ஜெயிலர் 2
முத்துவேல் பாண்டியன் ரிடர்ன்ஸ்!
எழுபத்தைந்து வயது. பொதுவாக இந்த வயதில் மனிதர்கள் “பிரஷர் மாத்திரை போட்டாச்சா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இங்கே ஒரு மனிதர், “அடுத்த ஃபைட் சீன் எப்போ?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு” என்றார் வள்ளுவர். மலரின் தண்டு நீரின் ஆழத்தளவு நீளும், மனிதனின் உயர்வு அவன் உள்ளத்தின் அளவு. ரஜினிக்கு வயது எழுபத்தைந்தாக இருக்கலாம், உள்ளத்தின் வயது இன்னும் இருபத்தைந்தைத் தாண்டவில்லை என்பதே இந்தப் படத்தின் முதற்செய்தி.
இது ஒரு வழக்கமான ரஜினி படம், முழுமையான பொழுதுபோக்கு. ஆழமான கருத்துகளையோ, உலக சினிமாவின் நுணுக்கங்களையோ தேடிச் செல்பவர்கள் தவறான திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டார்கள் என்றே பொருள். ரஜினி ரசிகர்கள் ஏமாற மாட்டார்கள் என்பது உறுதி.
———————————————————————————————————————
இந்த வயதிலும் ரஜினியின் நடை, பார்வை, வசன உச்சரிப்பு, அந்தக் கண்ணாடி திருப்பும் ஸ்டைல் என எல்லாமே அவர் பெயருக்குரிய தரத்தில் இருக்கின்றன. இன்றைய சினிமாவில் கிராஃபிக்ஸ், ஏ.ஐ. எனத் தொழில்நுட்பம் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்ட நிலையில் மனிதனை இளமையாக்கவும், இல்லாத இடத்தில் கொண்டுவரவும், இறந்தவர்களையே எழுப்பவும் முடிகிறது. ஆனால் இத்தனை தொழில்நுட்பத்தின் நடுவிலும், திரையில் ரஜினி நடந்து வரும்போது எழும் அந்த விசில் சத்தத்தை எந்த ஏ.ஐ.யாலும் மிஞ்சமுடியவில்லை. இது கடந்த மூன்று தலைமுறைகளின் மன ஓட்டம். அவர் வாங்கி வந்த வரம்.
அனிருத்தைப் பற்றி இந்தப் படத்துக்கு முன்பே ஏகப்பட்ட பேச்சு இருந்தது. ஆனால் படத்தில் இசை சராசரியாகவே இருந்தது என்பதே நம் கருத்து. பார்ட் 1 பாடல்களையே இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பார்ட் 2 பாடல்கள் என்னவென்று கேட்டால், நிறைய நேரம் யோசிக்க வேண்டியிருக்கிறது. நம்மனது பூர்ணாவின் டேன்ஸில் ஒன்றிவிட்ட அளவு அனியின் இசையில் லயிக்கவில்லை என்பதுதான் உண்மை.
படத்தின் முதல் பாகத்தின் மிகப் பெரிய பலம் மூர்த்தி அண்ணா. திரையரங்கே குலுங்கிச் சிரிக்கிறது. சண்டையும் சத்தமும் நிறைந்த ஒரு படத்தில், சிரிப்பை அறுவடை செய்வது எளிதான வேலை அல்ல. அதைச் செய்து காட்டிய அவருக்கு என் பாராட்டுகள். பத்து வருட பி-1 வீஸாவை வைத்துக் கொண்டு, அமெரிக்காப் பயணிக்காமல் படத்தில் நடித்திருப்பதற்கான திருப்புமுனை அவருக்குக் கிடைத்துவிட்ட என்றுதான் கூற வேண்டும்.
நெல்சனுக்கு நன்றாகக் ‘காய்க்கும் மரத்திலிருந்து’ இலகுவாய்ப் பழம் பறிக்கும் வித்தை நன்றாகவே புரிந்திருக்கிறது: ஒரு சூழ்நிலையை எப்படிப் பணமாக்குவது என்பது. காட்சியின் தேவையை அளந்து, ரசிகனின் நாடியைப் பிடித்து, அங்கே சரியாக ஒரு திருப்பம் வைக்கும் கலை அவருக்குக் கைவந்திருக்கிறது. ஆனால் பேட்டிகளில் மனிதர் சற்று அதிகமாகவே பேசுகிறார் என்று தோன்றுகிறது. வளர்ச்சியும் வீழ்ச்சியும் சொல்லால் வரும் என்பதால், பேச்சில் கவனம் வேண்டும். படம் பேசட்டும், பேட்டிகள் கொஞ்சம் குறையட்டும்.
———————————————————————————————————————
நம் ஊரில் எந்தக் கதையும் புள்ளி விவரம் இல்லாமல் நிறைவு பெறாது.
- படம் இதுவரை 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸுக்கு இது பெருங்கொள்ளை லாபம்.
- முதல் பாகம் சுமார் 600 கோடி என்று பரவலாகப் பேசப்பட்டது. அதனோடு ஒப்பிட்டால், இரண்டாம் பாகம் ஏறக்குறைய 15 முதல் 20 சதவீதம் கூடுதல். எழுபத்தைந்து வயதில் இது சாதாரணச் சாதனை அல்ல.
- சராசரி டிக்கெட் விலை 250 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், 700 கோடி என்பது சுமார் 2.8 கோடி டிக்கெட்டுகளுக்குச் சமம். இது ஒரு சிறிய நாட்டின் மக்கள்தொகை. (வரிகளையும் வெளிநாட்டு வசூலையும் சேர்த்துப் பார்த்தால் கணக்கு மாறும் என்றாலும் இந்தப் பர்ஸ்பெக்டிவ் சுவாரசியமாக இருக்கிறதல்லவா!)
- மூன்று ஆண்டுகளுக்குள் வயது 72 இலிருந்து 75 ஆகி, வசூல் மட்டும் ஏறுமுகம். வயது கூடக் கூட மதிப்பு கூடுவது இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே: பழைய ஒயினுக்கும், ரஜினிக்கும்.
மொத்தத்தில், கலாநிதி மாறன் கணக்கு முடிக்கும் நாளில் சிரித்த முகத்துடன் இருப்பார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அந்த சந்தோஷத்துடன் தன் மகளையும் அனிருத்திற்குத் தரச் சம்மதித்துவிட்டார் போலும்.
——————————————————————————————————————
வித்யா பாலன்: கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறார். ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். ஜெயிலர் 3-இல் அவருக்கு இன்னும் விரிவான வேடம் கிடைக்கும் என்று நம்புவோம்.
எஸ்.ஜே. சூர்யா: பொதுவாகவே அவரின் நடிப்புச் சற்று எரிச்சலூட்டும் தரம். ஆனால் இந்தப் படத்தில் அந்த எரிச்சலே அவரது பாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. வில்லனைப் பார்த்து “இவனை எப்போ அடிப்பாங்க?” என்று பார்வையாளன் துடிக்க வேண்டும் என்பதுதானே வில்லன் நடிப்பின் வெற்றி! அந்த வகையில் சூர்யா சிறப்பாகவே செய்திருக்கிறார்.
மிதுன் சக்கரவர்த்தி: அவரைத் திரையில் பார்ப்பதே கடினமாக இருந்தது. படத்தில் தேவையற்ற வில்லத்தனம் இடம் பெற்றிருந்தாலும், அதை நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அவரிட்ட ஒரே கண்டிஷன் “ரஜினி கையால அடி வாங்கமாட்டேன், சுடப்பட்டு சாகமாட்டேன்” என்பதாம். இரண்டும் நடக்கவில்லை.
ரம்யா கிருஷ்ணன்: முதல் பாகத்தின் அனுபவத்தால் முன்கூட்டியே எதிர்பார்ப்பைக் குறைத்து வைத்திருந்தோம். அதனால் ஏமாற்றம் இல்லை. படையப்பா நீலாம்பரியை மனதில் வைத்துப் போனால் மட்டுமே சிக்கல்.
மருமகள்: தோற்றத்தில் நன்றாகவே இருக்கிறார். ஆனால் அவர் மாமனார் ரஜினிக்கு எதிராகத் திரும்புவது, கணவன் வில்லனின் ஆள் என்று தெரிந்தபின்னர் மாமனாரைக் கும்பிடுவது போன்ற காட்சிகள் சற்று அயர்வை ஏற்படுத்துகின்றன. மற்ற படங்களுக்கு இவை இம்பாக்ட் உள்ளதாக இருக்குமென்றாலும், ரஜியின் படங்களுக்கு, அதிலும் இந்தப் படத்திற்கு அந்தத் திருப்பம் சற்றுத் திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.
ஹ்ருத்திக் ரோஷன்: ரஜினியின் மேல் கொண்ட மரியாதை நிமித்தமாக, இலவசமாகவே நடித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கேமியோ ரோலில் எதிர்பார்த்த அளவு பஞ்ச் இல்லை.
ஷிவ்ராஜ்குமார்: முதல் பாகத்தில் அவர் வந்த காட்சியின் கம்பீரம் இந்த முறை இல்லை. அதே மாஸ் எதிர்பார்த்தவர்களுக்குச் சிறிது ஏமாற்றம்.
மோகன்லால்: அதே ஹேண்ட்ஸம் பர்ஸனாலிட்டி.. ஆனால் செய்வதற்குப் பெரிய வேலை இல்லை. அலங்காரம் இருக்கிறது, அரங்கேற்றம் இல்லை.
———————————————————————————————————————
சராசரி இசை, வீணான கேமியோக்கள், திணிக்கப்பட்ட திருப்பம் என்று ஒரு சில குறைகளைச் சொன்னாலும், ரஜினி என்ற டைனோஸர் அத்தனை குறைகளையும் விழுங்கிச் சாப்பிட்டு, பிரம்மாண்டமான வெற்றியை வழங்குகிறது என்பதுதான் உண்மை. ரஜினி ரசிகர்களுக்கு இன்னுமொரு மெகா ஹிட் படம், மற்றவர்களுக்குப் பெரிதாகக் குறை சொல்லமுடியாத எண்டர்ட்டெய்னர்.
வெ. மதுசூதனன்.







