\n"; } ?>
Top Ad
banner ad

யுத்த இருளில் தடுமாறும் உலகப் பொருளாதாரம்

ஈரான் மீதான ராணுவத் தாக்குதலில் முதல் வெடிகுண்டின் எதிரொலி ஓய்வதற்கு முன்பே, அதன் பொருளாதார அதிர்வலைகள் உலகெங்கும் உள்ள சாமானிய மக்களின் வீடுகளைச் சென்றடைந்துவிட்டன. நவீன உலகம் எவ்வளவுதான் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்தாலும், ஒரு சிறிய பிராந்தியப் போர் ஒட்டுமொத்த உலகத்தையும் எப்படி முடக்க முடியும் என்பதற்கு 2026-ன் இந்தப் போரே சாட்சி.

அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கை என அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) தாக்குதல், இன்று ஒரு உலகளாவிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போரின் வெற்றி தோல்வி என்பது சடலங்கள் அல்லது ஏவுகணைகளின் எண்ணிக்கையில் அடங்கிவிடப்போவதில்லை. மாறாக, சிதைந்து போன பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையின் வீழ்ச்சியைக் கொண்டே இது கணக்கிடப்பட வேண்டும். போர் முடிய எத்தனை நாட்களாகும் என்பதை விட, போர் ஏற்படுத்திய வடுக்களிலிருந்து மீள எத்தனை தசாப்தங்கள் தேவைப்படும் என்பதே நம்முன் நிற்கும் பிரம்மாண்டக் கேள்வி.

ஈரானின் நிலத்தடி அணுசக்தி மையங்களில் 60% தூய்மைக்கும் மேலாக யுரேனியம் செறிவூட்டப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA, பிப்ரவரி 27, 2026 அன்று ரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பியது. அணு ஆயுதம் தயாரிக்க 90% தூய்மை தேவைப்படும் நிலையில், 60% என்பது அபாயகரமான எல்லை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்த ஈரானின் தற்போதைய இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை அகற்றுவதே ஒரே வழியென்று தீர்மானித்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானின் உயரிய ஆன்மிகத் தலைவரான அயதுல்லா அலி காமேனியை கடந்த பிப்ரவரி 28 அன்று குறிவைத்து வீழ்த்தியது. தெளிவான பின்விளைவுத் திட்டமிடல் ஏதுமின்றித் தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல், இன்று உலகையே உலுக்கும் போராக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

எரியும் கிணறுகள் – தகிக்கும் ஆசியா

மத்திய கிழக்கின் இதயமாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஈரானின் பிடியில் இருப்பதால், சவுதி அரேபியா, ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ளது. போர் தொடங்கியவுடன் ஈரான் இந்தப் பாதையைத் துண்டித்ததால், ஆசிய நாடுகள் கடும் எரிசக்தித் தட்டுப்பாட்டில் தவிக்கின்றன.

தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள செவ்ரான், எக்ஸான் மோபில் போன்ற நிறுவனங்களின் எண்ணெய் கிணறுகளை ஈரான் சிதைத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை $110-ஐக் கடந்து, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. கத்தாரின் இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் தடைப்பட்டதால், ஐரோப்பா கடும் குளிர்காலத்தை மின்சாரமின்றி எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்போ மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

தடம் மாறும் கப்பல்கள் – காலியாகும் தட்டுகள்

சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் பாதையைத் தவிர்த்து, ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்வதால் விநியோகத்தில் 20 நாட்களுக்கும் மேலாகத் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கிலிருந்து வரும் உரங்களின் விலை உயர்வால் விவசாயச் செலவுகள் விண்ணைத் தொடுகின்றன. இந்தத் தட்டுப்பாடு அடுத்த சில மாதங்களில் உலகளாவிய “உணவுப் பஞ்சத்தை” உருவாக்கும் என ஐ.நா எச்சரிக்கிறது.

உருவெடுக்கும் டிஜிட்டல் போர்க்களம்

ஈரானின் ‘செப்பா வங்கி’ மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, துபாய் மற்றும் மணாமாவில் உள்ள சிட்டி வங்கி (Citibank) கிளைகள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. Citibank, HSBC, Goldman Sachs போன்ற சர்வதேச வங்கிகள் தங்களது கிளைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளன. நேரடித் தாக்குதல்கள் மட்டுமின்றி, அமெரிக்க நிதி நிறுவனங்களின் இணையக் கட்டமைப்புகளை முடக்கும் சைபர் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன.

பதுக்கப்படும் தங்கம்; தடுமாறும் கிரிப்டோ

யுத்த காலங்களில் காகிதப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவது இயல்பு. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது தஞ்சமடைந்துள்ளனர். விளைவு, தங்கம் விலை இதுவரை காணாத புதிய உச்சங்களை எட்டியுள்ளது.

மறுபுறம், ‘டிஜிட்டல் தங்கம்’ என வர்ணிக்கப்பட்ட கிரிப்டோ கரன்சிகள் (Bitcoin, Ethereum) கடும் சரிவைச் சந்தித்துள்ளன. மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் இணையக் கட்டமைப்பு மீதான தாக்குதல்களால் பிளாக்செயினின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. “ஆபத்துக் காலத்தில் டிஜிட்டல் எண்களை விட, கையில் இருக்கும் தங்கமே பலமானது” என்ற பழைய கோட்பாடு மீண்டும் நிரூபணமானது. அதேநேரம், வான்வெளிப் போக்குவரத்து முடங்கியதால் துபாய் சந்தையில் தங்கம் தேக்கமடைந்து, தற்காலிகத் தள்ளுபடி விலையில் விற்கப்படுவதும் கவனிக்கத்தக்கது.

பன்னாட்டு நிறுவனங்களின் வெளியேற்றம்

தொடர் தாக்குதல்களால் துபாய், அபுதாபி மற்றும் சவுதியில் உள்ள அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியேறத் தொடங்கியுள்ளன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளியேறுவதால், மத்திய கிழக்கின் சேவைத் துறை வீழ்ச்சியைச் சந்திக்கிறது. குறிப்பாக, இப்பகுதியை நம்பியுள்ள லட்சக்கணக்கான இந்தியர்களின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளது. கப்பல் காப்பீட்டுத் தொகை 500% வரை அதிகரித்துள்ளதால், உலகளாவிய பணவீக்கம் சாமானியர்களின் தலையில் பெரும் சுமையாக இறங்கப்போகிறது.

வல்லான் வகுத்ததே வாய்க்கால்

ஈரான் மீதான போரை ஒரு தனிப்பட்ட மோதலாகப் பார்க்க முடியாது. இது லத்தீன் அமெரிக்காவிலும் ஆதிக்கத்தைச் செலுத்த அமெரிக்கா விரித்துள்ள வலை. வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகளைக் கைப்பற்றவும், கியூபா மற்றும் கொலம்பியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் டிரம்ப் நிர்வாகம் இந்தச் சூழலைப் பயன்படுத்துகிறது. ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவது’ போல, எங்கோ நடக்கும் போரின் விளைவு உலகப் பொருளாதாரச் சங்கிலியின் சீர்மையையே துண்டித்துவிட்டது.

ஐ.நா.வின் மெத்தனமும் நேட்டோவின் பிளவும்

சர்வதேச அமைதியை நிலைநாட்ட வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை (UN) வெறும் பார்வையாளராக முடங்கியுள்ளது. நேட்டோ நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு, இந்தப் போரை ஒரு உலகப் போராக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அழுத்தம் ஒருபுறம், ஐரோப்பாவின் அமைதி விருப்பம் மறுபுறம் என நேட்டோ தடுமாறுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏவும் ஏவுகணைகள் ஈரானின் ராணுவ இலக்குகளைத் தாக்கலாம். ஆனால் அதன் அதிர்வுகள் ஆசியாவின் ஏழை விவசாயியின் உரப் பையிலும், ஐரோப்பாவின் நடுத்தர வர்க்கத்து வீட்டின் மின்சாரக் கட்டணத்திலும், தென்னமெரிக்காவின் எளிய மக்களின் உணவுத் தட்டிலும்தான் எதிரொலிக்கின்றன.

ஆயுதங்கள் மௌனிக்கலாம், ஆனால் இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பில் ஏற்படுத்திய விரிசல் ஆற இன்னும் பல தசாப்தங்கள் பிடிக்கும். அதிகார வர்க்கம் ‘வெற்றி’ கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கும்போது, சாமானிய உலகமோ அதன் ‘விலைப்பட்டியலை’ச் சுமக்கத் தொடங்கியுள்ளது.

-ரவிக்குமார். 

கட்டுரை எழுதப்பட்ட நாள்: மார்ச் 15, 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad