\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

விழிப்புறுவோம்

Filed in தலையங்கம் by on September 8, 2022 0 Comments

அமெரிக்கப் பிரதேசங்களில் இலையுதிர் காலத்துக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன. செப்டம்பர் முதல் வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்து சாலைகளில் பள்ளிச் சிறுவர்கள், பள்ளிப் பேருந்துகளைப் பார்க்க முடிகிறது;  கடைகளில் ஆரஞ்சு நிற சட்டைகள், அலங்காரப் பொருட்கள், பரங்கிக்காய், ஹாலோவீன் சமாச்சாரங்கள்

அடுக்கப்பட்டு கட்டியம் கூறி வரவேற்கின்றன; நீண்ட பயணத்துக்குத் தயாராகும் பெருந்தாரா வாத்துகள் (Geese) கூட்டமாகப்  பயிற்சியெடுத்து வருகின்றன; வீட்டின் பின்கட்டில் அணில்கள் சுறுசுறுப்புடன் குளிர்காலத்துக்குத் தேவையான உணவுகளைச் சேகரிப்பதில் மும்முரமாகவுள்ளன; பகல்நேரம் சுருங்கி, சில்லென்ற காற்றுடன் இருளின் ஆட்சி மேலோங்கி வருகிறது. நாட்காட்டிப் படி ‘ஃபால் ஈக்வினாக்ஸ்’ (Fall / Autumnal Equinox) – இரவும், பகலும் சமமாகத் தோன்றும் நாள் – செப்டம்பர் 21ஆம் தேதி நிகழ்ந்து, செப்டம்பர் 22 ஆம் தேதி இலையுதிர்காலம் தொடங்குகிறது. ஆனாலும் இயற்கையின் அறிகுறிகளை அல்லது மாற்றங்களை அவ்வளவு துல்லியமாக அளவிட்டு விடமுடியுமா?

இந்தாண்டின் கோடைக்காலம் கடுமையாகவே இருந்தது. மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான் வெள்ளத்தில் மூழ்கியிருந்தாலும் பல நாடுகள் போதுமான மழைப்பொழிவின்றி வறண்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, சீனா மற்றும் பல ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகள் நீடித்த வறட்சியைக் கண்டுள்ளன. இதன் விளைவாக உணவு மற்றும் ஆற்றல் பற்றாக்குறை அபாயம் தலையெடுக்கத் துவங்கிவிட்டது.

அமெரிக்காவில் ஃபீனிக்ஸ், அரிசோனா (113 டிகிரி), லான்காஸ்டர், கலிஃபோர்னியா (112 டிகிரி), ஒக்லஹாமா நகரம், ஒக்லஹாமா (111 டிகிரி), டாலஸ், டெக்ஸாஸ் (107 டிகிரி) போன்ற வெப்பநிலைகள் 60-70 ஆண்டுகளில் கண்டிராதவை. மினசோட்டாவும் சில நாட்கள் 100 டிகிரியை கடந்தது. 

சீனாவின் பல பகுதிகள் (சான்சிங் (Chongqing) 113 டிகிரி, சிசுவான் (Sichuan) 110 டிகிரி) கடுமையான கோடையால் வறட்சிக்கு உள்ளாகிவருகின்றன. பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் பல தசாப்தங்களில் கண்டிராத வெப்ப அலையை சந்தித்துள்ளன. கூடவே இந்நாடுகளில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு காட்டுத் தீ பரவி வருகிறது. போதுமான மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் கடும் வறட்சியை எதிர் கொண்டுள்ளன இந்நாடுகள். ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய-உக்ரைன் போரால் எரிசக்தி மற்றும் மின்னாற்றல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வறட்சி மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது. பல நதிகளில் நீர் குறைந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டு, ஜெர்மனிக்கு நிலக்கரி சுமந்து வரும் கப்பல்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. நார்வே நாட்டின் 90 சதவிகித மின்னாற்றல் நீர்மின்திறன் மூலமே பெறப்பட்டு வந்தது. வறட்சி காரணமாக பல மின்னாலைகள் செயல்படாததால் கடும் மின்வெட்டை எதிர்கொண்டு வருகிறது நார்வே.

ஐரோப்பிய ஒன்றியத்தில், வருமாண்டின் அறுவடைக் கணிப்பின்படி,  கடந்த ஐந்தாண்டு சராசரியுடன் ஒப்பிடுகையில், தானிய சோளத்திற்கு 16%, சோயாபீன்களுக்கு 15% மற்றும் சூரியகாந்திக்கு 12% குறைந்துள்ளன. ‘க்ளோபல் ட்ராட் ஆப்ஸர்வேட்டரி’ (Global Drought Observatory) ஐரோப்பிய ஒன்றியத்தின் 43% வறட்சிக்கு உள்ளாகிவிட்டதாகத் தெரிவிக்கிறது. 

ஆப்பிரிக்காவில் எரித்ரேயா, சோமாலியா, எத்தியோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ‘ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா’ தொடர்ந்து நான்காண்டுகளாக போதுமான மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் மிகக் கொடிய பட்டினியை அனுபவித்து வருகிறார்கள். மனிதர்கள், விலங்குகள், கால்நடைகள் என்ற பாகுபாடின்றி தினசரி இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. 

அமெரிக்காவில் கடும் வறட்சி காரணமாக எண்ணற்ற விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் வழக்கத்தைக் காட்டிலும் 50 சதவிகித நீரை மட்டுமே விவசாயத்துக்குக் பயன்படுத்திவருகின்றனர். இதனால் விளைச்சலும் வெகுவாகக் குறைந்துவிட, உணவுப் பஞ்ச அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக கலிபோர்னியா, ஆரிகான், நெவேடா, யூடா, நியூ மெக்ஸிகோ, டெக்சஸ் போன்ற மேற்கு மாநிலங்கள் வறட்சிக்கு இலக்காக நிற்கின்றன. 

கலிபோர்னியாவின் பல நகரங்களில் கடுமையான நீர்க் கட்டுப்பாட்டு சட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன. அலங்கார நீரூற்றுகள், செயற்கைக் குளங்கள் ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை; அலங்காரத்துக்குத் தவிர மற்ற பயன்பாடில்லாத புல்வெளிகளுக்குத் (non-functional lawns) தண்ணீர் பாய்ச்சுவது கூடாது; வாகனங்களை தண்ணீர் உறிஞ்சாத இடத்தில் வைத்துக் கழுவக் கூடாது; தெருக்கள், நடைபாதை சுத்திகரிப்புக்குத் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது; தண்ணீர் குழாய்கள் தானாகவே அடைபடும் வகையில் (automatic shutoff nozzle) இருத்தல் வேண்டும் என பல சட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ‘தண்ணீரைக் சேமிப்போம்’ என்ற முன்னெடுப்புத் தொடங்கப்பட்டு தண்ணீர் வீனாவது தொடர்பான அத்துமீறல்களைப் பற்றி அரசுக்குத் தெரிவிக்க இணையதளங்களும் (SaveWater.CA.Gov) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் நிருபணமானால் குறைந்தபட்சம் $500 அபராதமும் விதிக்கப்படும். 

சீனாவில் மின்சக்தி பற்றாக்குறை ஏற்பட்டு பல தொழிற்சாலைகளில் உற்பத்தி நேரம் குறைக்கபட்டுள்ளது. சில, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

விளைநிலங்கள் அழிந்து போகாமலிருக்க செயற்கை முறையில் மேகத்தில் சில்வர் ஐயோடைடு தூவப்பட்டு வருகிறது. இதனால் ஈரப்பதம் அதிகரித்து செயற்கை மழைப்பொழிவு உண்டாகக்கூடும். 

பொதுவாக, பெருமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தை எளிதில் உணரவும், கணிக்கவும் முடியும். ஆனால் வறட்சி நம்மை அறியாமல் நுழைந்துவிடுகிறது. மழையின்மை, வெப்ப அதிகரிப்பு போன்ற சமிக்ஞைகள் தற்காலிகமானதாகத் தோன்றினாலும், அதன் பாதிப்புகள் மெல்ல மெல்ல பரவுவதை கணிக்கத் தவறிவிடுகிறோம். உண்மையில், வறட்சி கடந்த நான்கு தசாப்தங்களில் உலகெங்கிலும் உள்ள மற்ற எந்த வகையான இயற்கை பேரழிவுகளையும் விட அதிகமான மக்களை பாதித்துள்ளது.

வறட்சி புதிதல்ல. மனிதகுலத்தை அச்சுறுத்திய  கொடிய வறட்சிக்காலங்கள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. சமீபகாலம் வரை அவை காற்று, நிலம், வெப்ப அளவு, கடல் வெப்ப நிலை போன்ற இயற்கை நிகழ்வுகளாகவே அமைந்திருந்தன, அல்லது அவ்வாறு கருதப்பட்டு வந்தன. இயற்கை மீதான மனிதனின் அலட்சியமும் வறட்சி வாய்ப்புகளை பன்மடங்கு அதிகரிக்கிறது என்கிறது இன்றைய விஞ்ஞான ஆய்வுகள். பொருளாதாரத்தைப் போலவே, நீரின் வரத்தும், தேவையுமே (supply and demand) வறட்சி நிலையை தீர்மானிக்கிறது.

இயற்கை மாற்றங்களால் ஏற்படும் நீர் வழங்கல் அல்லது நீர் வரத்துத் தட்டுப்பாடுகளை மனிதகுலம் தீர்க்க முடியாது. ஆனால் கிடைக்கும் நீரை முறையாகப் பயன்படுத்தும் ஆற்றல் மனிதர்க்கு உண்டு. தற்போதைய வறட்சி இதற்கான விழிப்புணர்வு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

பூமியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் சேகரமாகும் கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் நீராவியுடன் கலந்து ஒரு போர்வைபோல் படர்ந்துள்ளது. சூரியஒளியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது இந்த போர்வை போன்ற அமைப்புதான். ஆனால் இந்தப் போர்வை பூமியிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை வெளியேற்றாமல் தடுத்து அவற்றை பூமிக்கே திரும்ப அனுப்பி பூமியை வெப்பமாக்கி விடுகிறது. கண்ணாடி கூரை போன்று அமைந்துள்ள இந்த அடுக்கில் நிலக்கரி, பெட்ரோல், டீசல், புதைபடிம  எரிபொருள் (fossil fuel) போன்ற வெப்ப வாயுக்கள் வெளியேறாமல் பூமியின் சுற்றுப்புறச் சூழலை பாதித்து புவிவெப்பத்தை அதிகரிக்கிறது. அமெரிக்கர்கள், எஞ்சிய உலகத்தினரை விட சராசரியாக நான்கு மடங்கு அதிகமான கார்பன் மாசுபாட்டை உற்பத்தி செய்கிறார்கள்.  பசுங்குடில் வாயுக்கள் எனப்படும் புதுப்பிக்க இயலாத ஆற்றலைக் குறைத்து, மறுசுழற்சிக்கு ஏற்ற சூரிய ஆற்றல் (solar energy), காற்றாலைகள் (wind energy) போன்றவற்றை பாவிப்பது உலகின் அதிமுக்கியத் தேவையாகக் கருதப்படுகிறது. முன்னேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்தல், நீர் நிலைகளை ஆக்கிரமித்தல், வனவிலங்குகளைப் புலம் பெயர்த்தல் போன்ற மாற்றங்களைச் செய்தல் புவி வெப்பமயமாதலுக்கு வலு சேர்த்துவிடும். 

தனிமனிதருக்கு பசுங்குடில் வாயுக்களைக் குறைப்பதும், வனங்கள், நதிகள், ஏரிகளை பாதுகாப்பதும்  மலைப்பாகத் தோன்றலாம். ஆனால் இவை குறித்த விழிப்புணர்வு நம் தலைமுறைக்கும், வருங்கால தலைமுறைகளுக்கும் அவசியம் தேவை.

அமெரிக்காவில், பழுதடைந்த குழாய்களிலிருந்து சொட்டு சொட்டாக ஒழுகும் நீரின் அளவு மட்டும் ஆண்டுக்கு 2.1 டிரில்லியன் கேலன்கள் இருக்கலாம் எனக் கணக்கிடப்படுகிறது. ஒழுகும் குழாய்கள் இருப்பின் அவற்றைச் செப்பனிடுவது, கவனத்துடன் தண்ணீரைப் பயன்படுத்துவது, குளியலறை, சமையலறை, வாஷிங் மெஷினிலிருந்து வெளியேறும் மாசற்ற நீரை (gray water) மரஞ்செடிகளுக்கும் புல்வெளிக்கும் பாவிப்பது,  மழை நீரைச் சேகரித்து மறு சுழற்சிக்கு உள்ளாக்குவது, வீட்டில் மரங்கள் வைப்பது போன்ற எளிய நடவடிக்கைகள், சின்னச்சின்ன மாற்றங்கள் சுற்றுப்புறச் சூழலைப் பேணும் நீண்ட பயணத்துக்கான முதல் அடியாக அமையும். உலகளவில் புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றங்கள் குறித்து நடைபெறும் கருத்தரங்குகள், விவாதங்கள், ஆய்வுகளுக்குச் செவி மடுப்போம்; உள்ளூர் நகரசபை, கிராம சபைகளில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வழிமுறைக்கான கலந்தாய்வுகளைப் பரிந்துரைப்போம். நம்மால் வெல்ல முடியாவிட்டாலும், இயற்கையின் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் உத்திகளைக் கையிலெடுப்போம்.

  •   ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad