சிக்கலில் ‘மாகா’ (MAGA)
டானல்ட் டிரம்ப் 2025 ஜனவரி 20-ல் மீண்டும் அதிபராகப் பதவியேற்று ஏறக்குறைய பதினொரு மாதங்கள் ஆகியிருக்கின்றன. ஆனால் “Make America Great Again” என்று உரக்கக் கோஷித்த ‘மாகா’ (MAGA) இயக்கம் இப்போது தனக்குள்ளேயே பிளவுபட்டு நிற்கிறது. “அமெரிக்கா முதலில்” (America first) என்று உணர்ச்சிவசப்பட்டு வாக்களித்த கோடிக்கணக்கான ஆதரவாளர்களில் ஒரு பெரும் பகுதி இப்போது கேட்கும் ஒரே கேள்வி: “நம்மை டிரம்ப் கைவிட்டுவிட்டாரா?”
‘மாகா’வின் பிறப்பும் பரிணாமமும்
“அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்” என்ற முழக்கம் உண்மையில் ரானல்ட் ரீகனிடம் 1980-ல் தொடங்கியது. “Let’s Make America Great Again” என்று அவர் பிரச்சாரம் செய்தார். 1992-ல் பில் கிளிண்டனும் இதே மாதிரியான பதாகைகளைப் பயன்படுத்தினார். ஆனால் 2015 ஜூன் 16-ஆம் தேதி டிரம்ப், அதிபர் தேர்தலுக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தபோது, “We will Make America Great Again!” என்று கோஷமிட்டது புதிய உத்வேக அலையை உருவாக்கியது. சிவப்பு நிறத் தொப்பியும், “MAGA” என்ற நான்கெழுத்துச் சுருக்கமும் உலகளாவிய அரசியல் அடையாளமாக மாறிப்போனது. பிரச்சார கோஷம் என்பதைக் கடந்து, மறுமலர்ச்சிக்கான புதிய வாழ்க்கை முறையாக உருவெடுத்தது ‘MAGA’ என்ற சொற்றொடர்.
டிரம்பின் ‘மாகா’ கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள்
தேசிய வலிமை, பொருளாதாரச் செழிப்பு, மக்கள் நலன், பாதுகாப்பு, பாரம்பரிய விழுமியங்களை மீட்டெடுப்பது என்ற கொள்கைகளுடன் உருவாக்கப்பட்ட ‘மாகா’ கோட்பாட்டின் மிக முக்கியமான ஐந்து தூண்கள் எனக் குறிப்பிடத்தக்கவை –
-
- அமெரிக்கத் தொழில்கள், தொழிலாளியை முதலில் வைப்பது – உள்நாட்டு உற்பத்தி, சுங்க வரிகள்(Tariffs), “Buy American, Hire American” கொள்கைகள் மூலம் தொழிற்சாலை வேலைகளைத் திரும்பக் கொண்டுவருவது.
- கடுமையான எல்லைப் பாதுகாப்பு – சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, அமெரிக்கர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிப்பது; அமெரிக்க எல்லைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதை நிறுத்துவது.
- வரி வெட்டுகள் – 2017 வரி சீர்திருத்தத்தை நீட்டிப்பது மற்றும் நிறுவன வரி குறைப்பு மூலம் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவது; பங்குச் சந்தையை நிலைப்படுத்தி பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது.
- அரசு அதிகாரத்தை மட்டுப்படுத்துதல் (Drain the Swamp) : வாஷிங்டன் டி.சி.-யில் உள்ள அதிகார வர்க்கம், லாபி செய்பவர்கள், பெரு நிறுவனங்கள், ஊடகங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட வலைப்பின்னலை அழித்து, அதிபரின் கொள்கைகளை நேரிடையாக, விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது.
- பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்க கொள்கைக்கு எதிர்நிலை – DEI (Diversity, Equity, Inclusion) பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் இனம், பாலினம், பாலியல் நாட்டம், மதம், ஊனம், வயது, பொருளாதார பின்னணி ஆகியவற்றில் வேறுபாடு உள்ளவர்களுக்கு இடமளிப்பது என்ற கோட்பாட்டை ஒழித்து, திறமைக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது.
இக்கொள்கைகளின் இன்றைய யதார்த்த நிலை
இக்கொள்கைகளின் இன்றைய யதார்த்த நிலை, எதிர்ப்பார்த்த பயன்களைக் கொணர்ந்ததா என்பது விவாதங்களைக் கிளைப்பியுள்ளது. 2025-ல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், ‘மாகா’ ஆதரவாளர்களின் 38 சதவிகிதத்தினர் பொருளாதாரச் சிக்கல்களுக்காக டிரம்பை குற்றம் சாட்டுகின்றனர்.
- அமெரிக்கத் தொழில்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிரம்ப் அறிவித்த இறக்குமதி சுங்க வரி (Tariff) போர்கள் விலை உயர்வு, வேலை இழப்பு, பணவீக்கம் என பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் செல்வாக்கும், பலமும் குறைந்துள்ளதை மறுக்க முடியாது. பன்னாட்டு உடன்படிக்கை, ஒப்பந்தகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அமெரிக்கா தனிமைப்படுத்தப்படுகிறது. ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இதில் கூட்டாகச் செயல்படுவது, அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. 2025-ல் ‘டாரிஃப்’ எனப்படும் சுங்கவரி காரணமாக 102,300 வேலைகள் பறிபோனதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- புதிதாக எல்லை ஊடுறுவலை தடுப்பது மட்டுமின்றி, ஏற்கனவே அமெரிக்காவுக்குள் ஆவணமின்றி புகுந்தவர்களை அதிரடியாக நாடு கடத்துவது, பல போராட்டங்களைக் கிளப்பியுள்ளது. கடுமையான நாடுகடத்தல், கைது, அகதிகள் தடை போன்றவை குடும்பங்களைப் பிரித்து, குழந்தைகளைப் பாதிக்கின்றன; மனிதவுரிமை மீறல், இனவெறி போன்ற இன்னபிற சமூக அச்சங்கள் கிளர்ந்தெழுந்து வருகின்றன.
- அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கைக்கு எதிராக, விவசாயம், தொழில்நுட்பம் போன்ற தொழிற்துறைகள், திறமையான தொழிலாளர்கள் இல்லாமல் முடங்கி விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு போன்ற புதிய பிரச்சனைகள்.
- வியாபாரக் கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் வரிச் சலுகைகள், செல்வந்தர்களுக்கு விகிதாசார ரீதியாக பயனளிக்கின்றன, பரந்த ஊதிய ஆதாயங்கள் இல்லாமல் சமத்துவமின்மை மற்றும் தேசியக் கடன் சுமைகள் அதிகரிக்கின்றன. 2025 பட்ஜெட் சட்டம், 2017 வரி வெட்டுகளை நிரந்தரமாக்கியது, இது $3.4 டிரில்லியன் கடனைச் சேர்த்துள்ளது. நோபெல் பரிசு பெற்ற பொருளாதார நிபுனர்கள் சிலர், இது சமத்துவமின்மையை அதிகரிக்கும் என்று விமர்சித்துள்ளனர்.
- அரசியலமைப்புகள், நிர்வாக ஸ்தாபனங்க்ளைப் புறந்தள்ளி நேரடியாக அதிபரின் முடிவுகளை சட்டமாக்குவது சமுகத்தைப் பிளவுப்படுத்தும் சர்வாதிகாரத்தின் தொடக்க நிலையாகப் பார்க்கப்படுகிறது. தேவையில்லாத துறைகளை மூடுதல்/இணைத்தல், எஃப்.பி.ஐ, நீதித் துறைகளில் சாதகமானவர்களை நியமித்தல் போன்றவை எந்தவித ‘சரிபார்த்தல் மற்றும் சமநிலைப்படுத்தலும்’ (checks and balances) இல்லாமல் ஜனநாயகத்துக்கே ஆபத்தாக மாறக்கூடும். 2025-ல், FBI-யில் நடந்த மாற்றங்கள் “அதிகாரவாதத்தின் அறிகுறி” என்று விமர்சனம் பெற்றுள்ளன.
- DEI தொடர்பான கட்டுப்பாடுகள், பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான பல உத்தரவுகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் தடுக்கப்பட்டுள்ளன. கடந்த பல பத்தாண்டுகளில், போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட உரிமைகளைப் புதிய கட்டுப்பாடுகள் பறித்துவிடுவதாக ஒரு சாரார் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கறுப்பர், ஹிஸ்பானியர்கள், பாலின வேறுபாடுகளைக் கொண்டவர்கள் தங்கள் குரல் நசுக்கப்படுவதாக அஞ்சுகின்றனர். DEI கொள்கைகளை ஆதரிக்கும் கல்லூரிகள், பல்கலைகளுக்கான நிதியுதவி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதும் நாட்டை பழமைவாதத்துக்குள் தள்ளுவதாகக் கருதப்படுகிறது.
‘மாகா’வின் உள்ளார்ந்த பிளவுகள்
‘மாகா’ கொள்கைகள் தொடர்பான எதிர்க் கருத்துக்களை மாற்றுக்கட்சியினர் மட்டுமே தெரிவித்து வந்த நிலையில், தற்போது டிரம்பின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள் சிலரும் விமர்சித்து வருவது அவருக்குப் பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.
சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, 2024-ல் டிரம்புக்கு வாக்களித்தவர்களில் 38% பேர் “இனியும் மாகா கொள்கைகளை நம்புவதில்லை” என்று தெளிவாகச் சொல்கின்றனர்.
‘H-1B’ விசா, ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ வெளியிடப்படாதது, ‘இஸ்ரேல்-ஹமாஸ்’ மற்றும் ‘ரஷ்ய-உக்ரைன்’ போர்கள், இறக்குமதி வரி, பணவீக்கம், பொருளாதாரச் சரிவு, AI/தொழில்நுட்ப ஆதிக்கம் என அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால்களில், தனது ‘மாகா’ கொள்கைகளை டிரம்ப் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பூதாகாரமாக வெடித்துள்ளன. “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கையை டிரம்பே கைவிட்டுவிட்டாரோ என்ற கேள்வி ‘மாகா’ தளத்தில் இப்போது அதிகம் ஒலிக்கிறது.
அரசின் செயல்திறனை மேம்படுத்த ஒரு துறையை உருவாக்கி அதற்கு தனக்கு பிரச்சார வியூகங்கள், பொருளுதவி அளித்துவந்த எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரை தலைமை நிர்வாகிகளாக டிரம்ப் நியமித்தது நினைவிருக்கக்கூடும். எலான் மஸ்க்குடன் ஏற்பட்ட சில மனக்கிலேசங்கள் காரணமாக விவேக் ராமசாமி ஆரம்பக் கட்டத்திலேயே தன்னை இந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டார். ஆனால் இருவருமே மாகா அடிப்படையிலான ‘H-1B’ விசா புறக்கணிப்புக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் உயர்தர தொழில்நுட்பத் திறன்களுக்கான பற்றாக்குறை இருப்பதால், ‘H-1B’ விசாவை முற்றிலுமாக விலக்குவது பலனளிக்காது என்று இவர்கள் திடமாக நம்பினர். மேலும் பல பாரிய தொழில்நுட்ப வர்த்தகத் தலைவர்களும் ‘H-1B’ விசாவை முடக்குவது, இத்துறையில் அமெரிக்காவின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் என்று எச்சரித்தனர்.
டிரம்பின் முக்கிய சட்ட முன்மொழிவான “பிக் பியூட்டிஃபுல் பில்” (Big Beautiful Bill) என்றழைக்கப்படும் மசோதாவை “அருவருப்பானது” என்றும், அது தேசியக் கடனை அதிகரிக்கும் என்றும் கடுமையாக விமர்சித்தார் எலான் மஸ்க். தொல்படிவ எரிபொருளுக்கு பதிலாக மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டுமென மஸ்க் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை புற அழுத்தங்கள் காரணமாக டிரம்ப் நிராகரித்தது மஸ்க்கை எரிச்சலடையச் செய்தது. இதனால் ‘நன்றி இல்லாதவர்’, ‘பித்து பிடித்தவர்’ என்று சமூக ஊடகங்களில் பகிரங்கமாக ஒருவரையொருவர் சாடியதும் நிகழ்ந்தது. ‘எப்ஸ்டைன் கோப்புகள்’ விவகாரம் தீவிரமடைய எலான் மஸ்க்கும் காரணமாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு வரை டிரம்பின் அதிதீவிர ஆதரவாளராக இருந்த மார்ஜரி டெய்லர் கிரீன், சமீபத்தில் ‘எப்ஸ்டைன் கோப்புகளை’ வெளியிடுவதில் டிரம்ப் தயக்கம் காட்டுவது ஏன் ஏன்ற கேள்வியுடன் டிரம்பை எதிர்த்து வருகிறார். ‘H-1B’ விசா விஷயத்தில் தயக்கம் காட்டுவது, உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் தளவாடங்கள் உதவி செய்வது ஆகியவை ‘மாகா’ கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று குற்றஞ்சாட்டினார். சுகாதாரச் செலவுகள் (Healthcare expenses), வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பைச் சுட்டிக் காட்டிய கிரீன், டிரம்பின் கொள்கைகள் “மக்களுக்கு உதவவில்லை” என்று கூறினார். பதிலுக்கு டிரம்ப் அவரை, ‘காரிய பைத்தியம்’, ‘ஏமாற்றுகாரர்’ என்ற தொனியில் விமர்சிக்க, தனது கீழவை (பிரதிநிதிகள்) உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் மார்ஜரி டெய்லர் கிரீன். இவரது விலகல் கீழவையில் குடியரசுக் கட்சி பெற்றிருக்கும் குறுகிய பெரும்பான்மையை (218 குடியரசுக் கட்சி – 213 ஜனநாயகக் கட்சி) மேலும் குறைத்துள்ளது.
‘மாகா’ இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான ஸ்டீவ் பேனன், டிரம்ப் AI தொழில்நுட்பத்தை சீரமைக்க முனையவில்லை; வெளியுறவுக் கொள்கை, H-1B விசா என்று பல விஷயங்களில் டிரம்ப் பெருநிறுவனங்கள், தொழிலதிபர்கள் ஆதிக்கத்திற்கு டிரம்ப் அடிபணிந்துவிட்டார் என்று சொல்லத் தொடங்கிவிட்டார். 1 கோடி பேரை நாடுகடத்துவோம் என்று சூளுரைத்த மாபெரும் திட்டம் தோற்றுவிட்டது, உக்ரைன் ஆயுத உதவி, இஸ்ரேல் கொள்கை, 50 ஆண்டு வீட்டுக் கடன் திட்டம் என டிரம்ப் ஆதரிக்கும் நிலைப்பாடுகள் ‘மாகா’ இயக்கக் கொள்கைகளின் நேரடி முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது..
“டிரம்ப் இப்போது பணக்கார கொடையாளிகளையும், தொழிற்துறை பில்லியனர்கள் சொல்வதை மட்டுமே காது கொடுத்துக் கேட்கிறார்; ‘மாகா’ மக்களை அல்ல” என்று லாரா இங்க்ராம் முதல் ஜாக் பொசோபீக் வரையிலான தீவிர வலதுசாரி செல்வாக்கு மிக்கவர்களே வெளிப்படையாகப் புலம்புகிறார்கள்.
‘மாகா’வின் எதிர்காலம்.
ஏற்கனவே 2025 தேர்தல் தோல்விகள் குடியரசுக் கட்சியினரை பலவீனப்படுத்தியுள்ளன. அடுத்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளன. கீழவையில் (பிரதிநிதிகள் சபையில்) பெரும்பான்மை சுருங்கி வரும் நிலையில் குடியரசுக் கட்சித் தலைவர்கள், ‘மாகா’வால் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்கள் குறித்து கவலையடைந்துள்ளனர். மாகா (Make America Great Again) இயக்கம் ‘மிகா’வாக (Make Israel Great Again) மாறிவிடக் கூடாது என்ற குரல்கள் வெளிப்படையாக கேட்கத் துவங்கியுள்ளன. ‘டிரம்ப் கவர்ச்சி’ இல்லாத பிரிவாக ‘மாகா’வில் பிளவு ஏற்படக் கூடும் என்றும் தோன்றுகிறது.
மொத்தத்தில், 2024-ல் ஒன்றுபட்டு நின்ற ‘மாகா’ இப்போது உடைந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தீவிர வலதுசாரிகள் “இனியும் டிரம்ப்பை நம்புவதில் அர்த்தமில்லை” என்கிறார்கள். அதிபர் டிரம்ப் மீது அசையாத நம்பிக்கை வைத்திருக்கும் சிலர், அவர் இதைச் சாமர்த்தியமாகக் கையாண்டு மீண்டும் அவர்களை ஒன்றிணைப்பார் என்று சொல்கிறார்கள்.
‘மாகா’-வின் தோல்விக்கு டிரம்ப் ஒருவர் மட்டுமே காரணம் அல்ல. அதன் அடிப்படை கொள்கைகள், சமகால விழுமியங்களை உள்ளடக்கவில்லை என்பதே நிஜம். அமெரிக்காவை மேம்படுத்தும் முனைப்பில், அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவது மிகவும் ஆபத்தாக முடியும். அமெரிக்காவின் அடையாளம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றை மறுவரையறை செய்யும் ‘மாகா’ கோட்பாடு வெற்றி பெறுமா அல்லது உடைந்து சிதறுமா என்பதை வரும் ஆண்டுகள் தீர்மானிக்கும்.
-ரவிக்குமார்.







