\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமுதூட்டிய அம்மா

amma_520x677மூணு வயசுவர நீதந்த தாய்ப்பாலு

மூளையின் மடிப்பிலே மறைஞ்சே போச்சுதடி ,

முப்பது வருஷம் நீபோட்ட சோறு

மூச்சே நின்னாலும் நினைப்பவிட்டு நீங்காதடி .

 

நீர் ஆவியிலையா நீ இட்லி சுட்ட ,

நீஎன் ஆவியவும் அதோடு சேர்த்துத்தான் விட்ட

வட்ட நிலவா தட்டுல வந்து விழுகையல

புத்திக்கூட ஒரு நிமிஷம் கெட்டுத்தான் போச்சுதடி

 

மல்லிகைப்பூ இட்லின்னு எவன்சொன்னான் ?

நியாமா சொல்லனும்னா , உன் இட்லியை

சாப்பிட்டு போன கடவுள், உடனே

மல்லிப்பூவ செஞ்சிருக்கணும் .

 

ரசத்திற்கு நீ கரைக்கும் “புளி” கூட

இவளுக்கு , “நாம” புள்ளையா பிறக்கலன்னு

சோகத்திலேயே கரைஞ்சி போச்சு ..

கொதிக்கும் ரச வாசனை,

மூளை வரைக்கும் “கமகம”க்கும்

மூக்கில் எச்சில் மட்டும் சுரந்தா

அதுவும் ரெண்டு சொட்டு வடிச்சிருக்கும் .

 

நானும், இப்ப கொஞ்ச நாளா

சோறுபொங்கி பழகுறேன்

ஒரு நாள் சோறு — “கொழகொழ” சேறு

மறுநாள், கஞ்சி மொத்தம் குடிச்சிட்டு

அரிசி , நாட்டின் அரசியாட்டம்

என்ன பார்த்து மொறைக்குது . .

 

நான் வச்ச குழம்பு ,

எண்ணெயிலே தண்ணியாட்டம்

எல்லாம் தனித்தனியா தவிக்குது ,

நீ தொட்டா மட்டும்

திருமண ஜோடியாட்டம் கட்டிப்புடிச்சி சிரிக்குது

 

பதப்படுத்தி ,சூடுப்படுத்தி – திரும்பவும்

சூடுப்படுத்தி ,பதப்படுத்தி நாங்க

சாப்பிடற சாப்பாட்டுக்கு – நாக்குன்னு

ஒன்னு இல்லாட்டி நல்லாத்தான் இருந்திருக்கும்

 

தேவர்கள் எல்லாரும், அமிர்தம் சாப்பிட்டு

சாகாம இருந்து என்ன செய்ய?

தேவதை உன் சோறு சாப்பிட்டபிறகு

செத்துக்கூட போகலான்னு பேசிக்கிறாங்க .

 

சட்டி கொழம்பு முழுக்க வழிச்சி ,

சப்புக்கொட்டி தின்னுப்புட்டு – பிறகு

சுயநினைவு வந்து

“உனக்கு இருக்கானு ?? ” கேக்கையிலே

“உள்ள நிறைய இருக்கு”னு

சட்டுனு நீ சொன்ன ஒரு பொய்க்கு

சொத்தையே எழுதித் தரலாம்

 

ஆயகலைகள் அறுபத்தி நான்கிலும் ,

குருவை மிஞ்சிய சீடன் உண்டு

சமையலில் தாயை விஞ்சிய

மகள் தரணியில் எங்கும் உண்டோ ??

 

– மீனாட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad