\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

செல்வி . ஜெயலலிதா ஜெயராம்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments

‘புரட்சித் தலைவி’, ‘அம்மா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்த தமிழக முதல்வர், செல்வி ஜெயலலிதா ஜெயராம், உடல் நலக் குறைவா ல் இம்மாதம் (டிசம்பர்) ஐந்தாம் தேதி காலமானார். அன்னாரது மறைவுக்கு, பனிப்பூக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இரண்டு மாதங்களுக்கு மேலாக, உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தாலும், அவரது போராடும் வைராக்கிய குணத்தினால் காலனை வென்று, மீண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் அவரது மரணம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி. சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட அவர் தனது தாய் சந்தியாவின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். சிறு வயதில் படிப்பிலும், நாட்டியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். சந்தியா நடிப்புத்துறையில் இருந்ததால் , ஜெயலலிதாவின் நடன அரங்கேற்றத்துக்கு வந்திருந்த சிவாஜி கணேசன், அவர் திரைத்துறையில் நுழைவதற்குத் தூண்டுகோலாய் இருந்தவர்களில் ஒருவர். அதிக ஆர்வமின்றி நடிக்க வந்தாலும், நடிப்பு தான் வாழ்க்கைப் பாதை என்றான பிறகு கல்லூரிப் படிப்பை உதறி விட்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை என்ற படத்தில் முதலில் நடிக்கத் தொடங்கினாலும், எம். ஜி. ஆருடன் அவர் இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமே முதல் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் எம்.ஜி. ஆருடன் பல படங்களில் இணைந்து நடிக்க, அவரது பன்மொழி ஆற்றலையும், வசீகரத்தையும் அறிந்து கொண்ட எம். ஜி. ஆர். அவரை அரசியலுக்கு அழைத்து வந்தார்.

கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் எம்.ஜி.ஆரின் கடைநிலைத் தொண்டர்களை மிக எளிதில் வசீகரித்து அவர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் அவரை ஒதுக்க முயன்றதால் , ராஜ்யசபா உறுப்பினர் பதவியைக் கேட்டுப் பெற்றார் ஜெயலலிதா. அந்தச் சமயத்தில் அவரது தெளிவான பேச்சுத் திறனால் அனைத்திந்திய தலைவர்கள் பலரது அறிமுகம் கிடைத்து, பிரபலமடைந்தார் . அவரது திடீர் வளர்ச்சியைப் பிடிக்காத கட்சித் தலைவர்கள் , சிண்டு முடிந்ததில், அரசியலை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். அந்த நேரத்தில் எம்.ஜி. ஆரின் மரணம் , கட்சியை இரண்டாகப் பிளந்த போது, தனது மானசீக குருவின் கனவுகளை நினைவாக்க, விஸ்வரூபம் எடுத்து, கட்சியை மீட்டு, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அதன் பின்னர் ஐந்து முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

அவரது தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி, நீண்ட நெடிய அரசியல் வாழ்விலும் பல வித ஏற்ற இறக்கங்களையும், ஏமாற்றங்களையும், சவால்களையும் சந்தித்தவர் ஜெயலலிதா. தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சில பின்னடைவுகள் அவரைப் பிடிவாதக்காரராக, தன்னிச்சைச் செயல்பாடுள்ளவராகக் காட்டினாலும் அதுவே அவரது ஆளுமைத் திறனுக்குக் காரணமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் இறப்புக்கு முன்பு, தன்னை எதிர்த்து, வளர விடாது தடுத்த பல மூத்த அரசியல் தலைவர்களை வெகு லாவகமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து , கட்சிக்கு எந்தப் பங்கமும் வராத வகையில் அவர்களை அடக்கினார்.

சர்ச்சைக்குரிய நட்பு, முரண்பட்ட முடிவுகள், பிடிவாதம், கோபம் எனச் சில பலவீனங்கள் இருந்தாலும் அவற்றையே தனது பலமாக அமைத்து , தன்னைச் சுற்றி திடமானதொரு அரணை அமைத்து வைத்திருந்தார். அமைச்சரவையில் தடாலடியாக மாற்றங்கள் செய்து, புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதும் , மூத்தவர்களைப் புறக்கணிப்பதும் அவரை ஒரு புரியாத புதிராகவே வைத்திருந்தது. அவரது அடுத்த நடவடிக்கை என்னவாகவிருக்கும் என்பதைச் சொந்தக் கட்சியினர் உட்பட யாராலும் கணிக்க முடியவில்லை ,

இவையெல்லாவற்றையும் விட தனது குருநாதரைப் போல எளிய, வெகுஜன மக்களிடம் அசைக்கமுடியாதவொரு வசீகர பிம்பத்தை உருவாக்கியிருந்தார். சமீப ஆண்டுகளில் அவர் செயல்படுத்திய திட்டங்கள் பலவும் பொதுமக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

தமிழக அரசியலில் உறுதியான முடிவுகள் எடுத்து, மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த ஜெயலலிதாவின் மறைவு கட்சியிலும், தமிழக, இந்திய அரசியலிலும் பெரியதொரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

பெண் வர்க்கத்தினருக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்கி, வைராக்கியத்துடன் போராடினால் வெற்றி மங்கையாகத் திகழலாம் என்று நிருபித்த ஜெயலலிதாவைப் பின்பற்றி, பலர் உருவாகி அந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்று நம்புவோம்.

  • ரவிக்குமார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad