வாக்களிப்பது முக்கியமா?
அதற்கான தெளிவான பதில், ‘ஆம்!’ என்பதே.
வாக்களித்தல் என்பது குடிமக்களின் அரசியல் பங்கேற்பில் முக்கியமான ஓர் அங்கம். ஜனநாயகச் செயல்பாட்டின் இன்றியமையாத கூறும்கூட. மறைந்த அமெரிக்கக் குடியுரிமை இயக்கத் தலைவரும், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினருமான ஜான் லூயிஸ் கூறியதுபோல:
“வாக்கு விலைமதிப்பற்றது. அது ஏறத்தாழப் புனிதமானது. ஜனநாயகத்தில் நம்மிடம் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த அகிம்சைக் கருவி அதுவே.”
வாக்களிப்பது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அதற்கான காரணங்கள் இதோ:
ஜனநாயகத்தில், உங்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்து உங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உங்களுக்கு உண்டு.
உங்கள் வாக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்கிறது. உங்களையும், உங்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளையும் அவர்கள் கவனத்தில் கொள்ளச் செய்கிறது. சட்டமியற்றுபவர்கள் மீதான உங்கள் மதிப்பீட்டை வெளிப்படுத்தும் கருவியாகவும் உங்கள் வாக்கு அமைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் செயல்பாடுகள் உங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை என்றால், அடுத்த தேர்தலில் அவரைத் தோற்கடிப்பதற்கும் உங்கள் வாக்கைப் பயன்படுத்தலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வகுக்கும் கொள்கைகள் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கின்றன.
கூட்டாட்சித் தேர்தல்களில் பொதுவாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பங்கேற்றாலும், மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிப்பதும் அதே அளவுக்கு முக்கியமானது. ஏனெனில், உங்கள் ஊர், நகரம், மாநிலம் ஆகிய இடங்களில் எடுக்கப்படும் முடிவுகள் உங்கள் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் முடிவுகளும் சட்டங்களும் வரி விதிப்பு, சுகாதாரம், பொதுப் பாதுகாப்பு, கல்வி, பொழுதுபோக்கு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாநில அரசுகள் சுகாதாரப் பாதுகாப்பு, வாடகைதாரர்களின் உரிமைகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. குழந்தைகள் எத்தனை ஆண்டுகள் பள்ளியில் கல்வி பயில வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. உள்கட்டமைப்பு வசதிகளை நிர்வகிப்பதோடு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன.
நீங்கள் வரி செலுத்துகிறீர்கள்.
உங்கள் வரிப்பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் உள்ளது. அந்தப் பணத்தைச் செலவிடுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உங்கள் வாக்கு வழங்குகிறது. எனவே, உங்கள் வரிப்பணம் பொறுப்புடனும் திறமையாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் வாக்களிப்பதன் மூலம் நீங்களும் பங்கெடுக்கலாம்.
உரிமைகள் தானாகவே நிலைத்திருக்கும் என்பதில்லை.
ஜனநாயகச் சமூகத்தில் வாழ்வதால் கிடைக்கும் முக்கியமான உரிமைகளில் ஒன்று வாக்களிக்கும் உரிமை. இன்று ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை சட்டபூர்வமாக இருந்தாலும், அந்த உரிமையைப் பயன்படுத்துவதில் பல்வேறு சவால்கள் நீடிக்கின்றன. தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வது, வாக்களிப்பதற்கான கட்டுப்பாடுகள், தவறான தகவல்கள் பரப்பப்படுவது, தேர்தல் தொடர்பான அச்சுறுத்தல்கள் போன்றவை வாக்குரிமையின் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடியவை.
எனவே, வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பது அவசியம். அதற்கான முதல் படி, கூட்டாட்சி, மாநிலம், உள்ளாட்சி என அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் நடைபெறும் தேர்தல்களில் நமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதே.
நீங்களும் முக்கியமானவர்தான்!
குறிப்பாக, இளம் வாக்காளர்கள் தங்கள் தலைமுறையைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து வெவ்வேறு கண்ணோட்டங்களையும் கருத்துகளையும் கொண்டிருக்கிறார்கள். இளம் வயதிலேயே தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, வாக்களிப்பதை வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பழக்கமாக மாற்ற உதவும். அதைவிட முக்கியமாக, தங்களது எதிர்காலத்தை வடிவமைக்கும் முடிவுகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்கும்.
— யோகி
Tags: Civic Duty, Election, vote







