\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

முப்பரிமாண அச்சுக்கலை

Arivathum_520x322“ஆண்ட்டி … ராகுல் இல்லையா?”

“வாடா .. அவன் வீட்ல இல்லையே …”

“எங்க போயிருக்கான்?”

“அவனுக்குப் போன மாசம் மோட்டார் சைக்கிள் ஆக்சிடெண்ட்ல காது துண்டாகி விழுந்துடுச்சி இல்ல? அதுக்கு ரீப்ளேஸ்மெண்ட் ஆர்டர் செஞ்சிருந்தான் .. அது ரெடியாயிடுச்சின்னு இன்னைக்குக் காலைல ஃபோன் பண்ணியிருந்தாங்க … அதான் போய் ஃபிக்ஸ் பண்ணிட்டு வரப் போயிருக்கான் ..”

“அப்படியா .. எங்க ஆர்டர் பண்ணியிருந்தான்? “

“இங்க தான் செயின்ட். பிரான்சிஸ்ல …”

“அய்யோ அங்க ஏன் போனான் … அங்க இதுக்கு நூறு, இருநூறுன்னு சார்ஜ் பண்ணுவானுங்க …”

“இல்லடா .. மூணு மாசத்துக்கு முன்னால உங்க அங்கிள் ஹார்ட் ரீப்ளேஸ்மெண்ட் கூட அங்க தான் பண்ணாரு … கம்மியா தான் ஆச்சு … இத்தனைக்கும் ஆர்டர் ரெடியாகறத்துக்கு ஒரு வாரம் ஆகும்னாங்க .. ஆனா ரெண்டே நாள்ல ஹார்ட் ரெடின்னு போன் பண்ணாங்க ..”

“ஆமாமா… இப்பதான் தெருவுக்குத் தெரு … ஹுமன் ஆர்கன்ஸ் சீப்பாக் கிடைக்குதே .. காம்பட்டிஷன பீட் பண்ண வேண்டாமா … நான் எதுக்கு சொல்ல வந்தேன்னா.. எங்க அக்கா ரெண்டு மாசத்துக்கு முன்னால நோஸ் ஷேப் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆயிடுச்சின்னு போயி புதுசா வேற மூக்கு மாத்திக்கிட்டு வந்தா .. எதோ கூப்பானெல்லாம் அனுப்பிக்கிட்டு இருக்கான் போலிருக்கு … யாராவது மூக்கு, கண்ணு, காது, வாய் மாத்தணும்னா போயி பண்ணிக்கோங்கடான்னு சொல்லிக்கிட்டு இருந்தா”

“சரி .. சரி .. ரெண்டு தோசை சாப்பிடறயா? உங்க அங்கிளுக்கு தோசை போட்டுட்டு இப்பத்தான் பிரிண்டரை ஆஃப் பண்ணேன் .. சூடாத்தான் இருக்கும் “

“ஐயோ வேணாம் ஆண்ட்டி, எனக்கு கொஞ்சம் வயிறு சரியில்ல எங்க வீட்டுப் பிரிண்டரைத் தவிர எந்த பிரிண்டர்ல செஞ்சு சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது … எனிவே தாங்க்ஸ் ஆண்ட்டி.”

என்ன தலை சுத்துகிறதா? வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகிறதா?

இதெல்லாம் என் பிள்ளைகள் (சரி, சரி .. முறைக்காதீங்க .. வயசாயிடுச்சு தான் .. ஒத்துக்கறேன் – என் பேரப் பிள்ளைகள் காலத்தில், ஒகேவா?) நடக்கக் கூடிய தினப்படி உரையாடலாயிருக்கக் கூடும். ஆம், கூடிய விரைவில் முப்பரிமாண அச்சுத் தொழில் நுட்பம் இதையெல்லாம் சாத்தியமாக்கி விடும்.

அச்சுக் கலை தொடங்கிய காலத்தில் அச்சடிக்க வேண்டிய விவரங்களை மரச்சதுரங்களில் தலைகீழாக மாற்றிச் செதுக்கி, அதை மையில் முக்கி காகிதத்தில் வைத்து அழுத்தினால் நமக்கு வேண்டிய வடிவங்கள், நேராக ஓரளவுக்கு படிக்கிற மாதிரி கிடைக்கும். (ஏங்க .. சத்தியமா நான் அந்த காலத்தில பிறக்கலைங்க ..).

அதுக்கப்புறம் சில நூறு ஆண்டுகளுக்கு அப்புறம் வேண்டிய எழுத்துக்களை, இரும்பில் வேண்டிய அளவு, வடிவத்தில் நிறைய செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் தகவல்களுக்கு எற்ப ஒவ்வொரு எழுத்தா எடுத்து கம்பியில் கோர்த்து, அதை மையில் முக்கி அச்சடிக்கும் முறை வந்த போது, அச்சுக் கலை எஞ்சினியர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள்.

பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டின் லித்தோக்ராஃபி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆஃப்செட் பிரிண்டிங் இரண்டும் சிவகாசியைத் தூக்கி நிறுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் பல மாற்றங்களைக் கண்ட அச்சுக் கலை ஸ்கீரீன் பிரிண்டிங், டாட் மேட்ரிக்ஸ், இங்க் ஜெட், டிஜிட்டல் பிரிண்டிங், ஃப்ளெக்ஸ் பிரிண்டிங் என பல வடிவங்களை கொண்டது. அதன் நீட்சி இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் தொடர முப்பரிமாண அச்சு என்பது சாத்தியமானது.

Arivathum_2_620x429ஒரு பொருளின் நீள, அகலம் மட்டுமல்லாமல் அதன் மேடு, பள்ளம் போன்ற அனைத்துக் கூறுகளையும் முப்பரிமாண ஒளிப்பட தொழில்நுட்பம் (3D Scanning) மூலம் கணினி வழி வரையறை செய்து, கணினி வடிவமைப்பு வரைகலை (CAD) மென்பொருளால் முப்பரிமாண கட்டுமானத்தை உருவாக்குவதே முப்பரிமாண வரைகலை (3D imaging). இத்தொழில் நுட்பத்தை வைத்து x-box, PS3 போன்ற பல விளையாட்டு மென்பொருட்கள், திரைத்துறையில் முப்பரிமாண அசைவூட்டங்கள் (3D animation) எனப் பலதும் சாத்தியமானது. பின்பு இதே முறையைச் சிறிது விரிவுப்படுத்தி, ஒரு இரு பரிமாணப் படலத்தின் மேல் அடுக்கடுக்காக பொருத்தமான படலங்களை ஒட்டுவதன் மூலம் முப்பரிமாண அச்சுக்கலை உருவானது. இது ஆங்கிலத்தில் Additive Manufacturing எனப்படுகிறது. மிக மிக மெல்லிய படலங்கள் ஒன்றன் மீதாக ஒன்று ஓட்டப்படும்போது இவற்றின் இடையே ஏற்படும் இடைவெளி தெரிவதில்லை.

இத்துறையில் வேகமாய் நடந்து வரும் புரட்சியினால் இது போன்ற முப்பரிமாண வடிவங்களை அச்சடிக்கும் மூலப் பொருட்களில் வியக்கத்தக்க முன்னேற்றங்களைக் கண்டு வருகிறோம். பேப்பர்த் துகள்கள், நெகிழித் துகள்கள் என்றிருந்த மூலப் பொருட்கள், இன்று உணவுப் பொருட்கள், இரும்புத் துகள், மரத்துகள், மனித திசுக்கள் என்று வளர்ந்து வருகிறது.

மிக அடிப்படையான திறன்கள் கொண்ட முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் தற்போது $2000 முதல் கிடைக்கிறது. மூலப்பொருட்களின் தன்மைகேற்ப இதன் விலை மாறுபடுகின்றது.

பிரிட்டனைச் சார்ந்த ஒரு மருத்துவ நிறுவனம் சென்ற ஆண்டு ப்ளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் முக ஒப்பனைச் சிகிச்சைக்கு முப்பரிமாண அச்சுக் கலையை பயன்படுத்தியது.

சாண்டியாகோ நிறுவனம் ஒன்று இந்த ஆண்டு மனித திசுக்களைக் கொண்டு ஒரு கல்லீரலை அச்சடிக்கவுள்ளது. மனிதனால் முப்பரிமாணம் கொண்ட எதையும், இன்னொரு உயிரினம் உட்பட, உருவாக்க முடியும் எனும் நாள் அதிகத் தொலைவில் இல்லை.

இப்போது என்ன சொல்கிறீர்கள்? வருங்காலத்தில், இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட உரையாடல் நிஜத்தில் நடக்கக்கூடும் அல்லவா?

மிக அதிகமானப் பொருட் செலவில் உருவாகி வரும் இந்த முப்பரிமாண அச்சுத் துறையைப் பற்றி எனக்கு ஒரு சின்ன சந்தேகம். என்னைப் போன்ற புத்திசாலிகள், இக்கலையைப் பயன்படுத்தி ஒரு பிரிண்டரிலிருந்து மேலும் பல பிரிண்டர்களை அச்சடிக்க நேர்ந்தால் இதன் தயாரிப்பாளர்கள் நொடித்து போவார்கள் தானே? இதை ஏன் அவர்கள் உணரவில்லை?

-விஞ்ஞானி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad