தலையங்கம் – 2026 – பொங்கட்டும் அமைதி; ஓங்கட்டும் மனிதநேயம்!
வரலாற்றின் பக்கங்களில் சவால்களும் சாதனைகளும் நிறைந்த 2025-ஆம் ஆண்டை வழியனுப்பிவிட்டு, நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளோடு 2026-ஆம் புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இவ்வுலகம். புத்தாண்டு என்பது வெறும் நாட்காட்டி மாற்றம் மட்டுமல்ல; அது மனிதகுலம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு நல்வாய்ப்பு.
சென்ற ஆண்டில் நாம் கண்ட மருத்துவ முன்னேற்றங்களும், தொழில்நுட்பப் புரட்சிகளும் மனித வாழ்வின் தரத்தை உயர்த்தியுள்ளன. அதே சமயம், சில பகுதிகளில் நிலவிய போர் மேகங்களும், பிரிவினைவாதச் சிந்தனைகளும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. 2026-ஆம் ஆண்டில், அந்த மேகங்கள் கலைந்து, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய சிந்தனை உலகத் தலைவர்களின் செயல்பாடுகளிலும், சாமானிய மக்களின் மனங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம்.
ஆங்கிலப் புத்தாண்டின் கொண்டாட்டங்கள் இன்னும் ஓயாத நிலையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நம்மை வரவேற்கத் தயாராகி வருகிறது. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் இப்பண்டிகை, இயற்கையோடு இயைந்த வாழ்வின் அவசியத்தை உலகுக்கு உரக்கச் சொல்கிறது. 2025-இல் நாம் முன்னெடுத்த ‘பசுமை எரிசக்தி’ திட்டங்கள், இந்தப் பொங்கல் திருநாளில் புதிய உத்வேகம் பெற வேண்டும். விளைச்சல் செழித்து, வறுமை அகன்று, உழவர் வாழ்வில் ஒளிவீசும் இந்தப் பொங்கல், உலகெங்கும் அமைதிப் பாலினைப் பொங்கச் செய்யட்டும்.
விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள், 2026-ஆம் ஆண்டில் நிலையான பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மலிவான கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர். உணவு, உறக்கம், வேலை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை அரசு மற்றும் நவீன தொழில்நுட்பம் எப்படி உறுதி செய்யப்போகிறது என்பதே இந்த ஆண்டின் முக்கிய சவாலாகும்.
மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து உலகளாவிய குடும்பமாக ஒன்றிணைவதே உலகில் அமைதி மலர வழிவகுக்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அழிவுக்குப் பயன்படாமல், பசி மற்றும் நோயற்ற உலகைப் படைக்கப் பயன்பட வேண்டும். பிறர் வளர்ச்சியில் மகிழும் மனிதநேயப் பண்புடன், வன்முறையற்ற, அமைதியான உலகைக் காக்க இந்தப் புத்தாண்டிலும் பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம். சிறுதுளி பெருவெள்ளமாவது போல், ஒவ்வொரு தனிமனிதனிடமும் ஏற்படும் மாற்றங்கள் வெறுப்புணர்வை விடுத்து, சக மனிதனின் வளர்ச்சியில் இன்பம் காணும் பண்பை வளர்க்கும்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கேற்ப, இந்தப் புத்தாண்டிலும் வரவிருக்கும் பொங்கல் திருநாளிலும் வன்முறைகள் ஒழிந்து, நாடுகளுக்கிடையே நல்லுறவு மலரட்டும். ஜாதி, மத, இன எல்லைகளைக் கடந்து, ஒருமித்த உணர்வோடு இந்த உலகைக் காக்க உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் பனிப்பூக்கள் குழுவின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
– ரவிக்குமார்.







