\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கனவு மெய்ப்பட வேண்டாம்

Filed in இலக்கியம், கதை by on August 7, 2013 2 Comments

Kanavu_3_520x405பிரீமியர் டைட்டில் கம்பெனியில், கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போட்டு முடித்தான் தினேஷ்.

“எக்ஸ்செல்லன்ட … யூ ஆர் டன் வித் ஆல் சைனிங்க்ஸ் .. யுவர் ஹவுஸ் இஸ் சோல்ட் அண்ட் க்ளோஸ்ட் நவ் .. ஹியர் இஸ் யுவர் செக் ..” எனச் செக்கைக் கொடுத்தாள் லிண்டா.

செக்கை வாங்கிப் பார்த்தான்.

“யூ கேன் கிவ் த கீஸ் டு ஹிம்” எனச் சொல்லிக்கொண்டே அனைத்துக் காகிதங்களையும் ஒரு நீளமான கோப்பில் போட்டு, தினேஷிடம் கொடுத்துவிட்டுக் கை குலுக்கினாள்.

நிறையப் படிகள் கொண்ட கட்டிடத்தின் வாசலுக்கு வந்த போது பெரிதாய் ஒரு பெருமூச்சு விட்டான் தினேஷ். கோடை காற்று சற்றுச் சூடாக முகத்தில் அடித்தாலும், சுகமாய் இருந்தது. ஒரு வழியாக அந்த வீட்டை விற்றாகி விட்டது. விலையும் ஒன்றும் மோசமில்லை. அவன் எதிர்பார்த்ததை விட பரவாயில்லை. ஆனால் அவன் மனைவி அபிதாவுக்கும், பெண் அனிதாவுக்கும் தான் இதில் வருத்தம். பதினான்கு வருடங்களாக இருந்த வீடு.

ஊருக்குச் சற்று ஒதுக்குபுறமாய் இருந்தாலும், சிறந்த பள்ளிகள், சுற்றிலும் நிரம்பியிருந்த ஏரிகள், கால்ஃப் மைதானங்கள், விமானப் பயிற்சி கூடம், அழகிய பூங்காக்கள் என அருமையான சிறு நகரம்.

சுற்று வட்டாரத்தில் எல்லோருடனும் நல்ல சுமூகமான உறவு இருந்தது. அனிதாவுக்கு ஏற்ற மாதிரி நண்பர்கள் கூட்டம். யாருக்கும் அங்கிருந்து நகரப் பிடிக்கவில்லை. அதை விடச் சிறப்பாக ஒரு வீட்டை வாங்கித் தருவதாகக் கூறி, பிடிவாதமாய் அந்த வீட்டை விற்று விட்டான். அபி அவனிடம் கேட்ட பொழுதெல்லாம் “அவசரமாய் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது” எனச் சொல்லிச் சிரித்தான். என்ன அப்படி அவசரம் என்று பலர் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. போன மாதத்தில் ஒரு நாள் முடிவு செய்து, இதோ இன்று விற்பனைப் பத்திரங்களிலும் கையெழுத்து போட்டாகி விட்டது. எல்லாவற்றுக்கும் காரணம் ஒரு கனவு!

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் தினேஷுக்கு இதைப் பற்றித் தெரிய வந்தது. அப்போதெல்லாம் அலுவலக வேலை காரணமாக இரவில் தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவான். காலையிலும் சீக்கிரமாகவே எழுந்து விடுவான். தூங்கும் சொற்ப வேளையிலும் ஏதாவது கனவுகள். அதுவும் மற்றவர்களுக்கு வருவதைப் போன்ற சாதாரணக் கனவுகள் இல்லை. மிகத் துல்லியமானவை. சில முறை முதல் நாளிரவு கண்ட கனவு வட்டத்தகட்டில் பதிவு செய்ததைப் போன்று ஒரு சின்னக் கலைவு கூட இன்றி அவன் மனதில் பதிந்து விடும். இது தொடக்கத்தில் விளையாட்டாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.

ஒரு முறை தன்னுடன் வேலை செய்யும் கத்ரீனா ஆண்டர்சன், லோ ஹிப் புடவை கட்டி கொண்டு வருவது போல் கனவு கண்டதைச் சொல்லி அபியிடம் “எந்த நேரமும் பொண்ணுங்களை நெனைச்சிகிட்டே இருந்தீங்கன்னா வேற என்ன கனவு வரும்? மந்திரிச்சு தான் விடணும் உங்களுக்கு….. கண்றாவி!” எனத் திட்டு வாங்கிக் கொண்டான். இரண்டு மூன்று வாரங்கள் கழித்துத் தான் அவன் கனவுகளின் மகிமை புரிந்தது தினேஷுக்கு.

பக்கத்து ப்ளாக்கில் இருந்த லீலா மோகனின் பிள்ளை, அருண் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமர்க்களமாக ஏற்பாடு செய்திருந்தனர். பெரியவர், சிறியவர், இந்தியர், அமெரிக்கர் என நிறையக் கூட்டம் வந்திருந்தது. இந்தியப் பெண்கள் பட்டுப்புடவை கட்டி, நடமாடும் நகைக்கடைகளாகி, அதைக் காண்பிப்பதற்காகவே பலருடன் வலியச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். திடீரென அரக்கு கலர் பட்டில், ஒல்லியான, உயரமான பெண், வித்தியாசமான நடையில் வருவது கத்ரீனா போல் தெரிய, உற்று நோக்கிய போது அது கத்ரீனா தான் எனப் புரிந்தது. அதே நேரம் தினேஷைப் பார்த்த அவள் “ஹாய் தினேஷ்! வாட் ஆர் யூ டூயிங் ஹியர்” என்றாள். தான் மணப்பெண்ணின் நெருங்கிய தோழியென்றும், அவளுக்குத் துணையாகத் தானும் சேலையுடுத்திக் கொண்டதாகவும் சொன்னாள். தினேஷுக்கு தான் அளவு மீறிக் குடித்ததால் இரண்டு வாரம் முன் கண்ட கனவின் தொடர்ச்சியைத் தூங்காமலே காண்கிறோமோ என்று தோன்றியது. அச்சு அசலாகக் கனவில் கண்ட அதே நிறப் புடவை, அதே லோ ஹிப்.. எப்படிச் சாத்தியம்.

அபியிடம் சொல்லிய போது, “லீலா வந்து சொன்னப்பவே நீங்க அங்க வரப் போற எல்லாப் பொண்ணுங்களை பத்தியும் நினைக்க ஆரம்பிச்சிட்டீங்க. நீங்க ஆபீஸ்ல அதிகமா பாத்து பாத்து ஜொள்ளு விடறதால கேத்தியும் புடவை கட்டிட்டு வர்ற மாதிரிக் கனவு வந்திருக்கு. எதேச்சையா அவ இந்தக் கல்யாணத்துக்கு வந்துட்டா ..”

”அது சரி அபி … எதேச்சையா நடந்ததா வெச்சுகிட்டா கூட எப்படிம்மா அதே மாதிரி ஸ்டைல், அதே நிறப்புடவை, அதே லோ ..”

“போதும் .. அதையே பத்தாயிரம் தடவை சொல்லிகிட்டு …போங்க .. போய் வேலையைப் பாருங்க ..”

அபியிடம் அதைப் பற்றி மேலும் பேச விரும்பவில்லை தினேஷ்.

இது நடந்து ஒரு ஆறேழு மாதங்களுக்குப் பின் மற்றொரு கனவு … மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் நேதன், வேலை விஷயமாக ஊரைக் காலி செய்துவிட்டுப் போவதாக.

இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். ஒருநாள் வீட்டின் பின்புறம், பக்கத்து வீட்டு டோனியோடு பேசிக் கொண்டிருக்கும் போது, நேதன் வந்தான். சிறிது நேரம் ஏதேதோ பேசிவிட்டு, “ ஐ ஆம் மூவிங் டூ டாலஸ் மேன்” என்றான். விசாரித்ததில் தன் மனைவி சிண்டியை விவாகரத்து செய்து விட்டதாகவும், டாலஸில் வேறு வேலை கிடைத்திருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பயிருப்பதாகவும் சொன்னான். எப்படி இது சாத்தியம் என்று தோன்றியது தினேஷுக்கு. யாரிடம் இதைப் பற்றி சொல்வது என்று தெரியவில்லை.

அடுத்த கனவு தான் தினேஷை சற்றுப் பயமுறுத்தியது. அபியின் வெள்ளை நிற இன்ஃபினிட்டி காரை ஒரு சிகப்பு நிற டொயோட்டா கார் இடித்து விடுவது போல. அடுத்த ஒரு மாதத்துக்கு அபியிடம் ஏதேதோ பொய் சொல்லி அவளது காரைத் தான் எடுத்துக்கொண்டு தனது காரை அவளுக்குக் கொடுத்து ஓட்டச்செய்தான். ஒரு மாதத்துக்குப் பிறகு அபி தனது கார் வேண்டுமென்று அடம் பிடித்து எடுத்துக் கொண்டாள். பத்து நாட்களில் அது நடந்தே விட்டது. சாலைப்பணிகள் நடந்து கொண்டிருந்ததால், அபி சற்றே மெதுவாகச் சென்ற போது பின்னால் காரை ஓட்டி வந்த பெண், அவளை முந்த முயன்று, கடைசி நேரத்தில் சாலைப் பணிக்கான தடைகளைக் கவனித்து, அதை தவிர்க்க எத்தனித்து, அபியின் காரில் இடித்து விட்டாள்.

அபி அழுது கொண்டே அவனைப் போனில் அழைத்த போது ஓடிச் சென்று பார்த்தான். பகீரென்று இருந்தது அவன் கனவில் கண்ட அதே சிவப்பு நிற டொயோட்டா கார். அபியின் கார் நசுங்கிய இடமும் சிவப்பு நிறக் கார் உராய்ந்ததில் அபியின் வெள்ளை காரில் ஏற்பட்ட கறைகளும் கூடக் கனவில் கண்ட மாதிரி அப்படியே இருந்தது. தனது கனவுகளின் விபரீதங்கள் புரியத் தொடங்கியது தினேஷுக்கு.

ஃபில் நாக்மேன் என்ற சைக்காலஜிஸ்ட் ஒருவரைப் போய்ப் பார்த்த போது அவர் தினேஷின் கனவுகளைப் பற்றி முழுதுமாகக் கேட்டறிந்தார்.

“தினேஷ் .. இதை விளக்குவது சிரமம்… ஃபிஸிக்ஸ்ல க்வாண்டம் தியரி மாதிரியான விஷயம் இது… தகவல் துண்டுகளை மனதில் பதிந்து பின் அவை ஒன்றுக்குடன், ஒன்று தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, ஒரு உருப்பெற்றுக் கனவாகத் தோன்றுவது. ”

“ஆனால் அதெல்லாம் எப்படி நிஜத்தில் நடக்கும் டாக்?”

“எக்ஸாக்ட்லி.. இதைப் ப்ரிகாக்னிட்டிவ் ட்ரீம்ஸ் அல்லது ப்ரொஃபெட்டி ட்ரீம்ஸுன்னு சொல்வாங்க.. பொதுவா கனவுகள் கருப்பு வெள்ளையில் தான் இருக்கும்.. சிலருக்கு மட்டுமே அதுலே வண்ணங்களைக் காண முடியும் . அதன் வித்தியாச அடிப்படைகளைத் தெரிஞ்சுக்க தான் உளவியல் துறையே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது. முதல்ல நீங்க கவனிச்சு பாத்தீங்கன்னா, உங்களுக்கு வர்ற கனவுகள் எல்லாமே நிஜத்தில் நடப்பது இல்லை. அப்பப்போ ஏதாவது சில கனவுகள் நிஜத்தில் நடக்குது.”

“இல்லை, கிட்டத்தட்ட எல்லாமே நிஜத்தில் நடக்கின்றன டாக்டர்..”

“அப்படியிருக்காது தினேஷ் .. நீங்க உங்களுக்கு வர்ற கனவுகளை எல்லாம் ஜர்னல் மாதிரி எழுதி வைங்க.. அதெல்லாம் எப்பப்போ நிஜத்தில நடக்கிறதா உணர்றீங்களோ அதையும் குறிச்சு வைங்க … அப்ப உங்களுக்கே புரியும்.. இது ஈ.எஸ்.பி மற்றும் டெலிபதியோட நீட்சி.. ஆனா மனித மனங்களின் பலத்தையும், பரிமாணங்களையும் இன்னும் யாராலேயும் தெளிவாப் புரிஞ்சுக்க முடியலை.. ஏன்னா நிறைய பேர் சம்பவம் நடந்தப்புறம் இந்த மாதிரிக் கனவில வந்ததுன்னு சொல்றாங்க”

“எனக்கு அப்படியில்லை டாக்டர்… என்னோட கனவுகள் மிகத் தெளிவானவை.. மறுநாள் கூட அப்படியே ஞாபகம் இருக்கும்.”

“அடுத்த நாள் மட்டும் இல்லை… இதெல்லாம் கிட்டத்தட்ட உங்கள் வாழ்நாள்ல மறக்க மாட்டீங்க.. உங்களைப் பொருத்தவரை இது நேர்ல, நிஜத்தில நடந்தவை. உதாரணத்துக்கு, உங்களுக்குக் கல்யாணம் நடந்ததையோ, அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களுடைய மரணத்தையோ உங்களால் எந்த நாளிலேயும் சொல்ல முடியும்.. அது போலத்தான் இதுவும். மத்தவங்க கனவுகளை மறந்துடறாங்க … நீங்க அப்படியே ஞாபகத்திலே வெச்சுக்கறீங்க .. என்னிக்காவது, எங்கேயாவது அது தொடர்பான ஒரு நிகழ்வு நடந்தா உடனே இரண்டையும் தொடர்பு படுத்திக்கறீங்க .. “

“அப்படியில்லை டாக்டர் ..”

“ஆமாம் … இது கொஞ்சம் குழப்பமான விஷயம் தான் … நிறைய பேருக்கு இந்த மாதிரிக் கனவுகள் ரொம்ப லேசா மனசில பதியும்… அவங்களுக்கு சில இடங்களுக்குப் போனா, ஏற்கனவே எப்பவோ அந்த இடத்துக்குப் போன மாதிரித் தோணும்.. புது நபரைப் பார்க்கும் போது அவர் ஏற்கனவே அறிமுகமாகிப் பழகியவர் போலத் தோணும்.. இதைத் தேஜாவூ என்பார்கள். மத நம்பிக்கையுள்ளவர்கள் முன் ஜென்மம் அப்படின்ற மாதிரிச் சொல்லுவாங்க.. ”

“இதுக்கு என்ன தான் பண்றது டாக்டர் ..”

Kanavu_2_283x424“நீங்க இதுக்காகப் பயப்படத் தேவையில்லை.. எதிலும் அதிகமா மனசைப் போட்டு உளப்பிக்காதீங்க .. எல்லாத்தையும் லேசா எடுத்துக்குங்க .. உங்களோட கற்பனைத் திறனை ஆக்கப்பூர்வமா வேற எதிலேயாவது திசை திருப்புங்க … உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரியை கனவில பார்த்த பின்னாடி தான் அதை பத்தி கண்டுபிடிச்சாராம்.. அதே மாதிரி இந்தச் சக்தி உள்ளவங்களை ஆராய்ந்தப்போ, அவங்கெல்லாம் யோகா, மெடிடேஷன் போலப் பயிற்சிகளில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப் படுத்த தெரிஞ்சவங்கன்றது தெரிய வந்தது. அதனால அவங்க சாதரணமா பாக்கிற விஷயங்களை அப்படியே முழுசா உள்வாங்கிக்கிறாங்க”

“புரியலை டாக்டர்..”

“.பொதுவா இந்த மாதிரிப் பதிவுகள் மூளையிலே டெம்பரரி லோப் அப்படிங்கிற இடத்தில சேமிப்பாகும்.. அதுல புதுப் புதுப் பதிவுகள் போகப் போக, பழைய பதிவுகள் அழிஞ்சிடும்.. நம்பத் தேவையானப்ப லைட்டைப் போட்டு ஆஃப் பண்ற மாதிரி .. சிலருக்கு அந்த ஸ்விட்ச் எப்பவுமே ஆன் செய்யப்பட்டே இருக்கும்.. இந்த டெம்பரரி லோப் காலியாகறதே கிடையாது. எல்லா விஷயங்களையும் துண்டு துண்டாக்கி ஏதோ ஒரு சின்ன மூலையிலே நுணுக்கி வெச்சுக்குவாங்க.”

“ஆழ்ந்த தூக்கமில்லாததினால தானே இந்தக் கனவுகள் எல்லாம் வருது .. அதைத் தடுக்க முடியுமா டாக்டர்.”

“அப்படியும் சொல்ல முடியாது … இப்ப கனவுகள் மூலமா வெளிப்படற இவை, அப்படியில்லைன்னா வேற விதமா வெளிப்படும்…. சில பேர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிகிட்டு இருப்பாங்க,.. சில பேருக்கு இது மூளை பிறழ்ச்சியில கூடக் கொண்டு போய் விட்டுடும்.. ”

”அப்ப நான் ..என்ன தான் பண்றது டாக்டர்.”

“நீங்க பெரிசா எதுவும் அலட்டிக்க வேண்டாம் தினேஷ்.. நீங்க சொல்றதை வெச்சு பார்க்கும் போது உங்களுக்குப் ப்ரிகாக்னிட்டிவ் ட்ரீம்ஸ்தான்னு தெரியுது.. பொதுவான விஷயங்கள் எல்லாம் கனவில வரும்.. நீங்க சொன்ன மாதிரி, ரொம்ப நாள் பார்க்காத நண்பரைப் பார்ப்போம்னு நெனச்சது, கேத்தி புடவை கட்டிக்கிட்டு வருவான்னு நெனச்சதெல்லாம்… அப்படியில்லாம எல்லாமே தீங்கான, அமானுஷ்யமான விஷயங்களைக் கனவா காண்பது ப்ரிமானிஷன் ட்ரீம்ஸ். அது தான் கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்.”

”மருந்து ஏதாவது இருக்கா டாக்டர்… “

“நோ,, நோ.. சில சமயங்களில் டைலனால் மாதிரி மாத்திரைகள் கனவுகளை அதிகப்படுத்தும்.. படுக்குறதுக்கு முன்னாடி தண்ணீ குடிங்க, நல்ல காற்றோட்டமான இடத்துல படுங்க, படுக்கைக்குப் போறதுக்கு முன்னாடி டீ.வி. பாக்கிற பழக்கம் இருந்ததுன்னா அதை கண்டிப்பா விட்டுடுங்க .. இன்ஸ்ட்ருமெண்டல் மியூசிக் கேளுங்க.. விஷுவலா எதையும் பாக்காதீங்க, புத்தகம் படிக்கிறது கூடச் சில கற்பனைகளை உண்டுபண்ணும்.”

”இதனால கனவுகள் வராதா டாக்டர்..”

“அப்படிச் சொல்ல முடியாது.. கனவுகள் மறுநாள் ஞாபகத்துக்கு வர்றது குறையும். கனவுகளைக் கண்டு பயப்படாதீங்க .. என்ஜாய் பண்ணுங்க .. டேக் இட் ஈஸி.”

அடுத்த ஒரு சில வாரங்கள் கனவுகள் ஏதும் வரவில்லை தினேஷுக்கு. கனவுத் தொல்லைகளிலிருந்து விடுபட்டுவிட்டதாக நினைத்துப் பெருமூச்சு விட்ட அன்று … மேலும் ஒரு விபரீதக் கனவு .. அஸ்திவாரத்தையே ஆட்டிய கனவு…

பிஸிலிருந்து கிளம்பும் முன், மோகன் அவனது க்யூபுக்கு வந்தான்..

“என்னடா.. ராமராஜன் ஸ்டைல்ல செவப்பு கலர்ல ஷர்ட் போட்டுட்டு வந்திருக்கே”

“இந்தியா போயிருந்தப்ப வாங்கினது … போடறதேயில்லை… சரி சும்மா ஒரு நாள் போடலாமேன்னு போட்டேன்.. உன் கிட்ட மாட்டிக்கிட்டேன்.”

“கிளம்பிட்டியா? அப்படியே ஒரு ஹாப்பி ஹவர் போலாமான்னு கேக்கத்தான் வந்தேன்”

“இல்லைடா, அபி அனிதாவைக் கூட்டிக்கிட்டு சுமதி வீட்டுக்குப் போயிருக்கா.. நான் வீட்டுக்குப் போயிட்டு அவங்க வீட்டுக்கு டின்னருக்குப் போகணும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

Kanavu_1_283x424வீடு இருக்கும் தெருவில் திரும்பியபோது ஒரே களேபரமாக இருந்ததை உணர்ந்தான் தினேஷ்… ஃபயர் இஞ்சின்கள், ஆம்புலன்ஸ்கள், போலீஸ் கார்கள் என ஒரே கூட்டம்… வீட்டை நோக்கிப் போனபோது தான் புரிந்தது தினேஷுக்கு.. அவனுடைய வீடு இடிந்து போய் இருக்கிறது .. ஒன்றுமே புரியவில்லை தினேஷுக்கு.. பக்கத்து வீட்டுகாரர்கள் ஜாக்கும், டோனியும் போலிசாரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.. வீடு தரை மட்டமாகி விட்டிருந்தது .. ட்ரைவ் வே, முன்புறம் முழுதும் இடிபாடுகள் ..

“என்ன நடந்தது டோனி?” என்றான் தினேஷ்.

“தெரியலை .. அஞ்சு நிமிஷம் முன்னால எதோ சத்தம் கேட்டது.. நான் கராஜிலயிருந்து வெளியிலே ஓடி வந்து பார்த்தா வீடு இடிந்து விழுந்து கிடக்குது … இது நடப்பதற்காகக் காத்திருந்த மாதிரிப் போலீஸும், ஆம்புலன்ஸும் வந்து நிக்குது…”

“ஓ மை காட்..” என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான் … அங்கே கருப்புத் தலைமுடியுடன், சிவப்பு சட்டை அணிந்த ஒருவன் இடிபாடுகளிடையே சிக்கி இறந்து கிடந்தான்.

“யாரது அங்கே இறந்து கிடப்பது?” என்று கேட்டான் ஜாக்.

“அது .. அது .. தினேஷ்..” என்றான் டோனி.

வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தான் தினேஷ். உடல் முழுதும் தொப்பலாக நனைந்திருந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நிஜமாகவே வீடு இடிந்து விட்டதா, தான் இறந்து விட்டோமா என்று எதுவும் விளங்கவில்லை.. சுற்றும் முற்றும் பார்த்ததில் பக்கத்தில் அமைதியாக அபி தூங்கிக் கொண்டிருந்தாள். எழுந்து சென்று அனிதாவின் அறையில் பார்த்தான் … அவளும் கண்ணாடி அணிந்தவாறே தூங்கி விட்டிருந்தாள். பக்கத்தில் டி.எஸ். தானாக விளையாடிக் கொண்டிருந்தது.. அவளது கண்ணாடியைக் கழட்டி வைத்து விட்டு, போர்வையைப் போர்த்திவிட்டு வந்தான்.

கீழே சென்று ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து இரண்டு மூன்று டம்ளர்கள் குடித்தான். என்ன செய்வதென்று புரியவில்லை. அபியை எழுப்பிச் சொல்லலாமா? வேண்டாம், நம்ப மாட்டாள்! நம்பினால் தானும் அரண்டு தன்னையும் பயமுறுத்துவாள். தலைசுற்றியது. வயிற்றில் ஏதோ உருண்டு வாந்தி வருவது போல இருந்தது. மறுநாள் டாக்டர் ஃபில்லைப் போய்ப் பார்க்கலாமா? வேண்டாம்.. அந்த வழுக்கை மண்டையன் நம் பிரச்சனையை உணராமல் என்ஜாய் பண்றதை பத்தி பேசுவான்.. என்ன தான் செய்வது? கடவுளே, இது மட்டும் நடக்காமல் இருந்தால் உன் கோயிலுக்கு வந்து அலகு குத்திக் கொள்கிறேன் என நினைத்துக் கொண்டான். ஆனால் எதுவரை நடக்காமல் இருந்தால்?? ஓவெனக் கதறி அழ வேண்டும் போலிருந்தது தினேஷுக்கு. அன்றிரவு அதற்குப் பின் தூங்கவேயில்லை.

மறுநாள் தன்னிடமிருந்த சிவப்பு சட்டைகள் அனைத்தையும் ட்ராஷ் கேனில் போட்டான்.. முடிந்தவரை வீட்டிலிருப்பதை தவிர்த்துக் குடும்பத்துடன் வெளியில் சுற்றிக் கொண்டிருந்தான். ஆபிஸில் இலவசமாகக் கொடுத்தார்கள் என்று பொய் சொல்லி, அபிக்குத் தெரியாமல் உள்ளூர் ஹோட்டலிலேயே அறை எடுத்துத் தங்கினான். இரண்டு நாட்கள் தொடர்ந்து மண்டையை உடைத்துக் கொண்டதில் ஒரு யோசனை பிறந்தது. வீட்டை விற்று விட்டால்? அப்படியானால் அந்த வீட்டுக்கு வரும் வேறு யாராவது இறந்தால் பரவாயில்லையா என்றும் தோன்றியது. அப்படி நடக்காது. வீடு இடிந்து தான் இறந்து போவதாகத் தான் கனவு வந்தது. ஆகையால் வேறு யாரும் இறக்க மாட்டார்கள், வீடும் இடிந்து விழாது எனத் தனக்குத் தானே சப்பை கட்டி கொண்டான்.

காலில் விழாத குறையாக அபியிடம் வீட்டை விற்க அனுமதி பெற்றான். அனிதாவிற்கு நண்பர்களை விட்டுவிட்டு வேறு இடத்திற்கு மாறுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவளைச் சமாதானப்படுத்துவது தான் சற்றுக் கடினமாகயிருந்தது. சத்தியமாக இதை விடச் சிறந்த வீட்டை அதே ஊரில் வாங்கித் தருவதாகச் சொல்லி இந்த வீட்டை விற்கச் சம்மதிக்க வைத்தான். அடுத்த நாளே ஒரு ரியல்டரைப் பார்த்து வந்த விலைக்கு விற்குமாறும், பத்து நாட்களில் விற்று விட்டால் பத்து சதவீதம் கமிஷன் தருவதாகவும் சொன்னான். அவனும் சொன்ன மாதிரியே சரியாக ஒன்பதாம் நாள் ஒரு பார்ட்டியை அழைத்து வந்து பேசி முடித்தான். விலை சற்றுக் கம்மி தான். ஆனால் இனாமாகக் கேட்டால் கூடக் கொடுத்து விடத் தயாராக இருந்தான் தினேஷ். வீட்டை விற்றாகி விட்டது.
டைட்டில் கம்பெனியிலிருந்து நேராகத் தற்காலிகமாக வாடகைக்கு எடுத்திருக்கும் அபார்ட்மெண்டுக்கு போனார்கள் தினேஷும், அபிதாவும். அனிதா தன் தோழி வீட்டுக்குப் போயிருந்தாள். சந்தோஷமாக இருந்தது தினேஷுக்கு. டாக்டர் ஃபில் சொன்னது போல் தான் இறந்து விடுவதாகக் கண்ட கனவை ரசிக்கத் தொடங்கினான். இப்பவாவது அபிதாவிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டுமென தோன்றியது.

“அபி ..” என்று அழைத்தவன், பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியாகிப் போனான்.

”என்னங்க வேணும்?”

“இல்லை அபி.. அப்புறம் சொல்லுறேன்.”

“நீங்களே கூப்பிட்டிங்க .. நீங்களே அப்புறம் சொல்றேன்னு சொல்றீங்க..என்ன ஆச்சு உங்களுக்கு?”

”தெளிவாயிட்டேன் அபி… இந்தத் தினேஷ் இப்பத்தான் நிம்மதியா, சந்தோஷமா இருக்கேன்”

“இருக்க மாட்டீங்களா பின்னே? ஒழுங்கா இருந்த வீட்டை அடி மாட்டு விலைக்கு வித்துட்டு இங்க சோஃபால சாய்ஞ்சுகிட்டு நிம்மதியா இருக்கேன்னு பேச்சு வேற”

”நீ என்ன வேணா சொல்லு அபி .. நான் இப்ப சந்தோஷமாத்தான் இருக்கேன். ஏன்னு அப்புறமா சொல்றேன் அபி.. சொன்னா நீ நம்பக் கூட மாட்டே”

“சரி, சரி போய் அனிதாவைக் கூட்டிகிட்டு வந்துடுங்க. அவ தான் ஏங்கிப் போயிருக்கா..”

”ஓகே அபி.. இன்னைக்கு டின்னர் வெளியில சாப்பிடலாம்.. எதுவும் சமைச்சிக்கிட்டு இருக்காத.. நான் போயி அவளைக் கூட்டிக்கிட்டு வந்திடறேன்..”

அனிதாவை அழைத்து வரப் போய்க் கொண்டிருந்த போது, தினா ஃபோன் செய்தான்.

“ஹேய் தினா பேசறன்ப்பா… எங்கப்பா போயிட்ட?”

”ஹேய் தினா, எப்ப வந்த இந்தியாலருந்து?”

“நேத்து தான் வந்தேன்.. ஆமாம் நீ வீட்ல இல்லையா, நான் உங்க வீட்டுக்கு முன்னாடி தான் நின்னுகிட்டு இருக்கேன்.”

“எங்க … ஜாக்சன் ஸ்ட்ரீட் வீட்டு முன்னாடியா?”

”பின்னே, எத்தனை வீடு இருக்கு உனக்கு?”

”இல்லைடா.. நான் அந்த வீட்டை வித்துட்டேன்… இப்ப வாடகை வீட்டில இருக்கேன்.”

”என்னடா சொல்ற? வீட்டை வித்துட்டியா?”

“ஆமாம் அது ஒரு பெரிய கதை அப்புறமா சொல்றேன்… என்ன விஷயமா அங்கப் போன இப்போ.. நான் இங்கதான் பார்க்வியூ அபார்ட்மெண்ட்ல இருக்கேன்.. சாயந்திரமா வீட்டுக்கு வா..”

“வர்றேன் வர்றேன்.. ஆனா இன்னைக்கு முடியாது.. நான் இப்போ அவசரமா ராச்செஸ்டர் போயிட்டிருக்கேன்.. நாளன்னிக்குத் தான் வருவேன். இந்தியாலயிருந்து உங்கம்மா அனிதாவுக்கு சில ஸ்வீட்ஸும், டான்ஸ் ட்ரெஸ்ஸும் கொடுத்தனுப்பினாங்க .. ட்ரஸ் கூடப் பரவாயில்லை
ஸ்வீட்டைத் தான் உடனே உன் கிட்டக் கொடுக்கணும் .. ரெண்டு நாள் தாங்குமான்னு தெரியல..”

“அப்படியா, நீ வீட்ல ஃபிரிட்ஜ்ல வெச்சுக்கோ, நீ வந்ததும் வாங்கிக்கிறேன்”

“இல்லடா நான் இப்பவே இப்படியே போய்க்கிட்டுதான் இருக்கேன். ஒண்ணு பண்றேன், இந்த வீட்டிலேயே போர்ச்சுல வெச்சுட்டு போறேன்.. நீ எங்க இருக்க இப்போ?”

”நான் இப்ப அந்தப் பக்கமாத்தான் வந்துகிட்டிருக்கேன். அனிதா அவ ப்ரெண்ட் சரண்யா வீட்டில இருக்கா. அவளைக் கூட்டிட்டுப் போகத்தான் வந்துகிட்டிருக்கேன்.”

“நல்லதா போச்சு.. அப்ப நான் இங்க வெச்சுட்டு போறேன் மறக்காம வந்து எடுத்துகிட்டு போயிடு” சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டான்.

தினேஷ் தன் வீட்டு சப் டிவிஷனில் திரும்பும் போதே மக்கள் பரபரப்பாக ஓடுவதை கவனித்தான் .. தூரத்தில் வானில் ஒரு புகை மூட்டம் உருண்டையாகத் தோன்றி கலைந்து கொண்டிருந்தது. ‘பொய்ங் .. பொய்ங் என வினோத சப்தம் எழுப்பிக் கொண்டு அவனை இரண்டு தீயணைப்பு வண்டிகள் கடந்து போயின .. அவை தன் வீட்டுத் தெருவுக்குள் நுழைவதைப் பார்த்தான் தினேஷ் … புகை மூட்டமும் கிட்டத்தட்ட அவன் வீட்டின் திசையிலிருந்தே வருவதாகத் தோன்றியது … அப்படியென்றால் .. அப்படியென்றால் .. தான் கனவில் கண்டது தான் நடந்திருக்குமோ … என நினைத்தான் தினேஷ். காரை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான் … ‘நான் செத்து விட்டேனா?’ தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.. ‘இல்லை என்னால் என்னை தொட முடிகிறது, உணர முடிகிறது .. கால், பாதம் எல்லாம் இருக்கிறது’ மனம் சொல்லியது.

இறங்கி தன் வீட்டை நோக்கி ஓடினான் .. தடுத்த போலிசை சமாளித்து ஓடியவன் இரண்டு வீடுத் தள்ளி அப்படியே நின்றான் .. அவன் கண்ட காட்சி அவனை உறைய வைத்தது…. நிஜம் தான் .. அவனுடைய வீடு இருந்த இடம் தெரியாமல் சிதைந்து கிடந்தது .. இடிபாடுகளின் இடையே மூக்கை நீட்டிக் கொண்டிருந்தது ஒரு பயிற்சி விமானம் .. விட்டு விட்டு இன்னமும் சுற்றிக் கொண்டிருந்த விமானத்தின் நுனியிலிருந்த விசிறி இடிபாடுகளின் தூசியை பறக்க விட்டுக் கொண்டிருந்தது.. இடமே தூசு மண்டலமாகிப் போயிருந்தது ..

ஆங்காங்கே சிறு சிறு நெருப்புத் தீவுகள் .. தீயணைப்பு வீரர்கள் அவற்றை அணைக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தனர் .. ஆடிப் போய்விட்டான் தினேஷ் .. பக்கத்து வீட்டு ஜாக்கும், டோனியும் கூட செய்வதறியாது உறைந்திருந்தனர் ..

“என்ன நடந்தது டோனி ..”

“தெரியலை .. திடிர்னு பெரிசா சத்தம் கேக்க துவங்கிச்சு .. ஏரோப்ளேன் சத்தம் .. ரொம்ப கிட்ட கேட்ட மாதிரி இருந்துச்சு ..என்ன ஏதுன்னு யோசிக்கிறதுக்குள்ள டமால்னு பெரிய சத்தம் ..வெளியில ஓடி வந்துப் பார்த்தா விமானம் சரியாய் உங்க வீட்டு மேல இடிச்சு நிக்குது … ”

“ஓ மை காட் .. நீ ரொம்ப அதிர்ஷ்டமானவன் .. நீ வீட்டுல இல்லாதப்ப இது நடந்திருக்கு …” என்றான் ஜாக்.

“அது சரிதான் … வீட்டுல யாரும் இல்லாதது நல்லதாப் போச்சு”

“ஹே .. யாரது அங்கே இறந்து கிடப்பது?” என்று கேட்டான் ஜாக்.

அப்போது தான் கவனித்தான் தினேஷ் … கனவில் கண்ட மாதிரியே கருப்புத் தலைமுடியுடன், சிவப்புச் சட்டை அணிந்த ஒருவன் இடிபாடுகளிடையே சிக்கி இறந்து கிடந்தான்

“அது .. அது .. தினேஷ்..” என்றான் டோனி.

அதிர்ச்சியில் திரும்பினான் தினேஷ் “வாட் டூ யூ மீன்?”

“வெல் .. அட்லீஸ்ட் அவனோட வாலட்ல இருந்த கார்டு அதான் சொல்லுது நம்ப தினேஷோட பிரெண்டு போல ….” சொல்லியவாறே அட்டையை நீட்டினான் … அதில், ‘தினேஷ் நாகராஜ் (தினா)’ என அச்சிடப்பட்டு இருந்தது!

பக்கத்தில் தினா கொண்டு வந்த இனிப்புகளும், பட்டுப் பாவாடையும் சிதறிக் கிடந்தன.

மர்மயோகி.

 

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Anand says:

    You kept me in the story all through the end. Nice Job, Loved it! I see some similarities with your earlier story about a couple – Rochester and fire were mentioned in that story too.

  2. raghuraman says:

    Good ravi. Nice flow. it happens to an individual based on his dream. suddenly , i remember a smilarity with mammooty film , “iyer the great “(hope the film name is correct)

    i liked your writing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad