\n"; } ?>
Top Ad
banner ad

காவியக் காதல் – பகுதி 3

Filed in கதை, வார வெளியீடு by on November 9, 2026 • 0 Comments

காவியக் காதல் – பகுதி 2

அன்று மாலையே, அமுதாவின் பிடிவாதத்துக்கு இணங்கி, பக்கத்துத் தெருவிலிருந்த பிரபல நரம்பியல் மருத்துவர் டாக்டர் ரகுநாதனின் கிளினிக்குக்குப் புறப்பட்டனர். காத்திருப்பு அறையில் நாற்பது நிமிடம் உட்கார்ந்திருந்த சித்தார்த், சுவரில் மாட்டியிருந்த “நன்றாகத் தூங்குங்கள், நலமாய் வாழுங்கள்” என்ற போஸ்டரையே வெறித்துக் கொண்டிருந்தான். “பாத்தேளா, அவாளே சொல்றா, நன்னாத் தூங்கணும்னு” என்றாள் அமுதா மெதுவாக. “தூங்கினாத்தானேடி பிரச்சனையே” என்று முணுமுணுத்தான் அவன்.

உள்ளே அழைக்கப்பட்டதும், பிரஷர், ஈ.சி.ஜி., கண், நாடி எல்லாம் பார்த்துவிட்டு, நிதானமாய்க் கேட்டார் மருத்துவர். “ஆஃபீஸ்ல ஸ்ட்ரெஸ் ஏதாவது? ராத்திரி லேட்டா மொபைல் பாக்கற பழக்கம்?” “அதெல்லாம் இல்ல டாக்டர்,” என்றவன், தயங்கித் தயங்கிக் கனவை முழுவதும் சொன்னான். அரசன், கழுமரம், புலவர், வாள் எனச் சொல்லச் சொல்ல, டாக்டரின் புருவம் மெல்ல மேலேறியது. “ஒரே கதை தொடர்ச்சியா வர்றது அபூர்வம்தான். ஆனா சாத்தியம். ஸ்லீப் டிஸ்ஆர்டர், ஓவர் திங்கிங்… ப்ளட் டெஸ்ட், எம்.ஆர்.ஐ. எழுதித் தரேன். இப்போதைக்கு லைட்டா ஒரு மாத்திரை.” “டாக்டர், ஏதோ தமிழ் சினிமால வர்றா மாதிரி, பூர்வ ஜென்மம்னு…” என்று இழுத்தவனைப் பார்த்துப் புன்னகைத்தார். “பூர்வ ஜென்மம் பத்தி எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜென்மத்து ரிப்போர்ட் எல்லாம் நார்மல்தான் வரும்னு நினைக்கறேன்.”

வீடு திரும்பியதும், இன்றிரவு தூங்கவே கூடாதென்று சங்கல்பம் செய்து கொண்டான் சித்தார்த். கடுங்காப்பி, லேப்டாப், ஒரு பழைய க்ரைம் நாவல் என ஆயுதங்களோடு சோஃபாவில் அமர்ந்தான். அமுதா, “சீக்கிரம் வந்து படுத்துக்கோங்கோ,” என்று சொல்லிவிட்டு, மாத்திரையைச் சாப்பிடச் செய்து, உறங்கச் சென்றாள். ஆனால், மாத்திரையின் மகிமையா, மனதின் சோர்வா, இரவு இரண்டு மணிக்கு நாவல் நெஞ்சில் விழ, சித்தார்த்தின் இமைகள் அவன் பேச்சைக் கேட்க மறுத்து மூடிக்கொண்டன.

———————————————————————————————————————

வாயு வேகத்தில் வந்த குதிரையின் குளம்பொலியும், காற்றைக் கிழிக்கும் வாளின் சீழ்க்கையொலியும் ஒரே கணத்தில் சித்தேஸ்வரனின் செவிகளை எட்டின. சோதிடர் குலத்தில் பிறந்தாலும், சுற்றிவரும் ஆபத்தைச் சூரியன் உதிக்குமுன்னே உணரும் நுட்பம் அவன் குருதியிலேயே ஊறியிருந்தது. கழுத்தைக் குறிபார்த்து வந்த வாள் வீச்சு, அவன் சட்டெனக் குனிந்ததால், தலைப்பாகையை மட்டுமே பதம் பார்த்துச் சென்றது. பாகை இரண்டாய்ப் பிளந்து புழுதியில் விழ, சுழன்று மண்ணில் உருண்டு எழுந்தான் சித்தேஸ்வரன். இடையில் வாளில்லை. அரண்மனை வாசலிலேயே ஆயுதங்களை ஒப்படைத்து வந்தவன் அவன்.

குதிரையைத் திருப்பி மீண்டும் பாய்ந்து வந்தவன், முகத்தைத் துணியால் மறைத்திருந்தான். ஆனால் அவன் குரலை மறைக்க முடியவில்லை. “அண்டிப் பிழைக்கும் அற்பனே! அரசன் பணிந்தாலும், அரசகுலம் பணியாது! இன்றோடு உன் ஜாதகத்தை முடித்து வைக்கிறேன்!” என்று கர்ஜித்தான்.

அந்தக் குரலை அறிந்தவளாய், அரண்மனை வாசற்படியில் நின்றிருந்த தேன்மொழி திடுக்கிட்டாள். “மாறவர்மன்!” அரசனின் தங்கை மகன், தேன்மொழிக்கு முறை மாப்பிள்ளை. “இளவரசியை மணப்பவன் நானே” என்று பல ஆண்டுகளாய்ப் பெருமை பேசித் திரிந்தவன். அரசன் மனம் மாறியது அவன் செவிகளுக்கு எட்டியபோது, அவன் கொண்டது ஆத்திரம் மட்டுமன்று; ஆணவம் அடிபட்ட வெறி. வாசலிலேயே பதுங்கியிருந்து, எல்லாரும் கலைந்த பின்னர் காரியம் முடிக்க வந்தவன் அவன்.

வாசலிலிருந்த காவலனின் உறையிலிருந்து வாளை உருவிய தேன்மொழி, “சோதிடரே, பிடியுங்கள்! சோர்வின்றிச் சுழற்றுங்கள்!!” என்று கூவியவாறே, காற்றில் சுழற்றி வீசினாள். வாள் சுழன்று வந்த அழகு, வானவில் வளைந்து வருவது போலிருந்தது. அதை ஒரே கையில் லாவகமாய்ப் பற்றினான் சித்தேஸ்வரன். அத்தனை நேரம் அவன் முகத்தில் இருந்த பதற்றம் மறைந்து, அங்கே வீரத்தின் தெளிவு பிறந்தது.

“மாறவர்மா, இப்போது நீ பேசிய பேச்சுக்களைச் செயலாக்கிக் காட்டு, பார்க்கலாம்!” என்று முழங்கினான்.

வாட்கள் மோதின. மோதிய ஒலி, கோயில் மணிகள் ஒன்று திரண்டு முழங்குவது போல ஒலித்தது. குதிரை மேலிருந்து தாக்கியவனுக்கு உயரத்தின் பலமிருந்தது; தரையில் நின்றவனுக்கு நிலத்தின் நிதானமிருந்தது. மாறவர்மனின் ஒவ்வொரு வீச்சும் மின்னலாய் இறங்க, சித்தேஸ்வரனின் ஒவ்வொரு தடுப்பும் மலையாய் நின்றது. கோட்டை மதிலுக்குள்ளிருந்து ஓடிவந்தவர்கள் வாசலை வளைத்துக் கொண்டனர். தளபதி கைநீட்டித் தடுக்கப் போனபோது, தேன்மொழி, “வேண்டாம் தளபதி, இது அவர்களிருவரின் ஆடல்; முடிவும் அவர்களுக்கே” என்று தடுத்தாள்.

காதலன் கயவனுடன் சண்டையிட, கால்களும் கைகளும் பதறியவளாய்த் துடித்து, கடவுளரையும் காவலுக்கு அழைக்கும் கையாலாகக் கன்னியல்ல அவள். காவலனான தந்தைக்குப் பல போர்களில் கரபலம் தந்தவள். தளிர்க் கரங்களெனினும், தன்னிச்சையாய் வாள்வீசும் தெம்புள்ள திமிர்க் கரங்கள். மறவரினத்தில் பிறந்தவளுக்கு, மனப்பயம் என்றுமிருந்ததில்லை. அதிலும், சித்தேஸ்வரனின் வாள்வீச்சை ஒருமுறை பார்த்து ரசித்தவளாயிற்றே. இன்னும் சொல்லப்போனால், இந்த வாட்சண்டை தொடரவேண்டுமென்பதே அவளின் அவா. இன்னும் பலர் மாறவர்மனுடன் சேர்ந்து சித்தேஸ்வரனைத் தாக்கவேண்டும், அவனின் வேகம் அதனால் அதிகமாவதைத் தான்ரசித்து ருசிக்க வேண்டுமென நினைப்பவள் அந்த வீரமங்கை.

 

“காதலாய் வரித்திடும்

காளையின் வீரத்தைக்

காலையில் விழுங்குவதும்,

காமத்தின் வீழ்ச்சியை

காண்பதற்காகவே மாலையையழைத்திடும்

காரிகையாகவும் அவளானாள்!!”

 

பலவிதங்களில் தன் கந்தர்வக் கணவனின் கனல்வீசும் கருவாளைக் கண்களால் விழுங்கிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில், மாறவர்மனின் வாள் வீச்சு சித்தேஸ்வரனின் தோளைப் பதம் பார்க்க, குருதி கசிந்தது. போர்முனைகளில் தந்தையின் குருதி, தமையனின் குருதி, தளபதியின் குருதி, ஏன் தன் குருதியையே பலமுறை பார்த்த அவளுக்குத் தன் காதலனின் குருதி பார்ப்பது தாங்கவொணாச் செயலாயிற்று. “ஐயோ!” என்றலறியபடி, தன்னையறியாமல் முன்னே பாய்ந்தாள் தேன்மொழி. அந்த நொடியில், அவள் காலில் மின்னிய சிலம்பின் ஒரு கண்ணி அறுந்து, சலங்கை ஒலியோடு அவன் காலடியில் வந்து விழுந்தது. குனிந்து எடுத்தான் சித்தேஸ்வரன். அதே முத்துப் பரள்களைக் கண்ட சித்தார்த்தின் நெஞ்சு படபடத்தது. இதே சிலம்புதான்! அதன் வளைவு, அதன் வேலைப்பாடு, உள்ளிருக்கும் அந்தச் சின்னப் பள்ளம்,எல்லாமே அன்று அவன் கையிலிருந்தவையே.

அந்தத் திகைப்பின் ஒரு நொடியைப் பயன்படுத்தி, மாறவர்மனின் வாள் சித்தேஸ்வரனின் நெஞ்சை நோக்கி இறங்கியது. ஆனால் அவன் சிலம்பைக் கையில் பற்றியிருந்த கரத்தாலேயே அந்த வாளின் பக்கவாட்டைத் தட்டி விலக்கி, அதே சுழற்சியில் தன் வாளால் மாறவர்மனின் வாளை வானில் பறக்கச் செய்தான். குதிரை மிரண்டு பின்னங்கால்களில் எழ, அவன் கீழே சாய்ந்தான். சித்தேஸ்வரனின் வாள் நுனி, அவன் கழுத்தருகே நின்றது.

“கொன்றிடத் துடித்தாலும், இன்றிலை… உனை இன்று கொன்றிட மாட்டேன்,” என்றான் சித்தேஸ்வரன் நிதானமாக. “கொன்றுவிட்டால், உன்னுடல் அழிந்துபடும் .. ஆனால், உன் ஆணவத்தின் வேர் உன் மனதில் இருக்கிறது, உன் உடலில் இல்லை.” என்றவாறே, அவன் முகத்தை மறைத்திருந்த துணியைத் தன் வாள் நுனியால் மெல்ல விலக்கினான்.

துணி விலகியது. வாசலில் கூடியிருந்தவர்கள் வாய்மூடிப் பார்த்தனர். தேன்மொழி திகைத்தாள். ஆனால், யாரையும்விட அதிகமாய் அதிர்ந்தவன் சித்தேஸ்வரனே. தரையில் கிடந்த அந்த முகம், மாறவர்மனுடையதன்று….

———————————————————————————————————————

“ஐயோ… அம்மா..” என்று அலறி அடித்துக் கொண்டு எழுந்தான் சித்தார்த். காரணம் அவன் கனவில், அவன் வாள் வைத்த கழுத்துக்குச் சொந்தக்காரன், இன்று மாலை, “இந்த ஜென்மத்து ரிப்போர்ட் நார்மல்தான் வரும்” என்று புன்னகைத்த டாக்டர் ரகுநாதனின் முகம்!

கணவனின் அலறலைக் கேட்டுக் கண் விழித்த அமுதா, அவசர அவசரமாய் அவனிருந்த சோஃபா நோக்கி ஓடி வருகையில் விடியற்காலை ஐந்து மணி. லேப்டாப் திரை தானாய் அணைந்திருந்தது. நாவல் தரையில் கிடந்தது. “டி… டி… டாக்டர்… டாக்டர்தான்டி அது…” என்று நடுங்கும் குரலில் பிதற்றினான். “எந்த டாக்டர்? என்ன சொல்றேள்?” என்றாள் அமுதா, புரியாமல். “அவரோட முகம்டி… அந்த மாறவர்மன் முகம்… டாக்டர் ரகுநாதனோடது!”

அமுதாவிற்கு எதுவும் புரியவில்லை. அது சரி, அவன் கனவு அவளுக்கு எப்படித் தெரியும் அவன் விளக்காவிடில்? அதனால் அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. மெல்ல எழுந்து, பூஜையறைப் பக்கம் சென்று, அலமாரியின் மேல் தட்டிலிருந்து ஒரு சிறிய துணிப்பையை எடுத்து வந்தாள். “இத நான் பயந்துண்டுதான் மறைச்சு வெச்சேன்… ஆனா இனிமே மறைக்கறதுல அர்த்தமில்ல” என்று சொல்லிக்கொண்டே, பையைத் திறந்தாள். உள்ளே, அவளின் ஆன்க்ளெட்டின் ஒரு கண்ணி மட்டும் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது கனவில் கண்ட அதே வடிவத்தில்.

(தொடரும்)

 

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad