\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

 கதவடைப்பும் கழுமரங்களும்

Filed in இலக்கியம், கதை by on December 25, 2016 0 Comments

1996.

“வீணாப்போனவங்க. இப்பிடி பண்ணிட்டாங்களே…”அங்கலாய்த்தபடி  தொழிற்சங்க அலுவலகத்துக்குள் பிரவேசித்த விஜயன் காலியா யிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமியின் முகத்திலும் கலவரச்சாயல் படிந்திருந்தது.கவலையால் ஏற்கனவே கருத்திருந்த முகம் மேலும்  கறுப்பாகியிருந்தது.

“எல்லாம் மொதலாளிங்க பாத்து செய்ய வேண்டியது.இப்ப பாரு எல்லாத்துக்கும் பிரச்சினை” என்றார்.

“ஆமாங்கண்ணே.வேலூர் சிட்டிசன் வெல்பேர் அசோசியேஷன் தான் கேஸ்ஸ ஃபைல் பண்ணியிருக்காங்க.அவங்க பார்வைல இது சரி தான்.ஆனா நம்ம வயித்து பொழப்பப்பத்தி நெனச்சி பாத்தாங்களா இல்லையான்னு தான் தெரியில”.

”எல்லாஞ் சரியா போயிடும் விஜய்யா…அவங்க யோசிக்காம இப்பிடி பண்ணியிருக்கமாட்டாங்க.எதாவது மாத்து வழிய கூட சொல்லியிருக்கலாம்.மொதலாளிங்க மனசு வெச்சா எல்லாமே நல்லபடியா முடிஞ்சிடும்.அதுவரைக்கும் எதாவது செஞ்சு தானே ஆவனும்”.

ரமேஷ் இரண்டு கண்ணாடி தம்ளர்களில் தேநீர் கொண்டு வந்து வைத்தான்.தேநீர் கசப்பாய்த் தொண்டைக்குழியில் இறங்கியது இருவருக்கும்.

“அண்ணே கழிவு நீரைச் சுத்தப்படுத்தாம வெளியேத்துனதுனால தானே பிரச்சினை. கவர்மெண்ட்டு கூட எப்ளாயிண்ட் பிளாண்ட் கட்றத்துக்கு  மானியம் எல்லாம் குடுத்தும் கூட இவங்க செய்யாம போனதால எல்லாருக்கும் கஷ்டம் பாருங்க” என்றான் விஜயன்.

“மானியம் குடுத்தவங்க அது சரியா உபயோகப்பட்டிருக்கான்னும் பாக்கணும்.எல்லாம் மேல் லெவல்லயே பேசி முடிவு பண்ணிச் செஞ்சிடறாங்க.பாதிப்புன்னு பாக்கப் போனா எல்லாம் கீழ இருக்கவங்களுக்குத் தான்”.

“ஆமாங்ணா.சரி இதுக்குன்னு எதாவது தீர்வு இருக்கா.ஒரு வாரம் ஆவப் போவுது.இப்பவே கையில இருந்ததெல்லாம் காலியாயிடுச்சு”.

கவலை தோய்ந்த முகத்தோடு குப்புசாமியிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தான் விஜயன்.

எதிரே சீல் வைத்து பூட்டப்பட்டிருந்த பெரிய பூட்டுடன் நூற்றைம்பது தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்யும் அந்த தோல் பதனிடும்  தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது.தட்டச்சு எழுத்துக்களுடன் கூடிய நீதிமன்ற ஆணை, கதவுகள் இணையும் நடுப்பகுதியில் இரண்டுக்கும்  பொதுவான நிலையில் ஒட்டப்பட்டிருந்தது.

1988.

சோலூர் கிராமம்.

ஆசைத்தம்பி பொழுது புலரும் முன்னரே எழுந்து காலைக்கடன்களை முடித்து வர பாலாற்றங்கரைக்குச் சென்றான்.ஆற்றிலே கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.நீர்மட்டத்துக்கு மேலே லேசான பனிமூட்டம் படர்ந்து புகையாய் அப்பிக்கொண்டிருந்தது. அக்கம்பக்கத்துக் கரையோரங்களின் தென்னந்தோப்பிலிருந்து லேசான  சலசலப்பு தென்னங்கீற்றுகளால் உருவாக்கப்பட்டு தென்றலாய் லேசாய் பரவியிருந்தது.குளிர் எங்கும் தனதாட்சியை நிலை நாட்டியிருந்தது.

கரையோரம் அமர்ந்து காலைக்கடனை முடித்த பின் ஆற்றிலே மெதுவாக இறங்கித் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டான்.கைகளிலே பிசுபிசுப்பாய் எதோ ஒட்டிக்கொண்டது.ஆற்றின் அடிமணலை எடுத்து  நன்றாக தேய்த்துக்கொண்டான்.பாசி போல் பசைந்தது கைகளிலிருந்த அந்தப் பிசுபிசுப்பு.சோப்பின் அவசியத்தை உணர்ந்தான். உடைகளைக் களைந்தவன் மணல் கொண்டே உடலெல்லாம் தேய்த்து நீருக்குள் முங்கினான்.எழுந்து கரையிலிருந்த மாற்றுத்துணியை உடுத்திக் கொண்டான்.ஈர துணிகளை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.உடல் மீது லேசான வாடை வீசுவதாய் உணர்ந்தான்.

பொழுது புலர ஆரம்பித்திருந்தது.திரும்பி ஆற்றைப் பார்த்தான்.லேசான விடியலின் வெளிச்சத்தில் ஆற்று நீர் பளபளத்து சலசலத்தது.வெளிர்  நீரின் ஓரப்பகுதி மட்டும் கறுமை போர்த்திக்கொண்டு நீண்டு படர்ந்திருந்தது.

கைகளின் பிசுபிசுப்பு இன்னும் குறையவில்லை.விரல்களை மடித்து முஷ்டியாக்கி அழுத்திப் பிடித்து பின்பு கையை விரித்தான்.விரிக்கும் போது ‘பச்சக்’ என்ற மெல்லிய சப்தத்துடன் விரிந்தது உள்ளங்கை.நிச்சயம் ஏதோ ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தது.முகர்ந்து பார்த்தான்.செத்த மாட்டின் நாட்பட்ட வாடையாய் நாசிக்குள் புகுந்தது வாசம்.முகத்தைச் சுளித்து ‘உஸ்…ஹூஹ்…’ என்று வாடையை வெளியே சிந்தினான்.

வீட்டை நெருங்கியிருந்தான்.வீட்டின் முன்பு கூட்டம் கூடியிருந்தது. என்னமோ ஏதோவென்று வேகமாக வீட்டுக்குள் நுழைந்தான்.மனைவி  பொன்னுத்தாயின் மடியில் தனது இரண்டு வயது மகன் முருகேசன் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்த்தான்.பொன்னுத்தாயின் அரற்றல் காதுகளில் நாரசமாய்ப் பாய்ந்தது.

“புள்ள எளுந்து நிக்க மாட்டேங்குது.ஒடம்பு வேற கொதிக்குது.டேய் சாமி…என் ராசா…கண்ணத் தொறடா…”.

ஆசைத்தம்பியைப் பார்த்ததும் ஆற்றாமையின் வெளிப்பாடு அதிகமாகியது.

“என்னாம்மே…பாரு…”என்று ஆசைத்தம்பியைப் பார்த்து கதறினவள்  “டேய்…டேய்…ராசா..என்ன பெத்த செல்லம். பார்ரா” என்று மகன் முருகேசனின் முகவாய்க்கட்டையைப் பிடித்து அசைத்தாள்.

ஆசைத்தம்பிக்கு எதுவும் புரிபடவில்லை.சற்று நேரம் திக்பிரமை பிடித்தவனாய் ஒன்றும் செய்யாது நின்றிருந்தான்.நாசிக்குள் கவுச்சி நெடி நிலைத்திருந்தது.

நாட்டு டாக்டர் வந்தார்.பார்த்தார்.

“சீக்கிரம் ஆம்பூர் பெதஸ்தாவுக்கு கூப்ட்டுக்கினு போயிடுங்க. இப்போதைக்கி ஒரு ஊசி போட்டுடறேன்”.

மாட்டு வண்டி வந்து நின்றது.முருகேசனை அள்ளி அணைத்துக்கொண்டு பொன்னுத்தாயி வண்டியில் அமர்ந்து கொண்டாள். ஆசைத்தம்பி சைக்கிளை மச்சான் மாரியிடம் கொடுத்துவிட்டு,

“மாரி தலைவரக் கூப்பிட்டுக்கினு கவர்மெண்ட் ஆஸ்பிட்டலுக்கு வந்துடு”என்றான்.

மாட்டுவண்டி மெதுவாக கிளம்பி ஆம்பூரை நோக்கி உருண்டது.

அரசு பொது மருத்துவமனை.ஆம்பூர்.

“சிஸ்டர்…இன்னொரு போலியோ கேஸ் மாரி கீது”.

வார்டு பாயின் குரல் கேட்டு வெளியே வந்த நர்ஸ் தெர்மாமீட்டர் வைத்துப் பரிசோதித்தாள்.

“டெம்ப்ரேச்சர் 100-க்கு மேல இருக்கு.ஜெனரல் வார்டுல அட்மிட் பண்ணிடு.டியுட்டி டாக்டர கூப்பிடு”.

சோதித்தபடி செய்ய வேண்டியதை வார்டு பாயிடம் கூறியபடி செயல்பட்டுக்கொண்டிருந்தாள் நர்ஸ்.

டாக்டர் வந்தார்.பார்த்தார்.சோதித்தார்.

“எந்த ஏரியா?”

“சோலூர்.அந்த சர்ரவுண்டிங் தான் சார்.இதோட எட்டாவது கேஸ். எல்லாம் அஞ்சு வயசுக்கு கீழ இருக்குற பசங்க தான்”.

தீவிரமாக கவலை தோய்ந்த முகத்துடன் யோசனையில் ஆழ்ந்தார் டாகடர்.

அடுத்த நாள் காலை.தினசரி செய்திதாளில் மூன்றாம் பக்கத்தில் ஒரு மூலையில் ‘போலியோவின் தாக்கமா’ என்ற கேள்வியோடு செய்தி வெளியாகியிருந்தது.

வேலூர் சிட்டிசன் வெல்பேர் அசோசியேஷன் அலுவலகத்துக்குள் நுழைந்த அமரநாதன் செயலாளரின் முன்பு தான் கொண்டு வந்திருந்த செய்தித்தாளை வைத்தார்.

“சார் மறுபடியும் போலியோ கேஸ் வந்திருக்கு.எல்லாம் எராடிகேட் பண்ணப்புறமும் புதுசா அந்த பர்ட்டிகுலர் ஏரியால மட்டும் நெறைய புது கேஸுங்க வந்திட்டேயிருக்கு.இதப்பத்தி பேசி முடிவு செஞ்சு எதாவது செய்யனும்”.

கவலையும் பொறுப்புணர்வும் கலந்ததாய் இருந்தது அமரநாதனின் பேச்சு.

“ஆமாமா அமரன்.ஒரு ஆய்வுக்குழுவ அனுப்பி ரியல் பேஃக்ட் என்னன்னு தெரிஞ்சுக்குங்க.ஏற்கனவே குடிக்கிற தண்ணீ கூட உப்பா மாறிட்டு வர்றதா ரிப்போர்ட்டெல்லாம் வந்திருக்கு”.

குழு அமைக்கப்பெற்றது.

1988 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி பச்சகுப்பம் பாலாற்றங்கரை கிராமங்களில் இருந்து தனது ஆய்வுப்பணியைத் துவக்கியது குழு.

1996.

ரங்காபுரத்தில் பனையோலையால் வேயப்பட்டிருந்த குடிசை வீட்டின் உட்புறத்தில்  மனைவியைக் கட்டிப்பிடித்தபடி தூங்கிகொண்டிருந்த தன் இரண்டு குழந்தைகளையும் கண்கொட்டாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் விஜயன்.விடிவதற்கு நிறைய நேரமிருந்தது. மனக் கலக்கத்தால் தூக்கம் கூட வர மறுதலித்தது.வயிற்றைப் பிசைந்து நெஞ்சுக்குழியில் ஒரு கோலிக்குண்டாய் பயம் வந்து அடைத்துக் கொள்வதாய் உணர்ந்தான்.

நெடுநேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.மனைவியின் “என்னங்க” என்ற உசுப்பல் இவ்வுலகுக்கு மீட்டு வந்தது அவனை.

”உம்” என்றான்.

“என்ன விடியறத்துக்கு முன்னாடியே எளுந்து உக்காந்திட்டு இருக்கீங்க.ஒடம்புக்கு எதாவது பண்ணுதா”.கேட்டாள்.

இல்லையென்பதாய்த் தலையசைத்தான்.

“படுத்துக்க.இன்னிக்கி எட்டு மணிக்கெல்லாம் தலைவரு வர சொன்னாரு.எதாவது விடிவு பொறக்குதான்னு பாக்கலாம்”.

அவள் திரும்பி குழந்தைகளை அணைத்தபடி படுத்துக் கொண்டாள்.பிறந்த வீட்டின் செழிப்பு பூரித்திருந்தது இன்னும் அவளிடம்.இந்த மூன்று மாதங்களாய் தான் இயலாமையினால் சற்று தொய்வை அவளிடம் காண முடிந்தது அவனால்.ஆனால் அது வெளியே தெரியாத வண்ணம் அவள் தனது செயல்களை வடிவமைத்துக்கொண்டிருந்தாள்.உள்ளுக்குள் அவளும் படுவதை இவன் உணர்ந்திருந்தான்.கவலையின் ரேகைகள் படர்ந்திருந்தது மெலிதாய்.பதற்றமும் பரிதவிப்பும் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவியலாத தருணங்களில் மிகுதியாய் வெளிப்படுவதாய்  உணர்ந்த இவனும் வாடினான்.

கண்களின் ஈரக்கசிவை புறங்கையால் துடைத்துக்கொண்டான்.இவள் பார்த்தால் மனவருத்தம் கொள்ள வாய்ப்பு அதிகமாகுமென்று எண்ணி யவாறு மெதுவாக எழுந்து லுங்கியைச் சற்று தளர்த்தி மீண்டும் இறுகக் கட்டிக்கொண்டான்.கிணற்றடிக்குச் சென்று வாளியில் முன்பேயே நிறைத்திருந்த நீரை எடுத்துக்கொண்டு வயல் வரப்பில் நடக்க ஆரம்பித்தான்.கிழக்கில் வானம் சாம்பல் பூசிக்கொண்டிருந்தது.

காலை எட்டு மணி.

தொழிற்சாலை மூடி மூன்று மாதங்கள் ஆகிவிட்டிருந்தது.நீதிமன்ற ஆணை ஏந்திய கதவின் மீது ஒட்டப்படிருந்த காகிதம் பழுப்பேறி எழுத்துக்கள் மங்கத்துவங்கியிருந்தது.விஷயம் தெரிந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய சேதிகள்.கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிந்திருந்தது.இந்த தொழிற்சாலைக்குத் தான் இன்னும் விடிவு ஏற்படவில்லை.

தொழிற்சாலையின் முன்பு தொழிலாளர்கள் குழுமியிருந்தனர். தலைவரும் இரண்டு சகாக்களும் அலுவலகத்துக்குள் சென்றிருந்தனர்.  சற்று நேரத்தில் அவர்கள் முகங்களைத் தொங்க போட்டபடி திரும்பி வந்தனர்.பேச்சு வார்த்தை சுமுகத்தீர்வை எட்டாதது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு அரைமணி நேரத்துக்குப் பிறகு ஒற்றுமையாய்ப் பாடுபடுவோம் என்று உறுதிச்சூளுரையோடு கலைய ஆரம்பித்தனர்.

விஜயனுக்கு ஒன்றும் புரியவில்லை.எங்கு செல்வது.மனம் குழப்பத் தில் ஆழ்ந்தது.இதற்கு தீர்வே கிடையாதா என எண்ணினான்.தன்னைப்  போலவே பிறரும் கஷ்டத்தில் வாடுகிறார்களா என்பதை அறிந்து கொள்ள கூட விரும்பாதவனாய் மிதிவண்டியை செலுத்த ஆரம்பித்தான்.

பொருளாதார ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் ஒருவனால் தனது எண்ணங்களைச் சரிவர செயற்படுத்த முடியாமல் போகும் அவலம் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தது.அவன் ஏதோ நினைப்பில் தன்னை மரணத்தின் பிடியில் கோரமாய்ப் பிடி கிடைக்க செய்யும் முயற்சியில் தன்னையறியாமலே ஈடுபட்டிருந்தான்.

நெடுஞ்சாலையில் சாலையை இருகூறாய் பிரிக்கும் வெண்கோடாய்ச் சாலையின் நடுவிலே அவன் நகர்ந்து கொண்டிருந்தான்.வேகமாய் கடந்த வாகனத்தின் அலறல் சத்தமும் வீசிச்சென்ற இழுகாற்றும் இவனை நிலை குலையச்செய்து தன்னிலைக்குக் கொண்டு வந்தது. சற்று பிசகியிருந்தாலும் இவ்வளவு கடின சூழலிலும் தனக்கான இரங்கல் சுவரொட்டிகள் தயாராகியிருக்கும்.இரங்கலுக்கு ஏங்குகிறதோ மனது.நட்புக்குழாமை அதீத கஷ்டத்தில் ஆழ்த்த மனமின்றி சாலையின் ஓரமாய் ஒதுங்கி மெதுவாய் முன்னினும் மெதுவாக மிதிவண்டியை உருட்டினான்.எதைப் பற்றி கவலைப்படுவதென்றே புரியவில்லை.

வாழ்க்கையைச் சுகமாக்கி கொள்ளும் வளங்களையெல்லாம் இழந்து வேதனையையும் வெக்கையையும் மட்டுமே வாழ்வியல் துணையாய்க் கொண்டுழலுகிற ஜென்மமாய் வலி சுமந்த மனதோடு மிதிவண்டியை உருட்டினவன் கண்களில் ‘ஆட்கள் தேவை’ என்கிற அறிவிப்பு பலகை தென்பட்டது ‘சங்கர்ஸ் கபே’ என்ற சிற்றுண்டிச்சாலையின் முன்பு தான்.தயக்கத்துடன் கல்லாவில் அமர்ந்திருந்த வெள்ளுடை பெரியவரை அணுகினான்.

“உள்ளே போப்பா” என்று இவனிடம் கூறினவர்,

“டேய் மணி இந்த தம்பியைக் கூப்பிட்டுக்கினு போய் வேலை என்னன்னு சொல்லு”என்றார் அருகில் நின்றிருந்த சப்ளையரிடம்.

கேள்விகள் ஏதுமின்றி உடனே வேலையில் அமர்த்தப்பட்டான். யாருமே பார்க்காத இடத்தில் எச்சில் தட்டுகளையும் சமையல் பாத்திரங்களையும் கழுவி சுத்தப்படுத்தும் வேலை.மனதில் முள் தைத்தாலும் வீட்டில் மனைவி எல்லா வேலைகளையும் தனக்காய்ச் செய்வது ஞாபகத்தில் லயித்தாலும் அவற்றையெல்லாம் விடுத்து மெதுவாகப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்த ஆரம்பித்தான்.பாத்திரங்கள் உருண்டன.

“மெதுவா.சத்தம் அதிகமா வரக்கூடாது.அய்யா கோவிச்சிக்குவாரு” என்றார் சமையல் மாஸ்டர்.

மாலைக்குள் விஜயனின் இரு உள்ளங்கைகளும் சிவந்து கன்றிப்போய் வலி கொடுக்க ஆரம்பித்திருந்தன.தினக்கூலியாய் இருபது ரூபாய் களை வாங்கும் போது கண்கள் கசிந்திருந்தன அவனுக்கு.

பத்து ரூபாயைக் கொடுத்து இட்லிகளை வாங்கிக்கொண்டான்.

“டேய் சாம்பார் சட்னியை கொஞ்சம் அதிகமா போட்டு கட்டிட்றா’என்ற சமையல் மாஸ்டரின் கரிசனம் அன்னியோன்யத்தை உணர்த்தியது.

பொட்டலம் கட்டினவர் இரண்டு மெதுவடைகளையும் சேர்த்து வைத்துக் கொடுத்தார்.இவன் வேண்டாம் என்றான்.கல்லாவில் அமர்ந்திருந்த பெரியவர் இவனை விநோதமாகப் பார்த்தார்.

“காலைல சீக்கிரமா வந்துடு.டிபன் இங்கயே சாப்டுக்கலாம்”என்றார்.

தலையசைத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் விஜயன். மனைவியிடம் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு கிணற்றடிக்குச் சென்றான். முகம் கழுவிக்கொண்டு திரும்பியவனுக்குத் துவாலையை எடுத்து வைத்திருந்தாள் அவள். பிள்ளைகள் இருவரும் தூங்கிவிட்டிருந்தனர்.

“பசங்க சாப்ட்டாங்களா”.கேட்டான்.

“ஆங் அப்பவே சாப்ட்டுட்டு தூங்கிட்டாங்க”என்றவள்,

“ஆமா ஏன் இவ்ளோ லேட்டு.கம்பெனிலே என்னாச்சு”என்றுகேட்டாள்.

கேள்விகளால் மனது அசதியுற்றது.என்னவென்று சொல்வது. தொழிற்சாலை இனி திறக்கப்படுவது சாத்தியமில்லை என்பதா அல்லது முதலாளிகள் மனது வைத்தால் எல்லாம் நடக்கும் என்பதா.குழம்பினான்.அமைதியாக சாப்பிட அமர்ந்தான்.வாங்கி வந்திருந்த இட்லிகள் தட்டில் இருந்தது.

“நீ சாப்ட்டியா”.

“நீங்க சாப்டுங்க”என்றவாறு இட்லியையும் மெதுவடையையும் அவனுக்கு பரிமாறினாள்.

அவன் சாப்பிட ஆரம்பித்து,

”நீயும் சாப்புடு”என்றான்.

“இருங்க வரேன்”என்றவாறு எழுந்து சென்றவள் ஒரு தட்டில் வெஜிடேபிள் பிரியாணியும் மற்றொன்றில் இனிப்பு வகைகளுடனும் வந்து தரையில் அமர்ந்து கொண்டாள்.

‘இதெல்லாம் என்ன’ என்கிற அவனது பார்வையின் கேள்வியைப் புரிந்து கொண்டவளாய்,

“பக்கத்து வீட்டு பார்வதிக்கா…அதான் கல்யாண வீட்டுக்கெல்லாம் சமைக்க போறாங்கல்ல…அவங்க கூட மாட ஒத்தாசைக்கி வர்றியான்னு கேட்டாங்க.பக்கத்திலேயே தானே.அதான் போனேன். வரும் போது பத்து ரூபாயும் இத்தையும் குடுத்தாங்க” என்றாள்.

கூடவே இவனுக்கு முன்பு தரையில் பத்து ரூபாய் தாளை வைத்தாள்.கைகளில் லேசான நடுக்கம் தெரிந்தது.விண்ட இட்லியைத் தட்டிலேயே வைத்தவன் அவளுக்கு அருகில் நகர்ந்து மெதுவாக அவளது கைகளைப் பற்றிக்கொண்டான்.அவனது கண்களைச் சந்திக்கும் திராணியற்றவளாய் தரையைப் பார்த்தாள் அவள்.என்ன நினைத்தானோ அவளது கைகளை எடுத்து உள்ளங்கையில் முத்தமிட்டான்.அவனது கைகளின் சொரசொரப்பு அப்போது தான் உறைத்தது அவளுக்கு.

“என்னாச்சுங்க…”.சிவந்து கன்றியிருந்த உள்ளங்கையைப் பார்த்தவாறு கேட்டாள்.

கொல்லன் பட்டறையில் சம்மட்டி அடித்துவிட்டு வந்திருப்பாரோ என எண்ணினாள்.அவனை ஏறிட்டு பார்த்தாள்.

“ஏய்…சொன்னா கோவிச்சிக்க மாட்டியே…”என்றவாறு சிற்றுண்டிச் சாலையில் வேலை செய்துவிட்டு வந்ததைக் கூறினான்.

கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவளாய் அவனது கைகளை எடுத்து உள்ளங்கையில் மென்மையாய் முத்தத்தை பதித்தாள். இவனுக்குள் இளஞ்சூடான அவளின் முத்தம் கிளர்ச்சியை தூண்ட மெதுவாக அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

விளக்கு வெளிச்சத்தில் வெஜிடேபிள் பிரியாணியும் மெதுவடையும் தரையிலிருந்தபடி தமது வாசனையை அந்த அறைக்குள் பரப்பத் துவங்கியிருந்தது.

– சு.மு.அகமது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad