\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும் (Thanks Giving)

blackfriday_poster_620x443

நவம்பர் மாதம் வந்து விட்டால், தேங்க்ஸ் கிவிங்கிற்கு (Thanksgiving) என்ன செய்யலாம் என்று அமெரிக்கர்கள் யோசிப்பார்களோ, இல்லையோ, என்ன வாங்கலாம் என்று அமெரிக்காவில் இந்தியர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பொருள் தேவையோ, இல்லையோ, டிஸ்கவுண்ட் என்ற சொல் மீது அலாதி ப்ரியம் நம்மவர்களுக்கு.

டிஸ்கவுண்ட் என்று வந்து விட்டால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்போம், டீல் இல்லையென்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்பது போல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அமெரிக்கத் தேங்க்ஸ் கிவிங் வரலாறு பதினாறாம் நூற்றாண்டில் தொடங்குகிறது. விவசாயப் பெருங்குடி மக்கள், விளைச்சல் காலத்திற்குப் பிறகு நன்றி தெரிவிக்கும் காலமாக இது ஆரம்பித்தது. பிறகு, மத ரீதியான நன்றி நவிலல் வழிபாடுகள் ஆரம்பித்தன. தற்சமயம், நவம்பர் மாதத்தின் நாலாம் வியாழன் அன்று அதிகாரபூர்வமாக விடுமுறை விடப்பட்டு, அமெரிக்கா எங்கும் தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

வருமானம் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம், அவர்களுக்கு இந்த நாளில் குறைந்த விலையில் பொருட்கள் விற்கிறார்கள் என்று நம்பப்படும் கன்ஸ்யூமர் ஐதீகம் இது. “அவ்வளவு நல்லவங்களாடா நீங்க?” என்று எந்தக் கேள்வி கேட்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி, அடிக்கிற கார்த்திகை மாசக் குளிரில், தெருத் தெருவாக, கடை கடையாக நம்ம ஜனங்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள். நாமதான் ஓ.பி.கொ.கு ரகமாச்சே!!!

இந்த நுகர்வோர் சடங்கு நம்மவர்களுக்கு ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்குகிறது என்றால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. மலிவாகத் தோன்றும் வகையில், ஒரு பொருளின் விற்பனை விலையை நிர்ணயித்துவிட்டு, அதற்கேற்றாற் போல் வடிவமைத்து, கண்டிப்பாக லாபம் இருக்கும் வகையில் ஆசியத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து, நவம்பர் நாலாம் வியாழன் கிழமை கடையில் பண்டல் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். நம்மவர்களும் பிற்பகலிலேயே கிளம்பி, இந்தப் பண்டலின் மீது கையை வைத்துக் கொண்டு, விஜிபி கோல்டன் பீச் சிப்பாய் போல் நிற்க ஆரம்பித்து விடுவார்கள். அந்தப் பண்டல் 6 மணிக்கோ, 8 மணிக்கோ அல்லது 10 மணிக்கோ திறக்கப்படும். அதுவரை, தீபாவளிக்குத் தட்கலில் ட்ரெயின் டிக்கெட் எடுக்கக் காத்துக் கிடப்பவர்கள் போல், நம்மவர்கள் இங்கு நிற்பார்கள். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன், பிள்ளையார் கோவில் முன்பு உடைக்கப்பட்ட சிதறு தேங்காயைப் பொறுக்கிக் கொண்டு ஓடுவதுபோல் இங்கு பொருட்களை அள்ளிக்கொண்டு ஓடுவார்கள்.

இப்படிக் கொரில்லாத் தாக்குதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கடைக்குள் நீண்ட நீண்ட க்யூக்கள் ஆங்காங்கே நிற்கும். எங்கு ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது, என்ன கொடுப்பார்கள், அது நமக்குக் கிடைக்குமா என்பது எல்லாம் புரிந்தும், புரியாமலும் பேங்கில் செல்லாத 500-1000 ரூபாயை மாற்ற வந்தவர்கள் போல் நிற்பார்கள். இதிலேயே பக்காவாக ப்ளான் செய்து, குடும்ப உறுப்பினர்களையோ, அல்லது நண்பர்களையோ ஆங்காங்கே அனுப்பி விட்டு, பொருட்களை வாங்கி வர, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் முறையில் ஷாப்பிங் செய்பவர்களும் உண்டு.

இப்படி எதுவும் இல்லாமல் வேடிக்கை பார்க்க மட்டுமே ஒரு கூட்டம் வரும். என்ன விற்கிறார்கள், என்ன வாங்க வந்தோம் என்று தெரியாமல், எல்லாக் களேபரமும் முடிந்த பின்னர், அப்பல்லோ வாசல் அப்பாவித் தொண்டர்கள் போல் கலைந்து, களைத்துச் செல்வார்கள்.

இவர்கள் எல்லோரையும் விடப் போற்றிப் புகழ வேண்டிய பாகுபலிகள், கடைக்கு வெளியே அடிக்கிற சில்லென்ற குளிரில், போர்வை போர்த்திக் கொண்டு நிற்கும் நமது ஷாப்பிங் ஜவான்ஸ். நடுஇரவு பனிரெண்டு மணிக்குத் திறக்கும் கடைக்கு, இரவு எட்டு மணிக்கே டின்னர் முடித்துப் பங்ச்சுவலாக வந்து நிற்பார்கள். நேரமாக நேரமாக க்யூ வளைந்து அங்கிங்கு செல்லும். பனிரெண்டு மணிக்குக் கடை திறந்த பின்பு, உள்ளே ஓடும் கூட்டத்தில் முதல் பத்து – பதினைந்து பேருக்குத் தான் சொல்லிக் கொள்ளும்படி ஏதேனும் கிடைக்கும். மற்றவர்கள், அந்தப் பத்து – பதினைந்து பொருட்களைத் தூக்கிக் கொண்டு பில்லிங் முடித்துச் செல்லும் அழகைத் தான் காண முடியும்.

இந்த நாளுக்காக இவர்கள் ஆயத்தமாவதையும் குறிப்பிட வேண்டும். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே, இந்த வருடம் என்ன சீப்பாகக் கிடைக்கும் என்று தங்கள் எஃப்.பி.ஐ. மூளையை முடுக்கிவிட்டு, இணையத்தில் தேட ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு ஏற்றாற்போல் தகவல் கொடுக்கவும் இணைய தளங்கள் நிறைய இருக்கின்றன. இருக்குற தளங்களை எல்லாம் க்ரால் செய்து, டேட்டா மைனிங், ஆனலிட்டிக்ஸ் எல்லாம் புரிந்து, எக்ஸல் ரிப்போர்ட் தயார் செய்வார்கள். எந்தக் கடைக்கு, எப்ப போனா, என்ன கிடைக்கும் என்பதைப் பாய்ஸ் படத்தில் வரும் செந்தில் போல் ரெடி செய்து (இன்பர்மேஷன் இஸ் வெல்த்!!), தாங்கள் கொண்ட செல்வம், பெறுக இவ்வையகம் என்ற பொதுவுடமைத் தத்துவத்தின்படி, வாட்ஸ் அப், மெஸ்ஸஞ்சர், ஃபேஸ்புக், ட்வீட்டர், ப்ளஸ் என்று சமூக ஊடகத்தின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி நம்மை நெருக்குவார்கள்.

மெய்யுலக ஷாப்பிங் மட்டுமில்லாமல், மெய்நிகர் உலக ஷாப்பிங்கும் குறைவில்லாமல் நடக்கும். இதற்காக ப்ளாக் ஃப்ரைடே, சைபர் மண்டே, காதல் செவ்வாய், காவிய புதன் என்று வகைவகையான பெயரில், நமது மெயில்பாக்ஸிற்கு அழைப்பிதழ் அனுப்புவார்கள். நாமும் சும்மா இல்லாமல், இங்கே இந்த ரேட், அங்க என்ன ரேட் என்று ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் போல் சுற்றியலைந்து கொண்டிருப்போம்.

அடுத்தக்கட்டமாக, இந்த ஜூரம் கண்டம் கடந்து இந்தியா வரை சென்றுவிட்டது. ஆடிக் கழிவுப் பாரம்பரியத்தில் இருந்து பிக் பில்லியன் டே கலாச்சாரத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கோம். அது போதாது என்று, அமெரிக்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஃபோன் போட்டுத் தேங்க்ஸ் கிவிங் வாழ்த்துச் சொல்லிவிட்டு, ஷாப்பிங் ஆர்டர் கொடுக்கவும் தயாராகிவிட்டார்கள். ‘எப்படி அனுப்புவது?’ என்று கேட்டால், அதற்கும் ஃபோன் போட்டு யாரையாவது தயார் செய்து வைத்திருக்கிறார்கள். நமது நேரம் எப்படியோ, சமயங்களில் நாமும் குருவி வேலை பார்க்க வேண்டி வரும்.

இத்தனை கலாட்டாவில், இந்தத் தினத்தின் முக்கிய அம்சமான நன்றி நவிலலை மறந்து விட்டு, மற்றவரை இடித்துக்கொண்டு, காலை மிதித்தாலும் மன்னிப்புக் கேட்க நேரம் இல்லாமல் ஓடும் நுகர்வோர் வெறியை உருவாக்கியிருக்கும் கார்ப்பரேட் உலகிற்கு நம்மால் எப்படி நன்றி கூற முடியும் என்று தெரியவில்லை.

இச்சந்தர்ப்பத்தில் ஜப்பானில் பிரபலமாகிவரும் மினிமலிஸம் (Minimalism) போன்ற வாழ்க்கைமுறை அறிதல் தான் அவசியமாகிறது. பழகிவிட்ட இந்த யுகத்தில், எல்லோராலும் மினிமலிஸத்தை எந்த அளவிற்குக் கடைப்பிடிக்க முடியுமோ, தெரியாது. ஆனால், அது போன்ற வாழ்வு முறையைத் தெரிந்து கொண்டு, நமது அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுப்பது, அவர்களது நன்றியை நாம் பெறுவதற்குத் தகுதியை ஏற்படுத்திக்கொடுக்கும்.

அனைவருக்கும் நன்றி நவிலல் வாழ்த்துகள்.

  • சரவணகுமரன்

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. எம்.சக்திவேல் says:

    மிக பயனுள்ள செய்தி மிகுந்த நன்றி

  2. நன்றி சக்திவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad