஸ்க்குச் சென்றான். அது பல இடங்களுக்கு தபால் சேவை வழங்கும் மத்திய தபால் நிலையம் ஆகும். தபாற்காரர்கள் தங்களுக்குரிய பிரதேசங்களுக்கு ஏற்றவாறு கடிதங்களைப் பெற்றுக் கடமைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். சுமனுக்கு தனது பிரதேசத்திற்குப் பொறுப்பான தபாற்காரரை அடையாளங் காணமுடியவில்லை. சில தபாற்காரரிடம் வினவினான் ஆனால் தனது பிரதேசத்திற்குப் பொறுப்பானவரைச் சந்திக்கவில்லைபிரதான தபாற் பொறுப்பதிகாரியிடம் வினவினான். அவர் சிறிது நேரத்திற்கு முன்னர் இங்கிருந்து சுமனுடைய பிரதேசத்திற்குச் சென்றுவிட்டதாகவும் சுமனின் கடிதத்தை  அவர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறினார். அதைக்கேட்ட சுமன் மஞ்சுவிற்கு தொலைபேசிமூலம் தபாற்காரர் வருவதாகவும் அவதானமாக இருக்கும்படியும் கூறினான். இதைக்கேட்ட மஞ்சுஅம்மா போஸ்ஒபிஸில இருந்து போஸ்மென் லெற்றரக்கொண்டு போயித்தாராம் இண்டைக்கும் றோட்டு றோட்டாப் போய் போஸ்மெனத் தேடுவம். அந்தக் கடிதம் மட்டும் எனக்குக் கிடைக்கட்டும் அதுக்கு கேக்கிறத்துக்கு வாய் இருந்தா ஏன் உனக்கு எங்களுக்கிட்ட வர விருப்பமில்லையா? எண்டு கேப்பன்“.  “நீ பிறகு கேளு, இப்ப போய் பீயோனப்பாரு“. “சரி போறன்எனக்கூறி மஞ்சு சென்றாள்

வழமைபோல அலையத் தொடங்கினாள். நண்பகல் பன்னிரண்டு மணி கடந்தும் கடிதம் மஞ்சுவின் கைக்குக் கிடைக்கவில்லை. மஞ்சு தனக்குக் கடிதம் கிடைக்கவில்லை என்பதை சுமனுக்கு அறிவித்தாள். சுமனும் தான் வீடுநோக்கி வருவதாகக் கூறினான். பின்னர் சுமனும், மஞ்சுவும் இணைந்து தபாற்காரரைத் தேடினார்கள். நீண்டநேரத்திற்குப் பின்னர் இருவரும் ஒரு மரநிழலில் இழைப்பாறினர். “வாற கிழமையோட குளோசிங் முடியுது. இண்டைக்குக் கிடைக்காட்டி, திங்கலும் லீவு, செவ்வாக்கிழம அஞ்சுமணிக்கி இஞ்ச இருந்து வெளிக்கிட்டா ஒன்பது மணிக்கெலாம் போஸ்ஒபிஸ் போயிருவன், எப்பிடியாவது லெற்றறோடதான் வருவன். அண்டைக்கும் கிடைக்கல்ல எண்ட லெற்றற இனி தேடி அலையிரல்ல, கிடைச்சாக் கிடைக்கட்டும், இல்லாட்டி யூனிவசிற்றி கிடைக்கல்ல எண்டு நினைக்கிறான்“. “ஏன் அண்ணா இப்பிடிக் கதைக்கிறா?, ஒரு லெற்றர் இந்தப்பாடு படுத்துதா?, கிடைக்கும் எண்டு நினைப்பம்“. எனக்கூறினாள் மஞ்சு. பின்னர் இருவரும் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். அவர்களைநோக்கி ஒரு தபாற்காரர் வந்துகொண்டிருந்தார். இருவருக்கும் என்னசெய்வதென்று தெரியவில்லை. தபாற்காரரிடம் வினவினார்கள். “நீ தானா தம்பி அந்தச் சுமேந்திரன் எத்தின பேருக்கிட்ட விசாரிச்சன் மூண்டு நாளா இந்தக் கடிததத்த தூக்கித்து அலையுறன்”. “நாங்களும் அப்பிடித்தான் அங்கிள் அலையுறம்”. “நேற்று இந்த றோட்டால வந்தனான் ஒரு காக்காக்குருவிகூட இந்த றோட்டில இல்ல“. “அந்த நேரம் நாங்க உங்களத்தேடிப் போயித்தம் அங்கிள்“. “இப்ப ஒரு தம்பிதான் சொன்னான் இதால போங்க அங்கிள் எண்டு இந்தாங்க புடிங்க உங்கட கடிதத்த“. ஆவலோடு மஞ்சு கையொப்பத்தை இட்டு கடிதத்தைப் பெற்றுக்கொண்டாள். கடிதத்தைக் கண்டவுடன் கடிதத்தின்மேல் அவள் கொண்ட கோபம் நீங்கி அதன் முக்கியத்துவமே முதன்மையாகத் தென்பட்டதால் மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். சுமனும் கடிதத்தின் பிரகாரம் பல்கலைக்கழகம் செல்லத் தயாரானான்

 

சிவராசா ஓசாநிதி

உதவி விரிவுரையாளர்

மொழித்துறை

கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad