Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கண்ணம்மாவின் பாரதி


மாலைச் சூரியன் மஞ்சளாய் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். சிங்காரச் சென்னையில் தினந்தோறும் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் கிட்டத்தட்ட அதே மணித்துளியில்தான்… மாலை 5.55 அல்லது ஓரிரு நிமிடங்கள் முன் பின்னாக இருக்கலாம். அந்த நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால், சூரியனும் நாள் முழுதும் உழைத்த களைப்புத் தீர ஓய்வெடுப்பதற்காக மேகங்களுக்குப் பின்னே ஒளிந்து, வானத்தின் அடிப்பகுதி நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவனது மஞ்சள் கிரணங்கள், மெரினா கடற்கரையின் மணலையும் மஞ்சள் தூள் போலக் காட்டிக் கொண்டிருந்தன. அந்த மஞ்சள் கிரணங்களுக்கு மத்தியில், மணல் பரப்பில் கால் நீட்டிக் கொண்டு, ஒருவருடன் ஒருவர் அன்யோன்யமாய்க் கை கோர்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் கணேஷும், பாரதியும். நீட்டிக் கொண்டிருந்த கால்களின் நுனியில் அலைகள் அவ்வப்போது வந்து கைகுலுக்குவதுபோல் தொட்டுவிட்டுச் சென்றுகொண்டிருந்தன. வழக்கத்துக்கும் மாறாக அலைகளின் வேகம் மிகவும் உக்கிரமாய் அமைந்திருந்தது. அமாவாசை அல்லது பௌர்ணமி நெருங்குகிறதோ?


“ஹேய் பாரதி…. என்ன பியூட்டிஃபுல்லான விஷுவல் பாத்தியா.. நேக்கு ரொம்பப் பிடிச்ச சன்செட்… சன் முழுசா விழுந்தப்புறம் டார்க்கா இருக்குற வேவ்ஸ் பிரம்மாண்டமா இருக்கும் தெரியுமா…. நினைச்ச மாத்திரத்தில பாரதி பாட்டுத்தான் நினைவுக்கு வருது….

”நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்
சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன்….. “


சந்தடி சாக்கில் பாரதியின் ஞானப்பாடலை ரொமான்ஸ் பாடலாக மாற்றி, தனது காதலி பாரதியை நோக்கிப் பாடிக் காட்டினான். பாடிக்கொண்டே அவளது முகத்தினடியில் வலக்கரம் வைத்து நிமிர்த்தி, அவளது கூரிய கண்களைத் தன் கண்களால் சந்தித்தான். இருவரின் முகத்திற்கு மத்தியிலும் இருந்தது ஒரு ஆறு இஞ்ச் இடைவெளி மட்டுமே. மௌனமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சில மணித்துளிகள் அமர்ந்திருந்த பின்னர், அவளது முகத்தை அவன் மேலும் நெருங்குவதை உணர்ந்த பாரதி, நளினமாய் அவன் பிடி விலக்கி, “நோ… நோ. நோ… எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்… இதெல்லாம் கல்யாணத்துக்கப்புறந்தான்…. “ என்று அவசர அவசரமாய் எழ எத்தனித்தாள்.


கடந்த பல நாட்களாகவே கணேஷின் மனம் முழுவதும் காமம் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. அவளைத் தனியாகப் பார்க்கும் வேளையிலெல்லாம் எப்படியாவது ஸ்பரிசத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பான், அவளும் நளினமாய் விலகுவாள். பலமுறைத் தன் இதழால் அவள் மேனி ருசிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்ததுண்டு. அவளிடம் நேரடியாய்க் கேட்பதற்குப் பயம். தன்னை விட்டு விலகிவிடுவாளோ என்ற பயத்தைக் காட்டிலும், தன்மீது அவள் வைத்திருக்கும் மதிப்பிற்குக் குறைவு வந்துவிடுமோ என்ற அச்சமே அதிகம். பல இரவுகளில் அவளின் உடல் அவன் கனவுகளிலும் கற்பனைகளிலும் வந்து போனது. அந்தக் கற்பனைகளும், கனவுகளும் வெளியில் சொல்லுமளவு நேர்மையானவையல்ல என்பதை அவன் உணர்ந்திருந்தாலும், அவனால் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு காமம் தலை விரித்தாடிக் கொண்டிருந்தது.


இந்த எண்ணங்களால் உந்தப்பட்ட அவன், தற்செயலாய் அமைந்த சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினான். சேப்பாக் ஸ்டேடியத்திற்கு எதிரில் பேச்சுலர் மேன்ஷனின் வாழும் நண்பன் ஒருவன் சொந்த ஊருக்குப் போயிருக்கிறான். வருவதற்கு இரண்டு நாட்களாகும். அவன் பேச்சலர் ரூம் சாவி இவனிடம். பாரதியை எப்படியாவது பேசி அந்த ரூமுக்கு அழைத்துச் சென்று விட்டால்? அந்த எண்ணத்துடனே இன்று பீச்சுக்கு வந்த அவன், சூரியன் சாய்ந்து இருள் வரும்வரை அவளைத் தாமதப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தான். அவனின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்றவாறு, கடலலைகளின் உக்ரம் மிகவும் அதிகரித்து, அவை சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன.


சீறிப் பாய்ந்த அலைகள் மேலும் முன்னோக்கி வர, பாதம் தாண்டி கால்களின் மேற்புறம் நனைக்குமெனப் பயந்த பாரதி, ஏற்கனவே அவன் மனநிலையும் உணர்ந்ததால் வீட்டிற்குக் கிளம்பலாம் என எண்ணி அவசரமாய் எழுந்தாள். எழுந்தவளின் கைகளைப் பற்றி மீண்டும் அமர வைக்க முயன்று கொண்டிருந்தான்.

“இன்னும் கொஞ்ச நாழி பேசிண்டிருக்கலாம்.. ப்ளீஸ்….” கணேஷ்.


“கணேஷ், நாழியாயிண்டிருக்கு, இப்ப நடக்க ஆரம்பிச்சா இருட்டுறதுக்குள்ள ஆத்துக்குப் போயிடலாம். அம்மா தேடுவா… தவிர, சீ வேற ரொம்ப ரஃப்ஃபா இருக்கு.. இட்ஸ் அ குட் ஐடியா டு லீவ்” என அவசரமாய்த் தன் கவலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தாள் பாரதி.


“ஹேய்.. ப்ளீஸ்… என் மனசு பூர்த்தி எவ்வளவு சட்டிலாயிருக்கு தெரியுமா…. நான் ஆகாசத்துல மிதந்துண்டிருக்கேன்… இப்பப் போயி முடிக்க வேண்டாம்.. வாண்ட் டு எஞ்சாய் திஸ் வெரி மொமண்ட் வித் மை ஃபேவரிட் கேர்ள்… ப்ளீஸ்….” கணேஷ் விடுவதாயில்லை…


”அது சரி… கவிச்சக்ரவர்த்திக்கு பாரதியார் நினைப்பா, இல்ல இந்த பாரதி நினைப்பா… சொன்னேயானா நான் இருக்குறதா போறதான்னு டிசைட் பண்ணுவேன்..” அவளின் குரலிலிருந்த கொஞ்சம் நகைச்சுவையும் நிறைந்த காதலும் புரிந்ததும், அவள் போய்விட மாட்டாள் என்ற நம்பிக்கை தோன்றியது கணேஷிடம்.


“நேக்கு ரெண்டு பாரதியும் உசுருதான்.. அந்த மகாகவியே இந்த மகாராணியா வந்திருக்குறதா நேக்குத் தோண்றது…. “ புகழ்ச்சி வார்த்தை மற்றவரின் மனத்தை மயக்கும் என்று நன்றாக உணர்ந்த கணேஷ், அதனை பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்தினான். தன் மனம் முழுதும் வியாபித்திருந்த காதலையும், நினைத்தாலே இளகிவிடும் மகாகவி மீதான பக்தியையும் உண்மையிலேயே ஒன்றாகப் பார்த்த அவனின் அந்தப் பொழுதைய எண்ண ஓட்டம் உண்மையாய்க் காதலித்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளத் தக்கது. அவர்கள் ஒருவரை ஒருவர் முதன்முறையாகச் சந்தித்ததிலும், காதலர்களாக மாறியதிலும் மகாகவி பாரதியின் பங்கு நிறைய உண்டு.


டிசம்பர் 11ஆம் திகதி…. மகாகவியின் பிறந்த நாளையொட்டி சென்னைப் பல்கலைக் கழகம் நடத்திய, கல்லூரிகளுக்கிடையேயான பேச்சுப் போட்டியின் இறுதிச் சுற்று. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கல்லூரிகளிலிருந்து பல மாணவர்கள் கலந்து கொண்டு பல சுற்றுகள் போட்டியிட்டனர். கடைசியாக, மூவர் மட்டும் இறுதிச் சுற்றுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த மூவரில் இருவர் கணேஷும், பாரதியும். சென்னை திருவல்லிக்கேணியில் இரண்டு மைல் சுற்றளவுக்குள் இருவரின் வீடுகளும் இருப்பினும், அவர்கள் ஒருவரையொருவர் முதன்முறையாகப் பார்த்துக் கொண்டது அந்த இறுதிச் சுற்று நடைபெற்ற சென்னைப் பல்கலைக் கழக வளாக மேடையில்தான். பேச்சுப் போட்டியில் கணேஷுக்கு முன்னதாக மேடையேறிய பாரதி, ”செந்தமிழ்த் தேர்ப்பாகன், சிந்துக்குத் தந்தை, நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, காடு கமழும் கற்பூரச் சொற்கோ….. “ என ஆரம்பித்து பாரதியின் பெருமைகளைத் தங்கு தடையின்றி, சரியான ஏற்ற இறக்கங்களுடன், அழகான உச்சரிப்பில் சொற்பொழிவாற்றி முடித்தாள். வாயைப் பிளந்தவாறு கேட்டுக் கொண்டிருந்த கணேஷுக்கு, அவளின் பேச்சு முடிந்து அடுத்துத்தான் பேசவேண்டுமென்பது ஒரு கணம் மறந்தே விட்டது.


வெண்ணிறச் சுரிதாரும், சற்றுப் பூக்களுடனான டிசைனில் அணிந்த பச்சை நிறத் துப்பட்டாவும், படிய வாரிப் பின்னலிட்டிருந்த நீண்ட நெடுங்கூந்தலும், அதில் பதமாய் ரசனையுடன் வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான மல்லிகையும், புருவங்கள் இரண்டும் சற்றே ஒன்று சேர, அதன் மத்தியில் வைக்கப்பட்ட சிவப்பான, ஆனால் சிறிய, ஸ்டிக்கர் பொட்டும் பார்த்த கணத்திலேயே கணேஷை முழுவதுமாய்த் தன்னையே இழக்கச் செய்தன. அவள் பேசிய பாரதி, அவளின் ரூபமாய் வந்ததாகவே நம்பத் தொடங்கினான். அடுத்ததாய் மேடையேறிய அவன், மனதெங்கும் நளினமும் காதலும் ததும்ப, தானே சொந்தமாய் எழுதி வைத்திருந்த கவிதை நடைப்பேச்சை சற்றே தடுமாற்றத்துடன் பேசி முடிக்க, நடுவர்களின் முடிவு அறிவிக்கப்பட்டது. வேறென்ன, அவள் முதலிடம் கணேஷ் இரண்டாமிடம். அவனுக்கு இதில் சற்றும் வருத்தமேயில்லை.


போட்டி முடிந்து அனைவரும் கலைந்து செல்லத் தொடங்க, அரங்கத்தின் வெளியே வந்து, நண்பர்களுடன் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தான் கணேஷ். நண்பர்களனைவரும் அவனுக்கு முதல் பரிசு கிடைக்காதது குறித்து அவரவர்களின் பாணியில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர். அவன் மட்டும் அது குறித்து நினைத்ததாகவே தெரியவில்லை. மனம் முழுதும் அந்த வெள்ளைச் சுரிதார்…


நினைத்துக் கொண்டேயிருந்தவன், “ஹலோ” என்ற பெண்ணின் குரல் கேட்டுச் சட்டெனத் திரும்பிப் பார்க்க அவனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. முன் தலையில் படியாமல் காற்றில் பறந்து கொண்டிருந்த சில முடிகளை நளினமாய்க் கோதி விட்டுக் கொண்டு, கோவைப்பழ இதழ்களால் “என்னைத் தெரியர்தா?” எனக் கேட்டாள் அந்தப் பெண். பேசிக் கொண்டிருந்த அனைவரும் சட்டென மௌனமாக, வாயைத் திறந்து பதில் சொல்ல முயன்ற கணேஷ் மட்டும் வார்த்தை வராமல் வெறும் காற்று மட்டும் வெளிவருவதை உணர்ந்தான். சற்றே சுதாரித்துக் கொண்டு, “யெஸ்… நன்னாத் தெரியரது…. நீங்க, நீங்க… பாரதி… ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கின பாரதி… ரொம்ப நன்னாப் பேசினேள், ஐ ஹேவ் பிகம் அ ஃபேன் ஆஃப் யூ” என்று தட்டுத் தடுமாறிச் சொல்லி முடித்தான்.


“இல்லயில்ல… நான் இங்க உங்களப் பாக்க வந்ததே உங்களுக்குத்தான் முதல் பரிசு கிடச்சிருக்கணும்னு சொல்லத்தான்… நீங்க பேசினத நான் முழுசாக் கேட்டேன்.. எவ்வளவு அருமையான தமிழ்… சந்தம்…. அழகான நடை… நீங்களே சொந்தமா எழுதினதுன்னு கேள்விப்பட்டேன்… என்ன மாதிரி யாரோ எழுதிக் கொடுத்தத மனப்பாடம் பண்ணி ஒப்பிக்காம… சொந்தமா எழுதின உங்களுக்குத்தான் அந்தப் பரிசு கிடைச்சிருக்கணும்… அந்த முழுப் பேச்சையும் நான் படிச்சுப் பாக்கணும், தருவேளா? நாம தொடர்ந்து ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியுமா?…..”


கணேஷுக்குத் தன் கால்களுக்குக் கீழே உலக உருண்டை கழன்றே போனது போன்ற உணர்வு. ஆகாயத்தில் பறப்பது போலவும், முண்டாசுக் கவிஞன் தன் பொற்கரங்களால் தன்னைத் தூக்கிக்கொண்டு உலகப் பந்தை மேலிருந்து காட்டுவது போலவும் கற்பனைகள். எவனுக்கு வேண்டுமந்த முதல் பரிசு? அது கிடைக்காததால்தானே இந்த அறிமுகம்.. இவளை நெருக்கத்தில் பார்க்க என்ன தவம் செய்தேன்? இவளுடன் நட்பாமே? ஒரு பளிங்குச் சிலையும் அதன் கீழே போடப்பட்டிருக்கும் மிதியடிக் கருங்கல்லும் நட்பாக இருக்க முடியுமா? பல எண்ண ஓட்டங்களுடனிருந்த கணேஷ், தான் எழுதிய கவிதை நடைக் கட்டுரையையும், தனது வீட்டு ஃபோன் நம்பரையும் மகிழ்ச்சியாகப் பரிமாறிக் கொண்டான். அன்று தொடங்கிய நட்பு, தினமும் ஃபோனில் பேசுவதாய் வளர்ந்து, வாராவாரம் நேரில் பார்த்துக் கொள்வதாய்த் தொடர்ந்து, அடிக்கடி பீச்சுக்கு வருவதாய் மாறி, அந்நியோன்னியக் காதலாய் மலர்ந்திருந்தது.


ரி.. உக்காந்துட்டேன்… இப்ப என்ன வேணும்?” கேட்டுக் கொண்டே மீண்டும் அமர்ந்தாள் பாரதி. இம்முறை அவனுக்கு இன்னும் அருகாமையில் அமர்ந்தாள். அவன் ரொமான்ஸ் மூட் அவளிடமும் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அமர்ந்த அவள், ஒரு கையால் அவனைப் பின்புறமாக அணைத்தாள். வழக்கத்திற்கு மாறான தேக ஸ்பரிசத்தை உணர்ந்த கணேஷ், சற்றே ஆச்சரியத்திற்குள்ளானான். ”கணேஷ், ஐ வாண்ட் யூ டு நோ… ஐ ஹேவ் லாஸ்ட் மைசெல்ஃப் டு யூ லாங்க் டைம் அகோ… திஸ் இஸ் பியாண்ட் ஃபிஸிகல் அட்ராக்‌ஷன்… நான் நோக்கு ஆம்படையாளா மனசால வாழ்ந்துண்டு இருக்கேன்… பாரதியோட கண்ணம்மா போல…. என் பேரு பாரதி, ஆனா நான் உன்ன பாரதியா நெனச்சு கண்ணம்மாவாவே வாழ்ந்துண்டிருக்கேன்….


வீசு கமழ் நான் உனக்கு, விரியுமலர் நீ எனக்கு;
பேசுபொருள் நான் உனக்கு, பேணுமொழி நீ எனக்கு;
நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியது நானுனக்கு;
செல்வமது நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை ஏதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே என் காதலா !!!


பாரதியின் கண்ணம்மாப் பாட்டை லாவகமாய்க் காதலி, காதலனைப் பார்த்துப் பாடுவதாய் மாற்றி அமைத்துத் தன்னை நோக்கி அவள் சொல்வதைக் கேட்டதும் கரைந்தே போய் விட்டான் கணேஷ். அவன் தொடர்ந்து அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருக்க, ”ஃபிஸிகல் ரிலேஷன்ஷிப் இஸ் நத்திங்க்…. ஐம் ரெடி எனி மொமெண்ட்..” என்று சொல்லி அவன் மடியில் சாய்ந்தாள்.


பல நாட்கள் பல விதமாய்க் கற்பனை செய்திருந்தவனின் மடியில் அவன் கற்பனை செய்து வந்த சித்திரம் முழுவதுமாய்த் தன்னையே ஒப்படைக்கிறாள். அந்தச் சமயத்தில் தன் மடியில் சாய்ந்து எதற்கும் தயாராயிருக்கிறாள். அவளது பேச்சையும், பாரதி பாட்டையும் கேட்டதும் அவன் மனது முழுதும் வியாபித்திருந்த காமம் சென்ற இடம் தெரியவில்லை. பாக்கெட்டில் உறுத்திக் கொண்டிருந்த நண்பனின் வீட்டுச் சாவி ஒரு பொருட்டாய்த் தோன்றவில்லை. தாய்மைப் பாசத்துடன் அவள் தலையைக் கோதி விட்டுக் கொண்டே, “ஃபிஸிகல் ரிலேஷன்ஷிப்பெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான் டியர்” என்று மெதுவாய்க் கிசுகிசுத்தான். கடலில் அலைகளின் உக்கிரம் திடீரெனக் குறைந்து, சாதாரணமாக மாறத் தொடங்கியிருந்தது.

– வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published.

banner ad
Bottom Sml Ad