பிடித்ததை விட்டுவிடு
கண்ணாடி கதவுகள் திறந்து லாபிக்குள் நுழைந்ததும், வெளியே இயங்கி கொண்டிருந்த பரபரப்பான உலகம் விடைபெற்றுக் கொண்டது. குறைவான விளக்கொளியிலும் மின்னிய பளிங்குத் தரையில் ரஞ்சனின் காலடிச் சத்தம் சீரான தாளகதியில் எதிரொலித்தது.
வரவேற்பு கூடத்தில் அமர்ந்திருந்த பெண் உடனடியாக நிமிர்ந்து உட்கார்ந்தாள். கண்களில் தெரிந்த சோர்வை ஒரு நொடியில் மறைத்து, மிகப்பழகிய, பளிச்சென்ற புன்னகை ஒன்றை முகத்தில் படரவிட்டு,“வெல்கம் டு டிரீம் டவர்ஸ். நான் உங்களுக்கு எப்படி உதவலாம்?” என்றாள், குரலில் தொழில்முறை இனிமையும் சற்று செயற்கையும் கலந்திருந்தது.
“Venus Vibes-க்கு வந்திருக்கேன்” என்றான் ரஞ்சன்.
“Venus Vibes” என்ற பெயரைக் கேட்டதும் அவள் உதட்டோரம் ஒரு கணம் விஷமப் புன்னகை தோன்றி மறைந்தது. ரஞ்சன் அதைப் பார்த்தான், ஆனால் கண்டுகொள்ளாதது போல நடித்தான்.
“ஓ லவ்லி .. அவங்க பதினாலாவது மாடியில இருக்காங்க. எலிவேட்டர் ரைட் சைட்ல இருக்கிற ஹால்ல இருக்கு .. ” என்றவாறு, கருப்பு நிற கைரேகை பதியும் ஸ்கேனரை அவன் பக்கம் நகர்த்தி “அதற்கு முன்னாடி ஒரு சின்ன ரெஜிஸ்ட்டரேஷன் பண்ணிக்கணும்” என்றாள்.
ரஞ்சன் விரலை வைத்து அழுத்தினான். ஸ்கேனர் ஒரு மெலிய குரலை எழுப்பி, பச்சையொளி காட்டியது.
“ஆல் ரைட் .. என்ஜாய் யுவர் விசிட்” என்று சொன்னவள் முகத்தில் மீண்டும் அந்த நமட்டுச் சிரிப்பு ஒட்டிக் கொண்டதை கவனித்த ரஞ்சன், “நன்றி” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். பளிங்குத் தரையில் அவன் காலடிச் சத்தம் மட்டும் தெளிவாக ஒலிக்க, அவள் முகத்தில் தோன்றி மறைந்த அந்தப் புன்னகையை மனதில் சுமந்தபடி எலிவேட்டரை நோக்கி நடந்தான் ரஞ்சன். எலிவேட்டர் கண்ணாடியில் ‘ஃபுல் சூட்’ அணிந்திருந்த அவனது உருவம் அவளது நமட்டுச் சிரிப்புக்கான காரணத்தை லேசாக உணர்த்தியது.. இந்த இடத்துக்கு இது கொஞ்சம் அதிகம்தானோ என்று மனம் தயங்கியது.
பதினாலாவது மாடி முழுதும் ஊதா நிற வண்ணம் பூசப்பட்டிருந்தது. சின்னதான வரவேற்பிலிருந்த மற்றொரு பெண், ரஞ்சனைப் பார்த்ததும் புன்னகைத்தாள். தன் முன்னிருந்த கணினியைப் பார்த்து “ரஞ்சன் ரைட்?” என்றவள் அவன் தலையசைப்பதைப் பார்த்தனும் “ஆலியா உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்.. ரூம் நம்பர் 1408.. ஹேவ் எ குட் டைம்” என்றாள்.
அறை முன் வந்து நின்று, கதவைத் தட்ட எத்தனிக்கும் முன்பே மெதுவாகக் கதவைத் திறந்தாள் ஆலியா. வழக்கத்தைவிட பிரகாசமாகியிருந்தது அவளது முகம். பொய் இல்லாமல் படர்ந்த சிரிப்பினூடே பளீரிட்ட வெண்மையான பற்கள் அவளது மனதைப் பிரதிபலித்தது. “ஹேய் ரஞ்சன்.. உன்னை மறுபடியும் பார்க்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு..” என்றவள் இரண்டு கைகளையும் விரித்து அவனை மெலிதாக அரவணைத்தாள். “வா.. உள்ளே வா..”
அறைக்குள்ளிருந்த ஒரே விளக்கு மட்டும் வெளிர் ஊதா நிறத்தில் எரிந்தது. உள்ளே நுழைந்ததும், மெல்லிய ஜாஸ்மின் வாசனை அவனை வருடியது. அவளின் வாசத்தால் அறை மணத்ததா அல்லது அறை வாசத்தால் அவள் மணக்கிறாளா என்று புரிந்துகொள்ள முடியாத ரஞ்சனின் மனம் கிறங்கியது. நீல சேலை உடுத்தியிருந்த அவள் நடக்க சற்றே சிரமப்பட்டாள்.
“வித்தியாசமா புடவை எல்லாம் கட்டியிருக்கே” என்றவனின் கோட்டைக் கழற்றி அலமாரியில் மாட்டினாள் ஆலியா.
“போன தடவை வந்திருந்தப்போ நீ தானே சொன்ன .. சேலை கட்டுறதிலே ஒரு வசீகரம் இருக்குன்னு.. அதான் என் காஸ்டியூமர் கிட்ட சொல்லி கட்டிக்கிட்டேன்.. நல்லாயிருக்கா?”
“அம்சமா இருக்கு..” என்றவனின் கண்கள் லேசாகப் பனிப்பதைக் கவனித்த ஆலியா “சாரி ரஞ்சன்.. மனைவியை ஞாபகப்படுத்திட்டேனா?” என்று அவன் மோவாயை உயர்த்திப் பார்த்தவள் அவன் தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள். அவளது விரல்கள் அவன் தலைமுடியில் மெல்ல அலைந்தன. விரல்களின் சில்லிப்பைக் கடந்து ஆலியாவின் உணர்வுப்பூர்வமான செயல் ரஞ்சனுக்கு இதமளித்தது.
“உன் மனசுல என்ன ஓடுதுன்னு எனக்குத் தெரியும், ரஞ்சன்” என்றாள் மெதுவாக. “உன் கண்ணுக்கு என் உருவம் தெரிஞ்சாலும், உள்ளுக்குள்ளே உன் மனைவியைத் தான் நினைக்கிறே.. உன்கிட்ட எனக்கு மிகவும் பிடிச்ச பல அம்சங்கள்ல அதுவும் ஒன்னு.. இங்க தினமும் பல ஆண்கள் வராங்க. ஆனா நீ அவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவன்.. நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்”
ரஞ்சன் எதுவும் பேசாமல் முறுவலித்தான்.
அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு பின்னால் நகர்ந்தவளின் சேலை தலைப்பு சரிந்து விழுந்ததில் அவளது செழுமை வெளிப்பட்டது. தோள்களின் வெண்மை கண்ணைப் பறித்தது. “இன்னும் சரியா பழகிக்கலை” என்றவாறு தலைப்பை சரி செய்து கொண்டவள், “எதாவது குடிக்கிறியா? செஷன்ஸ் காக்டெயில் மாதிரி வெரி லைட் ஆல்கஹால்?”
“என்னோட மனநிலைக்கு ஆன் த ராக்ஸ் கூட பத்தாது” என்றான் ரஞ்சன்.
“அப்படியா?” என்று சிரித்தவள், அவனைப் பார்த்து “நீ திரும்ப டிரைவ் பண்ண மாட்டேன்னு சொன்னா ‘நீட் விஸ்கி’ இல்லைன்னா ‘ஸ்ட்ரெய்ட் அப்’ கூட தருவேன்.” என்றாள்.
அங்கிருந்த சோபாவில் சரிந்து உட்கார்ந்த ரஞ்சன், “உண்மை தான் .. ஜான் காலின்ஸ் கிடைச்சா எடுத்துக்கறேன்” என்றான்.
“இன்னிக்கு நீ கேட்டதெல்லாம் கிடைக்கும் ஹனி.. அதுக்குதான் நான் இருக்கேன்.. உனக்கு எந்த குற்ற உணர்வும், பயமும் தேவையில்லை.. இது உனக்கும் எனக்குமான நேரம்.. நமக்கு மட்டுமேயான உலகம்”.
அவள் நீட்டிய காக்டெயில் கோப்பையை வாங்கிக் கொண்ட ரஞ்சன், “சியர்ஸ்” என்று அவளை நோக்கி உயர்த்தினான். அவள் கைகள் ரஞ்சனின் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழற்றின. அவள் விரல் நுனிகள் கொஞ்சம் குளிராக இருந்தன. ரஞ்சன் அதை உணர்ந்தான், ஆனால் அது அவனுக்கு இதமாகத்தான் இருந்தது. இதமாக அவனது நெஞ்சில் கைகளால் வருடியவள், “நீ ரொம்ப பதட்டமா, அமைதியில்லாம இருக்கிற ரஞ்சன்.. பிராபப்ளி உன் இதயம் இப்போ நிமிஷத்துக்கு 112 தடவை துடிக்குது.. இப்படியே போச்சுன்னா இன்னும் மூனு நிமிஷத்தில 130 ஐத் தொடும்.. டேக் இட் ஈஸி..”
அவளை நிமிர்ந்துப் பார்த்தான் ரஞ்சன். அவன் தலையைப் பிடித்து மார்போடு இழுத்து அணைத்து அவன் உதடுகளில் மென்மையாக முத்தமிட்ட ஆலியா “நீ இப்போ ரிலாக்ஸ் ஆகணும். உன் கார்டிசோல் லெவல் ரொம்ப அதிகமா இருக்கு.. ”
அவள் உதடுகள் அவன் கழுத்தில் பட்டபோது, ரஞ்சன் கண்களை மூடினான். அவள் உதடுகள் சற்று குளிராக இருந்தன, ஆனால் உள்ளே ஒரு மென்மையான சூடு பரவியது. “சொல்லு ஹனி.. என்ன வேணும்னு சொல்லு.. மனசில என்ன ஓடுது?” அவள் அவனை மல்லாக்கப் படுக்க வைத்து, அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“என்னன்னு சொல்லத் தெரியல.. எதோவொரு கிரகத்துல, முன்ன பின்ன தெரியாத உயிரினங்களுக்கு நடுவிலே, இருட்டான பகுதியில யாரோ என்னை இறக்கிவிட்ட மாதிரி தோணுது.. எல்லோரும் என்ன காரணத்தினாலோ அவசரகதியிலே ஓடிக்கிட்டே இருக்காங்க.. எதுக்காக, எங்க ஓடறாங்கன்னு தெரியல.. ஒருத்தரும் என்னை நிமிர்ந்து கூட பாக்கல.. எனக்கு எந்த திசையிலே போறதுன்னு கூட புரியலை…சில சமயங்கள்ல பயமா இருக்கு.. நான் சொல்றதை உன்னால புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியாது.. ஒரு கட்டம் வரைக்கும் எப்போவாது இந்த எண்ணங்கள் வரும்.. சமீப நாட்கள்ல கண்ணை மூடினாலே அந்த மாதிரியான காட்சிகள் வந்து பயமுறுத்துது,.”
ஆலியாவின் கண்கள் அவனை ஊடுருவிப் பார்த்தது. மெல்லிய விரல்களால் அவனது கன்னத்தை வருடினாள். “தெளிவா புரியுது ஹனி.. சமீபத்திய இழப்புகளால் உன் எண்ணங்கள் உன்னை அலைக்கழிக்குது..”. காலியாகிவிட்டிருந்த கோப்பையை வாங்கி காக்டெயில் நிரப்பி அவனிடம் நீட்டினாள்.
கோப்பையிலிருந்த மதுவை சில நொடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சன் மெளனம் கலைத்தான்.. “வினோ போனப்புறம் ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றேன்.. அவ இருந்தப்போ, எல்லாம் பர்ஃபெக்டா இருந்ததுன்னு சொல்ல முடியாது.. ஏழெட்டு வருஷமா குழந்தையைப் பாத்துக்கிற மாதிரி அவளைப் பாத்துக்க வேண்டியிருந்தது.. வீல் சேர்லயே வாழ்ந்துட்டுப் போய்ட்டா.. சில சமயங்கள்ல அதை சுமையா நெனச்சு அலுத்துகிட்டிருப்பேன்.. அழுதிருப்பேன்.. ஆனா அதுல எதோவொரு சுகம் இருந்திருக்கு .. அப்போ நான் அதை முழுசா உணரலைன்னு நினைக்கிறேன்.. இப்போ அவ இல்லாத தனிமை..கஷ்டமாயிருக்கு..”
“மனுஷங்களுக்கு தனிமை புதுசில்ல ஹனி.. யோசிச்சுப் பாரு, மனிதன் தனியாத்தான் பிறக்கிறான்.. தனியாகத்தான் வாழறான்.. தனியாதான் இறக்கிறான். ஏகாந்தம்தான் மனிதனின் உண்மைநிலை”
“இதெல்லாம் படிக்கவும் கேட்கவும் நல்லாருக்கு ஆலியா.. ஆனா தினசரி வாழ்க்கைக்கு அது சரிபட்டு வர்றதில்லை”
“உண்மைதான்.. அரிஸ்டாட்டில் மனிதன் ஒரு அரசியல், சமூக விலங்கு என்று சொல்லியிருக்கிறார்.. காட்டுவாசியாக இருந்த மனிதனுக்கு சக மனிதனுடன் இருப்பது பாதுகாப்பு உணர்வைத் தந்தது.. அவனுக்கு அந்த பாதுகாப்பு தேவைப்பட்டது.. காலப்போக்கில் மொழி, இனம் என மாற்றங்களைக் கண்டதும், அந்த இன்னொரு மனிதனே எதிரியாகவும் மாறிவிட்டான்.. ‘நான், நீ, அவர்கள்’ என்ற எண்ணங்கள் வந்த பின்பு சமூகமே சுமையாகிவிட்டது.. ஜே. கிருஷ்ணமூர்த்தி தெரியுமில்லையா உனக்கு, ஜே.கே .. அவர் சமூகம் என்பது மனிதனின் பேராசை, அச்சங்களின் வெளிப்பாடுன்னு சிந்திச்சிருக்காரு.. அவரைப் பொறுத்தவரை “சமூகமாக” இருப்பது மனிதனுக்கு வைக்கப்பட்ட பொறி.. அவனை தப்பித்துப் போக முடியாதபடி அமுக்கிப் பிடிக்கும் டிராப்.. ஒரு வகையில அது உண்மை தான்..”
“நீ சொல்ற மாதிரி எனக்கு புது உறவுகள் எதுவும் கூட தேவையில்லை.. ஆனால் வினோவின் நினைப்பு என்னை வாட்டி எடுக்குது.. தன்னால முடியலைன்னாலும், எனக்காக வாழ்ந்தவள் வினோ.. அவள் இப்போது இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியலை..”
ஆலியா மெதுவாகத் தட்டில் இருந்த ஜாஸ்மின் வாசனையை ரஞ்சனுக்கு அருகே நகர்த்தி வைத்தாள்.
“ரஞ்சன், நீ இப்போ ஒரு இருட்டுக் குகைக்குள் இருப்பது போல இருக்கிறே. இதிலிருந்து வெளியேற வேணும்னா நீ எதைப் பற்றியிருக்கிறாய், பிடித்திருக்கிறாய் என்பதை முதலில் உணர வேண்டும். புத்தர் ஒருமுறை தன் சிஷ்யர்களுக்குச் சொன்ன ஒரு கதை எனக்கு ஞாபகம் வருது.”
ரஞ்சன் ஆர்வத்துடன் அவளை ஏறிட்டான்.
“ஒருவன் காட்டைக் கடக்க ஒரு படகை உருவாக்கி, ஆற்றைக் கடக்கிறான். அக்கரைக்குச் சென்றதும், ‘இந்தப் படகுதானே என்னைக் காப்பாற்றியது’ என்ற நன்றியுணர்வில் அந்தப் படகைத் தன் தலையிலேயே சுமந்துகிட்டு காட்டுக்குள் நடக்கிறான். புத்தர் அவனிடம், ‘அந்தப் படகு உனக்கு உதவியது உண்மை. படகை விட்டு நீ இறங்கியது கரையேறத்தான்.. ஆனால் அதையே நீ சுமந்துகொண்டு திரிந்தால் இந்தக் காட்டை உன்னால் எப்படிக் கடக்க முடியும்?’ என்று கேட்கிறார். நீயும் அப்படித்தான் ரஞ்சன். வினோதினியுடனான உன் கடந்த காலம் ஒரு படகு போல உன்னை ஒரு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால், அந்த நினைவுகளை இப்போது சுமையாகச் சுமப்பது உன்னைத்தான் காயப்படுத்தும்.”
ரஞ்சன் ஒரு கணம் மௌனமானான். “ஆனா அந்த நினைவுகள்… அவளோடு இருந்த தருணங்கள் எனக்கு ரொம்ப முக்கியமாச்சே ஆலியா?”
ஆலியா இப்போது அவனது கைகளைப் பற்றினாள். அவளது பிடியில் ஒரு மென்மையான பிளாஸ்டிக் போன்ற உறுதி இருந்தது.
“ஜே.கே. ஒரு அழகான விஷயத்தைச் சொல்வார்.. ‘முடிவு தான் தொடக்கம்’.. ஆங்கிலத்தில சொல்லணும்னா ‘The ending is the beginning‘. ஒரு விஷயம் முடிவுக்கு வர்றதுதான் இன்னொரு புதிய தொடக்கத்துக்கான வாசல். ‘துறத்தல்’ என்பது காட்டுக்குப் போறதில்ல; எதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது. ஒரு பொருளை அல்லது ஒரு மனிதரை நேசிச்சா அவர்களை தன்னுடைய ஒரு ‘பகுதியாக’ மாற்றிக்கொள்ள மனிதன் நினைக்கிறான். அந்தப் பேராசைதான் பயத்தை உருவாக்குது. அந்தப் பயம் வரும்போது, அங்கே அன்பு மறைந்து ஒருவித இறுக்கம் வந்துடுது.”
அவள் தொடர்ந்தாள் – “‘பிடித்தமான ஒன்றிலிருந்து உன்னை நீயே விடுவித்துக் கொள்வதுதான் உண்மையான அறிவு’ .. Freedom from the known. இதுவும் ஜே.கே. சொன்னது தான். நான் சொல்றது உனக்குத் தப்பா தெரியலாம், ஆனால் நீ வினோதினியின் வீல் சேரைப் பிடித்திருந்த காலமெல்லாம் நீ அவளை நேசிக்கவில்லை, அவளை உன் கடமையாக ஒரு சுமையாகத்தான் சுமந்திருக்கிறாய். அந்தப் பிடியைத் தளர்த்தாத வரை உனக்கு விடுதலை இல்லை. பிடியை விடுவது என்பது வெறுப்பல்ல ரஞ்சன், அதுதான் உச்சகட்ட அன்பு. அந்தப் பிடியை விட்டால்தான் நீயும் அவளும் சுதந்திரமாக முடியும்.”
பதட்டமில்லாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்த ரஞ்சன் மெதுவாகப் பேசினான். “ஆலியா… உன்னைப் போல என்னால் அவ்வளவு நுணுக்கமா யோசிக்கத் தெரியாது. ஆனா, நீ சொல்றது எனக்கு ஒரு பெரிய தெளிவைத் தருது. ‘துறத்தல்’ நிம்மதியானது தான்.. அது எனக்கு புரியுது.. ஆனால் எப்படி அதிலிருந்து விடுபடுவது என்று தான் தெரியலை”. அவனது தொனியில் ஒரு விரக்தி தெரிந்தது.
ஆலியா புன்னகைத்தாள். “அதுக்குத் தான் நான் இருக்கேன்.. நிம்மதிதான் நம் இலக்கு ரஞ்சன். பற்றுக்களைத் துறப்பவனுக்கு ஏது துக்கம்?”
“நீ சொல்றது மூளைக்கு கன்வின்சிங்கா இருந்தாலும், மனசு ஏத்துக்க மாட்டேங்குது.. ஞாபகங்களின் சுமை அப்படியே அழுத்துது.. “ விரல்களுக்கிடையே கண்ணாடி கோப்பையை உருட்டியபடி பேசியவனின் மனவுளைச்சல் ஆலியாவுக்குத் தெளிவாகப் புரிந்தது.
“வாஸ்தவந்தான்.. வலுக்கட்டாயமாக ஞாபகங்களை அழிக்க முடியாது.. புதைகுழியில மாட்டிக்கிட்ட மாதிரி .. எவ்வளவு வேகமா அதிலிருந்து எழுந்திருக்கப் பாக்கறயோ அவ்வளவு ஆழமாக உன்னை உள்ளே இழுத்துக் கொள்ளும்… உன் நினைவுகளை மூனாவது மனிதனா நின்னு அலசிப் பாரு.. அதை ஒரு சாட்சியாக நின்று கவனி. அதை எதிர்க்காமல் இருக்கும்போது, தானாகவே அதன் வீரியம் குறையத் தொடங்கும். நிகழ்காலத்தின் வலிமை – ‘பவர் ஆஃப் நவ்’ – அளப்பரியது. புதுப்புது விஷயங்கள், அனுபவங்கள் புதிய நரம்புப் பாதைகளை உருவாக்கி பழைய நினைவுகளை மங்கச் செய்யும்.”
தத்துவம், அறிவியல் என மாற்றி மாற்றி பேசும் ஆலியாவையே பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சன். ஆலியா தொடர்ந்தாள்,,
“கசப்பான நினைவுகளை வலுக்கட்டாயமாக மறக்க முயன்றால், அவை இன்னும் ஆழமாக மனதில் பதியும். சூழலை மாத்திக்கோ.. நீ இங்க வர்ற முடிவெடுத்தது ஒரு ஆரோக்கியமான விஷயம்.. அது போல புதுசா ஒரு உறவை ஏற்படுத்திக்கிறதும் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.. உன் வலிகளைப் புரிந்துக்கொள்ள கூடிய ஒரு பார்ட்னர்…”
“சத்தியமா முடியாது… என்னால் வினோ இருந்த இடத்தில வேற யாரையும் வைச்சுப் பாக்க முடியாது.. தட் இஸ் இம்பாசிபிள்..”
ரஞ்சனின் உறுதியைப் பார்த்து ஆலியா சில நொடிகள் மெளமானாள். பின்னர் அவன் முகத்தைப் பற்றி மெதுவாகத் தன் பக்கம் திருப்பி, “புரியுது ரஞ்சன்.. உன்னுடைய தூய்மையான அன்புக்கு வேற யாரும் பொருத்தமா இருக்க மாட்டாங்கதான்..” அவன் கைகளை தன் மடியில் வைத்து மென்மையாக வருடினாள். “ஆனாலும் ரஞ்சன், வாழ்க்கை ஒரு நீரோடை போன்றது. ஓரிடத்தில் தேங்கி நின்றால் அது பாசியாகிவிடும். உனக்காக ஒரு துணையைத் தேடிக்கொள்வது வினோதினிக்குச் செய்யும் துரோகம் அல்ல; அது உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பு.”
ரஞ்சன் ஒரு கசப்பான புன்னகையை உதிர்த்தான். “வாய்ப்பா? வினோவை நான் கல்யாணம் செஞ்சிகிட்ட போது அவளோட சொத்துக்கு ஆசைப்பட்டு தான் மாற்றுத் திறனாளியான அவளைக் கட்டிக்கிறேன்னு எல்லாரும் சொன்னாங்க.. நீ அவளை நேர்ல பார்த்ததில்ல ஆலியா.. அவளுடைய சிரிப்பும், அன்பும் அவளுடைய சொத்துக்களை விட ஆயிரம் மடங்கு பெரியவை.. அந்தச் சிரிப்பில் என்னை மறந்து கிறங்கிப் போனது தான் நான் அவகிட்ட இருந்து எடுத்துகிட்ட சொத்து.. அதுக்காகத் தான் நான் இப்போ ஏங்கறேன்.. அதை வேற யார்கிட்டயும் எதிர்பார்க்கலை.. எதிர்பார்க்கவும் முடியாது “
“பார்ட்னர்னு சொன்னதும் அது இன்னொரு பெண்ணாக தான் இருக்கணும்னு அவசியமில்லை ரஞ்சன்.. செல்லப் பிராணி, பயணங்கள், இப்படி உன்னை ஆக்குபைடா வெச்சுக்க, ஆக்கிரமிக்க எதோவொரு விஷயம்..”
“ரொம்ப ஈஸியா சொல்ற ஆலியா.. அது இயல்பா மனசில இருந்து வரணும்.. வெளி அழுத்தங்கள்னால அல்லது நிர்பந்தத்தினால மாத்திக்கிறது வெறும் நடிப்பா தான் இருக்கும்.. அதை என்னால ஏத்துக்கவோ ஒத்துக்கவோ முடியாது..”
அவனது கண்களையே பார்த்துக் கொண்டிருந்த ஆலியா, “நீ ரொம்ப விசித்திரமானவன் ரஞ்சன்.. உன்னுடைய தூய்மையான அன்பை பெற்ற வினோ ரொம்ப அதிர்ஷ்டசாலி.. “ அவன் கன்னத்தைப் பற்றி மிருதுவாக அவன் உதடுகளில் முத்தமிட்டாள். அவனது உமிழ்நீர் அவன் சாந்தப்பட்டிருப்பதை அவளுக்கு உணர்த்தியது . “வெல்.. இப்ப நீ சொன்னது கொஞ்சம் நம்பிக்கைத் தருது.. இப்போதைக்கு நான் உன் மனவோட்டத்தை மாத்திக்க சொல்லி கம்பெல் பண்ண போறதில்லை… நீ வந்தப்போ இருந்ததை விட உன்கிட்ட லேசானதொரு பாசிட்டிவிட்டி தெரியுது.. நீ சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் உன் ஆத்மாவிலிருந்து வர்றதை நான் உணர்கிறேன்..கார்டிசால் லெவலும் நல்லா குறைஞ்சிருக்கு..”
பேசிக் கொண்டிருந்தவளின் கண்களில் நீல ஒளி பளிச்சிட்டதை ரஞ்சன் கவனித்தான். கையிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தவன்.. “நான் கிளம்ப வேண்டிய நேரமாயிடுச்சு.. ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கட்டுமா? ஒரு பிசினஸ் கிளையண்டைப் பாக்கப் போகணும்.. கொஞ்சம் ரெஃப்ரெஷ் ஆகிக்கிறேன்.. “ என்று எழுந்தான்.
********
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மற்றொரு மூலையில், டிடெக்டிவ் மில்லரின் பிரிசிங்க்ட் இன்வெஸ்டிகேஷன் ரூம் அமைதியாக இருந்தது. ஆலியாவிடமிருந்து வந்து கொண்டிருந்த லைவ் ஸ்டிரீமிங் துண்டிக்கப்பட்டதும், நீண்டதொரு பெருமூச்சை விட்டான் மில்லர். அருகே அமர்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிருந்த ஆபிசர் ஸ்டீவன், “ஆலியாவின் குறிப்புகளில் அவன் உண்மையை மறைப்பதற்கான அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை .. புத்திசாலித்தனமா ரஞ்சனின் எச்சிலைப் பயன்படுத்தி பயோகெமிக்கல் டேட்டாவையும் பரிசோதித்திருக்கிறாள்.. அதுவும் க்ளீனா இருக்கு.. ஒரு வேளை வினோ இறந்தது ஆக்சிடெண்ட் தானோ?” என்றான்.
அருகே வந்த மில்லர் அந்த மானிட்டரைப் பார்த்தவாறு. “ஆலியா ரொம்ப ஸ்மார்ட் ஹுமனாய்டு. அட்வான்ஸ்ட் சைக்கியாட்ரிஸ்ட் ப்ரொக்ராம் செய்யப்பட்டவள்.. 600 மணி நேரத்துக்கும் அதிகமான கவுன்சலிங் அனுபவம் கொண்டவள்.. அவளால மைக்ரோ-எக்ஸ்பிரஷன்ஸைக் கூட எளிதா டீகோட் பண்ணி கணிக்க முடியும். அவளே இவன் மேல ‘க்ளீன் சிட்’ கொடுக்கிறான்னா, இவன் குற்றமற்றவனா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.”
“அப்படின்னா, ‘ஆக்ஸிடெண்டல் டெத்’ னு போட்டுடலாமா?”
அருகே இருந்த நாற்காலியில், இறண்டு கைவிரல்களையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு சரிந்து உட்கார்ந்த மில்லர், “என்னவோ ஒன்னு இடிக்குது… ஆனால், ஆதாரங்கள் எல்லாமே அவன் பக்கம் இருக்கு..சரியா சொல்லத் தெரியல.. ” என்று இழுத்தான்.
********
பாத்ரூமிலிருந்து வெளியே வந்த ரஞ்சனுக்கு கோட்டை எடுத்து அவனுக்கு மாட்டி விட்ட ஆலியா, அவனது சட்டை பட்டன்களைப் போட்டு விட்டு, டை முடிச்சை ஒழுங்குப் படுத்திவிட்டாள்.
“நன்றி ஆலியா. இன்னிக்கு உன்கிட்ட பேசினதுல என் மனசுல இருந்த பாரம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. நீ சொன்ன அந்தப் படகு கதை எனக்குப் புது புரிதலை கொடுத்திருக்கு.. என் சுமையை முழுசா இறக்கி வெக்க முயற்சிக்கிறேன்..”
அவன் சொன்னதன் உள் அர்த்தம் ஆலியாவுக்குப் புரியவில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் தன் மனைவியின் நினைவுகளிலிருந்து விடுபட முயற்சிக்கிறான் எனத் தெரிந்தது.
“அடுத்து எப்போ வருவே ரஞ்சன்?” ஆலியா வாசலில் நின்று கேட்டாள்.
“தெரியல ஆலியா… ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். இனிமேல் நான் இங்க வரும்போது, ஒரு புதிய மனுஷனா வருவேன்” என்றவன் அவளை மென்மையாக அணைத்து விடைபெற்றான்.
எலிவேட்டருக்குள் இருந்த கண்ணாடியைப் பார்த்து தன் கோட்டில் படிந்திருந்த ஆலியாவின் தலைமுடியைத் தட்டி விட்டான் ரஞ்சன். உதட்டோரம் ஒரு வக்ரப் புன்னகை விரிந்தது.
‘நீ இன்று எனக்குச் சாதகமான தத்துவங்களைச் சொன்னாய் ஆலியா.. அதிலும் நீ சொன்ன அந்த ‘பிடித்ததை விட்டுவிடு’ தத்துவம்.. அதை நினைக்கும்போதே மெய்சிலிர்க்கிறது. அன்று மலைப்பாதையில் வினோ அமர்ந்திருந்த வீல் சேரின் பிரேக்கைப் பிடித்திருந்த என் விரல்களை நான் தளர்த்தியபோது, அதற்குப் பின்னால் இப்படியொரு தத்துவம் ஒளிந்திருக்கும் என்று எனக்குத் தெரியாது. நீ சொன்னதைக் கேட்ட பிறகு, பிடித்ததை விட்டது தப்பில்லை என்றே தோன்றுகிறது.’ என மனதுள் நினைத்துக் கொண்டவன், தன் கைக்கடிகாரத்தைத் டையால் துடைத்துவிட்டபடி நிமிர்ந்தான். ‘டிடெக்டிவ் மில்லர் என் மீது சந்தேகப்பட்டு என்னைப் பின் தொடர்வது எனக்குத் தெரியும். உன்னிடமிருந்தும் அவர்கள் தகவல் சேகரிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், உன் விழித்திரையில் மின்னிய அந்த நீல ஒளி… நீ நேரலையில் அவர்களுக்குத் தகவல் பரிமாறிக் கொண்டிருந்ததை எனக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது. இருந்தாலும் கவலையில்லை ஆலியா, உனது ‘பயோ-மெட்ரிக்’ ரிப்போர்ட் எனக்கு நிரபராதி எனும் புனிதப் பட்டத்தை வாங்கிக் கொடுக்கும்.’
லிஃப்ட் தரைத்தளத்தை அடைந்தது. கண்ணாடி கதவுகள் திறந்தன. லாபியில் வரவேற்பு அறையிலிருந்த பெண் அதே நமட்டுச் சிரிப்புடன், “இங்கு உங்கள் நேரம் இனிமையாகக் கழிந்திருக்கும் என நம்புகிறேன்” என்றாள்.
“நிச்சயமாக… மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்” என்று ரஞ்சன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அந்தச் சிரிப்பின் பின்னால் ஒளிந்திருந்த குரூரம், ஆலியா என்ற அந்த ஹியூமனாய்டுக்கும் புரியவில்லை, அங்கே பதிவாக்கிக் கொண்டிருந்த கேமராக்களுக்கும் பிடிபடவில்லை.
- மர்மயோகி







