திமிர்ந்த ஞானச் செறுக்கு
“ஏன்னா, என்ன பண்ணிண்டு இருக்கேள்?” …
படுக்கையில் அமர்ந்து, லேப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு, கூரையைப் பார்த்து, சிந்தித்துக் கொண்டிருந்த கணேஷை இவ்வுலகுக்குக் கொண்டு வந்தது லக்ஷ்மியின் குரல்.
“ஒண்ணுமில்லடி, ஏதாவது கதை எழுதலாமோன்னு யோஜிச்சிண்டிருக்கேன்…” என்றான்.
“நல்லதுதான், எழுதுங்கோ.. சும்மா ஃபேஸ்புக்ல அரசியலப்பத்தி எழுதுறத விட்டுட்டு, ஏதாவது உருப்படியா எழுதுங்கோ..” என்றவளை வெறுமையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். மனம் மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது.
ஆமாம், இரண்டு வருடங்களாக, கதையோ கட்டுரையோ எழுதவில்லை. ஆனால் அனுதினமும் ஏதோவொரு நிகழ்வைப்பற்றி, ஃபேஸ்புக்கில் பதிவு செய்வது வழக்கமாகிவிட்டிருந்தது. பான் வோர்ல்ட் ஆடியன்ஸ் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்தான். ஆங்கிலத்தில் எழுதுவது சில வருடங்களுக்கு முன்னர் அவ்வளவு இயல்பாக இல்லையென நினைத்துக் கொண்டிருந்தவன், இப்பொழுது அந்த நினைப்பைத் தொலைத்து விட்டிருந்தான். நன்றாகத்தான் வருகிறதென்று கற்பனை செய்து கொண்டான். தான் படித்த பல தமிழ் இலக்கியங்களை, கவிதைகளை, படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதவேண்டுமென ஆவல் இருந்தாலும், பலமுறை அன்றைய நாட்டு நடப்புகளில் மனம் லயித்து விட்டிருந்தபடியால், பைசா பெறாத அரசியல் குறித்து எழுதுவதே வழக்கமாகிவிட்டிருந்தது.
“ஏன்னா, எதப்பத்தி எழுதப் போறேள்?” கேட்டுக் கொண்டே படுக்கையில் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் இரவு உடைக்கு மாறிவிட்டிருந்த லக்ஷ்மி. தங்களது படுக்கையறை, அந்தரங்க இடமென்பதால் சற்று தாராளமாகவே உடையணிந்திருந்தாள். அந்த நீல நிற, தொளதொள நைட்டி, உடலின் வனப்பை உற்சாகமாய்க் காட்டிக் கொண்டிருந்தது. தமிழின் பெண்களின் ஏழு பருவத்தில் ஏழாவதையும் தாண்டிச் சில வருடங்கள் ஆகியிருந்தாலும், பார்ப்பதற்குப் பொலிவுடன் இருந்தாள். கல்யாணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்பொழுது, நடுத்தர வயது ஆண்களின் கவனத்தைக் கவரும் அழகு, அவர்களெல்லாம் மறைந்து மறைந்து இன்னொரு முறை திரும்பிப் பார்க்கையில், கோபம் வருவதற்கு மாறாக, பெருமை வரத் தொடங்கியிருந்தது அவனுக்கு. சிறு வயது ஓனிடா கலர் டி.வி. விளம்பர வாசகம் மனதில் வந்து போகும் “நெய்பர்ஸ் என்வி, ஓனர்ஸ் ப்ரைட்” என்று தோன்றும். உடலழகை மீறிய காதல் முப்பது வருடத்திற்கு முன்னர் மனதில் தோன்றிய அந்தக் கவர்ச்சி சற்றும் குறைந்ததாகத் தெரியவில்லை.
“என்ன, மன்மதனுக்கு மனசுல ஃப்ளாஷ் பேக்கா?” .. இவனது கண்ணசைவுகளை வைத்தே எண்ண ஓட்டத்தைக் கண்டுகொள்ளும் அவள், கண் சிமிட்டிக் கொண்டே கேட்டாள். “ஏன்னா, இன்னும் காதல் கதைதானா? கடவுள், கோயில், க்ஷேத்ராடனம்னு எழுத வேண்டிய வயசுல…” என்றவளை இடை மறித்து, “எனக்கென்னடி வயாசாயிடுத்து… இந்த காலத்துப் பசங்கள எங்கூட போட்டி போட்டு பாக்கச் சொல்லு, லவ் கேம்ஸ்ல…” என்று சிரித்தான். “அது நேக்குத் தெரியாதா… ஒங்கள மிஞ்ச முடியுமா அதுல…” அவனது மென்மை உணர்ச்சி அவளையும் தொற்றிக் கொள்ள, அவளும் ஃப்ளாஷ் பேக் போகத் தயாராயிருந்தாள்”.
“ரீ … நாவு ஒந்து தமிழ் சினிமா ஹோகாணா?” .. தமிழ் முழுவதுமாய்த் தெரியாத லக்ஷ்மி, காதலிக்கத் தொடங்கிய காலத்தில் அவனிடம் கன்னடத்தில் கேட்ட கேள்வி. வீட்டில் கன்னடம் பேசும் பழக்கம் இருந்ததால், அவனால் அவளுடன் பழக முடிந்திருந்தது. தமிழ் கலந்த கன்னடத்தை மிகவும் கேலி செய்வாள். அவனுக்கும் அவளின் கேலி பிடித்திருந்தது. அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கத் தொடங்கியிருந்தான்; அவளும் அவனுக்குச் சுத்தக் கன்னடம் கற்றுக் கொடுப்பதாய் ஏற்பாடாகியிருந்தது. (வாசகர்களுக்குப் புரிய வேண்டுமென்பதால் கன்னட சம்பாஷணைகள் தமிழிலேயே தரப்படவிருக்கிறது.)
“என்ன படம் பாக்கலாம்?” கேட்டவனிடம், “உங்களுக்குத்தான் கமலஹாசனைப் பிடிக்குமே, ஏதாவது கமல் படம் போலாமா?” என்றாள். அந்தக் காலத்தில் கமலஹாசன் என்றால் உயிர். அவன் படங்களில் போடும் அதே உடைகளை வாங்குவான், டெய்லரிடம் கமலின் படங்களைக் காட்டி, அதேபோல வேண்டுமெனக் கேட்பான். அந்தக் கிராமத்து டெய்லரோ அவனுக்குத் தெரிந்த மாதிரிதான் தைப்பான், ஆனாலும் இவன் ஊரெல்லாம் ‘கமல் ஸ்டைல்’ என்று பீத்திக்கொண்டு அணிந்து வருவான். கட்டை மர சேர் வைத்த சலூன்காரனிடம், கமலின் ஹேர் ஸ்டைல்.. வளராத மீசையை அவன்போலவே வடிவமைத்துக் கொள்வது.. கமல்போல் நெஞ்சில் முடியில்லையென தைலங்கள் தேய்த்துக் கொள்வது, எனத் தொடர்ந்து, செருப்பு வரை அத்தனையும் கமல் தான். ஆனாலும், இன்றைய இளைஞர்களைப் போல ‘கமல் சார்’ என்பதிலை, அவன், இவன் தான். கேட்டால், அவனுக்கு அப்பன் சிவாஜியயே அவன் இவன்னுதான் சொல்றது, இவனென்ன பெரிய பொடலங்கா…” என்பான் அவன் மனதில் நடிகர் சிவாஜிக்குக் கொடுத்த இடம் இன்றுவரை யாருக்குமில்லை.
“ஏன்னா, நெஜத்தச் சொல்லுங்கோ, கமல இப்பவும் உங்களுக்குப் பிடிக்குந்தானே” என்றவளிடம் வழக்கமாக எல்லோரிடமும் சொல்வது போலில்லாமல், “ஹி இஸ் டேலண்டட்டி… ஆனாக் கொஞ்சம் எக்ஸண்ட்ரிக் .. அரசியல் வாழ்க்கை, பப்ளிக் லைஃப் இண்டாலரபிள்” .. எனக் கூறிவிட்டு, எழுவதைத் தொடங்கலாமென நினைக்க, ஃப்ளாஷ் பேக் கண்டின்யூ ஆனது.
நம்மவர் படம். கோயம்பேட்டிற்கு அருகிலுள்ள ரூபினி, ராகினி, ரோகிணி தியேட்டர். மல்டிப்ளெக்ஸ் எல்லாம் பாப்புலராகாத தொண்ணூறுகளில், புதிதாகத் திறக்கப்பட்டிருந்த மூன்று திரைகளைக் கொண்ட மாடர்ன் திரையரங்கம். சீட் நம்பரெல்லாம் சிட்டி தியேட்டர்களில்தான். தேடிப் பிடித்து இருவரும் அமர, மனதில் தோன்றிய நெர்வஸ்நஸ். அதுவே முதல் முறையாக, ஒரு பெண்ணுடன் தனியாக சினிமா பார்ப்பது. கமல் திரைக்கு வர, என்ன ஒரு ஹேண்ட்ஸம் என மனதில் தோன்றினாலும், மெதுவாக உரசும் அவளின் தோள்களிலேயே கவனம் முழுதும். சேலை கட்டத் தொடங்கியிருந்தாலும், அன்று அவள் அணிந்திருந்தது தாவணி. தாவணியை வடிவமைத்தவன் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு மரியாதையாக இள மங்கையைக் காட்டினாலும், இளமைத் தழும்பலிலிருந்த இளைஞனுக்கு வேண்டிய காட்சிகளையும் காட்டிக் கொண்டிருந்து அந்தத் தாவணி, மனதின் ஆசைகள் அடக்க முடியாமலிருக்க, அவள் அறிந்து கொண்டால் மரியாதை போய்விடும் என்ற பயத்தில் அவ்வப்போது மட்டுமே பார்த்துக் கொண்டு, தனக்குத் தானே கடிவாளம் போட்டுக் கொண்டிருந்தான். நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பிறப்பிலிருந்தே தரப்படும் ஒழுக்க போதனைகள் மிக அதிகம். இப்பொழுதெல்லாம் அதுபோன்ற நீதிபோதனைகள் இருக்கின்றனவா என்பதைச் சற்று நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
“காலேஜ் ப்ரொஃபஸர் எப்படியெல்லாம் சண்டை போடுகிறார்” என்றவளிடம், “அதான், அவனே சொல்லிட்டானே…. காலேஜ் படிக்கும்போது ரௌடியா இருந்தேன்னுட்டு… பேசாம படத்தப் பாரு” என்று கௌதமியின் கட்டழகை ரசித்துக் கொண்டிருந்தான். ‘இவ எப்பவுமே இதே அழகுதானா… ஆனா சத்யராஜ், ராமரஜன் படத்துல எல்லாம் இவ்வளவு அழகில்லையே… அது சரி, எதையும் காட்டுற விதத்துல காட்டித்தானே அழகு’ என்று தன் மனதிற்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திய அவனுக்கு, தனதருகில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மிமுன் கௌதமி ஒரு தூசுக்குச் சமானம் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அந்த மைசூர் சாண்டல் சோப்பு வாசனை, தலையிலிருந்த மல்லிகைப்பூவின் மணம், மெலிதாய் உடைமேல் பரப்பியிருந்த செண்ட்டின் நறுமணமென அனைத்தும் அந்தத் தியேட்டரிலிருந்த அனைத்தையும் மறக்கடிக்கச் செய்திருந்தது. அதன்பிறகு பார்த்த ரவிச்சந்திரனின் “அண்ணைய்யா” கன்னடப் படம் (தமிழ் “எங்க சின்ன ராசா”வின் மறுபதிப்பு”), ஜாக்கி ஷெராஃப் நடித்த ‘ரங்கீளா’ ஹிந்தி என எந்தவொரு படங்களும் மனதைவிட்டு மறையவில்லை.
“ஏன்னா, கதை எப்டி வந்துண்ட்ருக்கு..” என்று கேட்டுக் கொண்டே லேப்டாப்பை எட்டிப் பார்க்க எத்தனித்த மனைவியைச் சற்றுத் தள்ளி விட்டுக் கொண்டே, “ஒண்ணும் தோண மாட்டேங்க்றதுடி” எனச் சலிப்பாகச் சொல்லிக் கொண்டான். “அது சரி, வயசாயிடுத்துன்னு சொன்னேனே, கேட்டேளா?” அவள் சொல்லி முடிக்குமுன்னரே, “என்னடி பேசுற, எனக்கென்ன அப்டி வயசாயிடுத்து…” என்றான். “ஆமா, தேடிப்பாத்தாலும் மண்டையில பாதிக்கு மேல மயிர் வெள்ளையாயிடுத்து…” எனச் சிரித்தாள். “அது சரி, என்னோட க்ளாஸ் மேட்ஸ்ல பாதிப் பேருக்கு மண்டைல மயிரே இல்லடி” என்றான். “அது சரி, அந்தக் கம்பேரிஸன்ல ஐயா ஓ.கே.தான்” என்று அந்த முட்டைக் கண்களைக் கவர்ச்சியாய்ச் சுழற்றி, நாக்கை அந்த அமுத அதரங்களின்மேல் மெதுவாய் ஓடவிட்டு, வலக்கரத்தை நளினமாய் உயர்த்தி, முகத்தில் விழும் சில்க் போன்ற முடியை மெதுவாய் ஒதுக்க, அந்த ஸ்லீவ்லஸ் காட்டிய காட்சி…
இதற்குமேல் தாக்குப் பிடிக்க அவனொன்று விஸ்வாமித்ரன் அல்ல.. லேப் டாப்பை மூடி, படுக்கையில் திரும்பி, மனைவியை ஒரு கையால் அணைத்து, நைட் ஸ்டேண்டிலிருந்த விளக்கை மறு கையால் அணைத்தான்.
“ஏன்னா, நம்ம பாரதி உங்களண்ட சொன்னாளா?” தயார் செய்த காலைக் காஃபியைக் கையில் எடுத்து வந்து கொண்டே சோஃபாவில் அமர்ந்து அன்றைய தமிழ் தினசரியை மேய்ந்து கொண்டிருந்தவனின் கவனத்தை ஈர்க்க முனைந்து கொண்டிருந்தாள் லக்ஷ்மி. “எதப்பத்திடி சொல்றே?’ என்றவனிடம், “சினிமாக்குப் போய்ட்டு வந்திருக்கா” என்றாள்
“ஒ.. ஆமாண்டி.. என்னண்ட கேட்டா, க்றிஸ்ட்டொஃபர் நோலன் படம்… ஆடிஸி… நான் வரலன்னுட்டேன்.. ஒரு எழவும் புரியாது, ஆனா உலகமே சூப்பர்னு சொல்லும்…”
“அது இல்லன்னா.. யார்கூட போனான்னு கேட்டேளா?”
“ஃப்ரெண்ட்ஸ்னு சொன்னாடி…”
“ஃப்ரெண்ட்ஸ் இல்ல… ஃப்ரெண்ட்.. அந்தக் கடங்காரன்னா…”
“யாருடி..” கேட்டுவிட்டு உடனே புரிந்து கொண்டவனாக, “ஓ.. அப்டியா… இப்ப ரொம்பப் போறதில்லனு நெனச்சேனே” என்றான்.
“இல்லனு, திரும்ப ஏதோ சமாதானமாய்டுத்துன்னு நெனக்கிறேன்.. மணிக் கணக்கா ஃபோன்ல இருக்கா, பத்திண்டு வரது பாத்தாலே” என்றாள்.
“ஏண்டி, நோக்கே நியாமா.. என்னோட மன்த்லி ஃபோன் பில் யூ.எஸ்ல இருந்து இண்டியாக்கு கால் பண்ணி பண்ணி … மறந்து போச்சா?” அவன்…
“அது வேரன்னா…. நாம… நாம….’ அவள்
“சொல்லுடி, என்ன நாம?”.. அவன்
“வெறும் ஃபோனோட சரி.. கட்டுப்பாடா இருந்தோம். இந்தக் காலத்துல பயமா இருக்குன்னா…” அவள்
“நீ இண்டியால இருந்த… நான் பத்தாயிரம் மைல் அந்தப்பக்கம் … கட்டுப்பாடு இல்லாம வேறென்ன… தவிர, கட்டுப்பாடெல்லாம் சப்ஜெக்டிவ்டி…. நாமளும் ஃபோன்ல… அப்பப்ப வரும்போது” என்றவனை இடைமறித்து, “நம்மள மாதிரியெல்லாம் யாராலயும் கட்டுப்பாடா இருக்க முடியாது… நீங்க அவளண்ட பேசறேளே… இல்ல நான் பேசட்டுமா” என்றாள்…இனி இவளைச் சமாதானப்படுத்த முடியாது என்று உணர்ந்தான்.
காலங்கள் மாறுகின்றன. நம் அப்பா காலங்களில் காதல் கல்யாணம் என்பது ஒரு பர்ஸெண்ட் இருந்திருந்தால் பெரிய விஷயம். ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலயே திருமணங்கள் முடிந்திருந்தன. அவர்களுக்கு முந்தைய காலங்களில் பால்ய விவாஹங்கள் .. குழந்தைப் பருவத்திலேயே திருமணம் முடிந்து, நெட்டையோ குட்டையே அவளுக்கு அவனே, அவனுக்கு அவளே என்றிருந்தது. நம் காலத்தில் எவ்வளவோ சுதந்திரங்கள் வந்து விட்டிருந்தன. ஃபோனில் பேசுவதென்பது எளிதாகிவிட்டிருந்தது. வெளியில் சந்திப்பது சுலபம். சொந்தக் கிராமம் தவிர வேறு எங்கு சந்தித்தாலும் கேட்பாரில்லையென்ற நிலை. ஆனால், இன்றைய நிலை.
மாலில் நடந்து போய்க்கொண்டிருந்தால் பல இளஞ்சோடிகள். இடுப்பில் கை வைத்துக்கொண்டு அந்நியோன்யமாய் நடப்பது, ஒரு ட்ரிங்க்ஸ் ஒரு ஸ்ட்ரா, ஒரு ஐஸ்க்ரீம் ஒரு ஸ்பூன், திரையரங்குகளில் ஒருவர் மேல் ஒருவர் கால்போட்டுக் கொண்டு அமர்ந்து படம் பார்ப்பது இத்யாதி இத்யாதி…. அமெரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்த தொடக்க காலங்களிலெல்லாம் இது இந்தியாவாவென்றே நம்ப இயலவில்லை கணேஷிற்கும் லக்ஷ்மிக்கும். கன்ஸர்வேடிவ் ஃபேமிலியில் பிறந்து வளர்ந்த அவர்கள், தங்கள் குழந்தைகளைக் கன்ஸர்வேடிவாக வளர்க்க வேண்டுமென்றால் மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டுமென்ற நிலை.
“ஐயாவுக்கு என்ன யோஜனை? அவளண்ட பேசுறேளா?” அவளின் குரல் அவனை எழுப்ப, “ஹ்ம்… ம்… பேசலாம் பேசலாம்” என்று தலையசைத்துக் கொண்டே காஃபியில் ஊறிப் போயிருந்தான். “இந்த வீக்கெண்ட் முடியுறதுக்குள்ள பேசுங்கோ, இல்லன்ன நானே பேசிக்கிறேன்”.. இவள் இவனது ஆஃபிஸ் பாஸைவிட மோசமானவள், கெடு வைத்தால்தான் காரியம் நடைபெறுமெனத் தெரிந்து வைத்திருப்பவள். கெடுவையும் விடாமல் ஃபால்லோ அப் செய்பவள், இவன்க்குத் தப்புவதற்கு வழியில்லை.
“கொழந்த…. ஆடிஸி…. எப்டி இருந்துது?” மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான் கணேஷ். “சூப்பர்ப்பா…… மேட் டேமன் வாஸ் அமேசிங்க்..” என்று தொடங்கிக் கதை முழுதும் அலசத் தொடங்கினாள். அவர்களிருவரும் பொதுவாக நண்பர்களைப் போல் பேசிக் கொள்வர். ஒருசில விஷயங்களைத் தவிர.”ஏம்மா, யாரெல்லாம் போயிருந்தேள்?” என்றவுடன் அவள் முகம் மெதுவாக மாறியிருந்தது. “வித் அ ஃப்ரெண்ட்” என்று சுவாரசியமில்லாம பதில் சொன்னவளிடம், “ருச்சிக்காவா?” என்று ஒன்றும் தெரியாததுபோல் கேட்டான்.
“அப்பா… ஐ நோ வாட் இஸ் இன் யுவர் மைண்ட்… அண்ட் ஐ டோண்ட் வாண்ட் டு டாக் அபவுட் இட்…” படக்கென்று சொல்லி விட்டு, எழுந்து செல்ல முற்பட்டவளிடம், “என்னம்மா, என்ன தப்பா கேட்டுட்டேன்? எப்பவாவது ஏதாவது ரெஸ்ட்ரிக்ஷன் போட்டதுண்டா?” பலரிடமும் யோசிக்காமல் பேசும் அவன், அவளிடம் மட்டும் சற்றுத் தடுமாறுவது நிதர்சனம்.
“அப்பா… ஐ நோ யூ ஆர் டாக்கிங்க் பிகாஸ் அம்மா ஆஸ்க்ட் யூ டு….” குரல் தழுதழுக்கத் தொடங்கியது. “நோம்மா… நோ… வி டோண்ட் நீட் டு ப்ரிடெண்ட் என்மோர்…” என்றவன் தொடர்ந்து “டிட் யூ கோ வித் ப்ரதீப்? தெர் இஸ் நத்திங்க் ராங்க் கண்ணா….” என்றான். அவன் முடிப்பதற்குள் இடைமறித்த அவள்… “ஒய் இஸ் அம்மா கெட்டிங்க் டென்ஸ்ட்? நம்மவர் ஓ.கே, ஆடிஸி இஸ் நாட்??” அவள் குரலின் எகத்தாளமும், வலிமையும் அவனுக்குப் புரிந்திருந்தது. “விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்” மனதில் நினைத்துக் கொண்டே, “வாட் டு யூ மீன்?” என்றான். “அப்பா, ஐ நோ எவ்ரிதிங்க்… யூ ஹேவ் டோல்ட் அபௌட் யுவர் பாஸ்ட் டூ அண்ட் ஃபர்காட் அபௌட் இட்….ஐ நோ மைஸெல்ஃப்.. ஐ வோண்ட் கோ ராங்க்…” என்றாள்.
“கண்ணா, யூ ஆர் ரைட்… அப்பா அம்மா டிட் நாட் சஸ்பெக்ட் யூ… பட் த டைம்ஸ் ஆர் டிஃபரண்ட் ..” என்று சொல்லி முடிக்குமுன், “ஐ நோ அப்பா… பட் வாட் அபவுட் யுவர் டைம்? யூ அண்ட் அம்மா யூஸ்ட் டு மீட் லைக் தட் டூ, ரைட்?” என்றாள் பாரதி, கண்களில் ஏளனம் காட்டிக்கொண்டே. “சோ பேசிக்ஸ், வாட் டு யூ வாண்ட் மி டு பீ? கேர்ஃபுல்? ஆர் ப்ரேவ்?” எனக் கேட்டாள்.
பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை கணேஷிற்கு. லக்ஷ்மியைத் திரும்பிப் பார்த்தான். சிரிப்பை அடக்கிக் கொண்டு காஃபியைப் பருகிக் கொண்டே “ஏன்னா, ஒங்க கதைக்கு இன்னும் ஒரு நல்ல க்ளைமேக்ஸ் யோஜிச்சிண்டு இருக்கேன்னு சொன்னேளே, இது சரியா வருமா?” என்று கண்ணடித்தாள்.
பாரதி எழுந்து சென்றுவிட, சோஃபாவில் அப்படியே அமர்ந்திருந்த கணேஷ், லேப்டாப்பைத் திறந்தான். வெறுமையாய்த் தெரிந்த திரையில், கர்சர் இமைத்துக் கொண்டிருந்தது. மெதுவாக, விரல்கள் டைப் அடிக்கத் தொடங்கின:
“ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணும் நற்குடிப் பெண்ணின் குணங்களாம்“
- வெ. மதுசூதனன்.







