banner ad
Top Ad
banner ad

தப்புத் தாளங்கள்

Filed in இலக்கியம், கதை by on March 31, 2017 0 Comments

ம்மா, சுரேஷ் ரொம்ப நல்லவர்மா…. நன்னா பழகுவார், மரியாதையா நடந்துப்பார், எல்லாரண்டயும் பாசத்தோட இருப்பார்… என்ன, ஒரு நிரந்தரமான வேலை கெடையாது, சம்பளம் கெடையாது, மத்தபடி ஒரு குறையுமில்ல… நம்ம ஜாதி இல்ல… அதுனால என்ன?”….  சாருலதா தன் அம்மாவிடம் தனது காதலனைக் குறித்து வர்ணித்துக் கொண்டிருந்தாள்.

“நீ சொல்றது நேக்கு நன்னாப் புரியர்துடி… வேலை பாக்காட்டா என்ன, பொம்மணாட்டிய வச்சு நன்னா குடும்பம் நடத்தினாக்காப் போறாதா? …. ஜாதி கீதியெல்லாம் இந்தக் காலத்துல யாரு பாக்குறா… எனக்கு சந்தோஷந்தாண்டி…” தாயார் மங்களம் மாமியின் பதிலைக் கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைகிறார் தந்தை சுந்தரேச ஐயர். ”அம்மாவும் மகளும் என்ன பேசிண்டிருக்கேள்… லோகஷேமமா?” கேட்டுக் கொண்டே தூர்தர்ஷணின் ஏழரை மணிச் செய்திகளில் இடைத்தேர்தல் குறித்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்க, தொலைக்காட்சியை ஆன் செய்தார் ஐயர்.

நேற்றுக் கடைசியாகப் பார்த்த “கலைஞர்” டி.வி. சேனல் முதலில் வர அதிலும் இடைத்தேர்தல் செய்திகள் வந்து கொண்டிருந்தது. தற்போதைய எதிர்க்கட்சியைச் சார்ந்த சேனலாய் இருப்பினும், “ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிடும் ஆளுங்கட்சி வேட்பாளர் நேர்மையாளர், குணசீலர். தனக்கென எந்தச் சொத்தையும் சேர்த்துக் கொள்ளாத, எளிய வாழ்க்கை வாழ்பவர். அவரிடம் தொகுதியை ஒப்படைத்தால் தன்னலமற்றுச் செயல்பட்டு, மக்களுக்கு நல்லது செய்வார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், எங்கள் கட்சி வேட்பாளர் அவரை விட நல்லவர், கற்றறிந்தவர், பண்பாளர், மக்களுக்கு ஆளுங்கட்சி வேட்பாளரை விட இன்னும் அதிக நன்மைகளைச் செய்வார்” என்று பட்டியல் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தச் செய்தி வாசிப்பாளர்.

ஆர்வமில்லாமல், ஐயர் அடுத்த சேனலை மாற்ற, தற்போதைய ஆளுங்கட்சியின் சேனலான ஜெயா டி.வியிலும் செய்திகளே வந்து கொண்டிருந்தது. அதில், எதிர்க்கட்சி வேட்பாளர் சென்ற முறை எம்.எல்.ஏவாக இருந்த பொழுது செய்த நன்மைகளை எல்லாம் பட்டியல் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர். அந்தப் பட்டியலில் எத்தனை ஆறு குளங்கள் தூர் வாரப்பட்டன, எத்தனை விளைச்சல் நிலங்கள் பராமரிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டது, தொழில் துறையில் அந்தத் தொகுதி எந்த அளவு முன்னேறியுள்ளது என்ற செய்திகளையெல்லாம் புள்ளிவிபரங்களுடன் விளக்கி, அவ்வளவு திறமைசாலி அந்த வேட்பாளர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினர். “அவ்வளவு திறமைசாலியான அவரையே மிஞ்சுமளவு எங்கள் வேட்பாளர் இன்னும் அதிக திறமைசாலி, அதனால் எங்கள் கட்சிக்கே ஓட்டளிக்கவும்” என்று அறிவிப்பாளர் சொல்லி முடித்தார்.

“இவாளுக்கு வேற வேலையே இல்லை, ஏற்கனவே திறமையா நடந்துண்டு இருக்கே, பின்ன என்னத்துக்கு இன்னொரு கட்சியில இருந்து எம்.எல்.ஏ செலக்ட் பண்ணணும்” சொல்லிக் கொண்டே அந்தச் சேனலையும் மாற்றினார் ஐயர். அடுத்ததாக வந்த சேனலொன்றில், தொண்ணூறு வயதைத் தாண்டிய சுதந்திரப் போராட்ட தியாகி பொன்னம்பலத் தேவரின் நேர்காணல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

“வர வர இந்த டெலிவிஷன்காராளுக்கு இதே வேலையாப்போச்சு, நாள் கிழமைனாக்கூட ஒரு சினிமா நடிகைகள் ப்ரோக்ராம் பார்க்க முடியர்தா… எல்லாம் ஒரே தேசாபிமானமாப் போச்சு” சலித்துக் கொண்டே சேனல் மாற்றுவதைத் தொடர்ந்த ஐயரைப் பார்த்து, மங்களம் மாமி, “ஏன்னா, ஏன் இப்டி அலுத்துக்கறேள்… ஏதோ ஸ்டார் டி.வி., எம்.டி.வி, ஹெச்.பி.ஓ.னு பார்க்குறதுதானே… அதுல ஏதாவது ஃபாரின் நடிகைகளைக் கலர் கலராக் காட்டுவா, பாத்து ரசிச்சுக்கோங்களேன்” என்று கணவனின் புலனின்பத்திற்கு இரை போட்டுக் கொண்டிருந்தாள் அந்த நவீன சாவித்திரி.

“ஆமாண்டி, அவா பேசுர இங்கிலிஷ் நமக்குப் புரியப்போரதில்ல, ஏதோ ஊமைப்படம் பாக்குறது மாதிரி பாக்க வேண்டியிருக்கும்…. தவிர, வயசுக்கு வந்த பொண்ண ஆத்துல வச்சிண்டு நான் அந்த மாதிரிச் சேனலெல்லாம் பாக்கப்படாது, ரொம்பத் தப்பு” என்ற ஐயர் ரிமோட் வைத்துத் தூர்தர்ஷண் சேனலுக்கே சென்று விட்டார். தூர்தர்ஷண் அனைத்துத் தனியார் சேனல்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில், நாட்டிலேயே முதலாவதாக 4K க்வாலிடியில் ஒளிபரப்புச் செய்து கொண்டிருந்தது..

அவர்கள் இந்தியப் பிரதமரின் உரையை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அவர் ஆங்கிலத்திலேயே பேசத் தொடங்கியிருந்தார், அதன் தமிழாக்கம் சப் டைட்டிலாக கீழே வந்து கொண்டிருந்தது. “இந்தியா பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாடு. மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. அனைவருக்கும் ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமில்லை. அந்நிய நாட்டு மொழியாயினும், அதனையே அனைவரும் ஏற்றுக் கொள்வதாலும், பெரும்பாலான தென்னிந்தியர்களால் புரிந்து கொள்ள முடிவதாலும், என்னால் சரளமாகப் பேச முடியாவிட்டாலும் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன். வட இந்தியர்களில் பெரும்பாலானாவர்களுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை” என்று தொடங்கினார்.

பிரதமரின் உரையின் சாராம்சம் இதுதான். “நாட்டிலுள்ள கருப்புப் பணத்தை ஒழிக்க, தடாலடியாக நான் எடுத்த நடவடிக்கை நாடறிந்ததே. கடந்த நான்கு மாதங்களாக, சாதாரண மக்கள் இதனால் பட்ட அவதிகளை, வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் முடித்துக் கொண்டு தற்பொழுதுதான் இந்தியா திரும்பிய நான் கேட்டறிந்தேன். தவிர, சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களையும் பாகிஸ்தானில் கள்ள நோட்டாக ஏற்கனவே அடிக்கத் தொடங்கி விட்டனர் என்று விவரமும் அறிந்தேன். என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏ.டி.எம் மற்றும் வங்கிகளின் தினசரிப் பிரச்சனைகளை என் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று உணர்ந்து விட்டேன். வீம்புக்காக இதே நிலையைத் தொடராமல், செய்த தவறை உணர்ந்து, திருத்திக் கொள்ள முடிவு செய்து விட்டேன். ஆம்., அதாவது ஐநூறு ரூபாய் நோட்டுக்களும், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் மீண்டும் செல்லுபடி ஆகும். தவிர, அனைத்து நிறுவனங்களும், பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என்று பாகுபாடின்றி தங்களின் அனைத்து அலுவலர்களுக்கும் இனிச் சம்பளங்களை நேரடியாகப் பணமாகத்தான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன். இன்று இரவு, சரியாக நடுநிசி பனிரெண்டு மணிக்கு இந்த நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் நிரந்தரமாக மூடப்படும். இனி அனைவரும் சுதந்திரமாகப் பண மூட்டைகளை வீட்டிலேயே பதுக்கி வைத்துக் கொள்ளலாம். அனைவரின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தையும் எடுத்துக் கொள்ள இன்னும் உங்களுக்கு மூன்று மணிநேர அவகாசம் உள்ளது. தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்து, நேரத்தை வீணடிக்காமல் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று உடனடியாக வரிசையில் நிற்கத் தொடங்குங்கள். ஜெய் ஹிந்த் !!!” என்று முடித்தார்.

“என்ன நடக்குறது இந்த தேசத்துல, இந்த ஆளு மத்தவாள விட நல்லவனா இருப்பான்னு பாத்தா, நன்னா துக்ளர் தர்பார் மாதிரின்னா நடத்துறான்” அலுத்துக் கொள்ள ஆரம்பித்தார் ஐயர். “ஏன்னா, டையத்த வேஸ்ட் பண்ணாதக்கி, பேங்க் போய் நம்ம பணத்தையெல்லாம் எடுத்துண்டு வந்துருங்கோ, பரண்ல கழுவிக் காய வச்சிருக்கிற ஊறுகாய் ஜாடில மூடி வெச்சுடலாம்” என்ற மங்களம் மாமியை விழுங்கும் வகையில் பார்த்துவிட்டு, “நேத்துத்தாண்டி அஞ்சு ரூபா ஃபீஸ் கொடுத்து பேலன்ஸ் என்கொயரி பண்னேன்… நூற்றி அறுபத்தைஞ்சு ரூபாதான் இருக்கு, இந்த மாசக் கடைசில மினிமம் பேலன்ஸ் இல்லன்னு அதையும் ஃபீஸ்னு சொல்லிப் புடுங்கிடப் போறா…” என்றவரிடம், “ஏன்னா, பிரதமர் பேசினதைக் கேட்கலயா, அதான் இன்னக்கு ராத்திரியோட பேங்கெல்லாம் இழுத்து மூடப் போறாளே..” என்றாள் மாமி. “போட்டும் விடு, அந்த நூற்றி அறுபத்தைஞ்சு ரூபாயை பெருமாள் உண்டியல்ல போட்டதா நெனச்சுக்கிறேன்… எவன் போய் க்யூவில நிப்பான்” விரக்தியுடன் முடித்தார் ஐயர்.

தங்களுக்குள் நடந்த பேச்சு சற்று நேரம் நிற்க, தொலைக்காட்சியில் பிரதமரின் அறிவிப்புக் குறித்துப் பல தலைவர்களும், பொது மக்களும் பகிர்ந்து கொண்டிருந்த கருத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினர். ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் “இது போன்ற தைரியம் மிக்க தலைவரை இந்த நாடு கண்டதில்லை. தாம் எடுத்த முடிவு தவறு என்று இதுவரை எந்த இந்திய அரசியல்வாதிகளாவது ஒப்புக் கொண்டுள்ளனரா? இந்த மாமனிதருக்கு மைனாரிட்டிகளின் ஆதரவு என்றும் உண்டு” என்று மனதாரப் பாராட்டினார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பிரச்சாரகர் ஒருவர், “இணையிலாத நம் பாரதப் பிரதமரின் ஆயுள், ஆரோக்கியம் மற்றும் மன உறுதி இப்பொழுதும் போல எப்பொழுதும் தொடர  பரலோகத்திலிருக்கும் பரம பிதாவை மண்டியிட்டுத் தொழுவோம்” என்றார். தமிழகத்திலிருந்து மத்திய அரசியலில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக உழன்று கொண்டிருக்கும், இன்றைய மத்திய ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் “இதெத் தமிளன்கு கெடச்ச வெற்றினு சொல்லுவேன்… அவா மட்டும் மரினா பீச்ல அப்டி கலாட்டா பண்ணாட்டா, பிரதமருக்கு விஷயமே தெரிஞ்சிருக்காது… நாந்தான் அவா பண்ன கலாட்டாப் பத்தியெல்லம் அவரண்ட புகார் கொடுத்தேன்…. தமிளனப் பொறுக்கின்னு நான் சொல்லிட்டேன்னு நெறய பேர் வருத்தப்பட்டா… என்ன அடிக்கக் கூட வந்தா… ஹார்வர்ட் யுனிவர்ஸிடில நான் பாடம் நடத்தரச்செ என் மேலே செருப்பு எறியப் பாத்தா… ஆனா, அவாள எல்லாம் நான் தப்பா நெனக்கல.. என் மேல இருந்த பாசத்தாலதான் அப்டிப் பண்ணினாள்னு நேக்கு நன்னாவே புரியர்து… அதுனால அவா நன்னா இருக்கணும்னு நான் லார்ட் ராமாகிட்ட வேண்டிண்டு, பிரதமருக்கு நன்றி சொல்லிக்கக் கடமைப்பட்ருக்கேன்”….

கேட்டுக் கொண்டிருந்த சுந்தரேச ஐயர், “நேக்கு, கொமட்டிண்டு வரது. அந்த டி.வி.யை அணைச்சுத் தொலையேன்.” என்று கேட்டுக் கொள்ள, மங்களம் மாமி டி.வி.யை அணைத்து விட்டு, “ஏன்னா, நம்மாத்து விஷயத்தப் பேசலாமே…. நம்ம சாரு சொன்னதக் கேட்டேளா?” என்று ஆரம்பித்தாள். “என்னடி சொல்ல வர” என்ற ஐயரைப் பார்த்து, ”அவ ஒரு வேற ஜாதிப் பையனக் காதலிக்கிறாளாம்….. சல்லிக்காசு வரதட்சிணை வாங்காம நம்ம சாருவை மாட்டுப்பொண்ணா ஏத்துக்க அவன் அம்மா தயாரா இருக்காளாம்.. அவா அப்பா கூட, நம்ம சாருக்குப் பிடிக்கலன்னா ஆத்துல எல்லாரும் நான்– வெஜ் சாப்புடுறத விட்டுடலாம்னு சொல்லிட்டாராம்.. என்ன ஒண்ணு, பையனுக்கு சுயமா ஒரு வேலை மட்டுமில்லை… அவ்வளவுதான்… உங்களைக்கூடக் கேக்காம நான் சரின்னு சொல்லிட்டேன்… நீங்க என்ன சொல்றேள்?” என்று முடித்தாள் மங்களம் மாமி.

சற்றும் சலனமோ, பதட்டமோ இல்லாமல் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரேச ஐயர், மங்களத்தின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்து, “அடுத்த வெள்ளிக் கிழமை, சுபயோக சுப முகூர்த்தம். வசந்த ருது. நம்ம சாருவை அந்தப் பையன் கையில புடிச்சுக் குடுக்க ரொம்ப ஷேமமான நாள். ஸிம்பிளா கல்யாணத்தை முடிச்சுடலாம். நீ போய் மாப்பிள்ள ஆத்துக்குச் சொல்லியனுப்பு” என்று சொல்லி முடிக்க, வீட்டுக்குள்ளிருந்து இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சாருலதா சந்தோஷமும் வெட்கமும் கலந்து, கால்களால் தரையில் கோலம் போட்டுக் கொண்டே, விழித்துக் கொண்டே கனவு காணத்தொடங்கியிருந்தாள்.

***********************************************************************************************************

பின்குறிப்பு: என்னங்க, இதுல வர்ர எதுவுமே நம்பற மாதிரியில்லையேனு யோசிக்கிறாங்களா? எழுந்து போயி, காலண்டர்ல தேதியைக் கிழிங்க… ஏப்ரல் ஒண்ணுனு காட்டுதா?

   வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad