\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தலையங்கம்

Filed in தலையங்கம், முகவுரை by on February 28, 2015 0 Comments

ppkl_side1_135x135
வாசகர்களுக்கு வணக்கம்.

சென்ற மாதம்  உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டதைப் பற்றிப் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். பல செழிப்பு மிக்க மொழிகள் அதிகார பலம் பொருந்திய சில மொழிகளால் தொடர்ந்து வழக்கொழிக்கப்பட்டு வருவதை உணர்ந்த நல்லவர்கள் சிலரின் முயற்சியால் யுனெஸ்கோ நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தினம் தான் இந்த உலகத்தாய் மொழி தினம். ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி மாதம் 21ஆம் திகதி உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

காலங்காட்டியில் ஒரு திகதியை எடுத்துக் கொண்டு அதனை ஒரு குறிப்பிட்ட தினமாக அறிவிப்பதால் என்ன வந்து விடப்போகிறது என சிலர் நினைப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. இந்த உலகத் தாய்மொழி தினத்தையே ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதுபோன்ற ஒரு தினத்தை அறிவித்ததால், அவரவரது தாய்மொழியின் மீது பற்றுள்ள தனி நபர்களும், அமைப்புகளும் இந்தத் தினங்களில் தனது தாய்மொழியை நினைவுக் கூர்ந்து, கொண்டாடுவது, புகழ் பரப்புவது என ஏதேனும் செய்யத் தொடங்குகின்றனர். அதன்மூலம் இது உலகின் பல மூலைகளில் இருப்பவர்களுக்கும், பல நிலையில் இருப்பவர்களுக்கும் தமது தாய்மொழி  மீது புதிதான பற்று ஏற்படக் காரணமாக அமைகிறது.

ஆங்கிலம் போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் பெரிய அளவில் சிரமமில்லை என்று கூறலாம். ஏனெனில், அவர்கள் தனது தாய்மொழியிலே கல்வி கற்கின்றனர், வேலை செய்கின்றனர், சிந்திக்கின்றனர், உரையாடுகின்றனர், ஆனால் நம் போல் இரட்டை மொழி அல்லது பன்மொழிஉடையவர்களுக்குப் பல சிரமங்கள் உண்டாவது இயற்கை. நாம் சிந்திப்பது நம் தாய்மொழியான தமிழில், கல்வி கற்பதும், தொழில் புரிவதும் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தில். நம்மில் பலர் காலப்போக்கில் அன்றாடம்

உபயோகப்படுத்தும் காரணத்தால் ஆங்கிலத்தில் சரளம் பெருகிச் சொந்த மொழியில் பேசவும், எழுதவும் பயிற்சி தேவைப்படும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறோம். நம் குழந்தைகளுக்கோ அது இன்னும் கடினமான நிலையாக உருவாகி ஒரு சவாலாகவே மாறிவிடுகிறது. காலப் போக்கில் உணர்வு பூர்வமான பிணைப்புகள் அற்று, தாய் மொழிக்கும் நமக்கும் தொடர்பே இல்லாத நிலை உருவாகி விடுகிறது,  இவ்வாறே மேலும் மொழிகள் அழிந்தொழியாமல் இருப்பதற்காக இந்த நாளை உருவாக்கிய பெரியவர்களுக்கு முதற்கண் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

இரண்டு தலைமுறை, மூன்று தலைமுறைகளில் மறக்கடிக்கப்படும் அளவுக்குச் சாதாரண மொழியா நம்மொழி? எவ்வளவு ஆழ்ந்தச்  சிந்தனைகள், அற்புதத் தத்துவங்கள், அசாதாரணக் கருத்துக்கள், அள்ள அள்ளக் குறையாத செழுமை, அமிழ்தினும் இனியச் சுவை பொருந்திய இலக்கியங்கள், அழகான கட்டுப்பாடு மிக்க இலக்கணங்கள் என ஒப்பாரும் மிக்காருமில்லாத நம் மொழியா அழிந்து படும்? அது சரி, நாம் மட்டுமே, தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே, தமிழ் தெரிந்தவர்களிலும் மிகச் சொற்பமாய் உலகத்தோரால் பழம் பெருச்சாளி என்று கேலி செய்யப்படும் நாம் மட்டுமே இதன் பெருமைகளைத் துதி பாடிக் கொண்டிருந்தால் போதுமா? சுண்டைக்காய் நாடுகளும், சொற்ப வளங்களே உள்ள மொழிகளில் மார்தட்டித் திரிகையில், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பகுபத உறுப்பிலக்கணம் கண்ட நம் தாத்தனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் தான் என்ன? மற்ற மொழியினரையும் இம்மொழியின் செழுமை புரிந்து பாராட்டும்படி ஏதேனும் ஒரு செயலைச் செய்யாவிடின் இந்த பூமியில் நாம் பிறந்ததன் பயன்பாடுதான் என்ன?

“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

        சொல்வதிலோர் மகிமையில்லை

திறமான புலமையெனில் வெளிநாட்டார்

        அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்”

சவுக்கடியாய்ச் செப்பிய அந்த முண்டாசுக் கவிஞனின் ஆணையை மேலேற்று, இதே உலகத் தாய்மொழி தினத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்களின் பயணத்தைத் தொடங்கினோம். கடந்த இரண்டு வருடங்களில் பல கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நாட்டு நடப்புக்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைப்படத் திறனாய்வுகள் என எண்ணற்ற ஆக்கங்களைக் கொடுத்துள்ளோம். கடந்த காலத் தமிழ்ப் பெரியவர்கள் பலரும் எங்கள் இதழ்களின் மூலம் ஈண்டு திரும்பி வந்துள்ளனர். நிகழ்காலப் பெரியவர்கள் சிலரும், எங்கள் சஞ்சிகையின் மூலம் தங்கள் கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்துள்ளனர்.

இவை எல்லாவற்றையும் பேருவகையுடன் ஏற்ற வாசகப் பெருமக்களாகிய உங்களது உற்சாகமே எங்களின் இரண்டு வருடப் பயணத்தில் சுமை தாங்கி. உங்களின் ஆதரவை மட்டுமே நம்பிக் கடை விரித்தோம், கொண்டீர்கள். உங்கள் ஆதரவை மட்டுமே நம்பி இப்பணியைத் தொடர்வோம், கொள்வீர்கள் என்ற முழு நம்பிக்கையுடன்.

–    ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad