\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சங்கமம் 2015 – சங்கமித்த திறமையும் திருப்தியும்

sangamam_22-1_620x349‘சங்கமம்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றும்? ரஹ்மான் ‘சிந்ததசைசரில்’ நாட்டுப்புற மெட்டில் இசையமைத்த படம் நினைவுக்கு வருகிறதோ அல்லது, அந்தப் படத்தை ஒரே மாதத்தில் டி.வி.யில் போட்டது நினைவுக்கு வருகிறதோ எனக்குத் தெரியாது. ஆனால் மினசோட்டாத் தமிழர்களுக்கு இனி நினைவுக்கு வருவது – இங்குள்ள தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் ‘சங்கமம்’ நிகழ்வாகத்தான் இருக்கும்.

மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைப்பில், பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, மினசோட்டா வாழ் தமிழர்கள் கூடிக் கொண்டாடும் திருவிழா தான் – சங்கமம்.

சமீபத்தில் மினசோட்டா வந்த எனக்கு, மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் அறிமுகமும், சங்கமத்தின் அறிமுகமும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. குடும்பத்தை விட்டு, பல்லாயிரக்கணக்கான  (என்ன பல்லாயிரக்கணக்கு? கூகிள் இருக்கையில், துல்லியமாகவே சொல்வேனே! 8692) மைல்கள் தொலைவில் இருக்க, பக்கத்திலேயே தமிழ் உறவுகளுடன் பண்டிகை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தால், கொஞ்ச நஞ்ச சந்தோஷமா அது?

இம்முறை சங்கமத்தில் லியோனி கலந்துக்கொள்வதை அறிந்தபோது, ஆர்வம் பல மடங்கானது. சிறுவயதில் ஒவ்வொரு பண்டிகை விடுமுறைக்கும், அந்த நாட்களை எதிர்பார்த்து, மனம் ஒரு ‘கவுண்ட் டவுன்’ நடத்துமே? பல வருடங்களுக்குப் பின்னர், எனக்கு அப்படி ஒரு அனுபவம் கிடைத்தது. ஜனவரி 25ஆம் தேதியை எதிர்பார்த்து மனம், சென்ற வருட இறுதியில் இருந்தே நாட்களை எண்ணத்  தொடங்கிவிட்டது.

sangamam_22_620x349ஊரைவிட்டு, நாட்டைவிட்டு திரவியம் தேட வெளியூர்களில், வெளிநாடுகளில் இருக்கும் அன்பர்களுக்கு, நான் சொல்வதில் எந்த வியப்பும் இருக்கப் போவதில்லை. ஜனவரி பதினான்காம் தேதி அன்று, அலுவலகத்தில், வேலைகளுக்கு மத்தியில், மதிய உணவு இடைவேளையின் போது, டிபன் பாக்ஸைத் திறக்கும் போது, அதில் வெண் பொங்கல் இருந்தாலே, பலருக்கு பொங்கல் கொண்டாடிய உணர்வு வந்துவிடும். வேலையில் மூழ்கி, பொங்கல் பண்டிகையைப் பற்றி மறந்து, மிளகை எடுத்து தள்ளி வைத்து விட்டு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நமக்கு, பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் கூடி, பாடி, ஆடி, பொங்க பானையைச் சுற்றி குலவைவிட்டு மகிழவும், வயிற்றுக்கு சுவையானப் பொங்கலும் கிடைத்தால், அந்த நாள் தான் சந்தேகமேயில்லாமல் பொங்கல்.

ஆம். மினசோட்டாத் தமிழர்களுக்கு, அவர்கள் ஒன்றுக்கூடி சங்கமித்த ஜனவரி 25ஆம் தேதி தான், இவ்வருட பொங்கல். (அவனவன் பிப்ரவரி ஐந்தாம் தேதி ‘தல’ பொங்கல் கொண்டாடும் போது, இது மிக மிகச் சரியே!!)

சரி, நிகழ்ச்சிக்குள் செல்வோம்.

sangamam_6_620x443நிகழ்வுகள் ஞாயிறன்று மதியம் 1:30 துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று பெரும் குளிர் இல்லையென்றாலும் (லியோனி சொன்னது போல், மினசோட்டா மக்களுக்கு), குளிருக்கேற்ற ஆடை, கையுறை, காலணி இல்லாமல், வெளியே செல்லமுடியாத அளவுக்கான குளிர் இருந்தது. ஊரின் மத்தியில் உள்ள ரிச்ஃபீல்ட் இடைநிலை பள்ளி கலையரங்கத்தில், இவ்வருட சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காரை நிறுத்திவிட்டு, பள்ளியை நோக்கிச் செல்லும் போது குளிரத் தொடங்க, சற்று ஓட்டம் சேர்ந்த நடையுடன், எனது மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு சென்றேன். நாங்கள் அனைவரும் உடலை முழுமையாக மூடுமாறு உடையணிந்திருந்தோம்.

sangamam_19_520x520எங்களுக்கு முன்னால், நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள, சில சிறுவ சிறுமிகளும், யுவ யுவதிகளும் சென்றுக்கொண்டிருந்தார்கள். நடன நிகழ்ச்சிகளுக்கான உடை எப்படி இருக்கும் என்று தெரியும் தானே? மெல்லிய துணியில், உடலை முழுமையாக காக்க இயலா உடைகள். அன்று அவர்களுக்கு குளிரெடுத்ததோ இல்லையோ,  இப்பொழுது அதை நினைத்தாலும், எனக்கு குளிரெடுக்கிறது. தமிழ் நெஞ்சங்களை மகிழ்விப்பதற்காக, அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பு, குளிரைத் தாண்டி புல்லரிக்கச் செய்வதாக இருந்தது. அவர்களுக்கு ஒரு “ஹேட்ஸ் ஆஃப்”!!! (பாலசந்தர் குரலிலோ அல்லது ரஜினி குரலியோ வாசித்துக்கொள்ளவும்!)

உள்ளே வரிசையாக, நுழைவுச்சீட்டினைச் சரிப்பார்த்து, விளக்கம் கூறி, அரங்கத்திற்குள் அனுமதித்துக்கொண்டிருந்தார்கள். வந்திருந்தவர்கள் அனைவரையும் கவனிக்க போதுமான அளவுக்கு, தாராளமாக, தாராள மனம் படைத்த தன்னார்வலர்கள், ஆங்காங்கே நின்று உதவி புரிந்துக்கொண்டிருந்தது , விழா ஏற்பாட்டாளர்களின் திட்டமிடும் நேர்த்தியைப் பறைசாற்றுவதாக இருந்தது.

அரங்கத்தின் நுழைவாயிலேயே, நம்மூர் டீக்கடை ஒன்று பால் பாய்லர், முறுக்கு ஜாடி, வாழைப்பழம், தமிழ் நாளிதழ்கள் சகிதம் இருந்தது. பெஞ்ச் இல்லாத கடைக்கு முன்னால் இருவர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் என்று உள்ளூர் அரசியல் பேசி, கடைக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தார்கள்!! (உண்மையில், தமிழகத்தில் நம்மூர் அடையாளமாக, தற்சமயம் தேனீர் கடைகள் எண்ணிக்கையைத் தாண்டிக் கொண்டு, தெருக்கு தெரு டாஸ்மாக் கடைகள் தான் பெருகி வருகிறது.)

வேட்டி, புடவை கட்டிக்கொண்டு பலர் வந்திருந்தார்கள். இந்த குளிரிலும், இப்படி வந்தவர்களின் மனத் தைரியத்தை கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.

sangamam_13-2_520x520நல்ல அரங்கம் அது. வந்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இருந்தது. குழந்தைகள் ஓடியாடிக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள், கூடிப் பேசி ‘வியூகம்’ அமைத்துக்கொண்டிருந்தார்கள். மேடைக்கு இடப்பக்கத்தில் தொகுப்பாளர்களுக்கான இடமும், வலப்பக்கத்தில் சங்கத்தைப் பற்றி, நிகழ்ச்சிகளைப் பற்றி, விளம்பரதாரர்களைப் பற்றி எடுத்துக்கூற, ‘பவர் பாயிண்ட்’ திரையும் அமைத்திருந்தார்கள். நிகழ்ச்சி தொடங்க நேரமிருந்ததால், வந்திருந்தவர்கள் அவரவர் நண்பர்களுடன் கூடிப் பேசி மகிழ்ந்துக் கொண்டிருந்தார்கள். நிச்சயமாக, திருவிழாக் கோலம்.

அனைவரும் எழுந்து நிற்க, தமிழ்த் தாய் வாழ்த்துடன், நிகழ்ச்சிகள் தொடங்கியது. நடனம், நாடகம், சாஸ்திரியப் பாடல், மாறுவேடத்தில் மழலைப்பேச்சு, பறை, சிலம்பம், பரத நாட்டியம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை, பட்டிமன்றம் என்று நிகழ்ச்சி நிரல் நிரம்பியிருந்தது. அவை, ஒன்றன்பின் ஒன்றாக அழகாக வரிசையளிக்கப்பட்டு, தொகுத்தளிக்கப்பட்டது.

sangamam_13-1_520x520குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்கள் திறமையைக்காட்ட, இது ஒரு சிறந்த மேடையாக இருந்தது. தங்கள் நண்பர்களின் திறமையைக் கண்டு ஆச்சரியம் கொண்டு, கைத்தட்டி, பார்வையாளர்கள் தங்கள் ஆதரவை அவ்வப்போது காட்டினார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மட்டும் பார்த்துக்கொண்டு, ஏக்கம் கொண்ட பலருக்கு, கைக்கெட்டும் தூரத்தில் மேடையமைத்து வாய்ப்பளித்துக் காட்டியது, மினசோட்டாத் தமிழ்த் சங்கத்தின் சங்கமம்.

கலை நிகழ்ச்சிகளுக்கு இடையில் பல வகை சங்க அறிவிப்புகளையும் வெளியிட்டார்கள். சென்ற ஆண்டுக்கான வரவு செலவு கணக்கை வெளியிட்டு, சங்கத்தின் வெளிப்படையான அணுகுமுறையை வெளிப்படுத்தினார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள், அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். மேடையில் அவர்கள் அனைவரும் ஒருவர் கரத்தை மற்றொருவர் பிடித்து, உயர்த்தி (நம்மூர் கூட்டணி கட்சித்தலைவர்கள் போல!!), தங்கள் உற்சாகத்தை வெளிக்காட்டினர்.

இங்குள்ள தமிழ்ச்சங்கப் பள்ளிக்கூடத்தின் செயல்பாட்டைப் பற்றியும், சமீபத்தில் இப்பள்ளி பெற்ற தரச்சான்றுகள் பற்றியும் பள்ளி முதல்வர் வந்து எடுத்துரைத்தது, வந்திருந்த பெற்றோர்களுக்கு தமிழ்ப்பள்ளி மீதான ஆர்வத்தை அதிகரிக்குமாறு இருந்தது. ஆர்வம் ஆதரவாகி, அங்கமாகி, ஆற்றலாகி, அபார வளர்ச்சியடைய, எமது வாழ்த்துக்கள்.

பொதுவாக, இம்மாதிரி கலை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சினிமா பாட்டு போட்டுக் கொண்டு ஆடுவார்கள். இதிலென்ன இருக்கிறது? என்று அங்காலய்ப்பவர்கள் உண்டு. உண்மை தான். அப்படி மட்டும் இருந்தால், இது மற்றுமொரு வழமையான கேளிக்கை நிகழ்ச்சி என்று தாராளமாக இதை குறுக்கிவிடலாம். பரதம், சிலம்பம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து, நாடகம், பறை, பட்டிமன்றம் என்று தமிழ்க் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்த பெரும்பாலான கலை வடிவங்களை ஒரே மேடையில், அதுவும் அமெரிக்காவில், அமெரிக்க வாழ் தமிழர்களைக் கொண்டு  , தமிழர் திருநாளன்று மேடையேற்றி, பெருமைப்படுத்தி, அமெரிக்கர்கள் முன்பு பரப்பி, அதைவிட நமது அடுத்த தலைமுறையினருக்கு, அக்கலைகள் மீது ஆர்வமேற்படச் செய்வது சாதாரணமானதல்ல. கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது. நாம் பெருமையடைய வேண்டியது.

sangamam_11_520x520தமிழகத்தில், இந்தியாவில் இம்மாதிரி நிகழ்ச்சியை நடத்த வேண்டுமானால், இந்தக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அழைத்து வந்து நடத்தி விடலாம். ஆனால், அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு? இவர்களுக்கு பல்வேறு அலுவலகப் பணிகள் இருக்கும். அவற்றையும் பார்த்துக்கொண்டு, தனிப்பட்ட ஆர்வத்தால் அதனுடன் இதற்கும் நேரம் ஒதுக்கி, எங்கெங்கோ பயணப்பட்டு, இவற்றைக் கற்று, பயிற்சி பெற்று, பலமுறை ஒத்திகைப் பார்த்து, அப்பப்பா!! இது ஒரு பக்கம் இருக்க, இவற்றை மேடையேற்ற, இதற்கு தேவைப்படும் ஆடைகள், அணிகலன்கள், உபகரணங்களுக்கு எங்கெங்கு சென்றார்களோ? பொய்க்கால் குதிரையை எப்படி இங்கு கொண்டு வந்தார்கள்? என்ற கேள்வி இன்னமும் என் மண்டையைக் குடைந்துக் கொண்டு இருக்கிறது. பொய்க்கால் குதிரை ஆடிய தோழர்கள், இங்கிருந்து இந்தியா சென்று இவற்றை கற்றுக்கொண்டு வந்தார்களாம். என்னவொரு ஈடுபாடு என்று சொல்வது இதை?

செவிக்கும், சிந்தைக்கும் விருந்து படைத்தது மட்டுமல்லாமல், வயிற்றுக்கும் இரவு விருந்து இருந்தது. முன்னதாக, மாலையில் தேனீர், சமோசா போன்ற சிற்றுண்டிகள், அங்கிருந்த நம்மூர் டீக்கடைக்கு பக்கத்தில் கிடைத்தது. இங்கு டீ விற்றவருக்குத் தமிழ் தெரியாதது, எனக்கு ஒரு படத்தில் விவேக் பேசிய வசனத்தை நினைவுப்படுத்தியது!! இவைத் தவிர, பனிப்பூக்களுக்கு ஒரு இடமும், தொலைக்காட்சி சேவை, ஆடைகள் விற்பனை போன்றவற்றுக்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சி ஆரம்பித்த போதே, ஒரு குழு அமைதியாக இரவு உணவிற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இரவு உணவிற்கு வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார், ‘நான்’, குருமா போன்றவை மணம் பரப்பிக் கொண்டு,  உணவு அரங்கில் தயாராக இருந்தது. தெருக்கூத்து முடிந்த பின்னர், உணவு இடைவேளை விட்டு, பிறகு நட்சத்திர நிகழ்ச்சியான லியோனியின் பட்டிமன்றம் நடைபெற இருந்தது. உணவில் மட்டும் தமிழ் மணம் இருந்தால் போதுமா? செவிக்கும் தமிழிசை வேண்டாமா என்பவர்களுக்காக, பறை இசை குழுவினர் உணவறையிலும் பட்டையைக் கிளப்பினார்கள். ஆங்காங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ‘குட்டீஸ் சுட்டிஸ்’ அனைவரும், இதைக் கேட்டவுடன் ஓடிச் சென்று ஆட்டம் ஆடத் தொடங்கிவிட்டார்கள்.

இதில் பல குழந்தைகளுக்கு, இந்த இசை புதியது. இருந்தும், ஒரே அலைவரிசையில் இசைக்கேற்ப இவர்கள் ஆடியது, இந்த இசையின் மாயாஜாலம் இல்லாமல் வேறென்ன? இங்கு பறை கற்க ஆர்வமுள்ளவர்களுக்குப் பயில்விக்க, தமிழக நாட்டுப்புறக் கலைகளில் ஆய்வுகள் செய்த முனைவர். ஸோயி ஷெரினியன் அவர்கள் தயாராக இருப்பதையும், இன்ப அறிவிப்பாக வெளியிட்டார்கள். இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், இதற்கான ஒரு பயிற்சி பயிலரங்கம் முடிந்தேவிட்டது. இன்று தமிழர்களுக்கு ஒரு அமெரிக்கர் பறை கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற எண்ணம் ஒரு பக்கம் வந்தாலும், தமிழக கலைகளின் வீச்சு ஆச்சரியப்படுத்துகிறது. தமிழக கலைகள், தமிழர்களுக்கானது மட்டுமல்ல. அவற்றின் தனித்தன்மை மொழி, நாடு கடந்து எவரையும் ஈர்க்கவல்லது என்று புரிபடுகிறது.

sangamam_3_620x349இரவு உணவிற்குப் பிறகு, லியோனியின் பட்டிமன்றம் பலத்த கரகோஷத்துடன் தொடங்கியது. எனக்கு லியோனியின் எளிமையான பாணி, நகைச்சுவைப் பேச்சு ரொம்பவும் பிடித்தமானது.

ஊரில், எங்கள் தெருவில், எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில், இசக்கி துரை என்றொரு அண்ணன் வசித்து வருகிறார். எனது அண்ணனின் நண்பர். நான் சிறுவனாக இருந்தபோது, அவர் அவர்களது வாலிப வயதில், என் அண்ணன் உட்பட மற்ற நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, அது அப்போதைய என் வயதுக்கு மீறியதாக இருந்தாலும், நான் அப்போது அவருடைய பேச்சில் இருக்கும் சுவாரஸ்யத்திற்காக, அதை அவர்களுடன் சேர்ந்து கேட்பதுண்டு. சில ‘பெரிய பசங்க பேச்சு’ வரும் போது மட்டும், அதை கவனிக்காதபடி, அது என் காதுகளில் விழாதது போல், ஒருவித நடிப்புடன் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவரின் பேச்சு, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கக் கூடியது. சமயங்களில் நினைத்து, நினைத்துச் சிரிக்க வைக்கக் கூடியதாக இருக்கும். ஊரை விட்டு, நான் கல்லூரியில் படிக்க, வேறு ஊர் சென்ற போது, அவரின் பேச்சைக் கேட்கும் அனுபவத்தின் நீட்சியாக, லியோனி, கேசட்டில் பதிவுச் செய்யப்பட்ட பட்டிமன்றத்தின் வடிவில் அறிமுகமானார்.

என்னிடம் அப்போது ஒரு ‘அய்வா வாக்மேன் ப்ளேயர்’ இருந்தது. அதில் லியோனியின் பட்டிமன்றங்கள் பலவற்றை, பல பயணங்களில் கேட்டிருக்கிறேன். சில தூக்கம் வராத இரவு நேரப் பயணங்களில், லியோனியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, இருட்டில் தனியாகச் சிரித்துக் கொண்டு  பயணப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அவருடைய பேச்சில் சில நகைச்சுவைத் தோரணங்கள், மீண்டும் மீண்டும் சொல்லப்படும் போது,  சமயங்களில்  சலிப்பைக் கொடுத்தாலும், ஒரு இடைவேளைக்குப் பிறகு கேட்கப்படும் போது, உங்களைச் சிரிக்க வைத்தே தீரும். அரசியலில் ஈடுபட தொடங்கிய பிறகு, எதிர் அணியினரைப் பேச்சில் ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு துவம்சம் செய்வது, அவர் சேர்ந்த கட்சியினரைக் கலகலக்க வைத்தாலும், மாற்றுக்கட்சியினரைப் பாடாய்படுத்தியிருக்கும். இருந்தாலும் லியோனியின் நகைச்சுவை பேச்சு, அவர்களை அதிகபட்சம் சங்கடப்படுத்தியிருக்குமே தவிர வருத்தப்படுத்தி இருக்காது. அவற்றைக் கேட்டவர்கள், யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு போய் சிரித்திருப்பார்கள்!

சங்கமத்தில் அவருடைய பேச்சில், அரசியல் துளியும் இல்லை. ஒரு இடத்தில் மட்டும் கேப்டனை வாரினார். அதுவும் முகநூலில் அவர் படும் பாட்டைப் பற்றி தான்.

அன்றைய பட்டிமன்றத்தின் தலைப்பு – குடும்பத்தின் குதூகலத்திற்கு காரணம், உறவா, நட்பா, ஊடகமா?

sangamam_21_620x348லியோனி நடுவர் என்று சொல்ல தேவையில்லை. மற்ற பேச்சாளர்கள் அனைவரும், மினசோட்டா வாழ் தமிழர்கள். மூன்று அணிகளில், ஒவ்வொன்றிலும் மூன்று பேர். கலந்துக்கொண்டனர். பெரும்பாலோருக்கு முதல் மேடை. அதிலும், லியோனி முன்பு பேசுவதற்கு வாய்ப்பு. கொடுத்து வைத்தவர்கள். ஆனால், பேசிய அனைவரும், அன்று முதல் மேடைப் போல் இல்லாமல், வெளுத்து வாங்கினார்கள். லியோனியும் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார். நிமிடத்திற்கொருமுறை, அரங்கம் சிரித்து மகிழ்ந்தது.

லியோனியுடன், அவருடைய மனைவியாரும் வந்திருந்தார். அமெரிக்காவில், பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டு வந்ததால், லியோனி குரல் கொஞ்சம் பாதித்திருக்கும் போல. அதனால், லியோனிக்கு உதவிகரமாக, அவருடைய பக்கத்திலேயே இருந்து, அவரைக் கவனித்துக்கொண்டார் ஆனால், லியோனியின் பேச்சில் எந்தக் குறையும் தெரியவில்லை. வந்திருந்த இடத்திற்கேற்ப, மக்களுக்கேற்ப, பேச்சை அமைத்துக் கொண்டு பேசினார். மினசோட்டாவின் குளிர், இணைய மொக்கைகள், நாகரிக அலும்பல்கள் என்று அன்றைய குதூகலத்திற்கு பொறுப்பானார். இறுதியில், குடும்பத்தின் குதூகலத்திற்கு காரணம் உறவே என்று தீர்ப்புக் கூற, அன்றைய பட்டிமன்றம் சிறப்பாக முடிந்தது.

பட்டிமன்றம் முடிந்தபிறகு, அவருக்கு தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நினைவு பரிசு அளிக்கப்பட்டது. சிறிது நேரம் வந்திருந்தவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, பிறகு விடைப்பெற்றார்.

அப்போது மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஆனால், யாரிடமும் களைப்பு தெரியவில்லை. அன்றைய சங்கம நிகழ்ச்சிகள், ஒரு வருடத்திற்கான உற்சாகத்தை அளித்திருந்தது. அடுத்த சங்கமம் எப்போது? என்ற ஆர்வத்தை அனைவரிடமும் தொற்றிக்கொள்ள செய்திருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அடுத்த வருடம் என்ன செய்யலாம்? என்று யோசிப்பது வழமை. கலந்துக்கொண்டவர்களும், நாம் என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டு, பேசிக் கொண்டு கிளம்பியது, இவ்வருட சங்கமத்தின் வெற்றி.

sangamam_1இப்படி ஒரு சிறப்பான அனுபவத்தை அளித்த மினசோட்டாத் தமிழ்ச்சங்க தோழமைகளுக்கு, மீண்டுமொரு எனது நன்றியை, இப்பதிவின் மூலமாக கூறிக்கொள்வதோடு, இந்த அனுபவ பகிர்வையையும், அவர்களது திட்டமிட்ட கடும் உழைப்பிற்கு சமர்ப்பிக்கிறேன்.

இவ்வருட சங்கமத்தில் கலந்துக்கொள்ள வாய்ப்பு அமையாதவர்களுக்கு, ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும். அடுத்த முறை, தப்பித் தவறியும் தவற விடாதீர்கள். வாங்க, கொண்டாடி தீர்ப்போம்!!!

-சரவணக்குமரன்

படப்பிடிப்பு – சரவணக்குமரன்

Comments (6)

Trackback URL | Comments RSS Feed

  1. சுந்தரமூர்த்தி says:

    அருமையான தொகுப்பு, நேரில் நிகழ்ச்சியை கண்டதைப்போல் ஒரு நடை! வாழ்த்துகள் சரவணக்குமரன்.

  2. Pushpa Raj says:

    எளிய நடையில்,ஏகாந்தமாய் ஒரு தொகுப்பு வாழ்த்துக்கள் சரவணக்குமார்.

    ராணி

  3. நன்றி சுந்தரமூர்த்தி

  4. நன்றி புஷ்பா ராஜ்

  5. Sivakumar says:

    Kumara….Nice … Very legible and clear.. well written..

  6. நன்றி சிவா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad