திருவருகை காலத்தின் முதல் ஞாயிறு
திருவருகை காலத்தின் முதல் ஞாயிறு
“விழிப்புடனே காத்திரு”
இறை இயேசுவிலே எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! அன்பு நிறை இறை நம்பிக்கையாளர்களே! இன்று நாம் ஒரு புதிய திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்குகிறோம். இந்த ஆண்டின் முதல் ஞாயிறு, திருவருகைக் காலம் – விழிப்புணர்வின் காலம். இன்றைய முதல் வாரம், நாம் நம் ஆண்டவரின் வருகைக்காய் விழிப்புடனே காத்திருக்க அழைக்கிறது, நம்மைத் தயாரிக்க அழைக்கிறது. அதே வேளையில், அவருடைய இரண்டாம் வருகைக்கும் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கவும் அழைக்கிறது, திரும்பத் திரும்ப காத்திருக்க அழைக்கிறது.
அன்பான இறைசமூகமே! நாமெல்லோரும், பாவத்தால் தீட்டுப்பட்டு நம் நேர்மையான செயல்கள் கூட அழுக்கடைந்த ஆடைபோல மாறிப் போனதால், நாம் மனம் வருந்திடவும் அழைப்பினைத் தருகிறார் இறைவாக்கினர் எசாயா.
நெடுங்காலமாகப் பாவத்தில் விழுந்து, வாழ்ந்து, இறைவனைவிட்டு விலகிய நம்மை, மீண்டுமாக ஆண்டவர் அழைத்துக் கொள்ளுமாறு நமக்காக மன்றாடுகிறார். குயவன் கையில் இருக்கும் களிமண்போல, நம்மை ஆண்டவரிடத்திலே ஒப்படைக்க நமக்கு அழைப்பினை எசாயா கொடுக்கிறார்.
நம் திருமுழுக்கின் வழியாக, இயேசுவை ஏற்றுக்கொண்ட நாம், அவரது அருளிலும் மாட்சியிலும் பங்கு கொள்ள அவரால் அழைக்கப்பட்டுள்ளோம். இறைவன் நம் வாழ்வில் பொழிந்திருக்கும் அருட்கொடைகள் ஒவ்வொன்றும், அவருக்கு சான்று பகர்வதற்கான பொறுப்பையும், ஆற்றலையும் நமக்கு வழங்குகின்றன. கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கும் நாம், நம் சோதனைகளிலும் நம்பிக்கையில் தளராது இறுதிவரை உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டுமெனவும், அப்படி கிறிஸ்துவோடு இணைந்திருந்தால் நாமும் செல்வராகலாம் என தூய பவுல் கூறுகிறார்.
அன்புக்குரியவர்களே! திருவருகைக் காலம் இறைநம்பிக்கையை நம்மில் தூண்டி எழுப்பும் காலம். நம் கடவுள் நம் அருகில் வரவிருக்கிறார் – நாமும் அவரது அருகாமையை உணரும் காலம். கடவுள் மனிதனாகப் பிறக்கப்போகிறார் என உணர்த்தும் காலம். நம் கிறிஸ்தவ வாழ்வு எதையுமே எதிர்நோக்காது வாழும் வாழ்வல்ல. அது நிறைவாழ்வை எதிர்நோக்கிச் செல்லும் வாழ்வாகும். மேலும் இறைமாட்சியை எதிர்நோக்கிச் செல்லும் வாழ்வாகும். அதாவது கடவுளை நாம் தேடிச் செல்லும் காலம் மறைந்து, கடவுளே நம்மைத் தேடிவரும் காலம் திருவருகைக் காலமாகும்.
இன்றைய நற்செய்தியிலே, நம் ஆண்டவர் இயேசு கடவுள் நம்மைச் சந்திக்க வரும்பொழுது நாம் விழிப்பாய் இருக்க வேண்டுமென்கிறார். இதையே மீண்டும் மீண்டும் வாசிக்கிறோம். நம் இயேசு இதை முன்வைக்கக் காரணமுண்டு. “எந்த நாளில், பொழுதில் ஆண்டவர் வருவார் என்பது யாருக்கும் தெரியாது” (மத் 25/14). விழிப்பாயிருத்தல் தொடக்கத் திருஅவையில் ஆணித்தரமான போதனையாய் இருந்தது. “இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள். உறக்கத்திலிருந்து விழித்தெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது” (உரோ 13/11) என்றும், “விழிப்பாய் இருங்கள் – நம்பிக்கையில் நிலைத்திருங்கள் – துணிவுடன் நடந்து கொள்ளுங்கள் – வலிமையுடன் செயல்படுங்கள்” – (1 கொரி 16/13) என்றும் பவுலடியார் எச்சரிக்கிறார்.
பலவீனத்தினால் கெத்சமெனியில் உறங்கிய சீடர்களைப் பார்த்து ஆண்டவர் இயேசு கேட்ட கேள்வி “ஒருமணி நேரம் விழித்திருக்க உங்களுக்கு இயலவில்லையா” (மத் 26/38) என்பதாகும். இந்த பேதுரு தன் முதல் திருமுகம் 1/58-ல் “அறிவு தெளிவோடு விழிப்பாயிருங்கள்” எனக் கூறுகிறார். விழிப்போடு இருந்தால் மட்டும் போதாது. நாம் விழித்துக் காத்திருத்தல் அவசியம். எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து ஆண்டவரால் விடுவிக்கப்படுவதற்காகக் காத்திருந்த இஸ்ராயேல் மக்களைப் போல, நாமும் காத்திருக்க வேண்டும்.
ஆம் அன்பானவர்களே! விழிப்பாக இருப்பவர்கள்தான் இயேசு எந்த நேரத்தில், எந்த வடிவில் வந்தாலும் அவரைக் கண்டு கொள்ள முடியும். அவரின் குரலைக் கேட்க முடியும். எனவேதான் பவுலடிகள் (1 தெச 5/6-ல்) “விழிப்போடு அறிவு தெளிவோடும் இருந்து ஆண்டவரின் வருகைக்காய் நம்மை தயாரிக்கச் சொல்லுகிறார். இரண்டாவதாக விழிப்பாயிருப்போர் கவலைகளிலிருந்து விடுபடுவர். அதாவது நம்முடைய வாழ்வைச் சீரழிக்கும் கவலைகளிலிருந்து நாம் விழிப்பாக இருப்போமென்றால், நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
நம் கவலைகளால் நம் நிகழ்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிட்டு அல்லல்படுகிறோம். எனவே விழிப்பாயிருந்து நிகழ்காலத்தை வாழப் பழகுவோம். மூன்றாவதாக விழிப்பாயிருப்போர் பல வேறுவிதமான தீமைகளிலிருந்து தங்கள் வாழ்வைக் காத்துக் கொள்கிறார்கள். இவர்கள் “சோம்பலுக்கோ, பொறாமைக்கோ, புறணி, புரட்டு பேசுவதற்கோ இடம் கொடுக்க மாட்டார்கள். விழிப்பாயிருந்து உன் இதயத்தை காவல் செய்” என நீதிமொழி 4/23 சொல்லுகிறது. விழிப்பாக இருப்போர் எந்தத் தீமையிலும் நீண்டநாள் தொடர்வது இல்லை. உடனே அதிலிருந்து வெளிவர முயலுவார்கள். இத்தகைய தயாரிப்பினையே இறைவன் நம்மிடம் விரும்பி எதிர்பார்க்கிறார்.
இறுதியாக நம்பிக்கை நிறை இறைசமூகமே இன்றைய நற்செய்தி வீட்டுத்தலைவரை வரவேற்கப் பணியாளர் கவனமாயிருக்கச் சொல்லித்தருகிறது. விழிப்பாயிருந்து காத்திருக்கச் சொல்கிறது. எருசலேம் ஆலய அழிவு, துன்பங்கள், போலி இறைவாக்கினர்கள், மானிடமகனுடைய வருகை இவற்றை இன்று பார்த்தோம். பாலஸ்தீனப் பகுதிகளில் வீட்டை காவல் காக்கும் பணியாளர்கள் 2 முக்கியமான பணிகளைச் செய்வார்கள். 1. திருடர்கள் வீட்டை கன்னமிடாதபடி விழித்துக் காத்து இருப்பார்கள். 2. தலைவர் வருகையில் அவரை அடையாளம் கண்டு அவருக்கு மட்டும் வீட்டின் கதவை திறந்து விடுவார்கள்.
எனவே நாமும் ஆண்டவரது வருகைக்காக விழிப்புடன் காத்திருப்போம். நம் உள்ளத்தில் படிந்திருக்கும் அகந்தை, ஆணவம் என்ற மலைகளை தாழ்த்துவோம். வெறுப்பின் பள்ளத்தாக்குகளை அன்பினால் நிரப்புவோம். மன்னிப்பின் பாதைகளை திறந்துவிடுவோம். நம்முடைய வாழ்வு முழுவதுமே “மாரநாதா ஆண்டவரே வாரும்” என்ற தொடர்ச்சியான செபமாக மாறட்டும். ஆண்டவர் நம் இதயங்களில் நிரம்பிவந்து நம் குடும்பங்களை, குழுமங்களை அமைதி, அன்பு, நம்பிக்கை இவற்றால் மலரச் செய்ய மன்றாடுவோம்.
திருவருகைக் காலம் முழுவதும் கவனமாய் விழிப்புடனே காத்திருந்து நம்மை நாடித் தேடி வரும் கடவுளை, கவனச்சிதறல், சோம்பல், அசட்டைத்தனம் இவற்றைக் களைந்து அவரை வரவேற்போம். அப்படி இருந்தால் நம்மைத் தேடிவரும் இறைவன் எந்த வடிவில் வந்தாலும், அவரை எதிர்கொண்டு விழிப்புடன் அவரை அடையாளம் கண்டு வரவேற்று அவரில் மகிழ்வோம். உங்கள் அனைவருக்கும் எம் இனிய திருவருகைக்காலத்தின் நல் வாழ்த்துக்கள்.
“ஆண்டவரே வாரும் – மாரநாதா” ஆமென்!!
அருட்பணி. சூ. ஸ்டீபன் கஸ்பார்
பங்குப் பணியாளர் சின்னாளபட்டி பங்கு
திண்டுக்கல் மறைமாவட்டம்.







