Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உலகம் ஒளி பெறட்டும்

Filed in தலையங்கம் by on December 23, 2019 0 Comments

உலக நாடுகள் பலவும் கிறிஸ்துமஸ், ஹனுக்கா, பொங்கல், சங்கராந்தி, மஹாயனா என வெவ்வேறு நம்பிக்கைகள் பேரில் விழாக்காலக் கொண்டாட்டங்களை எதிர்நோக்கியுள்ளன. மத விழாக்களைக் கடந்து வெவ்வேறு கலாச்சாரங்கள் பின்பற்றும் புத்தாண்டுகள் கொண்டுவரப்போவதை எண்ணி ஆவலுடன் காத்திருக்கும் மனங்கள் ஏராளம். காலச்சுழற்சியின் வேகம்  ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவருகிறதுதனிப்பட்ட முறையிலும், சமூக நிலையிலும் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு, கடந்து வந்துள்ளோம்.

இது போன்ற விழாக்களின் முதன்மை நோக்கம் மகிழ்வான கொண்டாட்டங்கள் மட்டுமல்ல. சக மனிதர்களைப் பாராட்டி, சுக துக்கங்களைப் பகிர்ந்து, தேவைப்படும் நேரங்களில் ஆதரித்து, அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பதே. இன்றைய தேதியில் பண்டிகைகளைக் கடந்து கொண்டாடப்படவேண்டியது மனிதம் தான். உலக நாடுகள் பலவும் சிவப்பு, நீலம்; காவி, பச்சை; ஹிந்து, இஸ்லாம், கிறித்துவம், பௌத்தம்; தமிழர், தமிழரல்லாதோர் என்று அரசியல், மத, இனத் துவேஷங்களால் பிளவுண்டு கிடக்கின்றன. அண்மைக்கால நிகழ்வுகள் பலவும் இந்தப் பிளவுகளை மேலும் துண்டாடி வருகின்றன.

பண்டையக் கலாச்சாரங்களை அறிய முனையும் அகழ்வாராய்ச்சிகள் ஒரு புறம் நடக்கும் தருவாயில் பொதுமறை தந்த வள்ளுவன் ஹிந்துவா, கிறித்தவரா, பௌத்தரா என்ற ஆராய்ச்சி இன்னொருபுறம் துளிர்க்கிறது. அகழ்வாராய்ச்சிகளின் நோக்கம் அவர்கள் பயன்படுத்திய பண்ட பாத்திரம், துணி மணிகளைப் பற்றியறிய மட்டுமில்லை; அக்கால வாழ்க்கை நெறிகள், மனித மாண்புகள் எவ்வாறிருந்தன என்று அறிந்தால் இன, மத, அரசியல் துவேஷங்களை ஒழிக்கலாம். ஆனால் இந்தக் குழுத் தலைவர்கள் அமைதியை விரும்புவதில்லை. அமைதியான மனம் சிந்திக்கத்

துவங்கிவிடுமே! எப்போதும் சமூகத்தைக் கொதிநிலையில் வைத்து உணர்வுப்

பூர்வமாகக் களமாடிக் கொண்டிருக்கின்றனர்.

அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், பணம் குறித்துநித்தியமான பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனைக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” – கிரேட்டா தன்பர்க்கின் சாடல், சூழலியலைத் தாண்டிய நிஜம்.

பிரிவினைச் சித்தாந்த விஷ விதைகள் நாமறியாத வகையில் நம்முள் விதைக்கப்படுகின்றன. இழந்ததை மீட்கிறோம், உரிமைகளைக் காக்கிறோம் என்ற போர்வையில் அறநெறியைத் தொலைத்து வருகிறோம். மற்றவரிடமிருந்து என்ன உரிமையை எதிர்பார்க்கிறோமோ அதே உரிமையை அவர்களுக்கும் தர வேண்டும். நாடு, மதம், மொழி, இனம், பொருளாதாரம் போன்ற எந்தக் காரணத்தாலும் மனித உரிமைகள் பறிக்கப்படக்கூடாது. இக்கோட்பாடுகளை வலியுறுத்தி, உலகுக்கு உரக்கச் சொல்லி, நினைவூட்டுவதே ஆண்டுதோறும்டிசம்பர் 10ஆம் நாள் அனுசரிக்கப்படும்உலக மனித உரிமை தினம்’. வரவிருக்கும் பண்டிகைக் கால விழாக்களைப் போன்று குறிப்பிட்ட தினத்தன்று கொண்டாடிவிட்டு அடுத்த வருடம் வரை மறந்துவிடக் கூடிய நிகழ்வல்ல இது.

நாகரீகமடைந்து விட்டோமென நாம் நினைத்துக்கொண்டிருக்கும் 2019 இல் ஏறத்தாழ 70% உலக மக்கள், அடிப்படை உரிமையின்றி வாழ்ந்து வருகின்றனர். இன, நிற, பால், மொழி, சமய, அரசியல் கருத்து, தேசியம், சொத்து, பிறப்பு பாகுபாடு அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஏற்றத்தாழ்வற்ற சம நீதி, சம வாய்ப்புகள் நிறைந்த கண்ணியமான வாழ்க்கை ஆகிய அடிப்படை மனித உரிமைகள் நிலைநிறுத்தப்படவேண்டும். மனித உரிமைகளைச் சட்ட விதிமுறைகளுக்குள் அடக்கிவிட முடியாது. இவை முழுக்க முழுக்க அறநெறி சார்ந்தது.

அரசியல் கட்சிகளும், அரசுகளும் சட்டங்களைத் தேவைக்கேற்றவாறு வளைக்கும் வல்லமை பெற்றவை. வெற்றிக்காகச் சித்தாந்தங்களை மாற்றிக் கொள்ளத் தயங்காத வியாபாரிகள் அவர்கள். இவர்களது பேச்சிலும் எழுத்திலும் மயங்கிநம்மையறியாமல் நாமே, ஏதோவொரு கோட்பாட்டுக்குள் நுழைந்து, புதைந்து, அடிமையாகி வருகிறோம். நமது உரிமைகளை இழப்பதுடன், அடுத்தவரது உரிமைகளையும் பறிக்கத் துணை போகிறோம்.

நமக்குள்ளிருக்கும்  அடிமை விலங்குகளை உடைப்போம்; மனிதம் போற்றுவோம்; ஆக்கபூர்வ சிந்தனைகளை வளர்ப்போம், பகிர்வோம். நம்மிடமிருக்கும் விளக்கொளியால் அடுத்தவரது விளக்கை ஒளி பெறச்செய்வோம்; வெளிச்சம் இரட்டிப்பாகும்; தொடர் பகிர்வால் உலகம் ஒளிரட்டும்! புத்தாண்டு சிறக்கட்டும்!

  ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad