\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பேர்ள் ஹார்பர்

  டிசம்பர் 7 1941 –  போர் முன்னறிவிப்பு எதுவுமின்றி  ஜப்பான்  அமெரிக்காவைத் தாக்கிய தினம்; அமெரிக்காவின் முக்கிய கடற்படைத் தளங்களில் ஒன்றான பேர்ள் ஹார்பரை 353 போர் விமானங்கள் கொண்டு ஜப்பான் தாக்கிய தினம்; 2403 அமெரிக்க வீரர்கள் மாண்டு போன தினம்; 1178 பேர் படுகாயமடைந்த தினம். 5 போர்க்கப்பல்கள் உட்பட 18 கப்பல்கள் அழிக்கப்பட்ட தினம். உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட தினம்; உலக நாடுகள் பலவற்றின் இன்றைய நிலைக்கு காரணமான தினம்; மொத்தத்தில் அமெரிக்க வரலாற்றின் அவமானமான தினம் (The day of infamy).

  சென்ற டிசம்பருடன்  இத்தாக்குதல் நடைபெற்று 75 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதற்கு முன்பு வெளியிடப்படாத பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.  அன்றைய தினம் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கி ஓவாஹு தீவுக்கருகே புதைந்து போயுள்ள கடற்படைக் கப்பலான  அரிசோனாவுக்குள் நடந்த பல ஆய்வுகளின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

  முன்னறிவிப்பு எதுவுமின்றி சர்வதேசப் போர் விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, இவ்வளவு பெரிய அதிரடித் தாக்குதலை ஜப்பான் நடத்திய காரணம் என்ன?

சியக் கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக அமைதியான சிறிய நாடாக இருந்தது ஜப்பான். எரிமலை கொந்தளிப்பு, நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு எனப்   பல வகையான இயற்கை இடர்களைக் கொண்ட நாடு. கனிம வளங்கள் முற்றிலும் இல்லாத ஜப்பான், அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தது. எல்லையை விரித்துக் கொண்டால் மட்டுமே நாடு நலம்பெறும் என்ற நிலையில், நிலக்கரியும், இரும்புத் தாதும் நிரம்பிய அண்டை நாடான கொரியாவைக் கைப்பற்ற முனைந்தது ஜப்பான். இதனை எதிர்த்த மிகப் பெரிய நாடான சீனாவை யாருமே எதிர்பாராத வகையில் போரில் வெற்றி கண்டது ஜப்பான்.  இந்த வெற்றி கொடுத்த ஊக்கத்தில் சீனாவையும் கைப்பற்ற நினைத்த ஜப்பான், அந்நாட்டின்  மஞ்சூரியா பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

  மலேசியா, சிங்கப்பூர், தாய்வான் என்று படிப்படியாக தனது ஆளுமையை விரிவாக்கிய ஜப்பான் கிழக்கு ஆசியப் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முனைந்தது. அந்தச் சமயத்தில் ஆசியாவின் பல குட்டி நாடுகள் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. நாசிச ஜெர்மனி, பாசிச இத்தாலி ஆகிய இரண்டும் ஒன்று கூடி பிரிட்டனை எதிர்த்த போது, ஜப்பானும் இவர்களுடன் சேர்ந்து கொண்டது.

  இந்நிலையில் பிரிட்டனுக்கு அதன் நீண்ட கால நேச நாடுகளான ஃபிரான்ஸ், அமெரிக்கா ஆகியவற்றின் உதவி தேவைப்பட்டது. முதலாம் உலகப் போரில் மிகப் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பைக் கண்டிருந்த அமெரிக்கா இன்னொரு போரில் இறங்கத் தயங்கியது. அமெரிக்க நாட்டின் பொருளாதாரப் பெருமந்தம் படிப்படியே சீராகி வந்த காலமது. மூன்றாவது முறையாக அதிபராக முயன்று வந்த தியோடர் ரூஸ்வெல்ட், நேரிடையாகப் போரில் இறங்குவதைத் தவிர்த்து வந்தார். ஆயினும் ஜப்பானின் சமீபத்திய வளர்ச்சி அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. கிழக்காசியப் பகுதிகளில் தனது ஆளுமையை நிலை நாட்ட ஃபிலிப்பைன்ஸ் நாட்டைத் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்கா, எந்த நேரத்திலும் ஜப்பான் அதைக் கைப்பற்றும் என்று நினைத்தது. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால்  ஜப்பானைப் பொருளாதார ரீதியில் வளர விடக்கூடாது என்று நினைத்த அமெரிக்கா,  ஜப்பானுக்கு ஏற்றுமதியைத் தடை செய்தது. போர்த் தடவாளங்களை உற்பத்தி செய்ய அடிப்படைத் தேவையான இரும்புத் தாது மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தடை செய்யப்பட்டதும் ஜப்பான் கொதித்தெழுந்தது. ஆசியாவில் தனது ஆட்சியை விரிவாக்க முனைந்து வந்த ஜப்பான் தனது எண்ணங்களுக்கு மிகப் பெரிய தடையாக விளங்கும் அமெரிக்காவை ஒடுக்க நினைத்தது.

  அமெரிக்காவுடன் நேரிடையாகப் போர் புரிய ஜப்பான் தயங்கியது. ஆறாயிரம் மைல்கள் தள்ளியிருந்த நாட்டுடன் கடல் வழிப் போர் புரிய, ஏராளமான எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் தேவைப்படும். இரண்டும் முடங்கிப் போன நிலையில் நேரடிப் போர் தோல்வியில் முடியும் என்று எண்ணியது.

  ஜப்பான் அவ்வளவு எளிதில் துவண்டு விடாது என்று நினைத்த அமெரிக்கா, தற்காப்பு  முனைப்புகளில் இறங்கியது. ஏராளமான இராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் இறக்கியது. ஒருவேளை கடல் வழியே ஜப்பான் தாக்க நினைத்தால், அதை முறியடிக்க, தனது போர்க்கப்பல்களையும், ஆயுதங்கள் நிரம்பிய மற்ற கப்பல்களையும் ஹவாய் தீவுகளில், குறிப்பாக ஓவாஹு பகுதியில் நிறுத்தியது.

  நாட்டின் பல பகுதிகளிலிருந்து அரிசோனா, பென்சில்வேனியா, மேற்கு வெர்ஜினியா, கலிஃபோர்னியா, நெவாடா, ஓக்லஹாமா என்று பெயரிடப்பட்டிருந்த போர்க் கப்பல்கள் அமெரிக்க நாட்டின் செருக்கை, பெருமிதத்தை,  பலத்தை, ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரே துறைமுகத்தில் தயாராக நிறுத்தப்பட்டன.

  ஜப்பானை அச்சுறுத்த, வியூகம் அமைத்து, தனது படை பலத்தை வெளிப்படுத்தப் போர்க் கப்பல்களை நிறுத்திய இடம் தான் பேர்ள் ஹார்பர்.

(தொடரும்)

– ரவிக்குமார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad