banner ad
Top Ad
banner ad

பகுத்தறிவு – பகுதி 7

(பகுதி 6)

சென்ற இதழில் ரமணர் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வில் நடந்த பல சிறிய, ஆனால் அரிய நிகழ்வுகளையும், அவை காட்டும் பகுத்தறிவையும் தொடர்ந்து பார்ப்போம்.

ரமணர் குகையில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்று ஏற்கனவே பார்த்தோம். அவரின் அதீத ஞானத்தைச் சிறிது சிறிதாக உணரத் தொடங்கிய கிராம மக்கள் அவரைத் தினமும் வந்து பார்க்கத் தொடங்கினர். தினமும் வந்து பார்க்கத் தொடங்கியவர்கள், அவருக்கு உணவு, உடை எனக் கொடுத்துப் பாதுகாக்கத் தொடங்கினர். அவரின் பாதுகாப்பிற்காக அவரிருக்கும் இடத்திலேயே தங்கத் தொடங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக, அந்தக் குகையைச் சுற்றி, குடிலமைக்கத் தொடங்கினர். அந்தக் குகை இருந்த மலையின் அடிவாரத்தில் இன்று இருக்கும் ஆஸ்ரம் நாளடைவில் உருவான கதை இதுவே.

ரமணர் சமையற்கலையில் வல்லுனர், மிகவும் ரசித்துச் சமைப்பவர். சுவையாகச் சமைப்பதுடன் அதில் ஒரு முறையையும் வகுத்து, விரைவிலும் செய்து முடிப்பாராம். காய்கறி நறுக்கினாறென்றால், ஒவ்வொரு துண்டும் ஒரே அளவிலிருக்குமாம், அந்த அளவுக்குச் செய்யும் செயல்கள் அனைத்தையும் உயர்ந்த தரத்துடன் செய்து முடிப்பவர் அவர். தன் பாட்டிற்குச் சமையலுக்கான காரியங்களைச் செய்து கொண்டிருக்கையில், சாதாரணமாக நடக்கும் செயல்களையும் உதாரணமாகக் காட்டி அதன் மூலம் ஒரு அரிய தத்துவத்தையும் விளக்குவாராம். எடுத்துக்காட்டாகச் சில சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.

ஒரு முறை, சமையல் முடிந்து, இருக்குமனைவருக்கும் பரிமாறும் தருணத்தில் சாம்பாரில் உப்பு அதிகமாகி இருப்பதை உணர்ந்தனர் சமையற்குழுவினர். என்ன செய்வது என்ற பதற்றப்பட்டுக் கொண்டிருக்கையில், ரமணர் அங்கு வந்து சேர்ந்தார். பதற்றத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்து, உடனே சமையலறைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த சோற்றைச் சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு சில உருண்டைகளைச் சாம்பாரில் போட்டுவிட்டார். அதன்பிறகு, சமையற்காரரை ருசி பார்க்கச் சொல்ல, சாம்பாரின் உப்புச் சுவை சரியான அளவில் குறைந்ததை உணர்ந்தனர். உடனே ரமணர் விளக்கத் தொடங்குகிறார்; சோறு உப்புச் சுவையை ஈர்த்துக் கொள்ளும். அதே போல், காரம் அதிகமாகிவிட்டால், எலுமிச்சைப்பழச் சாரைப் பிழிந்தால் சரியாகிவிடும்; சுவை குறைந்து போய்விட்ட எல்லாப் பண்டங்களையும் ஏதோவொரு வகையில் சரி செய்து விடலாம். அதைப்போல, வாழ்க்கையில் நாம் எந்த நிலையில் தற்போது இருந்தாலும் செயல் திருத்தம் கொடுத்துக் கொள்வதன்மூலம் இதற்கு முன்னர் செய்யப்பட்ட வினைகளைச் சரி செய்துக் கொள்ளலாம் என்ற தத்துவம் ஒன்றை விளக்கினார்.

மற்றொரு முறை சமையலறையில், தரையில் அமர்ந்து கொண்டு காய்கறி நறுக்கிக் கொண்டிருக்கையில், உத்தரத்திலிருந்து இரண்டு பெரிய தேள்கள் அவர்மேல் விழுந்தன. ஒன்று அவரின் முதுகின் மேலும் மற்றொன்று அவரது  வயிற்றின் மேலும் விழ, சுற்றியிருந்த அனைவரும் பதறிப்போய்ச் செய்வதறியாது திகைத்தனர். தேளை அடித்தால் அவரை அடிக்க வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் அவர்கள் குழம்பிக் கொண்டு இருக்கையில், அவரிடம் எந்தச் சலனமும் இல்லை. அவர் தனது காய்கறி நறுக்கும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்க, அந்தத் தேள்களும் அவரின்மேல் ஊர்ந்து சென்று அருகிலிருந்த தூணில் ஏறி உத்தரத்திற்கே மறுபடியும் சென்று விட்டன.  சுற்றி இருந்த அனைவருக்கும் போன உயிர் மீண்டும் வந்தது அவர்களும், ரமணரிடம் சென்று தேள் அவரைக் கொட்டாமல் சென்றது குறித்துத் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ள, அவர் சர்வ சாதாரணமாக, “ஏன் தேள் என்னைக் கொட்ட வேண்டும்? என் மேல் ஊர்ந்த பின்னர், அந்தத்  தரையில் ஊர்ந்து, தூணில் ஊர்ந்து, அந்தக் கூரையின் மீதும் ஊர்ந்து சென்றது. தரை, தூண், கூரை எல்லாவற்றையும் கொட்டிக் கொண்டே சென்றதா? என்னை மட்டும் ஏன் கொட்ட வேண்டும் என்று கூறிவிட்டு, மேலும் விளக்கினார். நாம் “ஐயோ, தேள் எனப் பதட்டப்பட்டுப் பயப்படும் பொழுது, அதுவும் ஐயோ மனிதன் என்று பயப்படுகிறது. அதனாலேயே, கொட்டுகிறது. அந்தப் பதட்டம் விட்டு, சலனமற்று இருக்கையில், அந்தத் தேளுக்கு, தரையும், தூணும் நம் உடலும் ஒன்றே” என்று விளக்கினார். எல்லா உயிரினங்களிலும் உறையும் உயிர் ஒன்றே என்ற அரிய விளக்கத்திற்கும் இந்த நிகழ்வு ஒரு தொடக்கப் பாடமாக அமைந்தது.

பொதுவாக, மக்கள் அவரைக் கடவுளாக நினைத்து வழிபடுவதை அவர் ஏற்றுக் கொண்டாரில்லை. உருவ வழிபாட்டையும், சடங்குகளையும் அறவே துறந்து, பார்ப்பது எது என்பதைப் பார்க்கும் உயரிய ஞான நிலையிலிருந்த அவர், தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களை என்னவென்று கேட்டுக் கொள்ளக்கூட மாட்டாராம். தனது வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்; எப்பொழுதாவது என்ன நடக்கிறது என்று விசாரித்தறியும் அவர், ஒருமுறை சிற்பிகள் சில கற்களைச் செதுக்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க நேரிட, என்னவென்று விசாரித்திருக்கிறார். “உங்களைச் சிலையா வடிச்சு வெச்சிக்கிறோம் சாமி, எங்களுக்குப் பூஜை செய்ய கடவுள் சிலை வேணுமில்லையா” என்று சொல்ல, “பேஷ், நன்னாச் செய்யுங்கோ, அதுதான் சரி…. கல்லு மனுஷாளுக்கு கல்லுதானே கடவுள்” என்று குதர்க்கமாகச் சொல்லிச் சென்றுவிட்டார். அவருக்கு இந்தச் செயலில் ஒப்புதலில்லை என்று அறிந்த பிறகு, சிலை வடிக்கும் முயற்சி கைவிடப்பட்து. (ரமணாஸ்ரமத்தில் இப்பொழுது காணப்படும் சிலை அவரின் மறைவுக்குப் பிறகு எழுப்பப்பட்டது. அவர் எவ்வளவு ஞான மார்க்கத்தை விளக்கியிருந்தும், நம் போன்ற சாதாரணமானவர்கள் அரூபத்தை மட்டும் மனதிற்கொண்டு பிரார்த்தனை செய்யுமளவு பக்குவப்பட்டவர்களில்லையென்பதால் ஏதேனும் உருவம் தேவைப்படுகிறது.)

மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து, அங்கேயே தங்கிவிட்ட ரமணரைச் சுற்றி ஆஸ்ரமம் அமைக்கப்பட்டு அந்த ஆஸ்ரமும் பிரபலமடையத் தொடங்கியது. ஆயினும், அந்த ஆஸ்ரமத்திற்கென, பொருளோ, பணமோ எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாது வாழ்ந்து வந்தனர். ஒரு முறை, அருகிலிருந்த கிராமத்தில் களவாடிவிட்டு ஓடிவந்த சில திருடர்களைக் காவலர்கள் துரத்தி வர, அவர்கள் ஆஸ்ரமத்தின் உள்ளே சென்று ஒளிந்து கொண்டனர். துரத்தி வந்த காவலர்கள் ஆஸ்ரமத்திலிருந்த அனைவரையும் வரிசையில் நிறுத்தி விசாரிக்க, தங்களது லத்தி கொண்டு அடித்து விட்டனர். “நமக்கும் பூசை விழுந்தது” என்று இதனைப் பிறகு விவரித்த ரமணர், அதற்கான காரணத்தையும் விளக்கினார். அவரது பதின்பருவத்தில் பலசாலிப் பாலகனாக இருந்த அவர், சண்டையென்று வந்து விட்டால் அனைவரையும் போட்டு அடித்து விடுவாராம்; அந்தச் செயலுக்கான விளைவாக இன்று போலீஸ்காரர்களிடமிருந்து பூசை விழுந்ததாகச் சற்று நகைச்சுவை கலந்து விளக்குகிறார். [இதனைச் செயல்விளைவுத் தத்துவம் என்று குறிப்பிடுகிறோம். இந்தத் தத்துவம் குறித்து விளக்கமாகப் பின்வரும் இதழ்களில் பார்க்கலாம்.]

ரமணரைப் பார்ப்பதற்காகப் பலரும், பல ஊர்களிலிருந்தும் வரத்தொடங்கினர். தகவல் தொடர்பு பெரிதாக வளர்ந்திராத அந்தக் காலத்திலும் ரமணரின் வாழ்வும், ஞானமும், அவரைச் சென்று பார்த்து வந்தால் மனதில் கிடைக்கும் அமைதியும் பலருக்கும் செவி வழிச் செய்தியாகப் பரவத் தொடங்க, பல ஊர்களிலிருந்தும் மக்கள் தொடர்ந்து வரத் தொடங்கினர். ரமணரும் சந்திக்கும் அனைவரிடமும் கரிசனத்துடன் நடந்து கொண்டாலும், பெரிய அளவில் ஞான விளக்கங்கள் தந்தாரென்றோ, சொற்பொழிவாற்றினாரென்றோ குறிப்புகளில்லை. பலமுறை, அவர் அங்கே அமர்ந்திருக்க, வந்திருந்தவர்கள் அவர் முன்னர் அமர்ந்திருப்பர். பேச்சு வார்த்தை என்று எதுவும் நடந்ததில்லை; ஆனால் வந்தவர்கள் ஏதோ ஒரு மன நிறைவு ஏற்பட்டதாக உணர்ந்து வெளியே சென்று விடுவர்; இதனை ஞான மார்க்க விளக்கத்தில் சட்சு தீட்சை (பார்வையில் விளக்குவது) என்பர். இரண்டு மூன்று பகுதிகளுக்கு முன்னர் பாரதிக்கும் குள்ளச்சாமிக்கும் நிகழ்ந்த சம்பாஷணையாக விளக்கப்பட்டதும் இது போன்ற நிகழ்வே.

மதுரையில் ரமணரின் கணக்காசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் ஒரு முறை இவரைச் சந்திக்க வருகிறார். வந்திருந்தவர் அமர்ந்திருந்த மக்களுக்கு மத்தியில் அமர்ந்து பலரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். பொதுவாகப் பலரும் ரமணரைப் பலவிதமான கேள்விகளைக் கேட்பர். சிலமுறை அவற்றிற்குப் பதிலளிக்கும் அவர், பலமுறை ஏதும் பேசாதிருந்து விடுவாராம். ரமணரின் ஆசிரியரும் ரமணரைப் பார்த்து, “எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது” என்று சொல்லித் தொடங்க, “ஆசிரியரான இவரின் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல்தானே நானும் பள்ளியை விட்டு ஓடி வந்தேன், விடாமல் கேள்வியைச் சுமந்து கொண்டு துரத்தி வந்திருக்கிறார் பாருங்கள் இவர்” என்று கூற அனைவரும் சிரித்து விட்டனர். பொதுவாகவே ரமணரின் பதில்களிலும், பேச்சுக்களிலும் நகைச்சுவை உணர்வு ததும்பியது என்று அவற்றைப் படிக்கையில் அறிந்து கொள்ளலாம்.

அவரைச் சந்திக்க வருபவர்கள் பல வகையைச் சேர்ந்தவர்கள். ஆனால், அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் ஏதேனும் ஒரு துயரத்தில் உழன்று கொண்டிருப்பது என்பதே. பணக்கார்கள், ஏழைகள், படித்தவர், பாமரர் என்று அனைவரின் காரணமும் ஏதோ ஒரு துயர் நீக்க வேண்டும் என்பதாகவே இருந்து. அவரைச் சந்திக்க வந்த எவருக்கும், ரமணர் ஒரு மந்திரத்தையும் உபதேசிக்கவில்லை. பூஜை அல்லது சடங்கு எதையும் கற்றுக் கொடுக்கவும் இல்லை. அனைவரையும், “நான் யார்?” என்ற கேள்விக்கு விடை காணும் மனப்பக்குவத்தில் கொண்டு வந்து நிறுத்துவதே அவரின் வழக்கமாக இருந்தது.

ஒரு முறை கிராமவாசி ஒருவர் அவரிடம் வந்து, தனது துயரங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவரின் தாங்கொணாத் துயரத்தைக் கரிசனத்துடனும், பரிவுடனும் கேட்டுக் கொண்டிருந்த ரமணர் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டு, இறுதியில் “நான் யார்?” என்ற கேள்வியில் கொண்டு வந்து நிறுத்தினார். அந்த கிராமத்துப் பெரியவரும், அந்தக் கேள்வியின் நோக்கம் விளங்கியதோ இல்லையோ, ரமணரிடம் நன்றி தெரிவித்துவிட்டுச் சென்று விட, அவரின் அருகில் இருந்தவர்கள், “அவருக்கு ஏதாவது மந்திரம் ஒன்றைச் சொல்லிக் கொடுத்திருந்தால் கொஞ்சம் நிம்மதியாகவாவது சென்றிருப்பாரே” என்று கேட்டனர். அதற்கு ரமணர் “நேக்கு எந்த மந்திரமும் தெரியாது, தெரிஞ்சான்னா சொல்லிக் கொடுக்க… தவிர, நான் அப்படின்னு சொல்லும்போது அந்த நான் எதுன்னு தெரிஞ்சுக்குறதே ஆத்ம தரிசனம்.. அதுவே வாழ்க்கையில மாறாத சந்தோஷத்தை அடையறதுக்குச் சரியான வழி.. உயர்வான ஒண்ணு இருக்கும்போது அதுக்கு ஒரு படி கீழான ஒண்ணைச் சொல்லிக் கொடுக்குறது நேர்மையான செயலா இருக்காது” என்று முடிக்கிறார்…

அதாவது, மந்திரம் ஓதுவது, சடங்குகள் செய்வது என்பவற்றிற்கும் மேலான ஒன்று, பார்ப்பது எது என்பதைப் பார்த்தறிவதே என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கிருக்கிறார் ரமண மகரிஷி. இந்த விளக்கத்தை, ஆழமாக அடுத்த இதழில் பார்க்கலாம்….

(தொடரும்)

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad