\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கவிஞர் அறிவுமதி

kavignar_aruvymathi_620x620சரிகை வேட்டியில்லை, பட்டுத் துண்டுமில்லை, தங்க ஃப்ரேம் போட்ட கண்ணாடியில்லை, மொகலாய மன்னர்கள் அணியும் காலணியி்ல்லை, மொத்தத்தில் திரைப்படப் பாடலாசிரியர்/கவிஞர் என்றவுடன் நாம் வழக்கமாகக் கற்பனை செய்து கொள்ளும் உருவம் எதுவுமில்லை, ஆனால் தரமான பாடல்கள் பல எழுதி, தமிழ்த் திரையுலகில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாகத் தனது பங்களிப்பைப் பல வகையிலும் தந்தவர். பாரதிராஜா தொடங்கி, இளையராஜா வரை பல ஜாம்பவான்களுடனும் பணி செய்து, அந்த இணைப்புகளைத் தனது வாழ்க்கையின் உயர்வுக்கு உபயோகப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் தனது வாழ்க்கையை நேர்மையாக நடத்தியவர் கவிஞர் அறிவுமதி.

கடந்த மே மாதம் 11ஆம் திகதி, மினசோட்டா தமிழ்ப் பள்ளியின் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து, ஆண்டு விழா நடந்தது. வழக்கம் போல் ஆண்டு விழாவுக்காக ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த ஆண்டு, விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகத் தமிழ் நாட்டிலிருந்து அமெரிக்கப் பயணம் செய்துகொண்டிருக்கும் அறிவுமதி அவர்களை அழைத்திருந்தார்கள். விழாவில் குழந்தைகள் பல கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். வழக்கம் போல அவையனைத்தும் ருசிகரமாக இருந்தன. இவையனைத்தையும் சற்றும் இடைவெளிவிடாது அமர்ந்து ரசித்த கவிஞர் அறிவுமதி, அனைத்து நிகழ்ச்சிகளையும் தனக்கே உரித்தான ரசனை மற்றும் ஞானத்துடன் அனுபவித்து விளக்கினார்.

கவிஞர் பேச ஆரம்பித்ததும் அவரின் தமிழறிவும், தமிழார்வமும் மிகவும் வெளிப்படையாக வெளியாகத் தொடங்கியது. இவரின் அறிவும், ஆழமும் அளவு கடந்த தமிழார்வமும் வெளிப்படத் தொடங்கியதும், தமிழார்வம் மிக்க அனைவரும் அவரின் பேச்சுக்கு இயல்பாகவே பின்வரத் துவங்கினர். பல அறியத் தகவல்களைக் கூட்டிச் சுவையாகப் பேசினார் கவிஞர்.

பேச்சின் நடுவில் அவருக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியின் மீது இருந்த ஈடுபாட்டை மிக அழகாகவும், அளவாகவும் வெளிப்படுத்தத் தொடங்கினார். பாரதியின் மீது தனக்கிருந்த ஈடுபாடு காரணமாக அவர் வாழ்ந்த பல இடங்களுக்கும் சென்று அவருடன் ஏதோவொரு விதத்தில் தொடர்பு கொண்ட ஒவ்வொரு மனிதரையும் நேரடியாகக் கண்டு, பேட்டி எடுத்துப் பேசி அறிந்து கொண்ட கவிஞர் பாரதியுடன் இரண்டறக் கலந்து விட்டார் என்பது அவருடைய பேச்சிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

பாரதி வாழ்ந்த கடையம் என்ற கிராமத்தில் கால் நடையாகச் சென்று, தெருத்தெருவாக நடந்து அகவையில் தொண்ணூறுக்கு மேலான பலரையும் சந்தித்து அவர்களின் பாரதி பற்றிய கருத்துகளை, எண்ணங்களைக் கேட்டறிந்ததாகவும், அது குறித்துத் தனது ஆராய்ச்சி பூர்வமான எண்ணங்களையும் மிக அழகாகவும், கோர்வையாகவும் எடுத்துரைத்தார் கவிஞர். அதன்பின்னர், பாண்டிச்சேரியில் வாழ்ந்த பாரதியின் வாழ்க்கையும் அவரின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த பாரதிதாசனின் வாழ்க்கையும் அவரின் பணியையும், நம்பிக்கையையும் மிகவும் ஆழமாகப் படித்தறிந்து எடுத்துரைத்தார். அதில் மிகவும் ஆழமான நம்பிக்கையும், பக்தியும் வைத்திருந்தார் கவிஞர் என்பது அவரின் பேச்சிலும், அதனைப் பேசும்போது வெளிப்பட்ட உணர்ச்சியிலுமிருந்து நம்மால் உணர முடிந்தது.

குழந்தைகளுக்காகப் பல விஷயங்களும் பேசி முடித்த கவிஞர், குழந்தைகளுக்காகத் தான் எழுதிக் கொண்டிருக்கும் “தாய்ப்பால்” எனும் நூல் குறித்து ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார். தமிழ்க் குலத்தில் பிறந்து அவ்வளவாகத் தமிழின் பெருமையையோ, ஆழத்தையோ அறிந்திராது வளரும் பல தமிழ்க் குழந்தைகளின் உணர்ச்சிகளை ஊக்குவிக்கப்பதற்காகவும், தமிழ் படிக்கச் சூழலில்லாத பல குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும் என்ற காரணத்திற்காகவும் “தாய்ப்பால்” எனும் கவிதைப் புத்தகமெழுத வேண்டுமென்ற உந்துதுதல் தோன்றியதாகவும், அந்த உத்வேகத்துடன் இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்கப் போவதாகவும் கூறினார். தாய்ப்பால் எப்போது வெளிவரும் என்று எதிர்பார்க்கும் பல தமிழ் நெஞ்சங்களில் நாமும் ஒருவாராய் மாறிவிட்டோமென்பதில் ஐயமில்லை.

அவ்வளவாகப் படாடோபமில்லாததாலோ என்னவோ, அந்தக் கூட்டத்தில் அவ்வளவாகப் பின்பற்றுதல் இருக்கவில்லை எனத் தோன்றியது. ஆனால் பின்பற்றல் எவ்வளவு என்பதைப் பற்றியெல்லாம் கவிஞர் கவலை பட்டதாகத் தெரியவில்லை. தான் சொல்ல வேண்டுமென்று முடிவு செய்து கொண்டுவந்த தலைப்புகளை மிகவும் அழகாகச் சொல்லி முடித்தார். பேசிய பல விஷயங்களும் குழந்தைகளை உற்சாகமூட்டுவதாகவும், தமிழின் பெருமைகளை எடுத்துரைப்பதாகவும் அமைந்தது. கூட்டம் இனிதே முடிந்த பிறகு, படாடோபம் சற்றும் இல்லாமல் வந்திருந்த அனைத்து அன்பர்களிடமும் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தார் கவிஞர். விருப்பப்பட்ட அனைவருடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த விழாவிற்குப் பிறகு பனிப்பூக்கள் ஆசிரியர் குழுவுடன் ஒரு பிரத்யேகச் சந்திப்பு ஏற்பாடானது. மறுப்பேதும் கூறாமல் உடனடியாக ஏற்று கொண்ட கவிஞர் அதற்காக எதிர் நோக்கிக் காத்திருந்ததுபோல் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டார். அவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தாலும், வந்திருந்த மற்ற அனைவரையும் சிறப்பு விருந்தினர் போல் நடத்தினார் கவிஞர். மற்ற அனைவரிடம் பல விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முயன்றார். அனைவர் பேசுவதையும் தனது ஒலிப்பதிவுக் கருவியில் விடாமல் ஒலிப்பதிவு செய்து கொண்டார். பன்றி வேட்டையில் துவங்கி, பறவைகள் குளிர்காலத்தில் நாடு விட்டு நாடு பறப்பது வரை ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் அனைவரின் கருத்துகளையும் மிகவும் ஆழமாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார் கவிஞர். அவற்றில் தான் இதற்கு முன்னர்க் கேட்டிராத கருத்தாக இருந்தால், அதனை வாய்விட்டுக் கூறி நன்றி பாராட்டவும் அவர் தவறவில்லை.

பாரதிராஜாவின் இயக்கத்தில் தான் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பல திரைப்படங்களின் சம்பவங்களை மிகவும் சுவையாக விளக்கிக் கொண்டிருந்தார். “புது நெல்லு புது நாத்து”, “கருத்தம்மா”, ”நாடோடித் தென்றல்”, ”முதல் மரியாதை” மற்றும் “பசும்பொன்” போன்ற திரைப்படங்கள் கவிஞரின் பேச்சில் குறிப்பாகப் பேசப்பட்டன. முதல் மரியாதைப் படப்பிடிப்பில் நடிகர் திலகம் பாரதிராஜாவை நடிக்கச் சொல்லிக் கேட்டு அதனை அப்படியே பின்பற்றியதைப் பற்றி சுவைபட விளக்கினார். கமலஹாசனை “சிவப்பு ரோஜாக்கள்” படத்தில் எவ்வாறு நடிக்க வைத்தார் பாரதி ராஜா என்பதில் தொடங்கி, “கருத்தம்மா” படத்தில் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியராக இருந்த பெரியார் தாசனை எவ்வாறு நடிக்கவைத்தார் என்பது வரை மிகவும் உண்மையாகவும், ருசிகரமாகவும் விளக்கினார் கவிஞர் அறிவுமதி.
kavignar_aruvymathi3_audience620x433இளையராஜா அவர்களுக்குக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து விடுவார் போலிருந்தது கவிஞரின் பேச்சைக் கேட்பதற்கு. மிகவும் ஆழமான இசை ஞானம். இளையராஜாவுடன் தனக்கிருந்த தொடர்பை விளக்குகையில் அவரின் கண்களில் தெரிந்த ஒளி அவர் இசைஞானி மீது வைத்திருந்த அன்பைத் தெளிவாக வெளிப்படுத்துவது போலிருந்தது. இ்ளையராஜா இவருடன் காலங்காலமாய்ப் பழகி வந்திருக்கிறார் என்பதை அறிவுமதியின் உதாரணங்கள் மிகவும் அழகாக எடுத்துக் காட்டியது. இவர் கவிஞராயினும், இசையின் நுண்மையை உணர்ந்து இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது அவரின் வெளிப்பாடுகளில் மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

இசைக்காகப் பாட்டெழுதுவீர்களா, கவிதைக்காக இசை போடவேண்டும் என நினைப்பீர்களா என்ற கேள்விக்கு, சற்றேனும் தயக்கமில்லாமல், இசை என்பது மனிதனின் உயிரைக் கடந்து உணர்வுகளை ஊடுருவி நிற்கும் ஒரு உணர்வு என்பதை உணர்ந்திருப்பதாகக் கூறினார். இசைக்காகக் கவிதை எழுதுவது என்பது தனக்கு மிகவும் பிடித்தத் தருணமாகும் என்றும் கூறினார். கவிஞராக இருந்து கவிதைக்காக இசை என்பதை விட்டு இசைக்காகக் கவிதை கூறுவதாகக் கூறுகிறீர்களே, என்ற கேள்விக்கு, நான் முதலில் ரசிகன் அதன்பின்னர் தான் கவிஞன் என்று தெளிவாகக் குறிப்பிட்டார் அறிவுமதி. ஒரு கவிஞரின் கருத்தில் இதனைக் கேட்பதற்கு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. ஆனால் இசையில் அவரின் ஈடுபாடு புரிந்து கொள்ளக் கூடியதாக அமைந்தது.

இதன்பிறகு கவிஞர் பல முறைகளிலும் அங்கிருந்த அனைவரும் உணருமாறு, அந்தச் சூழலில் அர்த்தமுள்ள அறிவுரைகளை வணங்கி நிதர்சனைத்தையும் விளக்கிக் கூறினார். அவரின் பக்குவம் மிகவும் தெளிவாக வெளிப்பட்டது.
பாரதியின் மீது கவிஞரின் ஈடுபாடு மிகவும் ஆழமானது என்பது தெளிவாக வெளிப்பட்டது. கவிஞர் தனது மகளின் பெயரைக் கயல்விழி பாரதி என வைத்தது அதன் அழகான வெளிப்பாடு எனத் தோன்றியது.

மொத்தத்தில், கவிஞருடன் உரையாடிக் கொண்டிருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். தமிழின் மீது அளவுகடந்த நேசம் கொண்டிருந்த கவிஞர் அதே அளவு அன்பு கொண்ட தமிழ் நெஞ்சங்கள் தன்னைச் சுற்றியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களின் தமிழன்பை மதித்ததுடன் அதனை ஊக்குவிக்கும் வகையில் உரையாடியது மிகவும் இன்பகரமான அனுபவம்.

– வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. என்.கே.தனபாக்கியம் says:

    அழகான மதிப்புரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad