21 நூற்றாண்டில் கண்ணுக்குத் தெரியாத மிரட்டல்
கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் ஒலித்த ஒரே குரல் “மக்கள்தொகை வெடிப்பு” (Population Explosion). “இப்படியே போனால் பூமி தாங்காது, உண்ண உணவிருக்காது” என்று அஞ்சினோம். இக்காலக்கட்டத்தில் உலக நாடுகள் பலவும் மிகக் கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொண்டன. இந்தியாவில் 1970-களின் இறுதியில் சிறிய குடும்பத்தை ஊக்குவிக்க “Hum Do, Hamare Do” (நாம் இருவர் நமக்கு இருவர்) போன்ற பிரச்சாரங்கள் தொடங்கின. 1980-களின் மத்தியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் அப்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இந்தப் பிரச்சாரம் ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று தீவிரப்படுத்தப்பட்டது நினைவிருக்கக்கூடும்.
ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில், சீனாவில் ‘ஒற்றைக் குழந்தை கொள்கை’ (One-child policy) அமல்படுத்தப்பட்டது. இது உலக வரலாற்றிலேயே மிகவும் விவாதிக்கப்பட்ட, அதே சமயம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திய மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கையாகும். இக்கொள்கையைப் பின்பற்றி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு நிதிச் சலுகைகள், வீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதே சமயம், பல இடங்களில் கட்டாயக் கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் கருக்கலைப்புகள் செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு அரசு வேலை பறிப்பு, அபராதம் எனத் தண்டனைகளும் விதிக்கப்பட்டன.
இந்தக் கொள்கை சீனாவின் மக்கள் தொகையைக் குறைத்தாலும், பல எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தியது: ஒரே குழந்தையாக வளர்ந்த பிள்ளைகளிடம் சமூகப் பொறுப்பு குறைதல், ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் பெரும் இடைவெளி, உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைதல் எனப் பல சிக்கல்களை சீனா எதிர்கொண்டது. விபரீதங்களை உணர்ந்த சீன அரசு, 2016-ஆம் ஆண்டு ‘இரு குழந்தைகள் கொள்கை’க்கு மாறியது. பின்னர் 2021-ல் ‘மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம்’ என்று அனுமதி வழங்கியது. இன்று 2026-ஆம் ஆண்டில், சீனா தனது மக்களை அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு கெஞ்சும் நிலையில் உள்ளது.
இன்று உலகின் மிகப் பெரிய அச்சம் அதிக மக்கள்தொகை அல்ல; மாறாக அடுத்த தலைமுறை இல்லாத தேசங்களாக மாறிவிடுவோமோ என்பதுதான். சீனா முதல் சிங்கப்பூர் வரை, இத்தாலி முதல் இந்தியா வரை இப்போது ஒலிக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்: “ஏன் குழந்தைகள் பிறப்பு குறைகிறது?”
பிறப்பு விகித வீழ்ச்சி
உலகளாவிய கருவுறுதல் விகிதங்கள் (Fertility Rate) 1963-ல் 5.3 ஆக இருந்து, 2023-ல் தோராயமாக 2.2–2.3 ஆகக் குறைந்துள்ளன. அதாவது சராசரியாக ஒரு பெண்ணுக்கு 5.3 குழந்தைகள் எனும் விகிதம், இன்று 2.3 எனக் குறைந்துவிட்டது. தற்போது அது மேலும் சரிந்து, உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ‘2.1’ எனும் மாற்று விகித நிலைக்குக் கீழே உள்ளன. வெளிநாட்டினர் குடியேற்றம் இல்லாமல், பல நாடுகள் தங்களது தற்போதைய மக்கள்தொகையைப் பராமரிக்கவே தடுமாறி வருகின்றன. இந்த வரலாறு காணாத வீழ்ச்சி தொடருமெனில், 2080-களில் உலகம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்படுகிறது.
அபாயத்தை உணர்த்தும் சில புள்ளி விவரங்கள்
- 1968-ல் 2.3 சதவீதத்துடன் உச்சத்தில் இருந்த உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், படிப்படியாகக் குறைந்து 2023-ல் 0.9%-க்கும் கீழ் சரிந்துள்ளது.
- 2050-க்குள் ஜப்பானின் மக்கள்தொகை மூன்றில் ஒரு பங்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு குழந்தை பிறப்பு விகிதத்தைவிட ரோபோக்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.
- இந்தியாவில் 1950-ல் ஒரு பெண்ணுக்கான சராசரி பிறப்பு விகிதம் 6-ஆக இருந்தது, இன்று அது 2-க்கும் கீழே சென்றுவிட்டது.
- தென் கொரியா உலகின் மிகக்குறைந்த பிறப்பு விகிதத்தைக் (0.7) கொண்டுள்ளது. அந்நாட்டில் பள்ளிகள் முதியோர் இல்லங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
ஏன் இந்த வீழ்ச்சி?
பிறப்பு-இறப்பு சமநிலை வீழ்ச்சிக்குக் காரணம் வெறும் உயிரியல் மாற்றம் மட்டுமல்ல; இது ஒரு சமூக மற்றும் பொருளாதார மாற்றமும்கூட.
பொருளாதாரச் சுமை:
குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ப்புச் செலவு இன்று விண்ணைத் தொடுகிறது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழலில், குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள், டியூஷன் மற்றும் மருத்துவச் செலவுகள் மலைக்க வைக்கின்றன. வருமானம் – செலவு ஆகிய இரு முனைகளையும் சமப்படுத்தப் போராடும் இளந்தம்பதியினர், குழந்தை பெற்றுக்கொள்வதைப் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
வாழ்க்கை முறை மாற்றம்:
கூட்டுக் குடும்பம் என்ற வாழ்க்கை முறை மாறி, தனிக் குடும்பங்கள் உருவாக ஆரம்பித்ததும்குழந்தை வளர்ப்பு சவாலாகிவிட்டது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை; இருவருக்கும் காலை/மாலை பணிவேளை முரண்கள்; பொருளாதார அழுத்தங்கள், அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் எனப் பல்வேறு காரணிகள் சொல்லப்படுகின்றன.
சமூக/ கலாச்சார மாற்றங்கள்:
இளந்தலைமுறையினரிடம் அதிகரித்து வரும் தனித்துவ மனப்பான்மை, இணைந்து வாழ்வதில் ஏற்படும் சிக்கல்களை விட்டுக் கொடுக்காதது போன்ற எண்ணங்களால் திருமணங்கள் தாமதமாகின்றன. பணி வாழ்வில் முன்னேற்றமா அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதா என்ற சூழலில், ஆண்/பெண் பேதமின்றி பணி முன்னேற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. குடும்பக் கட்டமைப்பை விட தனிப்பட்ட சுதந்திரம், தொழில் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றில் அதிகரிக்கும் கவனம் மிகவும் தனிப்பட்ட உளவியல் நிலப்பரப்பை உருவாக்கி விடுகிறது.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது (Live-in relationship), அதிகரிக்கும் விவாகரத்துகள், தன்பாலின திருமணங்கள் போன்ற கலாச்சார மாற்றங்கள் குழந்தை பிறப்பை கணிசமாக குறைக்கின்றன. தனிக் குடும்பங்களில் ஒரே பிள்ளையாக வளர்ந்து இன்று இளைஞர்களாகி நிற்கும் தலைமுறையினர் இவ்வித மாற்றங்களுக்குள் சிக்கி உழல்கின்றனர். மேலும் இவர்கள் சிறுவயதில் எதிர்கொண்ட மன உளைச்சல்கள் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி, இயற்கையாக குழந்தை பெறுவதில் சிக்கல்களை உருவாக்கி விடுவதையும் மறுக்கவியலாது.
விளைவுகள் மற்றும் சவால்கள் என்ன?
குறைவான குழந்தைகள் அல்லது குழந்தைகளற்ற சமூகத்தினரிடையே அதிகப் பதட்டம், மனச்சோர்வு, பாதுகாப்பற்றத் தன்மை மிகுந்து காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, ஆதரவாக அரவணைக்க பிள்ளைகள் இல்லாதது தனிமை உணர்வுகளை அதிகரித்து பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த உணர்வுகளை, அச்சங்களை பொருளாதாரப் பலம் மாற்றுவதில்லை. குடும்ப கட்டமைப்புகளின் இழப்பு, சமூக பிணைப்புகளையும் குறைக்கிறது.
பொருளாதார ரீதியில், உழைக்கும் வயதுடைய மக்கட்தொகை குறைவதால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கம் குறையுமானால் அரசுகளின் வரிவருமானம் வெகுவாகக் குறைந்து சமூக நலத்திட்டங்கள், கட்டமைப்புகள் நலிவடையும்.
இன, மத கருத்தியல் மோதல்கள் தோன்றுவதற்கும் பிறப்பு விகிதம் காரணமாகிவிடுகிறது. தனி இனம், மதம் பலம் குறைவதாக அல்லது அதிகரிப்பதாக எண்ணும் தீவிரவாத சித்தாந்தங்கள் வன்முறையைத் தூண்டிவிடுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
இன்று ஜப்பான், சீனா போன்ற பல நாடுகளில் மக்களின் மனச்சோர்வை குறைக்க, நாய், பூனை போன்ற விலங்குகளுடன் விளையாடி பொழுது போக்க மனமகிழ்வு கூடங்கள் (Dog / Cat cafes) பெருகி வருகின்றன. சில நிமிடங்கள் கவலைகளை மறந்து நேரத்தைச் செலவிட, கட்டணம் செலுத்தி, நீண்ட நேரம் வரிசையில் நிற்பவர்கள் பலரும் 25 முதல் 35 வயதுடைய இளவயதினர் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு இணையாக மனித உருவ இயந்திர (humanoid) நிலையங்களும் உருவாகிவருகின்றன.
இங்கு செல்பவர்கள் பலரும், தங்கள் மன அழுத்தங்கள், பதட்டங்கள் குறைந்து புத்துணர்வுடன் வெளிவருவதாகச் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவழிக்க குடும்பங்கள் இல்லாத குறையைப் போக்க இது போன்ற மனமகிழ் நிலையங்கள் அதிகரித்து வருவது மிகப் பெரிய சமூக, கலாச்சார மாற்றங்களுக்கான அறிகுறி.
மீட்சிக்கான முன்னெடுப்புகள்
இந்தச் சவால்களை எதிர்கொள்ள நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகின்றன.
பணிச்சூழல் மாற்றங்கள்:
பெற்றோர் இருவருக்கும் நீண்டகால ஊதியத்துடன் கூடிய விடுமுறை மற்றும் ‘வீட்டிலிருந்தே வேலை’ (Remote Work) போன்ற நெகிழ்வான முறைகளை நடைமுறையாக்கல்.
அரசு ஊக்கத்தொகை:
குழந்தைகளைப் பெற்றெடுக்கும் குடும்பங்களுக்குப் பெரும் தொகையைச் சன்மானமாக வழங்குவதுடன், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளுதல்.
தொழில்நுட்பம் மற்றும் AI:
மனித உழைப்பு பற்றாக்குறையைச் சமாளிக்க AI மற்றும் ரோபோக்களைப் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதாரச் சரிவை ஈடுசெய்தல்.
திட்டமிடப்பட்ட குடியேற்றம்:
மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளிலிருந்து இளைஞர்களைத் தங்கள் நாடுகளுக்கு வரவழைத்துக் குடியுரிமை வழங்குவது (Migration) ஒரு உடனடித் தீர்வாகும்.
சமூகக் காப்பகங்கள்:
அலுவலகங்களிலேயே தரமான குழந்தை காப்பகங்களை உருவாக்குவது, பெற்றோர் நிம்மதியாகப் பணிபுரிய வழிவகுக்கும்.
மக்கள்தொகை குறைவது என்பது பூமியின் வளங்களைக் காக்க உதவும் என்று ஒருபுறம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறினாலும், மனித நாகரிகத்தின் தொடர்ச்சிக்கும் பொருளாதார நிலைத்தன்மைக்கும் இது ஒரு பெரும் மிரட்டல்தான். 21-ஆம் நூற்றாண்டின் எஞ்சிய பகுதியானது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும், மனித வளத்தைத் தக்கவைப்பதற்கும் இடையிலான ஒரு போராட்டமாகவே இருக்கும்.
நாம் எதை நோக்கிச் செல்கிறோம்? குழந்தைகளே இல்லாத நிசப்தமான நகரங்களையா அல்லது திட்டமிடப்பட்ட சமநிலையான சமூகத்தையா? பதில் காலத்தின் கைகளில்!
-ரவிக்குமார்







