\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கோமடீஸ்வரர்

komadeeswarar2_450x4501980 களில், பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆகாயத்தில் பறந்து கொண்டே மலர் தூவி வணங்கியது பெருமளவு விவாதத்திற்குள்ளானது நினைவிலிருக்கலாம். அந்தக் கோமடீஸ்வரர் சிலை அமைந்திருக்கும் ஷ்ரவணபெளகொளா (Shravanabelagola) செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. மதச் சம்பந்தமான காரணமெதுவுமில்லாமல், சாதாரணச் சுற்றுலாவாகத் தொடங்கிய இந்தப் பயணம் பாதித்த ஒரு சில குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கர்நாடக மாநிலத்தில், பெங்களூர் நகரிலிருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஷ்ரவணபெளகொளா. இந்தக் கன்னட வார்த்தை பல வார்த்தைகளின் கூட்டுச் சொல்லாகும். “பெள” என்றால் வெள்ளை, “கொளா” என்பது குளம். ஷ்ரவணர்கள் என்பது ஜைன மதத்துறவிகளைக் குறிக்கும் சொல்லாகும். பல வெள்ளைக்குளங்களுக்கு மத்தியில் ஷ்ரவணர்களால் சூழப்பட்ட பெருமை வாய்ந்த குளம் என்பது இந்த ஊரின் பெயர்க் காரணம்.

ஷ்ரவணபெளகொளா ஊரில் சந்திரகிரி மற்றும் இந்திரகிரி என இரண்டு மலைகள் உள்ளன. மௌரிய வம்சத்தின் புகழ் வாய்ந்த மன்னரான சந்திரகுப்த மௌரியர், சந்திரகிரியில் தியானத்தில் இருப்பது வழக்கமாம். அவரின் நினைவாக ஜைன மதக் கோயில் (”பசதி”) ஒன்றை அசோகர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு இங்கு நிறுவியுள்ளார். இந்த ஊரில் முதலில் நுழைந்ததும் நம் கண்களுக்குப் புலப்படுவது “ஷ்வேத சரோவர்” என்றழைக்கப் படும் வெள்ளை ஏரியும் அதனைச் சுற்றி அமைந்துள்ள, கண்களைக் கொள்ளை கொள்ளும் படியமைப்புமாகும்.

அந்தக் குளத்தைக் கடந்து வலது புறம் பார்த்தால் வானுயரக் கம்பீரமாக நிற்கும் சந்திரகிரி மலை. சுமார் ஆயிரம் படிகள் என்றாள் என் மனைவி. பேருந்தோ அல்லது விஞ் போன்றதோர் கருவியோ இருக்கிறதா எனக்கேட்ட எந்தன் அப்பாவி தனத்தைப் பார்த்து அரக்கத்தனமாய்ச் சிரித்தாள் இங்குப் பலமுறை வந்து திரும்பிய என் வாழ்க்கைத் துணைவி.

“என்ன, நடந்துதான் போணுமா?” என்று ஆரம்பித்த கேள்வி “போய்த்தான் ஆக வேண்டுமா” வில் வந்து முடிந்தது.

எந்தக் கருணைக்கும் இடமில்லை என்று தெரிந்த பின்னர் மனைவி குழந்தைகளுடன் நடக்க ஆரம்பித்தோம். ஒரு சில படிகள் ஏற ஆரம்பித்ததும் புரிந்தது ஒவ்வொரு படிகளையும், இரண்டு அல்லது மூன்று என்று எண்ணிக் கொள்ள வேண்டுமென்று. குடும்பத் தலைவன் (!) என்ற முறையில், குழந்தை ஒன்றையும் தூக்கி கொண்டு நடக்க வேண்டிய கட்டாயம். வேர்த்து விறுவிறுக்கும் நம் நிலையைப் பார்த்து “சந்திரக் குப்த மௌரியர் தெனமும் மேல நடந்து போய் மெடிட்டேஷன் செய்வாராம்” என்று வெறுப்பேற்றினாள் நம்மில் மறுபாதி.

“ஆமா, அவர் சக்ரவர்த்திடி, நாலுபேர் பல்லக்குல தூக்கிண்டு போயிருப்பா” என்ற நம்மைப் பார்த்து,

“நடந்தேதான் போயிருக்காராம், இந்தக் கல்வெட்டு சொல்றது” என்று நடந்து போகும் மலைமேலேயே பொறிக்கப்ப பட்டிருந்த, கன்னடத்தில் எழுதப் பட்டிருந்த குறிப்பு ஒன்றைப் படித்தாள். நமக்குக் கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாது என்ற நம்பிக்கையில் கூறுகிறாள் என்று தோன்ற, சற்றுத் தள்ளி பார்த்தால் வேறொரு குறிப்பு – இந்த முறை தமிழில். இதிலும் அவர் நடந்து சென்றதாகவே சொல்லப் பட்டிருந்தது. அது சரி, ராஜா நினைத்தால் என்ன வேண்டுமானால் செதுக்க வைக்கலாம் என்றது “தமிழ்க் குலக் காவலர், தரணி காத்த தமிழ் மகள்” எனப் பலப்பல அரசியல் சுயவிளம்பரம்பங்களைக் கேட்டுப் பழகிப்போன நம் அறிவு.

நடந்து செல்லும் மலையெங்கிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பொறிக்கப்பட்ட குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. அவற்றையெல்லாம் கண்ணாடி கதவிட்டு மூடி விஷமிகள் எதுவும் செய்துவிடா வண்ணம் பாதுகாத்து வருகிறது கர்நாடக அரசு. இதுபோல 800க்கும் மேற்பட்ட குறிப்புகள் கிடைத்திருப்பதாகவும், இவை தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி மற்றும் மஹாஜனி என்ற ஆறு மொழிகளில் காணப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இவை பெரும்பாலானவை பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னதாக எழுதப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மனைவியின் கிண்டல்களுக்கும், பெரியவளின் கேள்விகளுக்கும், தோளின் மேல் அமர்ந்து வரும் சிறியவளின் தொல்லைகளுக்குமிடையே ஒரு வழியாய் மலையின் சிகரத்தைக் கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம். ஜைன மதக் கோட்பாடுகளுக்கொப்ப கோயிலின் சுவர், மற்றும் கதவுகள் செய்யப்பட்டிருந்தன – ஆனால் கூரை மட்டும் காணப்படவில்லை. அருகே நெருங்க நெருங்கத் தெரிய ஆரம்பித்தது ஒரு கருணைமிகு முகம். இந்த முகத்தின் உயரம் கோயிலிற்குக் கூரையில்லாத காரணத்தை எளிதில் விளக்கியது. பிரம்மாண்டத்தின் மொத்த உருவம். கனிவான முகம், ஆனால், கூர்மையும், பிரம்மாண்டமும் ஒரு கணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும், மயிக்கூச்செறியச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. சிறிது, சிறிதாகக் காணத்தொடங்கிய இந்த முகம், நிலைப் படியைத் தாண்டியதும் கண்ணெதிரில் சடாரெனத் தோன்றும் பிரம்மாண்டமான கோமடீஸ்வரர் – உயிரை உலுக்கியது எனலாம்.

நிமிர்ந்து பார்த்துக் கண்ணோடு கண் பொருத்த இயலவில்லை. என்ன அழகாக வடித்துள்ளனர் இந்தச் சிலையை? எப்படிக் கொண்டுவந்தனர் இப்படி ஒரு கனிவை அந்தக் கல்லில்? நேரில் உயிருடன் பார்த்திருந்தால் எப்படி இருந்திருப்பார் இந்தப் பாகுபலி? வழக்கம் போல் நம் மனது கற்பனையில் குதித்தது. கண்கள் பனிக்கத் தொடங்கின.

ஜைன மதத்தைச் சார்ந்த இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களுள் முதன்மையானவர் புருதேவா. இவருக்கு இரு மனைவியர். மூத்த அரசி யசஸ்வதியின் முதல் மைந்தன் பரதன். அவன் தவிர அரசிக்கு ஒரு நூறு மைந்தர்களும் ஒரே ஒரு மகளும் பிறந்தனர் (கிட்டத்தட்ட மகாபாரதக் கௌரவர்கள் போல). இளைய தாரம் சுநந்தாவிற்கு பாகுபலி என்ற மகனும் சௌந்தரி என்று ஒரு மகளும் பிறந்தனர். புருதேவரின் மறைவிற்குப் பிறகு பரதன் அரசனான், மற்ற நூறு மைந்தர்களுடன் இளைய தார மகன் பாகுபலியும் இளவரசர்களாக முடிசூட்டப்பட்டனர்.

பேருடனும் புகழுடனும் சில வருடங்கள் ஆட்சி செய்த பரதன், சக்ரவர்த்தி ஆக வேண்டுமென முடிவெடுத்து அண்டை நாடுகளுடன் படையெடுத்துச் செல்லலானான். அனைத்துக் குறுநில மன்னர்களையும் வென்று களிப்புடன் தன்னாடு திரும்பிய பரதன் தன்னரசாங்கத்திலேயே தனக்கு எதிரிகள் இருப்பதாக உணர்ந்தான். அவனைச் சுற்றியுள்ள துறவிகள் அவன் உடன் பிறப்புகளே அவனுக்கெதிராகச் செயல்படுவதாகக் கூற, அதனை நம்பி அவர்களுக்கெதிராகப் போரிடுவது என முடிவெடுத்தான் பரதன். இதனை அறிந்த சகோதரர்கள் விரக்தியுற்று தங்களின் உடைமைகளை விட்டுத் துறவறம் பூண்டு செல்ல, இளைய தாரத்தின் மகனான பாகுபலி மட்டும் போருக்குத் தயாராகிப் படையெடுத்துச் செல்லலானான். நடக்க இருக்கும் இரு பராக்கிரமசாலிகளிடையேயான போரின் விளைவுகளைக் குறித்தும், அதனால் ஏற்படும் உயிர்ச் சேதம் குறித்தும் மிகவும் கவலைகொண்டனர் அமைச்சர்கள். மிகவும் முயற்சி செய்து, அவர்களிருவரிடமும் பேசி ஒரு ஏற்பாடு செய்திருந்தனர்.

போர்க்களம் சென்று ரத்தக் களரியில் யார் வென்றவர் என்று முடிவெடுப்பதற்கு மாற்றாக, பரதனும், பாகுபலியும் ஒருவருக்கொருவர் மூன்று விதமான போட்டிகள் கொள்வது என்று முடிவானது. முதல் போட்டி, இருவரும் பிரவாகமாக ஓடுகின்ற ஆறு ஒன்றில், முழங்கால் வரையுள்ள தண்ணீரில் நின்று கொண்டு ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் இறைக்க வேண்டும். மற்றவரைத் திணறடித்து வெல்ல வேண்டும் என்று முடிவானது – பாகுபலி இந்தச் சுற்றில் வெற்றியடைகிறார். இரண்டாவது சுற்று, சுட்டெரிக்கும் வெயிலில் ஒருவருக்கொருவர் எதிரெதிராக நின்று கொண்டு உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எவர் முதலில் கண் சிமிட்டுகிறாரோ அவர் தோற்றவராகக் கருதப் படுவார். இந்தச் சுற்றிலும் பாகுபலி வெற்றியடைகிறார்.

இறுதியான மூன்றாவது சுற்று இருவருக்குமான மல்யுத்தம். இருவரின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கில் கூடியிருக்கும் ஊருக்கு மத்தியிலுள்ள ஒரு பொது விளையாட்டு மைதானத்தில் மல்யுத்தம் தொடங்குகிறது. ஒரே ஆரவாரம். இருவரின் ஆதரவாளர்களும் தங்களின் தலைவன் வெற்றியுற வேண்டுமென தங்களாலானவரை ஆர்ப்பரித்து ஆதரவு தருகின்றனர். கடுமையான மல்யுத்தம், இறுதியில் பாகுபலி வெற்றி பெரும் நிலை. செயலிழந்த பரதனைத் தன் தலைக்கு மேல் தூக்கி சுற்றத் தொடங்குகிறார் பாகுபலி. இந்த நிலையில் விரக்த கதியில் ஞானம் பெறுகிறார். ஊரே கூடியிருக்கும் இந்த மைதானத்தில், வெறும் உலக இச்சை தரும் செல்வத்திற்காக உடன் பிறந்தவனின் மரியாதை கெடும்படியான செயல் புரிவதா, எனத் தோன்ற, பரதனைக் கீழே விட்டுத் தான் தோற்றதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அரசாட்சியை அண்ணனிடமே ஒப்புவித்துத் துறவு நிலையை மேற்கொள்கிறார் பாகுபலி.

பல ஆண்டுகள் காட்டில் கடுந்தவம் புரிகிறார் பாகுபலி. விதேக உணர்வில் இருக்கும் அவரின் பாதங்களில் பாம்பு புற்றிட, செடி கொடி படர அவரின் கடுந்தவம் தொடர்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு, கங்கராயா என்ற மன்னனின் அவையில் அமைச்சராக விளங்கிய சவுந்தராயா என்பவர் பாகுபலியின் மேல் கொண்ட மாறாத பக்தியினால் அவருக்குக் கி.பி. 981 ஆம் ஆண்டு ஒரு சிலை எழுப்புகிறார். இந்தச் சவுந்தராயருக்கு கோமட் என்று மற்றொரு பெயரும் உண்டு. கோமட்டின் கடவுளாக, ஈஸ்வரராக விளங்கிய பாகுபலியின் சிலைக்குக் கோமடீஸ்வரர் எனப் பெயர் வந்ததாகச் சரித்திரம் கூறுகிறது.

கோமடீஸ்வரரின் இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, உலகத்திலேயே பெரிய சிலையாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. கருப்புப் பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட இந்தச் சிலையின் உயரம் 58 அடி மற்றும் 8 அங்குலமாகும். 26 ஆடி அகலம் கொண்ட இந்தக் கோமடீஸ்வரரின் பாதம் மட்டுமே 10 அடி நீளமுள்ளது. கால்களைச் சுற்றிப் படரும் கொடிகளும், பாம்புப் புற்றுகளும் அவ்வளவு தத்ரூபமாகச் செதுக்கப்பட்டது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நம் முன்னோர்களின் கலைத் திறனுக்கு உதாரணம் எனலாம். கோமடீஸ்வரர் சிலையின் பாதத்தில், தமிழ், கன்னடம் மற்றும் மராட்டி மொழிகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. அவையனைத்தும் கி.பி. 981 ஐக் குறிப்பிடுகின்றன.

கோமடீஸ்வரரின் இரு புறங்களிலும் சாமரம் வீசுவது போல அமைந்திருக்கும் உயரமான யக்‌ஷா மற்றும் யக்‌ஷியின் சிலைகள் ஜைனக் கலையின் மற்றுமொரு உதாரணம். கோமடீஸ்வரரைச் சுற்றி அமைந்துள்ள கோயிலில் நாற்பத்து மூன்று தீர்த்தங்கரர்களின் சிலைகளும் அமைக்கப் பட்டுள்ளன. மிக விலையுயர்ந்த, ஆடம்பரமான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கும் குள்ளிகாயஜ்ஜியின் சிலை மற்றுமொரு கண்கொள்ளா காட்சி. குள்ளிக்காய் என்பது நம்மூரின் நாவற்பழம் போன்றதொரு கனி. இதனை விற்கும் பாட்டி (அஜ்ஜி என்றால் கன்னடத்தில் பாட்டி என்று பொருள்) கோமடீஸ்வரரின் மேல் வைத்த எதிர்பார்ப்பு ஏதுமற்ற அன்பினைப் பாராட்டும் வண்ணம் அவரின் சிலை அமைக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றைத் தவிரப் பறந்து விரிந்த கதவு எனப் பொருள்படும் “அகண்டபாகுலு” என்ற ஒரே கல்லில் குடையப்பட்ட கதவும் அதன் முன்னர் நிற்பது போன்ற கஜலக்ஷ்மியின் சிலையும் காண்பவரின் கவனத்தைக் கவர்ந்திழுக்கும் படைப்புக்கள்.

இவையனைத்தையும் கண் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு அங்கிருந்து திரும்பிச் செல்லும் எண்ணமே ஏற்படவில்லை. வழக்கமாக ஆயிரக் கணக்கான மக்கள் சமுத்திரத்திற்கு இடையே எவரேனும் ஒருவரால் தள்ளப்பட்டு இன்னொருவரால் இழுக்கப்பட்டு இரண்டுக்கும் குறைவான நொடிகளில் முடிவடையும் நம் கடவுள் தரிசனம். இதற்கு நேர்மாறாக, மிகவும் பொறுமையுடன் எவரின் தொல்லையுமின்றி, நூற்று கணக்கில் மக்கள் கூடியிருந்தாலும் ஒருவருக் கொருவர் தொட்டுக் கொள்ளாமல் இடிபாடு ஏதுமில்லாமல் கோமடீஸ்வரரின் தரிசனம் என்பது மிகவும் வித்தியாசமான, அனுபவித்து மகிழும் அனுபவமாக அமைந்தது.

ஐம்பத்தியெட்டு அடிகளில், முழு நிர்வாணமாய் வானுயர நின்றிருந்த பாகுபலியாகிய கோமடீஸ்வரர் ஒருகணம் பற்றற்ற தன்மையை நம் மனதில் கொணர்ந்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நிறைவான மனத்துடன் கீழிறங்கத் துவங்கிய நம்மை, நண்பகல் சூரியன் நலமுடனே வாட்ட, எப்போதும் ஏந்திச் செல்லும் மினரல் வாட்டர் கையிலில்லையென்ற ஞானோதயம் தோன்றியது. நீர் வேண்டுமென கேட்ட பெரியவளிடம் வழியில் காணப்பட்ட சிண்டெக்ஸ் டாங்க்கைக் காட்ட, அதனைச் சுற்றியுள்ள நிலையைப் பார்த்த அவள், “பரவாயில்லை, என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்” என்றாள் – மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டே கீழ் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இறங்கி வருகையில் கவனமாகப் படிகளை எண்ணிக் கொண்டே இறங்கினோம். இருபுறமும் கம்பியில் போடப்பட்டிருந்த கைப் பிடிகளைப் பிடித்துக் கொண்டே பத்திரமாக நடந்து செல்ல, எதிரே ஏறி வருபவர்களை ஒருவித இரக்கச் சிந்தையுடன் பார்த்துக் கொண்டே நடக்கலானோம். இருவர் சேர்ந்து முதியவர் ஒருவரை நாற்காலியில் வைத்துக் கொண்டு தூக்கி செல்ல, இதுவே இங்குக் காணப்படும் “விஞ்ச்” என உணர்ந்தோம் – முதலிலேயே தெரிந்திருந்தாலும் நாமும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு சென்றிருக்கலாம் என்றொரு சிறிய எண்ணம் மனதில் தோன்றி மறைந்தது.

அனைத்துப் படிகளும் இறங்கி முடிக்கையில், நமது எண்ணிக்கை 641 என்று முடிந்தது. செருப்பின்றி நண்பகல் வெயிலில் நடந்து முடிக்க, சூடு பொறுக்க முடியாமல் செருப்பு வைக்கப் பட்டிருந்த இடம் நோக்கி ஓடிச்சென்றோம். செருப்பை அணிந்த மறு வினாடி, அருகிலிருந்த இளநீர் கடை சென்று நம் தாகம் தீர்க்க, இளநீர் வியாபாரி கிட்டத்தட்டக் கடையை மூடிவிடலாம் எனுமளவுக்கு குடித்துத் தீர்க்க, நம் கார் அருகில் வந்து கதவு திறக்க, நம் பயணம் இனிதே முடிந்தது.

உடலை வருத்தி உத்தமர்கள் தரிசனம் என்பதில் உட்பொருள் இருக்கிறதென்று உள் மனது விடாது சொல்லிக் கொண்டிருந்தது!!!

-வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad