\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

எழுதுங்கள் வெல்லுங்கள் – கவிதைப் போட்டி முடிவுகள்

Filed in போட்டிகள் by on February 25, 2014 1 Comment

kavithai-potti_520x750

பல மாதங்களாக எங்களுக்கு வரும் பின்னூட்டங்களை ஆழ்ந்து படிக்கையில் ஒவ்வொரு வாசகருக்குள்ளும் புதுமையான கவித்திறன் ஒளிந்திருப்பதை உணர முடிந்தது. இவர்களின் திறமையை வெளிக்கொணரும் முயற்சியாக கவிதைப் போட்டி ஒன்றை நடத்த எண்ணினோம். இவர்களின் கற்பனைத் திறனுக்கு ஒரு தலைப்பைக் கொடுத்து எண்ணங்களைச் சிறைப்படுத்தாமல், அதே சமயம் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ, விஷயத்தையோ கருவாகக் கொண்டு எழுத வைத்து கவிதைகளைப் பெற எத்தனித்தோம். அதன்படி உருவானது தான் ‘எழுதுங்கள் வெல்லுங்கள்’ எனும் – படத்துக்குக் கவிதை எழுதும்  புதுமையான கவிதைப் போட்டி.

அதுவும் பனிப்பூக்கள் ஓராண்டு நிறைவடையும் வேளையில் இப்புதுமையான போட்டியை நடத்த எண்ணியதும், வாசகர்களின் கவிதை நயத்தையும், கற்பனை வளத்தையும் சுவைக்கும் பேராசையுடன், சவாலான சூழ்நிலையைப் படமாக வரைந்து தந்தார் எங்களுடைய வரைபட ஆசிரியர்.

முதல் முறையாக நடத்தும் போட்டிக்கு இவ்வளவு கடினமான சூழ்நிலையா என்ற சந்தேகத்துடனேயே படத்தை வெளியிட்டோம். எங்களது சந்தேகத்தை தவிடு பொடியாக்கி வந்து குவிந்தன கவிதைகள். இந்த இதழுக்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வரும் கடைசி நிமிடம் வரையிலும் கவிதைகள் வந்த வண்ணம் இருந்தன.

homeless_concept_contest_620x436படத்தில் இரண்டு முரண்பட்ட சூழ்நிலைகள் தரப்பட்டிருந்தன. முதல் பாதியில் வீடு, சொந்தங்கள் என அனைத்தையும் இழந்த முதியவர் ஒருவர் தன்னம்பிக்கையும் இழந்து மற்றவர்களிடம் உதவி கேட்டு நிற்பதாகவும், மற்றொரு பாதியில் பொருளாதாரக் குறைவினால் அவதிப்படும் ஒரு சிறுமி, பெற்றோருக்குச் சுமையாக, அவர்களை மட்டுமே நம்பியிராமல் தன்னால் முடிந்த பொருளாதார உதவி செய்ய எண்ணி, தன்னம்பிக்கையுடன் தண்ணீர் பாட்டில்களை விற்பதாகவும் வரைந்திருந்தார் எங்களது வரைகலை நிபுணர். பொருளாதாரப் பற்றாக்குறை என்ற பொதுவான பிரச்சனையை எதிர்நோக்கும் வெவ்வேறு வயதுடைய இருவர், வேறுபட்ட மனநிலையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு போராடுவதான படம்.

இது போன்ற குறிப்புகள் ஏதுமின்றி படத்தின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட வாசகர்கள் பலர் கவிதைகளைச் சமர்ப்பித்து இருந்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளைக் கிடைக்கப் பெற்றோம். உள்ளுரிலிருந்து மட்டுமில்லாமல், இந்தியாவிலிருந்தும், உலகின் மற்ற நாடுகளிலிருந்தும் கவிதைகள் வந்து சேர்ந்தன.

அவற்றைப் பரிசீலித்து சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுப்பது, நன்முத்துக்கள் பல நிறைந்த பேழையிலிருந்து சிறந்த முத்தைத் தேர்ந்தெடுப்பதைப் போல மிகவும் கடினமாக இருந்தது.

ஒவ்வொரு படைப்பாளியும் இந்த படத்தினை வித்தியாசமான கோணங்களில் அணுகியிருந்தாலும், படத்தில் இழையோடிய தன்னம்பிக்கை இருத்தல் / இல்லாமை என்ற விஷயத்தை ஏறக்குறைய அனைவருமே தொட்டிருந்தார்கள். இருப்பினும், மூப்பெய்திய பின்னர் இயற்கையாகவே தன்னம்பிக்கை குறைந்து விடுவதையும், இளம் பிராயமாக இருப்பினும் அச்சிறுமியிடம் தன்னம்பிக்கை மிகுந்திருப்பதையும் ஒரு சிலர் மிகச் சிறப்பாக உணர்ந்து எழுதியிருந்தார்கள். அவற்றில் சொற்சுவை, கவிநயம், கருத்துத் திண்மை எனப் பல வகைகளிலும் சிறந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிப்பதில் பனிப்பூக்கள் மிகவும் பெருமையடைகிறது.

அவ்வகையில் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து, தன்னம்பிக்கையோடும்,  துணிவோடும் வாழத் துடிக்கும் பெண்ணின் மனநிலையைத் துல்லியமாக எடுத்துரைத்த “ஒடுங்கிப் போன நெஞ்சம்” என்ற தலைப்பில்  திரு. பார்த்திபன் புனைந்திருந்த கவிதையை வெற்றி பெறும் கவிதையாக அறிவிப்பதில் பனிப்பூக்கள் பேருவகை கொள்கிறது. வாழ்த்துக்கள் பார்த்திபன்!

வெற்றி பெற்ற கவிதை இந்தப் பகுதியில் முதல் கவிதையாக வெளியிடப்பட்டுள்ளது. பரிசு  அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்!

போட்டியில் கலந்துக் கொண்ட மற்ற கவிதைகள் எந்த விதத்திலும் இதற்குச் சளைத்தவையல்ல. எங்கள் ஆசிரியர் குழுவை வசீகரித்த மேலும் சில கவிதைகளையும் இந்த இதழில் வெளியிட்டுள்ளோம்.

பங்குபெற்ற அனைவரின்  ஆர்வமும், முனைப்பும் எங்களை மலைக்க வைத்தன.

ஒவ்வொருவருக்கும் எங்களுடைய மனமார்ந்த பாராட்டுகள்! தொடர்ந்து வரவுள்ள போட்டிகளில் உங்களுடைய பங்கேற்பைக் காண விழைகிறோம்.அதற்கான அறிவிப்புகள் – கூடிய விரைவில்.

நல்வாழ்த்துக்களுடன்.

ஆசிரியர் குழு.

 

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. சச்சி says:

    நல்ல முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad