\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வபஷா தேசிய கழுகு மையம்

அமெரிக்காவின் தேசியச் சின்னமாக கழுகு இருப்பது, நாம் அனைவரும் அறிந்ததே. என்ன விதமான ஒரு டெரர் பறவையைத் தேசியச் சின்னமாக வைத்து இருக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. ஒருவேளை, அமெரிக்காவில் அதிகமாக கழுகு இருக்கிறதோ என்னமோ என்று நினைத்தால் அதுவும் இல்லை. சமீபகாலம் வரை இது அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் தான் இருந்தது. இப்போது 2007இல் தான், கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கும் காரணத்தால், அந்தப் பட்டியலில் இருந்து கழுகு நீக்கப்பட்டுள்ளது.


எண்ணிக்கை பார்த்துச் சின்னம் அமைப்பது என்பது எந்த ஊரிலும் எடுபடாது. ஒரு பறவையோ ஒரு விலங்கோ, அதன் குணம் தான் அதற்குப் பெருமை அளிக்குமே தவிர, எண்ணிக்கை அல்ல. மனிதனும் ஒரு விலங்கு தான் என்பதை இங்கு நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

நேரு காலத்தில், இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்க மத்திய அரசு யோசித்தபோது, அண்ணாதுரை போன்றோர் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் நேரு, இந்தியாவில் பெரும்பாலோர் பேசும் மொழியாக இந்தி இருப்பதால், அதைத் தேசிய மொழியாக அறிவிக்கலாம் என்றதற்கு, அண்ணா அப்படிப் பார்த்தால் இந்தியாவின் தேசியப் பறவையாகக் காகத்தைத் தான் அறிவிக்க வேண்டி இருக்கும் என்று எதிர்வாதம் புரிந்ததாகச் சொல்லுவார்கள்.


அது போல், அமெரிக்காவின் தேசியச் சின்னமாகக் கழுகு இருப்பதற்கும் அதன் பலம், கம்பீரம், சுதந்திரம், நெடிய ஆயுள் போன்ற குணங்கள் தான் காரணமாக இருந்திருக்கும். அந்தப் பார்வையே கிலிவூட்டக் கூடியதாக இருக்கும்.

சிறு வயதில், வெளியே சென்றால் கழுகு தூக்கிச் சென்று விடும் என்று யாரோ சொல்லப் போக, வானத்தில் கழுகைப் பார்த்தாலே, அது நம்மைத் தூக்கிச் சென்று விடுமோ என உள்ளூக்குள் பயந்துக் கொண்டே கழுகைப் பார்த்த காலம் ஒன்றுண்டு. கழுகால் நம்மைச் சுமந்துக் கொண்டு பறக்க முடியாது என்ற அளவுக்கு வெயிட் கூடும் வரை இந்தப் பயம் இருந்தது!! கழுகு குறித்த இவ்வாறான பிம்பத்தைச் சமூகம் பல விதங்களில் நம்மிடம் பதித்துக் கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் கூட, ஒரு குழந்தையைக் கழுகு ஒன்று தூக்கி செல்ல முற்பட்டது என வாட்ஸ் – ஆப்பில் வீடியோ ஒன்று பரவியது.



இப்படி கழுகு, பறவைகளில் ஒரு தனி வகை. கழுகு பற்றிய ஆர்வமூட்டும் கேள்விகள் பல, நம்முள் இருக்கும். கழுகு பற்றிய நமது சந்தேகங்களைக் களைவதற்கும், அவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கும் மினசோட்டாவில் வபஷா (Wabasha) என்னும் சிறுநகரில் உள்ள தேசிய கழுகு மையம் (National Eagle Center) பெரிதும் உதவும்.

வபஷா என்னும் இந்த அழகிய சிற்றூர், ட்வின் சிட்டீஸில் இருந்து சுமார் 80 மைல்கள் தொலைவில், மிஸ்ஸிசிப்பி ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது. ட்வின்சிட்டீஸில் இருந்து செல்லும் போது, 20 மைல் தொலைவுக்கு, இந்தச் சாலை மிஸ்ஸிசிப்பி ஆற்றுடன் சேர்ந்தவாறு செல்லும் அருமையான சூழல் உண்டு. மார்ச் மாதத்தில் பயணிக்கும் பொழுது, ஆறு தனது பனி உடையைக் களைந்து, தண்ணீர் ஆடையை அணிந்துக்கொண்டிருப்பதைக் காணலாம். ஊருக்குள் நுழையும் போது, இவ்வூரின் நெடிய பாரம்பரியத்தை அடையாளமாக்கிக்கொண்டு நிற்கும் பழமையான சிறு சிறு கட்டிடங்கள் நம்மை வரவேற்கும். கழுகு மையம் பார்த்துவிட்டு வரலாம் என்று சென்றால், இவ்வூரின் அமைதியான ரம்மியத்தில் மேலும் சில மணி நேரங்கள் இருந்துவிட்டு வரலாம் எனத் தோன்ற வைக்கும் அழகுச் சிற்றூர் இது.

வரும் வழியிலேயே நம்மால் நிறையக் கழுகுகளைக் காண முடியும். ஆற்றில், பனியின் மேல், கூட்டமாக நின்றுக்கொண்டு மீன் பிடித்து உண்பதைக் காணலாம். கழுகுகள் பெருமளவில் இங்கே இருப்பதால், கழுகு பற்றிய ஆய்வுக்கும், பார்வையிடுவதற்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஏற்ற இடமாக இந்த மையம் அமைந்துள்ளது.

ஏஞ்சல், டொனால்ட் உள்பட இங்கு ஐந்து கழுகுகள் பராமரிக்கப்படுகின்றன. இந்தக் கழுகுகளுக்கு ஏற்பட்ட காயங்களால், இவை இங்கு அடைக்கலம் ஆகியுள்ளன. தற்சமயம் இவை இம்மையத்தின் கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த பணிகளுக்கு உதவுகின்றன.



இந்த மையத்தில் தினமும் மூன்று முறை கழுகுகள் நேரடியாக பங்குக்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர், ஒரு கழுகுடன் பார்வையாளர்களுக்குக் கழுகுகள் குறித்த தகவல்களை அளித்து, பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். இது ஒரு கலந்துரையாடல் போல், பார்வையாளர்களின் பங்களிப்புடன் நடைபெறுகிறது. கழுகுகளில் இருக்கும் பல வகைகளைப் பற்றி இதில் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

எந்தத் தடுப்பும் இல்லாமல், சில அடித் தொலைவில் ஒரு கழுகைப் பார்ப்பது, உள்ளூக்குள் ஒருவித எழுச்சி அளிக்கும் உணர்வைக்கொடுக்கிறது. அடிப்பட்ட கழுகுகள் என்று சொல்லப்பட்டாலும், கழுகுகளின் கம்பீரம் என்றும் குறைவதில்லை. பார்வையாளர்களின் முன்பு, அதற்கு உணவு அளிக்கப்படுகிறது. பெரும்பாலும், மீன் இங்கு உணவாக அளிக்கப்படுகிறது. மீனைத் தனது அலகினால் கொத்திப் பிய்த்து மிச்சம் வைக்காமல் சாப்பிடுகிறது. கழுகின் கால்கள், ஒரு பறவைக்குரியதாக இல்லை. ஒரு விலங்கின் கால்களைப் போல் அமைந்துள்ளது. சுமார் 45 நிமிடங்களுக்கு நீளும் இந்த நிகழ்ச்சியில், அவ்வப்போது கழுகு தனது சிறகை விரித்து அடிக்கும் போது, அதன் பிரமாண்ட உருவம் புலப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி தவிர, இங்கிருக்கும் ஒரு திறந்தவெளியில், கூண்டுகள் அற்ற அறையில் கழுகுகளை எந்தத் தடுப்பும் இல்லாமல் நேரடியாகக் காண முடியும். இங்கிருக்கும் தன்னார்வலர்கள், கழுகு குறித்த எவ்விதக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்கள்.

கழுகு குறித்த காணொளிக் காட்சிகள், புத்தகங்கள், காட்சிப்பொருட்கள், வெளியில் ஆற்றோரம் மரத்தில் இருக்கும் கழுகுகளைக் காண டெலஸ்கோப் என இந்தக் கட்டிடத்தில் முழுக்கக் கழுகுகள் சார்ந்த தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இங்கிருக்கும் தன்னார்வலர்கள் அனைவரும் நட்புடன் பழகுகிறார்கள். தகவல்களைப் பகிர்கிறார்கள். பழங்குடிக் குழுவைச் சேர்ந்த ஒரு அன்பர், வாரத்தில் சில நாட்கள் இங்கு வந்து, அவர்கள் செய்த கைவினைப் பொருட்களை, இங்குக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்துவிட்டுச் செல்கிறார்.

இங்கு வருகை புரிந்தால், அது குழந்தைகளுக்குக் கழுகு போன்ற பறவைகள் குறித்த புதுப் புரிதல்களை அளிக்கும் என்பது உறுதி. பெரியவர்களுக்குப் பெரும்நகரின் கூட்டமும், வேகமும் இல்லாத சில அமைதியான மணி நேரங்களை, இந்த அழகிய சிற்றூரும், மிஸ்ஸிசிப்பி ஆற்றுக் கரையோரமும் நிச்சயம் அளிக்கும்.

மேலும் தகவல்களுக்கு,

https://www.nationaleaglecenter.org


– சரவணகுமரன்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad