நிலைக்குமா ஜனநாயகம்?
“வாக்குரிமை பறிக்கப்பட்ட நாட்டில் தேர்தல் ஒரு நாடகம்” — “இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு” எனக் கருதப்படும் இந்தியாவின் ஏதோவொரு மூலையிலிருந்து எழுந்த இக்குரல், அண்மைக்காலமாக, நாடெங்கும் வலுவாக எதிரொலித்து வருகிறது.
ஒரு ஜனநாயகத்துக்கு அடித்தளமாக விளங்குவது மக்களின் வாக்குரிமை. அந்த உரிமையின் வழியாகவே மக்கள் தங்களது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தி, ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இத்தகைய ஜனநாயக நடைமுறையின் நம்பகத்தன்மை, தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய, துல்லியமான வாக்காளர் பட்டியலைச் சார்ந்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் ஜூன் 2025இல் மேற்கொள்ளத் தொடங்கிய சிறப்பு தீவிரத் திருத்த (Special Intensive Revision – SIR) நடவடிக்கைகள் மேற்சொன்ன தனிநபர் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கிறதா என்பதிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றியதா என்பதிலும் ஐயப்பாடுகள் எழத் தொடங்கியுள்ளன.
இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்கமாக, சுருக்கத் திருத்தத்தினை (SSR) அவ்வப்போது மேற்கொள்வதுண்டு. இதன்படி ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குதல், விவரங்களைத் திருத்துதல் போன்ற வழக்கமான புதுப்பிப்புகளை மேற்கொள்வதாகும். ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) என்பது வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைக் கணக்கெடுத்து, ஏற்கெனவே பட்டியலில் உள்ளவர்களின் பதிவுகளையும் மீண்டும் சரிபார்த்து, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி வாக்காளர் பட்டியலைப் புதிதாகத் தயாரிக்கும் விரிவான செயல்முறையாகும்.
2025-இல் நடைமுறைப்படுத்தப்பட்ட SIR செயல்முறையில், வாக்காளர்கள் தங்களது பெயரையோ அல்லது பெற்றோரின் பெயரையோ முந்தைய தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு இணைத்துக் காட்ட இயலாதவர்களிடம், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கோரப்பட்டது. இதனால், பழைய ஆவணங்கள் இல்லாதவர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகள் உள்ளிட்ட பல பிரிவினரின் வாக்குரிமை பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இல்லாதிருக்கலாம் என்பதால், அவர்களின் தகுதியை நிரூபிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உருவாகின.
மாநிலங்கள் வாரியாக பல்வேறு கட்டங்களில், இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரையில் நடைபெற்ற SIR நடவடிக்கையால் சுமார் 13.37 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வரைவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பிரச்சினை என்னவென்றால், நாடு முழுவதற்குமான ஒருங்கிணைந்த கணக்கில் எத்தனை பேர் மீண்டும் சேர்க்கப்பட்டனர், எத்தனை பேர் இறுதியாக நீக்கப்பட்டனர், எத்தனை பேர் மேல்முறையீடு செய்தனர் என்பதற்கான முழுமையான தெளிவான கணக்கு பொதுவெளியில் கிடைக்கவில்லை. இப்பட்டியலில் இறந்தவர்கள் அடிப்படையில் 2.8 கோடி பேர் நீக்கப்பட்டனர்; நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் 6 கோடிக்கும் அதிகமானோரும், கொடுக்கப்பட்ட முகவரியில் இல்லை என்ற காரணத்தினால் 3 கோடிக்கு அதிகமானோரும் நீக்கப்பட்டனர். முகவரி மாற்றத்தினால் நீக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் மாற்று முகவரியில் சேர்க்கப்பட்டனர் என்பதிலும் தெளிவில்லை.
வரைவு பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் அனைவரும் இறுதிப் பட்டியலிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டார்கள் என்று பொருளல்ல. சிலர் ஆட்சேபணை, மேல்முறையீடு அல்லது மறுபரிசீலனை மூலம் மீண்டும் சேர்க்கப்படலாம். ஆனால் அதற்கான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அதாவது, 13.37 கோடி என்பது நீக்கப்பட்ட பெயர்களின் மொத்த எண்ணிக்கை; அதில் எத்தனை பேர் உண்மையில் தகுதியற்றவர்கள், எத்தனை பேர் தவறுதலாக நீக்கப்பட்டவர்கள், எத்தனை பேர் மீண்டும் சேர்க்கப்பட்டார்கள் என்பதைத் தனித்தனியாக அறிய முடியவில்லை.
தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மையில்லாத இவ்வகையான நடவடிக்கைகள் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் இது குறித்து ஆட்சேபணை, கண்டனங்களை எழுப்பியிருந்தாலும் இன்று பொதுமக்களிடையே வலுப்பெற்று வரும் போராட்டங்கள் பூதாகாரமாக வளர்ந்துள்ளது. முக்கியமாக, 2026 செப்டம்பர் 23 அன்று வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸின் SIR தொடர்பான புலனாய்வு கட்டுரை இந்தப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது எனலாம். வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்குவதிலும், சேர்ப்பதிலும் சட்டப்பூர்வமான ஆதாரங்கள் பரிசீலிக்கப்படுகிறதா, தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மென்பொருள் தரமானதா, பாதுகாப்பானதா என்ற ரீதியில் தேர்தல் ஆணையர்கள் இருவர் தலைமை தேர்தல் ஆணையரிடம் கேள்வியெழுப்பியதை இக்கட்டுரை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது. பத்து மாதங்களில் இவர்கள் இருவரும் 14 முறை, எழுத்துப் பூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர் என்றும், தலைமை தேர்தல் ஆணையரான திரு. ஞானேஷ் குமார் ‘ஒரும̀னதாக’ தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று சொன்னதில் உள்ள முரண்பாடுகளைக் கட்டுரையாளர் சுட்டிக் காட்டியிருந்தார். அதாவது இரண்டு ஆணையர்களின் குறிப்புகளில் எழுப்பப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தேர்தல் ஆணையம் நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிட்டது.
ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில், இந்திய சமூகத்தில் நிகழும் முறைகேடுகளை எதிர்த்துப் போராடி வந்த ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ அல்லது ‘கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி’ என்ற அமைப்பும் SIR குறித்து கேள்வியெழுப்பி வந்தனர்.
காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) குறித்த சுருக்கமான பின்னணி.
(2026 மே மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணையின்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையற்ற சில இளைஞர்களைக் குறிப்பிடும்போது “கரப்பான் பூச்சிகள்” என்ற ஒப்பீட்டைப் பயன்படுத்தியதாகச் செய்திகள் வெளியாகி சர்ச்சை உண்டானது, அதன் எதிர்வினையாக திரு. அபிஜித் தீப்கே என்ற இளைஞர், சமூக ஊடகம் வழியே “கரப்பான் பூச்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் என்ன?” என்ற பொருளில் பதிவை வெளியிட, அதனை ஏற்று ஒன்றிணைந்த அமைப்புதான் ‘கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி’.
பின்னர் 2026 ஜூன் மாதத்தில், தேர்வுத் தாள் கசிவுகள் மற்றும் கல்வித்துறை முறைகேடுகள் தொடர்பாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி CJP நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்தது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை போன்ற பிரச்சினைகளையும் தனது போராட்டங்களின் மையக் கோரிக்கைகளாக முன்வைத்தது. இந்த அமைப்பினர் தொடங்கிய ‘ஸ்கூல் டீக் கரோ’ (‘பள்ளிகளை சீரமையுங்கள்’) என்ற கோஷம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது).
இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, CJPயின் SIR குறித்தப் போராட்டங்கள் வலுவடைந்தது. ஏற்கனவே நீட் போராட்டங்களில் சற்றும் வளைந்து கொடுக்காமல், கல்வி அமைச்சர் பதவி விலகலுக்கு காரணமாக அமைந்த CJPயின் கூர்மையான போராட்ட உத்திகள் மற்றும் முறைமைகளை கவனித்து வந்த ஒன்றிய அரசு, இவர்களின் போராட்டங்களை முளையிலேயே கிள்ளியெறிய மிகவும் மெனக்கெட்டது. ஆனால் ஒன்றிய அரசின் மிரட்டல்கள், ஒடுக்குமுறைகளுக்கு துளியும் அஞ்சாமல் CJP அமைப்பு தீவிரமாக போராடி வருகிறது. எதிர்க்கட்சிகள் பலவும் ஏற்கனவே SIR விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையில்லை என்றும் அதன் ஒழுங்கீனங்கள் குறித்தும் எதிர்ப்புத் தெரிவித்த போதும் அவை பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் CJP எனும் இளைஞர் படை, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எடுத்துள்ள அதிதீவிர போராட்டங்கள் பொதுமக்களின் கவனத்தையும், ஆதரவையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழும் SIR தொடர்பான பல்வேறு தரவுகளை மாநில வாரியாகவும், தொகுதி வாரியாகவும் ஆய்வு செய்து வெளியிட்டது. குறிப்பாக, பீகார், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நீக்கத்திற்குக் குறிப்பிடப்பட்ட காரணங்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் நிலை போன்றவற்றைத் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்திருந்தது. சில தொகுதிகளில் மிக அதிகமான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதையும், ஒரே மாநிலத்திற்குள்ளேயே தொகுதிக்கு தொகுதி நீக்கத்திற்கான காரணங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுவதையும் இவ்வாய்வுகள் வெளிப்படுத்தின. இதனால், வாக்காளர் பட்டியல் திருத்தம் உண்மையிலேயே நிர்வாகத் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதா, அல்லது அதன் நடைமுறையில் அரசியல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, மாநிலக் கட்சிகளின் வலுவான ஆதரவுத் தளங்களாகக் கருதப்படும் தொகுதிகளில் பெருமளவில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது, தேர்தல் முடிவுகளில் இத்தகைய நீக்கங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த விவாதத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும், நீக்கப்பட்ட வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதையோ, இந்த நீக்கங்களே தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்தன என்பதையோ தரவுகள் மட்டும் உறுதிப்படுத்திவிட முடியாது.
இளைஞர்களால் பெரிதாக ஒன்றும் சாதித்து விட முடியாது, அவர்கள் கல்லெறிந்தால் கூட்டிலிருந்து சிதறியோடும் தேனீக்கள் போல கலைந்துவிடுவார்கள் என்று எண்ணியிருந்த தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசின் நம்பிக்கைகள் இன்று ஆட்டம் கண்டுள்ளன. வெவ்வேறு காரணங்களால் முரண்பட்டு, ஒற்றுமையின்றி சிதறுண்டு கிடந்த எதிர்க்கட்சிகள் பலவும் சிஜேபியின் ஒற்றுமையை கண்டு வெட்கப்பட்டு நிற்கின்றன. இந்நிலையில் சிஜேபி அமைப்பினரை துண்டாட ஆளும் கட்சியும், சொந்தம் கொண்டாட எதிர்க்கட்சிகள் சிலவும் கடுமையாக முயன்று வருகின்றன. ஒன்றிய ஆளும் கட்சி சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் சிஜேபியின் போராட்டங்களை ஒடுக்க முயன்று வருகிறது.
ஒரு நாட்டின் ஜனநாயக வலிமையை அதன் தேர்தல்கள் எத்தனை முறை நடத்தப்படுகின்றன என்பதைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அந்தத் தேர்தல்களில் ஒவ்வொரு தகுதியுள்ள குடிமகனுக்கும் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளதா, அந்த உரிமையைப் பாதுகாக்கும் அமைப்புகள் எவ்வித அரசியல் தலையீடுமின்றி செயல்படுகின்றனவா என்பதில்தான் அதன் உண்மையான வலிமை அடங்கியிருக்கிறது. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருக்கலாம். ஆனால் அந்தப் பணியின் பெயரால் தகுதியுள்ள ஒருவரின் வாக்குரிமைகூட தவறுதலாகப் பறிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே அதைவிட முக்கியமான ஜனநாயகக் கடமை.
இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதும், இரட்டைப் பதிவுகளைத் தடுப்பதும், தகுதியற்ற பதிவுகளைச் சரிசெய்வதும் அவசியமான பணிகள்தான். அதேவேளையில், உண்மையான வாக்காளர்கள் தங்கள் இருப்பையும் தகுதியையும் மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கத்திற்கே முரணானது. குறிப்பாக, ஆவண வசதியற்ற ஏழைகள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது.
இந்த விவகாரத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையான விளக்கங்களையும், நம்பகமான தரவுகளையும், உரிய விசாரணைகளையும் வழங்க வேண்டும். தவறாக நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பதற்கான நடைமுறைகள் எளிமையாகவும் காலவரையறைக்குள்ளும் இருக்க வேண்டும். அதேபோல், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், குடிமைச் சமூக அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் இளைஞர்களின் குரல்களும் ஜனநாயகத்தின் ஓர் அங்கமாகவே மதிக்கப்பட வேண்டும். இந்த இயக்கங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதும், ஆதரிப்பதும் ஜனநாயகத்தினை வலுவிழக்கச் செய்துவிடும். தனிப்பட்ட இயக்கங்கள், அரசியல் அமைப்புகள் மட்டுமின்றி நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் சிலவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் முன்னெடுப்புகளைத் துவங்கியுள்ளது சற்று நம்பிக்கையளிக்கிறது.
இறுதியில், SIR என்பது வெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சர்ச்சை மட்டுமல்ல. இந்திய ஜனநாயக அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை, சுதந்திரம், பொறுப்புணர்வு ஆகியவை எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன என்பதற்கான ஒரு முக்கியமான சோதனையாகவும் மாறியுள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைவிட, அந்தத் தேர்தலில் ஒவ்வொரு தகுதியுள்ள குடிமகனின் குரலும் கேட்கப்படுகிறதா என்பதே ஜனநாயகத்தின் உண்மையான அளவுகோல். ஒரு குடிமகனின் வாக்குரிமை அரசாங்கம் அளிக்கும் சலுகை அல்ல; அரசியலமைப்பு உறுதி செய்யும் உரிமை. இவ்வுரிமை பாதுகாப்புடன் நிலைத்திருப்பதே உண்மையான ஜனநாயகம். இதை இந்திய தேர்தல் ஆணையமும், அரசும் நிலைக்கச் செய்யுமா?
- ரவிக்குமார்.







