\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தஞ்சை வரலாறு

Thanjavur1_520x416

இஞ்சியும் மஞ்சளும் கொஞ்சித் தவழும் தஞ்சை மாநகர். என்னடா தஞ்சை மாநகர்னு சொல்லுறான், அது ஒரு சின்ன நகரம் அவ்வளவுதானே என்று நினைச்சிங்கன்னா உங்களுக்கு இந்தக் கட்டுரை வியப்பா இருக்கும்.

இன்னைக்கு மாநகர்ன்னு சொல்ற முக்கால்வாசி நகரங்கள் உருவாவதற்கு முன்னாடியே  தஞ்சாவூர் ஒரு மாநகர். அதுவும் சும்மா இல்ல, தெற்காசியாவின் மிக முக்கியமான மாநகர். ஒரு உவமைக்குச் சொல்லனும்னா இப்போ இருக்கிற வாஷிங்டன் மாதிரி. இந்த ஊர் தலைநகரா இருந்த போது இதன் ஆட்சிக்குக் கீழ் இருந்த நிலப் பகுதிகளெல்லாம் இன்னைக்கு பல நாடுகளாக இருக்கு.

இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து இப்படிச் சொல்லிகிட்டே போகலாம். எல்லா மன்னர்களும் சோழ மகாராசாவின் பேட்டிக்காக இந்த ஊருல தவங் கிடப்பாங்க.

இந்த ஊருக்கு நிறையப் பேர் காரணம் சொல்றாங்க. எல்லா ஊருக்கும் சொல்ற மாதிரி தான் இந்த  ஊரிலும் ஒரு அரக்கன் இருந்தான் அவன் பேர் தஞ்சுகாசுரன். தஞ்சபுரீசுவரர்ன்ற சிவபெருமான் மக்களைக் காக்க அவனை அழிச்சார்னு சைவமும், தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாள்(விஷ்ணு) தான் மக்களைக் காக்க அவனை அழிச்சார்னு வைணவமும் சொல்லுது. அந்த அரக்கன் பேர்ல தான் தஞ்சாவூர்னு வந்தது. .தனஞ்சய எனும் முத்தரைய ராசா இந்த இந்தப் பகுதியை ஆண்டு வந்தானாம். அவன் பேராலேயே தனஞ்சய ஊர்னு சொல்லி பின்னாடி அதுவே மருவி தஞ்சாவூர்னு வந்தது என்று சொல்றவங்களும் உண்டு. மேலே சொன்ன மூணு கதைகளுக்கும் வரலாற்று குறிப்புகள் எதுவும் கிடையாது.

இந்த ஊர் ஆத்தோரம் தஞ்சானு ஒரு வகை கோரை வளருது. அதனால இந்த ஊருக்குத் தஞ்சாவூர்னு பேர் வந்ததா இல்ல தஞ்சாவூருக்குப் பக்கத்துல வளரதால இந்தக் கோரைக்கு தஞ்சானுன்னு பேர் வந்ததான்னு தெரியல.

மொழி ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்கன்னா, மத்த ஊர்களில் பஞ்சம் வந்துட்டா மக்கள் இந்த ஊருக்குத் தஞ்சமாக வருவதால தான் இந்த ஊருக்குத் தஞ்சாவூர்னு பேர் வந்தது அப்படின்னு. இது கொஞ்சம் உண்மையோடு ஒத்துப் போவது போல தெரியுது,

மருத நிலத்தில் உள்ள இந்த ஊரில் காவிரியாறு, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி , காவிரி , கொள்ளிடம் எனப் பிரிந்து இந்த ஊரின் சுற்றுப் பகுதிகளை வளம் கொழிக்கச் செய்து  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற பெருமையை இந்த ஊருக்கு வாங்கி தருது..

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கல்லணைக் கால்வாய்னு ஒரு ஆறு வெட்டப் பட்டது. இந்த ஆறு தஞ்சை பெரிய கோவில் சுற்று சுவற்றை ஒட்டி ஓடுது. இந்த ஆற்றைப் புது ஆறு என்று தான் மக்கள் சொல்றாங்க.

தஞ்சாவூர்னா தண்- சி (தண்ணீர் நெறஞ்ச) ஊருன்னும் சொல்றாங்க. கர்நாடாகாவில் அணை கட்டுறதுக்கு முன்பு  இதுவும் உண்மையாக இருந்திருக்கும்.

இந்த ஊர் வரலாற்றில தெரியத் தொடங்கியது பிற் காலச் சோழப் பேரரசின் தொடக்கக் காலத்தில் தான். பழையாறை எனும் ஊரைத் தலையாகக் கொண்டு ஆட்சி செய்த விசயாலய சோழன் கி.பி. 850, ல் முத்தரைய மன்னன் இளங்கோ முத்தரையனிடம் சண்டைபோட்டு  தஞ்சாவூரைக் கைப்பற்றினான். இதுவே தஞ்சை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு. இந்த ஊரைப் பத்தி சொல்லும்போது இஞ்சி சூழ் தஞ்சைனு சொல்லுவாங்க. இதுக்கு ஊரைச் சுத்திப் பெரும் மதில்கள் கொண்ட ஊர்னு அர்த்தம்.

இந்த ஊரைச் சோழ நாட்டின் தலை நகரா மாத்திய பிறகு தான் சோழ நாடு சோழப் பேரரசா மாறியது. இந்த ஊர் ஒரே இடத்துல இருக்கானு கேட்டீங்கனா இல்ல. இந்த ஊரைத் தலை நகரமாக ஆண்ட முதல் சோழ மன்னன் விசயாலய சோழன், கடைசி மன்னன் இராசேந்திர சோழன். சுமார் 175 வருடங்கள் (கி.பி. 850 – கி.பி. 1025 வரை) இந்த நகர் தலைநகராக இருந்தது. இந்த மன்னர்கள் ஆட்சியில் தான் பல கோவில்கள் கற்றளிகளாக மாறுச்சு. கட்டடக்கலையின் உச்சமாக இந்த ஊரில் பெரு உடையார் கோவில் கட்டப்பட்டது. இதன் உயரம் 216 அடி. ஆனால் இதன் அடிமனையின்(அஸ்திவாரம் ) ஆழம் வெறும் 5 அடி மட்டுந்தான். இந்தக் கோவில் கட்டடக்கலையின்  நுணுக்கங்கள் பத்தி வேற ஒரு கட்டுரையில் பேசலாம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னாடியே இங்கு வீடுகளுக்கு இலக்கங்கள் (வீட்டு எண்) கொடுக்கப்பட்டு இருந்ததுன்ற செய்தி தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் இருக்கு. குடவோலை முறையில் தேர்தல் நடந்திச்சாம்.

உச்சத்தை அடைஞ்ச எதுவும் விழ்ச்சியை சந்திச்சே ஆகும்றது விதி. தஞ்சையும் அதுக்கு விதி விலக்கில்ல. தலை நகரம் என்ற தகுதியை இழந்தப்புறம்  அதன் சிறப்பை மெல்ல மெல்ல  இழந்து பின் அழிஞ்சே போச்சு.

ஆமா இவ்வளவு பெரிய நகரம் எப்படி ஒரு நாளில் அழிஞ்சு போயிருக்கும்? ஆமாங்க, இந்த நகரத்தின் மிகப் பெரிய எதிரி ஒரு நாள் இந்த நகரத்து மேல படை எடுத்து வந்தான். தஞ்சாவூர் வரலாற்றில் இருந்து காணாமல் போச்சு. இந்த ஊருக்கு நடந்த கொடுமையைக் கேட்டிங்கன்னா அப்பப்பா மிகக் கொடூரமான தாக்குதல்ங்க. இந்த ஊரை அழிச்சு, அரண்மனையை இடிச்சு கழுதை கொண்டு உழுது , எருக்கம் பூ விதைச்சு போன அந்த மா மனிதன் வேறு யாரும் இல்லங்க, மாறவர்ம சுந்தரப் பாண்டியன்னு பெருமையோடு வரலாற்றில புகழப்படும் மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் தான். அவர் விட்டுட்டு போனது தஞ்சை பெரிய கோயிலை மட்டுந்தான்.

பல வீராதி வீரங்க இந்த ஊரில் தோன்றி மறைஞ்சு போனாங்க. அவங்கள்ல ஆதித்தன், பராந்தகன், அருள் மொழின்ற முதலாம் ராசராசன், முதலாம் இராசேந்திரன் இவங்கல்லாம் முக்கியமானவங்க. இவங்க வீரம் மற்றும் பல சுவையான நிகழ்வுகளை வேறு ஒரு சந்தர்ப்பத்தில சொல்றேன். அழிஞ்சு போன தஞ்சை, தற்போதைய தஞ்சையில் இருந்து 10 கி.மீ தொலைவில் வல்லம் என்ற பகுதியில் இருந்திச்சாம்.  இப்படி சில பேர் சொன்னாலும் எதுவும் முழுமையா ஆராயப்படலை.

Thanjavur2_520x416ஆரம்பக் காலத்தில இதே தஞ்சையை, சாமந்த நாராயன சதுர்வேதி மங்கலம்னு சொன்னாங்களாம். அரண்மனைக்கு கிழக்கு பகுதியில் இந்த நகரம் உருவாச்சாம். இது  சாமந்த நாராயன தொண்டைமான்ற நாயக்க மன்னர் படை தளபதியின் பேரால் தொண்டி ராச பாளையம் என்று அழைக்கப்பட்டுச்சாம். அதுவே பின்னாடி கொண்டி   ராச பாளையம்னு  ஆச்சு. இந்தப் பகுதியில அவர் பேரால சாமந்தா குளம் என்று ஒரு குளம் இருக்கு. சிவப்பு நாயக்கர்ன்ற படைத்தளபதி சிவப்பு நாயக்கன் ஏரின்னு  ஒரு ஏரியை வெட்டினானாம். அந்த ஏரியை இப்போ சேப்னாவாரினு சொல்றாங்க.

திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செஞ்ச மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல் தஞ்சாவூர் மேல படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன் நாயக்கர் தோத்து போர்க்களத்தில் வீரமரணமடைஞ்சாரு. கி.பி 1676-ல் மராட்டியச் சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார்

மராட்டிய சரபோஜி மன்னன் சரசுவதி மகால் நூலகத்தை அமைச்சார் . இந்நூலகத்தில் எங்குமே கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் திரட்டி பாதுகாத்து வர்றாங்க. இந்த ஊரிலும் ஒரு காட்டிக் கொடுத்தான் மன்னன் இருந்தான். கட்டபொம்மனின் சகோதரர் சிவத்தையா தஞ்சாவூர் மன்னர் சரபோஜிக்கு கடிதம் எழுதித் தமக்கு ஆதரவளிக்கும்படி கேட்க, சிவத்தையாவின் கடிதத்தைக் கொண்டுவந்த தூதுவனைச் சிறையில் தள்ளிட்டு அக்கடிதத்தை ஆங்கிலேயருக்கு அனுப்பி வைச்சார் மன்னர் சரபோஜி.

ஆங்கிலேயருடன் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் பல ஒப்பந்தங்களைச் செஞ்சிகிட்டாங்க. தஞ்சைக் கோட்டையைத் தவிர மற்றத் தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயரிடம் கொடுத்துட்டாங்க. பின்னாடி அரண்மனையும் ஆங்கிலேயர்கள் வசமாயிடுச்சு.

தஞ்சாவூரும் அதன் சுத்துப் புறங்களும் தஞ்சை மாவட்டமாகச் செயல் பட்டுது. இந்தத் தஞ்சை மாவட்டத்தின் உள் அடங்கிய பகுதிகளாக நாகை , திருவாரூர் மற்றும் இன்றைய முழு இலங்கையும் அடங்கி இருந்தது. தினமும் தஞ்சையில் இருந்து இலங்கைக்கு ஆங்கிலேய அதிகாரிகளோட கடிதங்கள்,  ராமேஸ்வரத்திற்கு புகை வண்டி மூலமாவும், பின்னாடி படகிலும் போச்சாம். இந்தப் புகை வண்டியை Boat Mail னு சொல்வாங்களாம்.

காவேரியின் அரவணைப்பாலும் மற்றும் சுமார் 450 ஆண்டு கால பல்வேறு அரசுகளின் தலைநகராக இருந்ததாலும்,  கலை மற்றும் கலாச்சாரம் இங்கு ஓங்கி வளந்துச்சாம். தஞ்சாவூர் தட்டுகள், தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் பாணி நடனம்,தஞ்சாவூர் பாணி சங்கீதம் என்று ஒவ்வொன்றிலும் தனக்கென ஒரு முத்திரையைக் கொண்ட ஊர், தஞ்சாவூர்.

இது வெற்றிகளை மட்டும் பதிவு செய்யும் ஊர் இல்ல.  இங்க முள்ளிவாய்க்கால் அவலங்களும் கற்சிலைகளாக வடிக்கப்பட்டிருக்கு. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழரின் பெருமையை தஞ்சை பெரிய கோவிலும் தமிழருக்கு நிகழ்ந்த அவலத்தை முள்ளிவாய்க்கால் நினைவுச்சிலைகளும் வரலாற்றில் பதிவு செய்யும்.

-சத்யா-

Comments (5)

Trackback URL | Comments RSS Feed

  1. சுகுமாரன் says:

    முதலில் பனிபூக்கள் முயற்சிக்கு ஒரு பூங்கொத்து…..

    நல்ல கட்டுரை. கடந்த 50-60 ஆண்டு நிகழ்வும் சேர்க்கப்பட்டு இருந்தால் இன்னும் முழுமையானதாக இருந்து இருக்கும்….

  2. முகுந்தகுமார் says:

    நவீன தஞ்சை தந்தை சாமந்த நாராயன தொண்டைமான் பற்றிய தகவல்கள் சிறப்பு.

  3. subramanian.v. says:

    nalla vishayam solli irukeenga paratukal, nanri

  4. சச்சிதானந்தன் வெ says:

    இந்த கட்டுரை வரலாறின் வெற்றிகளை போற்றும் வெலையில் அவலங்கலையும் – இடித்துரைப்பது சிரப்பான முயர்ச்சி. – வாழ்த்துக்கள் பல!

  5. ஜெயபாலன் சுந்தரவேலு says:

    பனிப்பூக்கள் பணி வெற்றியடைய வாழ்த்துக்கள். இந்த தஞ்சை வரலாறு மிகவும் எளிமைய அதே நேரத்தில் ஆழமாகவும் எந்த ஒரு மிகைப்படுத்துதலும் இன்றி சொல்லப்பட்டு இருக்கும் விதம் மிக அருமை. மேலும் “சாமந்தா குளம்” விளக்கம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.வாழ்ந்த இனம் வீழ்ந்து பட்டு இருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற நம் வரலாற்று உண்மைகள் நம் இன எழுச்சிக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். தக்க தருணத்தில் எழுதப்பட்ட இந்த “தஞ்சை வரலாறு” கட்டுரைக்கும் இதைப் படைத்த திரு.சத்யா அவர்களுக்கும் மற்றும் பனிப்பூக்கள் குழுவினருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply to சச்சிதானந்தன் வெ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad