‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’
ஜனவரி 3, 2026 அன்று, வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய அதிரடி ராணுவத் தாக்குதலில் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation Absolute Resolve) எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, அதிகாலை 2 மணியளவில் காரகஸ் நகரிலுள்ள அதிபர் மாளிகையில் அரங்கேறியது. இந்த மோதலில், மதுரோவின் பாதுகாப்பிலிருந்த 23 வெனிசுலா படை வீரர்களும், 32 கியூபா நாட்டுச் சிறப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த முற்றுகையின் போது, காரகஸ் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதோடு, மனிதர்களைச் செயலிழக்கச் செய்யும் ‘இயக்கப்பட்ட ஆற்றல் ஆயுதங்களை’ (Directed Energy Weapons) அமெரிக்கப் படைகள் பயன்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கைது செய்யப்பட்ட மதுரோ தம்பதியினர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைக்காக நியூயார்க் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஒரு நாட்டின் இறையாண்மையை மீறி, அந்த நாட்டின் அதிபருக்கே கைவிலங்கு அணிவித்துத் தனி விமானத்தில் கொண்டு வந்த அமெரிக்காவின் இச்செயலை உலக நாடுகள் பலவும் கடுமையாக விமரிசித்து வருகின்றன. சில ஊடகங்கள் இதனை ‘அதிபர் கடத்தல்’ என்றும் வர்ணித்துள்ளன. இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் இதனை ஒரு ‘ராணுவ நடவடிக்கை’ என்பதை விட, 2020-ல் மதுரோ மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் பயங்கரவாதக் (Narco-terrorism) குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான ஒரு ‘சட்ட அமலாக்க நடவடிக்கை’ என்றே வாதிடுகிறது.
அமெரிக்கா – வெனிசுலா: ஒரு பின்னோட்டம்
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான பகை ஒரே நாளில் உருவானது அல்ல; இது கடந்த 25 ஆண்டுகளாகப் படிப்படியாக வளர்ந்து, தற்போது ஒரு ராணுவ நடவடிக்கையில் முடிவடைந்துள்ளது. 2007-ஆம் ஆண்டு, அப்போதைய வெனிசுலா அதிபர் ஹூகோ சாவேஸ், அந்நாட்டின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா சுரண்டுவதாகக் கூறி ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்ற சோஷலிசப் புரட்சியைத் தொடங்கினார். இதன் விளைவாக அங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த ‘எக்ஸான் மொபைல்’ (ExxonMobil), ‘கொனாகோ பிலிப்ஸ்’ (ConocoPhillips) போன்ற அமெரிக்க நிறுவனங்களை முடக்கி, அவற்றின் சொத்துகளைத் தேசியமயமாக்கினார்.
சாவேஸின் மறைவுக்குப் பின்னர் அதிபராகப் பதவியேற்ற நிக்கோலஸ் மதுரோவின் காலத்தில் இரு நாடுகளுக்குமான உறவு மேலும் நலிவடைந்தது. அவரது ஆட்சி சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாகவும், 2018 மற்றும் 2024-ஆம் ஆண்டு தேர்தல்களில் முறைகேடுகள் செய்து அவர் வெற்றி பெற்றதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
கடந்த ஆண்டு, மதுரோவின் அரசு அமெரிக்காவிற்குள் டன் கணக்கான கொக்கைன் மற்றும் ஃபெண்டனைல் உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கடத்துவதாகக் குற்றம் சாட்டி, கரீபியன் கடலில் கடந்த செப்டம்பர் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது. அதுமட்டுமல்லாமல், தனது பகை நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் ஈரானுடன் வெனிசுலா நட்பு பாராட்டுவதையும், ராணுவ உதவி பெறுவதையும் அமெரிக்கா விரும்பவில்லை. மொத்தத்தில், அமெரிக்காவிற்குப் பிராந்திய பாதுகாப்பு குறித்த அச்சமும், வெனிசுலாவிற்குத் தனது இறையாண்மையைக் காக்க வேண்டிய அவசியமும் இரு நாடுகளுக்கிடையே மோதலை வளர்த்து வந்தன.
தற்போதைய நிலை
மதுரோ கைது செய்யப்பட்ட பிறகு, அந்நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ், ஜனவரி 5-ஆம் தேதி இடைக்கால அதிபராகப் பதவியேற்றார். தீவிர மதுரோ ஆதரவாளராக இருந்த டெல்சி, தற்போது அதிபர் டிரம்புடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளார். இதனிடையே, வெனிசுலாவில் முறைப்படியான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை, அந்நாட்டுச் செயல்பாடுகளை அமெரிக்காவே வழிநடத்தும் என்று டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, டெல்சி ரோட்ரிகஸுடன் இணைந்து நிர்வாகச் சீரமைப்புப் பணிகளைக் கவனித்து வருகிறார்.
வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் இயக்குவதற்கு ஏதுவாக, ‘ஹைட்ரோகார்பன் சட்டத்தில்’ சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக டெல்சி ரோட்ரிகஸ் அறிவித்துள்ளார். இந்த எண்ணெய் வருவாயைக் கொண்டு வெனிசுலாவின் உள்நாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்படுகிறது.
மறுபுறம், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ, இந்த வாரத்தில் அதிபர் டிரம்பைச் சந்தித்துப் பேசியுள்ளார். கடந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கிடைக்கக்கூடும் என்று டிரம்ப் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அதனைப் பெற்றவர் மரியா மச்சாடோ. சில நாட்களுக்கு முன்னர், தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை டிரம்பிற்குத் தரத் தயாராக இருப்பதாக அவர் சொன்னதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு டெல்சி அனுசரணை காட்டுவதால், மச்சாடோவை அதிபராக மாற்ற டிரம்ப் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது நியூயார்க் சிறையில் உள்ள மதுரோ, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணை மார்ச் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் தற்போது மதுரோவின் பழைய அரசாங்கமே நீடித்தாலும், அது அமெரிக்காவின் முழுமையான கண்காணிப்பின் கீழேயே இயங்கி வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவைத் தூர விலக்கிவிட்டு, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை மீண்டும் நிலைநிறுத்துவதே வாஷிங்டனின் தற்போதைய இலக்காக உள்ளது.
– ரவிக்குமார்.







