banner ad
Top Ad
banner ad

அறிந்ததும் அறியாததும் – கூகிள் காகிள்ஸ்

Arinthathum-Ariyaathathum_620x628“என்ன மாப்ளே.. அடுத்த மாசம் இந்தியா வரப் போறியாமே ..கேள்விப்பட்டேன்” நான்காண்டுகளுக்கு பிறகு, தொலைபேசியில் கல்லூரி நண்பன் பாலா..

“ஆமாடா மாப்ளே… எப்ட்றா தெரிஞ்சிது?”

“அதாண்டா ப்ரெண்ட்ஷிப்… நீ அமெரிக்கா போய்ட்டா மறந்திடுவோமா என்ன?”

“ரொம்ப சந்தோஷமா இருக்குடா மாப்ளே .. நீங்கல்லாம் என்னிய மறக்காம இருக்கிறது..”

“எதுக்கு மச்சி இதுக்கெல்லாம் ஃபீலாவுற .. எந்த ஃப்ளைட்லே வர்ற”

“ஏர் இந்தியாவுல தான் வரேண்டா .. “நம்ப செட்டு பசங்க எப்படி இருக்காங்க .. லொட்டை பாஸ்கர் எப்பிடி இருக்கான்?”

“வாடா .. வாடா .. கலக்கிரலாம் .. ஏர் இந்தியாவுல வந்தா ஆளுக்கு ரெண்டு பொட்டி எடுத்துட்டு வரலாமில்ல?”

“அப்படித்தான் நெனைக்கிறேன் .. ஆமா, நம்ம மைக் மதனுக்கு கல்யாணம் ஆயிருச்சாமே .. பேஸ்புக்கில பாத்தேன்..”

“என்னடா இப்படி அசால்டா சொல்ற .. நீ ரெண்டு, உன் பொண்டாட்டி ரெண்டுன்னு நாலு பொட்டி கொண்டாரலாண்டா … ஒரு சின்ன ஆப்ளிகேஷன் மச்சி..”

“சொல்லுடா..”

“உன்கிட்ட தான் மச்சி நான் உரிமையோட கேக்க முடியும்.. வேற யாரா இருந்தாலும் கேட்டிருக்க மாட்டேன் … எங்க அம்மாவோட தம்பி பையன் கூட அங்க தான் எங்கேயோ வந்துட்டு வந்தது .. அதுகிட்ட கூட இதெல்லாம் கேக்கல மச்சி .. நீன்றதால தான் கேக்கறேன் .. நீ மறுக்க மாட்டேன்னு தெரியும் .. அதான் .. முடியாதுன்ற மாட்டேயில்ல?”

“என்னடா இப்படில்லாம் கேட்டுகிட்டு என்ன வேணும்னு சொல்லு.”

“ஒன்னுமில்ல மச்சான் .. வொயிட் ஃபிரேம்ல இந்த எக்ஸ்ப்ளோரர் கிளாஸ் ஒன்னு வாங்கிட்டு வா மச்சான்.. “

“எக்ஸ்ப்ளோரர் கிளாஸா? அப்படின்னா?”

“ன்னடா இப்படி கலாய்க்கிற?”

“இல்ல மச்சான் .. சத்தியமா புரியல .. “

“என்னாடா அமெரிக்கால தான் இருக்கியா, இல்ல அய்யம்பேட்டைல உக்காந்துகினு அமெரிக்கான்னு சும்மானா கதை வுடறியா? கூகிள் காகிள்ஸ் மச்சான்..”

“என்னாது?”

“ஏன்டா ஜெர்க்காவுற .. வாங்கியாற மாட்டியா .. இப்ப கூட நீ வரும் போது கேரளா போலாம்னு புக் பண்றதுக்காக தான் கெளம்பிட்டு இருக்கேன்.”

“இல்ல மச்சான் … கூகிள் காகிள்ஸ்?”

“விடு மச்சான் .. ஏதோ ஃபிரெண்டாச்சே கேக்கலாம்னு கேட்டேன்.. ஒரு சின்ன கூகிள் கிளாசுக்காக நட்பையே இல்லன்னுடாத..”

“இல்லடா மச்சி .. கூகிள் கிளாஸ் வெளில வந்துருச்சா?”

அனேகமாக சமீபத்தில், விடுமுறைக்காக தாய்நாடு செல்லக் காத்திருக்கும் பலருக்கு அவர்களது மிக மிக நெருங்கிய நண்பர்களிடமிருந்து மேற்கண்ட விதத்தில் ஒரு அன்பு வேண்டுகோள் வந்திருக்கும்.

நான் கொஞ்சம், “என்னது சிவாஜி செத்துட்டாரா?” டைப்.

“இதில என்ன ரிலேட்டிவிட்டி .. கொஞ்சம், குறைவுன்னுகிட்டு … முழுசாவே அந்த டைப் தான்” மனைவியின் கொக்கரிப்பு.

பொதுவாக சாளேஸ்வரம் வந்தபிறகு அணியும் மூக்குக் கண்ணாடியில் கூகிள் என்ன செய்து விட முடியும்? தேடித் தேடிப் படித்துப் பார்த்தேன்.

கூகிள் கண்ணாடி பார்வையைச் சீர்படுத்தும் கண்ணாடியல்ல. வழக்கமாக வெயில் காலத்திலும், அழகுக்காகவும் அணியக் கூடிய கண்ணாடியின் ஒரு மூலையில் ஒரு சிறிய கேமராக் கருவியும், மைக்ரோஃபோனும் கொண்டது. இதிலுள்ள கணினிச் சில்லுகள் மூலம் இணையத் தொடர்பு ஏற்படுத்தி, கூகிள் ப்ளஸ், ஹேங்அவுட்ஸ் மூலம் நண்பர்களையோ, உறவினரையோ தொடர்பு கொண்டு நான் என்ன பார்க்கிறேன் என்பதை நீயும் பார் என்று காட்ட முடியும். ஆனால் இதன் மூலம், கணவன்மார்கள் தங்களது மனைவியையோ, மனைவிமார் தங்களது கணவரையோ தொடர்பு கொள்ள முடியாது என்பது இதன் விஷேச அம்சம். (சும்மாத் தான் சொன்னேன் .. படிச்சுட்டு உடனே மறந்துடுங்க .. நடக்காத விஷயத்தையெல்லாம் கனவு கண்டு நேரத்தை வீணாக்காதீங்க).

கண்ணாடியில் உள்ள சிறியத் திரையில் இவர்கள் அனைவருடன் “நேத்து ராத்திரி காஃபி வித் டிடி பாத்தியா?” என்று சாட் பண்ணலாம்.

ஜி.பி.எஸ். என்றொரு பெரிய கருவி காரில் இருந்தாலும், “இப்படி ஓரமா நிறுத்தி யார்கிட்டயாவது வழி கேக்கலாமில்ல? பெரிய கொலம்பஸ்னு மனசில நினைப்பு” எனும் காந்திமதி ஸ்டைல் மனைவிகளுக்குத் தெரியாமல் நைசாக கண்ணாடித் திரையில் வழி கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம். அங்கங்கே வித்தியாசமாக ஏதாவது இயற்கை காட்சியைப் (ஹி…ஹி..) பார்க்க நேர்ந்தால் படமெடுத்து ஃபேஸ்புக்கில போட்டுக்கலாம்.

தொடுதிரை (டச் ஸ்கிரீன்) வசதி, குரல் அறிதல் (வாய்ஸ் ரிகைக்னேஷன்), மின்னஞ்சல்களுக்குக் குரல் மூலம் பதிலளிப்பது எனப் பல விஷயங்களுடன்

வானிலை, போக்குவரத்து, ஸ்டாக் மார்க்கெட் நிலவரம், நினைவூட்டல்

அலாரம், என ஒரு கைப்பேசியில் கிடைக்கும் அத்தனை விஷயமும் இதிலும் உள்ளது.

கைப்பேசியை இதனுடன் இணைப்பதன் மூலம், அதில் உள்ளத் தகவலை கண்ணாடியின் மூலம் படிக்கலாம். இவை ஒளிப்படக்காட்டி, கம்பியில்லா வலைத்தளம், அதி வேக செயலிகள் எனப் பலவற்றையும் மூக்குக் கண்ணாடியின் சட்டத்துக்குள் உள்ளடக்கியது. இந்தக் கண்ணாடியில் தோன்றும் காட்சிகள் நாம் பார்க்கும் மற்ற விஷயங்களை மறைக்காதா என்ற கேள்வி தோன்றலாம்.

இதன் திரை மெய்நிகர் திரை (Virtual screen). அதாவது நாம் கண்ணால் பார்க்கும் மற்ற காட்சிகளை மறைக்காமல், மெல்லிய அடுக்குகளாக நேரடியாக விழித்திரைக்குள் பதியக் கூடியவை.

ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்புடன் இலவசமாக தொற்றிக் கொண்டு வரும் ஒரு விஷயம் கூகிள் கண்ணாடி விஷயத்திலும் நடந்துள்ளது. எதிர்ப்புகள்!!

தொலைகாட்சி பார்த்தால் கண் கெட்டுவிடும் என்று சொல்லியவர்கள், பச்சை நிற பூதாகாரக் கணினித் திரைகளைப் பாவித்தவர்கள் எல்லோரும் இப்போது நேரடியாக விழித்திரையில் தகவலை விழச் செய்யும் தொழில் நுட்பம் நல்லதல்ல என்கிறார்கள்.

இன்னொரு சாரார் இத்தொழில்நுட்பம் மனிதனை மேலும் முட்டாளாக்கி விடும் என்கின்றனர்.

தனிமனித உரிமைகளை மீறுவதற்கு இக்கண்ணாடி மூலம் வழிவகை செய்கிறது கூகிள் என்னும் போர்க்கொடியைத் தூக்கியுள்ளது மற்றொரு இயக்கம்.

இப்படிப் பல காரணங்களால் கூகிள் கண்ணாடிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும் இந்த விசேடக் கண்ணாடி எப்போது பரவலாக, அனைவரும் வாங்கும் வண்ணம்  கிடைக்கும் என்று காத்திருக்கிற ஒரே துறை – ஆபாசப் படமெடுக்கும் துறை!

ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. சின்ன வயதில் “பூவே பூச்சூடவா” படத்தில் நதியா போட்டு வரும் சிறப்புக் கண்ணாடியை வாங்கத் தேடித் தேடி அலைந்தவன் பாலா.

இப்போது எதற்காக கூகிள் கண்ணாடி வாங்குகிறான் என்று தெரியவில்லை.

அட.. இப்பதான் சி.என்.என்.ல கவனிச்சேன். நம்ப ஒபாமா மறுபடியும் ப்ரெசிடெண்டாயிட்டாராமே!

–    விஞ்ஞானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad