Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மருந்தாக்க நிறுவனங்களின் விளம்பர ஆதிக்கம்

ஐக்கிய அமெரிக்காவில், சராசரியாக ஒரு மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஒருவர், குறைந்தபட்சம் ஒன்பது மருந்துகள் தொடர்பான விளம்பரங்களைக் காண நேர்கிறது. இவை பொதுவாக கடைகளில் கிடைக்கும் (Over the counter – OTC) மருந்துகளுக்கானவை அல்ல. இவை நோயாளிகளைப் பரிசோதிக்கும்  மருத்துவர்கள் பரிந்துரைக்கும், மருந்துச் சீட்டு மூலமாக மட்டுமே பெறக்கூடிய மருந்துகளுக்கான விளம்பரங்கள். மருத்துவச் சோதனைகள், உபாதைகள், அவற்றின் மூல காரணங்கள் குறித்த போதுமான கல்வியும், அனுபவமும் இல்லாத சாமான்ய நுகர்வோருக்கு, நேரடியாக இவ்விளம்பரங்களைக் கொண்டு சேர்ப்பதன் நோக்கம் என்ன? ஒரு நிமிடம் ஓடக்கூடிய விளம்பரத்தில் கடைசி 15 வினாடிகளில், அந்த மருந்தின் பக்க விளைவுகள் குறித்த தகவல்களை அவசர அவசரமாக, பொதுவாக எவருக்கும் எளிதில் புரிந்து விடாதபடி பட்டியலிடுவது நுகர்வோரிடம் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? போதாக்குறைக்கு  “உங்கள் மருத்துவரிடம் எங்கள் மருந்தைப் பற்றி கேளுங்கள்” என்று அவர்களைத் தூண்டிவிடுவது முழுக்க முழுக்க வியாபார உத்தியல்லவா?

நுகர்வோருக்கு நேரடி மருந்து விளம்பரம்

டி.டி.சி.பி.ஏ. (DTCPA ) எனப்படும் நுகர்வோருக்கு நேரடி மருந்து விளம்பரம்’ (Direct-to-Consumer Pharmaceutical Advertising) என்பது ஒரு மருந்து நிறுவனம் தனது மருந்து தயாரிப்புகளை நேரடியாக நோயாளிகளுக்கு விளம்பரப்படுத்த மேற்கொண்ட முயற்சி எனலாம். 1980 ஆம் ஆண்டு நிலவிய அரசியல் மற்றும் கலாச்சாரச் சூழல் நோயாளிகள் தங்கள் உடல்நலன் முடிவெடுப்பதில் தீவிரமாகப் பங்கேற்கத் தொடங்கினார்கள். இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ‘மெர்க்’ (Merck) நிறுவனம் 1981 ஆம் ஆண்டு முதன்முதலாக நுரையீரல் உபாதைகளுக்கான   (Pneumonia) மருந்தை அச்சு ஊடகத்தில் விளம்பரப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, உடல் வலி மருந்துகளை விளம்பரப்படுத்திய  ‘பூட்ஸ்’ நிறுவனம் அடுத்த கட்டத்திற்குச் சென்று தங்களது மருந்தை மற்ற மருந்துகளுடன் ஒப்பிட்டு, தங்களது மருந்தின் சிறப்பை நிலைநாட்ட முயன்றார்கள். அந்த நேரத்தில் சுதாரித்துக் கொண்ட ‘உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை’ (Food and Drug Administration – FDA) மருத்துவப் பொருட்கள் குறித்த விளம்பரங்களுக்காக, அனைத்து ஊடகப் பிரிவுகளுக்கும் சில விதிமுறைகளைப் பரிந்துரைத்தது. காலப்போக்கில் சில திருத்தங்கள் கொணரப்பட, இத்தகைய நேரடி விளம்பரங்கள் அசுர வளர்ச்சியைக் கண்டன.1981 ஆண்டு வாக்கில் 16 மில்லியன் டாலர்களாக இருந்த மருந்து விளம்பரச் செலவு, 2019 ஆண்டில் 6 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. 

பரிந்துரைக்கப்பட்ட மருந்து விளம்பரங்களை அமெரிக்கா, நியூசிலாந்து தவிர்த்து பிற நாடுகள் அனுமதிப்பதில்லை. வர்த்தகப் பண்டங்கள் போல மருந்துகளை விளம்பரப்படுத்துவது, நுகர்வோருக்கு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் அபாயத்தை விளைவிக்கக் கூடியது என்ற காரணத்தினால் இத்தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் நுகர்வோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அமெரிக்காவும், நியுசிலாந்தும் நேரடி மருந்து விளம்பரங்களை அனுமதித்துள்ளன. மற்ற நாடுகளின் அச்சம் மிக நியாயமானது என்று அமெரிக்க சுகாதார ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருதுகிறார்கள். ஏல் பல்கலைக்கழகத்தின் (Yale University) பேராசிரியரும், மருத்துவத் துறை ஆய்வாளருமான ஜோசப் ராஸ், இவ்விளம்பரங்கள் ஏனைய தயாரிப்புகளை (other commodities) விளம்பரப்படுத்துவது போன்றவைதான் என்கிறார். மருந்துகள் ஒவ்வொரு நோயாளியின் வளர்சிதை மாற்றங்களுக்கு (metabolism) உட்பட்டவை. குறிப்பிட்ட நோயுடைய அனைவருக்கும் ஒரே மருந்து தீர்வளிக்காது. நோயாளியின் உடல் / மனநிலையை அறிந்த மருத்துவர் மட்டுமே பரிந்துரைக்கக்கூடியது. அந்நிலையில் இவ்வித விளம்பரங்கள் நுகர்வோரிடம் விழிப்புணர்வுக்குப் பதிலாக மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. மேலும் விளம்பர நிறுவனங்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் விதிமுறைகளை நுணுக்கமாக மீறுகிறார்கள். “மக்கள் நிரம்பியிருக்கும் ஒரு அரங்கில் திடீரென ‘தீ பிடித்துவிட்டது. ஓடுங்கள்’ என்று கூக்குரலிடும் நபரின் வேலையைத்தான் இவ்விளம்பரங்கள் செய்கின்றன” என்கிறார் ராஸ்.

விளம்பரப் பிரிவுகள்

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, மருத்துவம் தொடர்பான விளம்பரங்களை மூன்று பெரும் பிரிவுகளில் வகைப்படுத்துகிறது. 

உதவி நாடும் விளம்பரங்கள் – (Help-seeking ad). இவ்வகை விளம்பரங்கள் ஒரு நோய் அல்லது அது குறித்த அறிகுறிகளை விவரிக்கிறது. இவ்வகை விளம்பரங்கள், சிகிச்சைக்கான எந்த ஒரு தனிப்பட்ட மருந்தையும் பரிந்துரைப்பதில்லை. குறிப்பிட்ட அறிகுறிகளைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு அணுக வேண்டிய நிறுவனங்கள் பற்றிய விளம்பரமாக இவை அமைந்திருக்கும். உதாரணமாக, மனநலம் – குறிப்பாக உளச்சோர்வு, மனத் தளர்ச்சி – குறித்த விளம்பரங்கள் மருந்துகளை முன்னிலைப்படுத்துவதில்லை.

நினைவூட்டும் விளம்பரங்கள் – (Reminder ad). நினைவூட்டல் விளம்பரங்களில் மருந்தின் பெயர், விலை போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது என்ன நோய்க்கான மருந்து, பக்க விளைவுகள் போன்றவை இருக்காது. இந்த விளம்பரத்தின் அனுமானம் என்னவெனில், பார்ப்பவர்களுக்கு அது எதற்கான மருந்து என்ற புரிதல் இருக்கும். மருந்தின் சிறப்புகள், பக்க விளைவுகள் பற்றிய தகவல்கள் இதில் இருப்பதில்லை. உதாரணத்திற்கு, ‘உங்கள் மருத்துவரிடம் ஆர்பிட்ரேயர் பற்றி கேளுங்கள்’ (Ask your Dr. about Arbitraer) என்பது போன்ற விளம்பரங்களைச் சொல்லலாம். இவற்றில் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் காணப்படும் எச்சரிக்கைக் குறிப்புகள் (Black Box Warning or Boxed Warning) இருப்பதில்லை.

தயாரிப்பு உரிமைகோரல் விளம்பரங்கள் – (Product claim ad) – இவற்றில் நோயின் அறிகுறிகள் மருந்தின் பெயர், அவற்றின் செயல்திறன், பக்கவிளைவுகள்,  பாதுகாப்புத் தொடர்பான தகவல்கள் அனைத்தும் முன் வைக்கப்படுகின்றன. இன்று அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் வெளியாகும் 90% மருந்து விளம்பரங்கள் இந்த வகையைச் சார்ந்தவையே. குறிப்பாக நெடுங்காலம் நீடிக்கும் (‘chronic diseases’) நோய்களுக்கான மருந்துகள் உரிமை கோரல் விளம்பரங்களாக இருக்கும். தொடர்ந்து ஆண்டுக் கணக்கில் அல்லது வாழ்நாள் முழுதும் எடுக்க வேண்டிய இவ்வகை மருந்துகள், பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இவ்விளம்பரங்கள், தங்களது மருந்தின் சிறப்பைச் சொல்வதைவிட பக்கவிளைவுகளைப் பட்டியலிட அதிக வினாடிகள் எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே சொன்னது போல இப்பட்டியல் துல்லியமாக இருப்பதில்லை. பெரும்பாலும் ஆதாரமற்ற, தவறாக வழி நடத்தும் தகவல்கள் நுகர்வோரைத் திணறடிப்பதுண்டு. 

தகவல் தொடர் தாக்குதல்

சராசரி நபர் ஒருவர், ஒரு வருடத்தில் சுமார் ஒன்பது மணிநேர மருந்து விளம்பரங்களைப் பார்க்க, படிக்க நேரிடுகிறது; ஆனால் வருடத்திற்கு நான்கு முறை மருத்துவரிடம் செல்லும் ஒரு நோயாளி, தடவைக்கு 30 நிமிடம், அதாவது ஆண்டுக்கு 2 மணி நேரம் மட்டுமே செலவிடுகிறார். விளம்பரங்கள் நோயாளிகளுக்கு தகவல் பெருஞ்சுமை (information overload) நிலையை உண்டாக்கிக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன. 

உதாரணமாக, சக்கரை நோய்க்கு விளம்பரப்படுத்தப்படும் சில மருந்துகள், ‘உடல் எடையைக் குறைப்பதாக சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்’ என்று குறிப்பிடுவதுண்டு. அதாவது நேரடியாக இத்தகவலை ஊர்ஜிதப்படுத்த முடியாத மருந்து நிறுவனங்கள் பொத்தாம் பொதுவாக இப்படி சொல்வது தெளிவின்மையை உண்டாக்குகிறது என்பது சிலரது வாதம்.

நேரடி விளம்பரங்களின் விளைவுகள்

இவ்விளம்பரங்கள், நோயாளிகளுக்கு மருத்துவம் குறித்த அடிப்படை புரிதலைக் கொடுத்து, அவர்களையும் தங்களது ஆரோக்கிய நலனில் பங்கேற்கும் பொறுப்பையளிக்கிறது என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். அமெரிக்காவில், சுகாதாரச் சீர்த்திருத்தங்களுக்கான உந்துதலை மருந்து விளம்பரங்கள் உண்டாக்குகின்றன. பொதுவாக, மருத்துவர்கள் குறிப்பிட்ட மருந்தைப் பரிந்துரைக்கும் சமயத்தில் அதன் பக்க விளைவுக்கான அறிகுறிகள் பற்றிப் பெரிதும் சொல்வதில்லை. நுகர்வோரும் அது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இவ்விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கிறது என்று வாதிடுகிறார்கள் சிலர். மேலும் மருந்துகளின் ஆராய்ச்சி, எதிர்கால திட்டங்கள் குறித்து இவ்விளம்பரங்கள் புதிய வழிகளை உருவாக்கித் தருகிறது. உதாரணமாக, சக்கரை நோய்க்கு தினமும் எடுக்க வேண்டிய ‘இன்சுலின்’ சில குறிப்பிட்ட இடைவெளிகளில் எடுத்தால் போதுமென்பது போன்ற மருந்துகள் வரத்தொடங்கிவிட்டன. இது பற்றிய அறிமுகம் மக்களுக்கு நேரடியாகச் சென்றடைய இவ்விளம்பரங்கள் உதவுகின்றன.

இவர்களது புள்ளி விவரங்கள் படி, சுமார் 48% நோயாளிகள், இணையத்தில் வெளியாகும் மருத்துவ விளம்பரங்கள் மூலம் மருந்தின் தன்மையைத் தெரிந்துகொண்டு தங்களது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதாகத் தெரிவித்துள்ளார்கள். விளம்பரங்களில் தெரிவிக்கப்படும் பக்கவிளைவுகளைக் கருத்தில் கொண்டு வாழ்வியல் மாற்றங்களைச் செய்துகொள்ள முனைகிறார்கள். 

விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு மருத்துவரிடம் அது குறித்து கேட்பதால் மட்டும், மருத்துவர் அந்த மருந்தைப் பரிந்துரைப்பதில்லை. புள்ளியியல் படி, இப்படி விசாரிக்கும் நோயாளிகளில், அவர்களின் உடல்நிலை சோதனைக்குப் பிறகு  7 விழுக்காட்டுக்கும் குறைவான நோயாளிகளுக்கே அம்மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்கிறார்கள். சில மருத்துவர்கள் நோயாளிகள் குறிப்பிடும் மருந்துக்கு நிகரான, பக்கவிளைவுகள் குறைவான மருந்துகளைப் பரிந்துரைப்பதும் வழக்கத்தில் உள்ளது. அதாவது விளம்பரங்கள் மூலம் மருந்து நிறுவனங்கள் பெரிய வருவாயை ஈட்டுவதில்லை என்பதை இப்புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

அதோடு மட்டுமல்லாமல், சில அறிகுறிகளை நோயாளிகள் மருத்துவரிடம் சொல்லத் தயங்குவதுண்டு.  அந்த வகையான தயக்கங்களை விளம்பரங்கள் போக்குகின்றனவாம். இதற்கு உதாரணமாக, ஆண்மைக் குறைவு, மன அழுத்தத்துக்கான மருந்துகளைக் காட்டுகின்றனர். சில அறிகுறிகளைப் பற்றி பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தி வந்தவர்கள் கூட, விளம்பரங்கள் வழியே புரிதல் பெறுகிறார்கள். குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி உதவி பெறுகின்றனர் என்பதற்கும் புள்ளி விவரங்கள் உள்ளன. இதற்கு நேர்மாறாக, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தற்காலிகமாகத் தென்படும் அறிகுறிகள், மிகைப்படுத்தப்பட்டு, மருந்துகளுக்கு அடிமையாகி விடுகின்றார்கள் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. தூக்கமின்மை, ஆண்மைப் பிரச்சனைகளையே இதற்கு உதாரணமாகச் சொல்கின்றனர். 

பொதுவாக, நுகர்வோரைச் சென்றடையும் நேரடி மருந்து விளம்பரங்கள் அதிகரித்து வரும் மருந்துச் செலவுகளின் முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஏனைய பண்டங்களைப் போல, மருந்தின் தன்மை, தரம், நுகர்வோர் எண்ணிக்கை, மருத்துவர் பரிந்துரை போன்ற காரணங்களே மருந்தின் விலையை நிர்ணயிப்பதாகச் சான்றுகள் காட்டுகின்றன. விளம்பரங்களுக்காக மிகக் குறைந்த தொகையே செலவிடப்படுவதாகச் சொல்லும் சான்றுகள், நிறுவனங்களுக்கிடையே போட்டி ஏற்பட்டு மலிவான விலையில் நுகர்வோருக்கு மருந்து கிடைக்கவும் உதவுகின்றதாகச் சொல்கின்றன.  

இன்னொரு சாரார், விளம்பரங்கள் மூலம் பெரிய வருவாய் இல்லாவிடில் நிறுவனங்கள் அதற்காக அதிகம் செலவிடமாட்டார்கள். விளம்பரங்களுக்காகச் செலவிடும் தொகையை இந்நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகச் செலவிடுவது புதிய, பக்கவிளைவுகள் அதிகமில்லாத மருந்துகளைத் தயாரிக்க உதவும் என்பது இவர்களின் கருத்து. 

2021 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஐந்து பெரு நிறுவனங்களான ரோஷ் (Roche), ஜான்சன் அண்ட் ஜான்சன் (Johnson & Johnson – J&J), ஃபைசர் (Pfizer), மெர்க் (Merck), பிரிஸ்டல் மையர் ஸ்கூப் (Bristol Myers Squib-BMS) ஆகியவை மட்டும் 68 பில்லியன் டாலர்களை ஆய்வு மேம்பாட்டுக்காகச்  செலவழித்துள்ளனர். மேலும் பெரும் தொழில் நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகுள், ஆப்பிள் போன்றவை 110 பில்லியன் டாலர்களை மருத்துவ ஆய்வுகளுக்காகச் செலவழித்துள்ளன. அதே ஆண்டில் அமெரிக்காவிலுள்ள அனைத்து மருந்து நிறுவனங்களும் விளம்பரத்துக்காகச் செலவிட்ட மொத்த தொகை 3.9 பில்லியன் டாலர் மட்டுமே. இதில் அகடமி விருது விழா, ஆஸ்கர் விருது விழா நேரங்களில் மருந்து நிறுவனங்கள் ஒவ்வொரு 30 வினாடி விளம்பரங்களுக்கு செலவிடும் 2 மில்லியன் டாலர்களும் அடங்கும். ஆய்வுக்காகச் செலவிடப்படும் தொகையை ஒப்பிட்டால் விளம்பரச் செலவு மிகச் சொற்பம். மாறாக நுகர்வோரின் தேவைகளைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள விளம்பரங்கள் உதவுகின்றன என்பதையும் புறந்தள்ள முடியவில்லை. 

நுகர்வோர்களைச் சென்றடையும் நேரடி விளம்பரங்கள் குறித்து தற்போது கிடைக்கும் சான்றுகள் போதுமானதாக, திடமானதாக இல்லாமலிருப்பினும், அவற்றின் தாக்கம் நேர், எதிர்மறையின் கலவையாகவேயிருக்கின்றது. விளம்பரங்கள் மூலம் விற்பனையும், வருவாயும் அதிகரித்தால், மருந்து நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி, மேலும் சிறந்த மருந்துகளை உருவாக்க இயலுமென்ற கருத்தையும் புறந்தள்ள முடியாது. ஆனால் இவ்வித விளம்பரங்கள், மருந்துகள் முழுமையான சோதனைக்குட்படுத்தும் முன்னரே வெளிவந்து சமூகத்தைப் பாதிக்கிறது என்பதையும் காண முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் விளம்பரப்படுத்தப்பட்ட பல மருந்துகள் சமீபத்தில் (பக்க விளைவுகள் காரணமாக) தடைசெய்யப்பட்டுவிட்டன. அது மட்டுமல்லாமல், பெரு மருத்துவ நிறுவனங்கள் மட்டுமே நேரடி விளம்பரங்களை வெளியிடுகின்றன. சிறிய நிறுவனங்கள் தயாரிக்கும் அதே திறனுடைய மருந்துகள் நுகர்வோருக்கு அறிமுகமாவதில்லை. நுகர்வோர் விளம்பரப்படுத்தப்படும் பெருநிறுவன மருந்துகளையே விரும்புவதால் மருத்துவக் காப்பீடுக்கான கட்டணம் அதிகரிப்பதையும் காணமுடிகிறது.

நேரடி நுகர்வோர் விளம்பரங்களுக்கு எதிரான அமைப்புகள், ‘மருந்துகளுக்கு பக்க விளைவுகள் இருப்பது போலவே, மருந்து விளம்பரங்களும் பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. உங்களது மருத்துவரின் பரிந்துரைக்குச் செவி கொடுங்கள். தொலைக்காட்சி, காணொளிகளில் வெளியாகும் மருந்து விளம்பரங்கள் பக்க விளைவுகளை மிக மேலோட்டமாகவே சொல்கின்றன. பக்க விளைவுகள் குறித்த முழுப்பட்டியலை அந்நிறுவனங்களின் இணையதளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனைய பொருட்களைப் போலவே மருந்து குறித்த விளம்பரங்களை, ஆய்வுக்குட்படுத்தி, புரிந்து கொள்ளுங்கள்.

  • ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad