banner ad
Top Ad
banner ad

கயல்விழியும் கடல் கன்னியும்

கடற்கரையோரக் குடிசையில் கீரிமலைக்கிராமத்தில் கயல்விழி எனும் பெண் தனது அம்மா அப்பாவுடன் வாழ்ந்து வந்தாள். கடலோரக் குடிசையோ சற்று பழையது, பூவரச மரத்தூண்கள் காலாகாலத்தில் சற்று உக்கி வாசல் சற்று தொய்ந்து போய்க் காணப்பட்டது. மேலும் யாழ்ப்பாண வலிகாமம் வடக்குப் பருவகாலத்தைப் பொறுத்து ஒன்றில் வடகிழக்கு வாடைக்காற்று மழை பனையோலையால் அமைக்கப்பட்ட கூரையில் இருந்து இடையிடையே மழை நீர் ஒழுகவும், அல்லது செவ்வானச் சூரியன் செங்கதிர்கள்  தூசியின் ஊடுறுழையவும் செய்தது.

கயல்விழி காலையில் நித்திரை விட்டு எழும்புவாள். அவள் காலைக் கடன்கள் முடித்து மண்வெட்டியுடன் தமது காய்கறித் தோட்டம் செல்லுவாள். வெய்யில் வெப்பம் அதிகமானால் தனது தலையில் உள்ள துணியால் கழுத்தையும், முகத்தின் வியர்வையையும் துரைத்துக் கொள்ளுவாள். அப்பா “கயல்விழி ஏமலாற்தாகமல் உதவு மகள்” என்று தோட்டத்தின் கிணற்றுக்கு அருகில் இருந்து குரல் கொடுத்தார்.

கிணற்றில் இருந்து நீர் பாச்சிட வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரைப் பாத்திகளில்  அடைத்தாள் கயல்விழி, பாத்திகள் மண் மடைகளால் ஆன சிறு பெட்டிகள். இந்த சதுர , செவ்வக மண் மடைகளின் மத்தியிலே தான் காய்கறிச் செடிகள் வளர்க்கப்படும் யாழ்ப்பாணத்தில்.

ஒரு நாள் மதியம் உச்சி வெய்யிலிலே கயல்விழி தனது மண் வெட்டியைக் சுழற்றி எறிந்து விட்டு ஓடினாள். வேப்பமரம், ஆலமரங்களுக்குள்ளால் புகுந்து, பனை மரத்தோப்புக்கள் தாண்டி, மணல் திடர்கள் தாண்டி, பெருங்கோரைப் புற்களுக்கு அருகே பளிங்கு வெள்ளை மணலிடையே வந்து சாய்ந்து இளைப்பாறினாள். இதுவே கயல்விழிக்குப் பிடித்த ஒய்வு எடுக்கும் இரகசிய பதுங்கும் இடம்.

கயல்விழி மணலில் குந்தியிருந்தவுடன் தனது தலைபில் இருந்து துணியை காற்றினாள். இதமான உவர் கடற்காற்று அவள் வெய்யில் சுட்ட முகத்தை வருடியது. தனது கண்ணை இலேசாக மூடிக் கொண்டு வாய் விட்டுப்பாடினாள். கயல்விழி தான் தனியாக இருந்து பாடியதாக எண்ணினாலும் யாரோ அவள் பாட்டைக் கேட்டு விட்டனர். அடுத்து அவள் கடற்கரையில் ஒரு அதிசயத்தைக் கண்டாள்.

கீரிமலை கொடு வைகாசி வெய்யிலிலும் பவளம் போன்ற கண்களுடன், பரந்த தலை முடியுடன் பாங்காக நீலக்கடல் நீரில் எழுந்தாள் அழகான ஒரு மண்ணிறப் பொன்மேனிக் கடல் கன்னி. கடல் கன்னியின் கண்கள் பளிங்கு வெள்ளை ; விழிகள் கருமையானவை. அவள் தலை மயிரோ கருமை சேர்த்த பாசி நிறப்பச்சை ஜொலிப்புடையது. அவள் கூந்தலில் தங்கம் போன்ற மினுங்கு சிப்பிகள் அலங்காரமாய் இருந்தன. கடல் கன்னியின் இடுப்புத் தொட்டு மீன் போன்ற பின் வால் செதில்கள்; வெய்யிலில் வயமாக கரு நீலம் பச்சை நிறமாக மினுங்கியது.

கயல்விழி சற்று அதிர்ச்சியுடன்  தயங்கினாள். எனினும் கடல் கன்னி “தயவான குரலில் எப்படி உள்ளாய் இளம் பெண்ணே, உனக்கு இந்த வெய்யில் கொதிப்பாக இருக்குமே என்றாள். கயல்விழி திகைப்புடன் பேச்சு இல்லாமல் கடற்கன்னியை நோக்க, கடல் கன்னி ” வாயேன் கடலில் நீந்தி வெய்யில்  வெப்பம் விலக்கலாம்” என்றாள்.

கயல்விழிக்கு அவள் பெற்றோர்கள் பல முறை எச்சரித்துள்ளார்கள் கீரிமலைக் கடலில் சுழல் நீர்ப் பொறியுள்ளது. அதற்குள் அம்பிட்டால் அல்லது பிடிபட்டால் நீர்ச் சுழி அப்படியே ஆழ்கடலிற்கு இழுத்துச் சென்று விடும்.

கயல்விழி சொன்னாள் “கடல் கன்னியாரே எனக்கு நீந்தத் தெரியாது இதனால் கடலினுள்  வர மாட்டேன்”. கடல் கன்னி அதற்கு “நீ விரும்பினால் நான் உனக்கு நீந்த கற்றுத் தருகிறேன் என்றாள். பயப்படாதே பெண்ணே எனக்கு உன் பாட்டுக்கள் பிடிக்கும், எனவே நான் உன்னைக் காப்பேன்” என்றாள்.

எவ்வாறு இருப்பினும் கயல்விழி கடல் ஓர நீரில் மட்டுமே சற்று நனைந்து கொண்டாள். எனினும் கடல் கன்னியோ பல தடவை நீரின் உள் மூழ்ந்து மீண்டாள். அவள் ஒவ்வொரு தடவை மீண்டபோதும் பவளம், செம்மாணிக்கச் சிவப்பு, செம்மஞ்சள்,  மரகதம் போன்ற பச்சை, கடல் போன்ற ஜொலிக்கும் நீல சிப்பி, சங்குகளைப் பொக்கிஷமாகக் கொண்டு வந்தாள்.

நேரம் சாயந்தரமாக சூரியன் மேற்கில் கடலில் மறையத் தொடங்கியது. அடடே மறந்து விட்டேன் கோழிகளுக்குத் தீனி போட்டு,, கிணற்றில் வீட்டுக்குக் குடத்தில் நீர் அள்ள வேண்டும் என்றாள் கயல்விழி. கடல் கன்னி கயல்விழி கையில்  ஒரு தங்க நாணயத்தை வைத்து இதை உன் குடும்பத்துக்கு கொடு என்றாள், மேலும் என்னைச் சந்திக்க விரும்பினால்  வழக்கம் போல பாடு” என்றும் கூறினாள். அடுத்து கடல் கன்னி கீதி மலைக்  கடலில் குதித்து மறைந்து விட்டாள்.

கயல்விழியும் குடிசைக்கு விரைந்தாள். அவன் பெற்றார் அவள் வீட்டுக் கடமைகளைச் செய்யவில்லை எனக் கடிந்து கொண்டனர். அப்போது தங்க நாணயத்தை அப்பா கையில் வைத்தாள். “எங்கிருந்து இது வந்தது” என்று கேட்டார் அம்மா, இதைக் கடலோரத்தில் கண்டேன் என்றாள் கயல்விழி, “சரி அப்படியானால் நாளையும் கடற்கரைப் பக்கம் போய்த்தங்க நாணயம் தேடு” என்றார் அப்பா.

அதற்கென்ன அப்பா அப்படியே செய்கிறேன்  என்றாள் கயல்விழி அவளுக்கோ உன் மனதில் ஆனந்தம் தான் மேலும் கடல் கன்னியுடன் கலந்து குலவலாம் .

இதன் பின்னர் ஒவ்வொரு காலையும் அமைதியான நாள் பொழுதில் கயல்விழி கடற்கரை சென்று வந்தாள். கடல் கன்னியும் கயல்விழிக்கு ஆழ்கடலில் நீந்தக் கற்றுத் தந்தாள். சில சமயம் கடலில் போட்டி போட்டு நீந்தினர், ஒரு நாள் அலைகள் ஒரத்தில் கயல்விழியும், கடல் கன்னியும் பேசிக்கொண்டனர்.

கயல்விழி சொன்னாள் நான் குடாநாட்டு குடில் வாழ்க்கை விட்டு அப்பால் போய் பெரிய பட்டினத்தில் வாழப்போகிறேன், கடல் கன்னி சொன்னாள்  எனது வீடோ ஆழ்கடலில் மனிதர்க்கும் அப்பால் என்றாள். நீ விரும்பினால் என்னுடன் வரலாம் என்றாள்.

“ நன்றி, ஆனால் அது சாத்தியமில்லை” என்றாள் கயல்விழி,  எனினும் கடல் கன்னி கயல்விழிக்குச் சிறு தங்க நாணயத்தைக் கொடுத்து விட்டுச் செல்வாள், இதை கயல்விழி குடும்பம் உணவு உடை வாங்க அவள் அப்பாவிடம் கொடுப்பாள். ஆனால் அப்பாவோ குடிகாரர் அவர் பணத்தைப் போதை தரும் மதுவில் செலவழித்து விடுவார். எனவே கயல்விழி குடும்பம் தொடர்ந்தும் பாழடைந்த ஓட்டைக் குடிசையிலேயே வாழ்ந்தனர்.

நிதமும் கயல்விழி எவ்வாறு தங்க நாணயங்கள் பெற்று வருகிறாள் என்று பக்கத்து வீட்டு சுமித்திரையும், அவள் கபடக் கள்வன் கணவன் தீசனும் அறிய விரும்பினர்.

ஒருநாள் காலை சுமித்திரை களவாக கயல்விழியைக் கடற்கரைக்குத் தொடர்ந்தாள். கயல்விழி பாடியதையும் பொங்கும்  கடலில் இருந்து கடல் கன்னி வெளிவந்து அந்திமாலை தங்க நாணயம் கொடுத்ததையும் கவனித்துக் கொண்டாள்.

அந்த இரவு கயல்விழி  தூங்கும் போது, அயல் வீட்டார் சதி த்திட்டம் போட்டனர்.   தீசனிடம்  சுமித்திரை  தான் அன்று மறைமுகமாகக் கடற்கரையில் அவதானித்ததைச் சொன்னாள்.

தீயதீசனும் “ நான் அந்த கடல் கன்னிப் பிடித்தால் ரொக்கப் பணத்திற்கு விற்று விடுவேன் என்றான்,

அடுத்த நாள்  அதிகாலை தீசனும், சுமித்திரையும் தமது மரக்கலத்தில் கடல் போயினர், சுமித்திரையும் கயல்விழி பாடும் அதே பாட்டைப் பாடினாள். கடல் கன்னியும் அலைகள் இடையே எழுந்தாள். உடனே தீசனும், சுமித்திரையும் வலை போட்டு ஓடத்தினுள் இழுக்கப் பார்த்தனர், கடல் கன்னியோ பெரும் வலையையும் அதிக ஆத்திரத்தில்  இழுத்துக் கொண்டு ஆழ்கடல் சென்று மறைந்து விட்டாள்.

சூழ்ச்சி சுமித்திரை பலதடவை கயல்விழி போல்  பாடியும்  கடல் கன்னி வரவில்லை. எனவே முயற்சியைக் கைவிட்டு விட்டு ஒருவரை ஒருவர் சாடி திட்டி சண்டை போட்டு வீடு திரும்பினர். இவர்கள் இது பற்றி ஒன்றையும் அயல் குடிசை கயல்விழிக்குக் கூறவேயில்லை.

காலை நேரம் கயல்விழியும் கீரிமலைக் கடல் கரையில் தன் பாட்டைப்  பாடினாள் ஆயினும் வழக்கம் போல கடல் கன்னி வரவில்லை. கயல்விழியும்  தன் கடல் நண்பியை இழந்த சோகத்துடன்  வீடு திரும்பினாள் அவள் வீடு மீண்டும் ஏழ்மையின் கைகளில் வதைபட்டது,

துயர் தீர கயல்விழி தமது தோட்டத்தில் நீண்ட நேரம் வேலை செய்து இறுதியில் நோய்வாய்பட்டாள் மேலும் குடிசையில் ஓலைப் பாயில் படுத்த படுக்கை ஆனாள். அப்பொழுது அவள் கனவில் கடல் கன்னி வந்தாள். “கயல்விழி நான் இன்னும் ஒரு தடவை உன்னை என் வீடு செல்ல அழைக்க வருவேன். விரும்பினால் கடல்கரை வந்து பாடு” என்றாள்.

கடும் நோயினால் களைத்த கயல்விழியும் கரை வந்து மெதுவான குரலில் பாடினாள். அவள் ஆனந்தத்திற்கு நிகராக கடல் கன்னி வந்து அரவணைத்து ஆழ்கடலிற்குள் அழைத்துச் சென்றாள்.

கடல் கன்னி கயல்விழியைத் தனது பவளப்பாறைகளால் பாதுகாக்கப்பட்ட பாரிய கடல் குகை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அந்த வீடு பளீர் என மினுங்கும் சிப்பி, முத்து,சங்களால் அலங்கரிக்கப்பட்ட மிருதுவான பவள வீடு. உள்ளே செளகரியமான வெப்பம் உடைய ஒளிக்கதிர்கள் வேறு வீசின. கயல்விழி இதுவே இனி உனது வீடு இவ்விடத்தில் உனக்கு ஒரு வித ஆபத்தும் வராது என்றாள்.

கயல்விழி சில காலங்களாக சந்தோஷமாக இருந்தாள். கடல் கன்னி தனது பாட்டுக்களைக் கற்றுத் தந்தாள். மேலும் முத்து, சிப்பி, பொன்,பவளம்,  மாணிக்கம், என பல வகை பரிசுகளையும் பொழிந்தாள். இதைவிட கயல்விழி கற்ற பல புதிர்களையும் கூறி கடல் கன்னியுடன் விளையாடினாள்.

சில காலத்தில்  கயல்விழி தனது அம்மா, அப்பா மற்றய மனிதர்கள் குரல்களைக் கேளாது ஏக்கப்பட்டாள். மேலும் பனந் தோப்பு மணிப் புறா, வேப்பமரக் குயில் கூவல், அழகிய மல்லிகைப்பந்தல் வாசம், செல்வரத்தைப் பூ, மஞ்சள் செவ்வந்தி மலர்கள், இதமான நீல வானம், பஞ்சு மிட்டாய் போன்ற வெண்முகில்கள் இவை யாவற்றையும் காண விரும்பினாள்.

என் கடல் கன்னித் தோழியே என்னை மீண்டும் என் குடிசைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்வா யா என்று வேண்டினாள். முதலில் கடல் கன்னி அனுமதிக்க விரும்பவில்லை. ஆயினும் கடல் கன்னி மனம் நெகிழ்ந்து, கயல்விழியின் ஆசையை நிறைவேற்ற ஒப்புக் கொண்டாள்.

கடல் கன்னி கயல்விழிக்கு நினைவூட்டினாள், “நீ இவ்விடம் நெடுநாட்கள் வாழ்ந்து விட்டாய். நீ இவ்விடம் சிறு பெண்ணாக வந்தாய், இப்போது நீ வயதுக்கு வந்த பெண் எனவே நான் உனக்கு வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷங்களைத் தருகிறேன். சரியான கணவனை மணந்து இருக்கும் பொக்கிஷத்தை வாழ் முழுதும் பேணி செழித்து வாழு” என்றாள்.

கயல்விழியைக் கரை சேர்த்தாள் கடல் கன்னி. அவளும் தனது அம்மா, அப்பாவுடன் சந்தோசமாக கூடிக்குலவினாள். குடிகார அப்பாவிற்கும், பக்கத்து வீட்டாருக்கும் அறிவுரை தந்தாள். தான் பெற்ற பொக்கிஷத்தைப் பயனுடன் பராமரித்து பண்பான,புத்திசாலியான கணவனைக் கலியாணம் செய்து செழிப்பாக வாழ்ந்தாள். அவளது  கடல் கன்னி நண்பியும் மன நிறைவுடன் ஆழ்கடல் திரும்பினாள்.

  • யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad