banner ad
Top Ad
banner ad

சொர்க்கத்திலொரு திருத்தம்

Filed in இலக்கியம், கதை by on July 28, 2015 0 Comments

லிஸி

FONகுளித்து முடித்ததும் பசிப்பது போலிருந்தது. உடலில் டவலைச் சுற்றிக் கொண்டு கீழே இறங்கி வந்து கோப்பையில் காப்பி நிரப்பிக் கொண்டு ஜன்னலுருகே இருந்த சோபாவில் அமர்ந்தாள். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மரத்திலிருந்த இலைகளும் மழையில் குளித்து அவளைப் போலவே புத்துணர்வுடன் பளிச்சென்று இருந்தன. கீழே விழுந்திருந்த ஒரு சில உதிர்ந்த இலைகள் மழையில் நனையாமல் இருக்க இங்குமங்கும் ஓடுவது போல் காற்றடிக்கும் திசையில் உருண்டோடின. தொலைபேசி ஒலித்தது. ஆஷிஷ்.

“ஹை பேபி .. தூக்கத்தைக் கலைச்சுட்டேனா?”

“இல்லை .. காப்பி குடிச்சிட்டு இருக்கேன்.”

“நைஸ்.. எங்கே இருக்க? செல்ஃபோன்ல கூப்பிட்டேன் எடுக்கலை .. அதனால தான் இந்த நம்பர்ல கூப்பிட்டேன்.”

“லிவிங் ரூம்ல இருக்கேன் .. செல்ஃபோன் பெட்ரூமிலேயே இருக்கு … குளிச்சிட்டு ட்ரெஸ் கூட மாத்தலை .. காபி குடிக்கணும் போலிருந்தது .. அதான் டவலோட இறங்கி வந்துட்டேன்.”

“அடடா …மிஸ் பண்ணிட்டேனே.” .

“காலையிலே நீங்க கிளம்பினப்போ சரியாக் கூட பேசலை .. ரொம்ப அசதியா இருந்தது ..”

“தட்ஸ் ஒகே .. நான் இங்க ஏர்போர்ட்ல இருக்கேன் .. இன்னும் கொஞ்ச நேரத்தில போர்டிங் ஆரம்பிக்கப் போகுது ..”

“எவ்வளவு நாளாகும் திரும்ப வரதுக்கு..”

“டென் டேஸ் .. ஓடியே போயிடும்.. ஷாப்பிங் போ .. எஞ்சாய் பண்ணு .. நான் சீக்கிரம் வந்துடுவேன்..”

“சரி .. போய்ச் சேந்ததும் ஃபோன் பண்ணுங்க..”

“ஒகே .. பை “

ஃபோனை வைத்துவிட்டு மறுபடியும் பின்வாசல் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தாள். மழை வலுத்திருந்தது. வீட்டைச் சூழ்ந்திருந்த மரங்கள் காற்றில் வேகமாக ஆடிக் கொண்டிருந்தன. காற்றின் வேகத்துக்கு ஏற்றாற்போல் அலைந்த மழைத் துளிகள் புல்தரையில், தேர்ந்த ஓவியனின் தூரிகை போல் வளைந்து நெளிந்து எதையோ வரைந்து கொண்டிருந்தன.

முன்வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. வாசல் கதவை ஒட்டியிருந்த ஜன்னலின் திரையை லேசாக விலக்கிப் பார்த்ததில் யாரோ முன் பக்கமிருந்த அடர்ந்த மரங்களினூடே ஓடி மறைவது தெரிந்தது. அந்தச் சிவப்பு நிற ரெயின் கோட் .. நித்தினா அது? ரெயின் கோட்டின் தொப்பி மூடியிருந்ததால் முகம் தெரியவில்லை. நித்தின் ஃபோன் செய்யாமல் வரமாட்டானே! ஒருவேளை ஆஷிஷ் இன்று காலையில் ஊருக்கு போனது தெரிந்து வந்திருப்பானோ? வந்தவன் ஏன் உள்ளே வராமல் போக வேண்டும்? கதவைத் திறந்து அவனை அழைக்கலாம் என்று நினைத்தபோது, தான் வெறுமனே துண்டு கட்டியிருப்பது நினைவுக்கு வந்தது. கதவைச் சில அங்குலங்கள் மட்டுமே திறந்து பார்த்தாள். போர்ட்டிகோவில் ஒரு சிறிய பொட்டலம் இருந்தது. மார்புக்கு குறுக்கே டவலை இறுகப் பற்றிக் கொண்டு வெறுங்காலுடன் போர்ட்டிகோவில் இறங்கி அதை எடுத்து வந்தாள்.

பொட்டலத்தின் முன்னும் பின்னும் முகவரி எதுவும் இல்லை. யாருக்கு வந்தது என்று கூடத் தெரியவில்லை. திறந்து பார்க்கலாம் என்று நினைத்த போது ஒருவேளை ஆஷிஷுக்கு வந்திருக்குமோ என்று தோன்றியது. சரி அப்படியே இருக்கட்டும் என்று மேஜை மேல் வைத்துவிட்டுத் திரும்பியவள், அதில் தான் முகவரி இல்லையே, திறந்து பார்த்துவிடலாம் என நினைத்துப் பொட்டலத்தைப் பிரித்தாள். உள்ளே செவ்வக வடிவத்தில் கம்மியான உயரத்தில் ஒரு பெட்டி. புத்தகமாக இருக்குமோ? ஆஷிஷ் வாங்கும் புத்தகங்கள் இவ்வளவு சிறியதாக இருக்காதே. பெட்டியைக் கிழிக்காமல் அதில் ஒட்டப்பட்டிருந்த செலஃபன் டேப்பைப் பிய்த்து பெட்டியைத் திறந்தவள் .. கூர்மையான கத்தியால் குத்தப்பட்டு அது அடிவயிற்றின் நரம்புகளில் இறங்கியதாய் உறைந்தாள். தான் பார்த்தது நிஜம் தானா என உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டுமொருமுறை பெட்டியைப் பார்த்தாள். பெட்டியிலிருந்த பிரேமில் அவளும், நித்தினும் இணைந்திருக்கும் அந்தரங்கப் புகைப்படம். தன்னையறியாமல் படத்தைக் கையிலெடுத்தாள். அதன் பின்னால் ஒரு சின்னத் துண்டுச்சீட்டு “நீ செய்யும் இத்தவறுக்கு $200,000 தண்டனை. சீக்கிரம் ஏற்பாடு செய்” என்று மிரட்டுகிற ?? தொனியில் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது!! .

நித்தின்

கிளம்பும் போது இருந்ததை விட இப்போது மழை குறைந்திருந்தது. இருந்தாலும் நெடுஞ்சாலைகளில் நெரிசலைக் காரணம் காட்டி மழைக் குளியலை ரசித்தபடி நின்றுக் கொண்டிருந்தன வாகனங்கள்.

‘ச்சே .. வீட்டிலிருந்து கிளம்பி நேரா அலுவலகம் போயிருக்கணும் .. இப்படி ரெண்டுங்கெட்டாந்தனமா வந்து இங்க மாட்டிக்கிட்டமே ..’ மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

ரெயின் கோட்டிலிருந்த ஃபோன் மெசேஜ் வந்திருப்பதை உணர்த்தியது. கடிகாரத்தைப் பார்த்தான். ஒரு அங்குலம் நகர்வதற்கு பன்னிரண்டு வினாடிகள் ஆனது. இப்படிப் போனால் என்றைக்கு அலுவலகம் போய்ச் சேர்வது? மறுபடியும் மெசேஜ். முக்கியமான சொந்தப் பயனைத் தவிர இந்த எண்ணை யாருக்கும் அவன் கொடுத்ததில்லை அப்படியிருந்தும் எப்படித்தான் கண்டு பிடிக்கிறார்களோ?

பொழுது போகாமல் பக்கத்தில் பார்த்தான். தன்னைச் சுற்றிப் பலர் இருக்கிறார்கள் என்பதை மறந்து கருமமே கண்ணாக இமைகளுக்கு வண்ணம் பூசிக் கொண்டிருந்தார் ஒரு பாட்டி. எரிச்சலாக வந்தது. வெளியில் இறங்கினால் எல்லாம் கரைந்து விடப் போகிறது. ஏன் இப்படி மாங்கு மாங்கென்று பூச வேண்டும்? ஒரு வேளை பாட்டி குடை வைத்திருக்குமோ?

அவனுக்கே தன் எண்ண அலைகளை நினைத்து சலிப்பு வந்தது. யார் எப்படி போனால் நமக்கென்ன … சீக்கிரம் அலுவலகம் போய்ச் சேர்ந்தால் போதும்.. அவனது பிசினெஸ் பார்ட்னர் ஆஷிஷ் வேறு இல்லை. அலுவலகப் பணிகளைப் பார்வையிட வேண்டும். இன்னும் நாற்பது நிமிடங்களில் முக்கியமான வீடியோ கான்ஃபரென்ஸ் வேறு.

நெரிசல் சற்றே விலகி அங்குலத்திலிருந்து, அடிகளாக முன்னேற முடிந்தது.

கண்ணாடியில் பின்னால் நிற்கும் வண்டிகளைப் பார்த்தான். வெள்ளை நிற லெக்சஸ்.. பிரவுன் நிறக் கோட் அணிந்திருந்த ஒருவர் கன்னத்தை தடவியபடி தனக்கு இடப்புறம் இருந்த காரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி அந்தக் காரில் என்ன தான் இருக்கிறது என்று பின்னால் திரும்பிப் பார்த்தால், தங்க நிறக் கூந்தலுடன் அழகான இளம்பெண் ஒருத்தி யாருடனோ தொலைபேசியில் பேசியபடி இருந்தாள். சிரிப்பு வந்தது.. உலகமே இப்படித்தானோ?

சற்றே வேகமாகப் போகுமளவுக்கு நெரிசல் இளகியிருந்தது. காரில் மணி பார்த்தான் … இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கிறது … போய் விடலாம் .. மீண்டும் ஒரு மெசேஜ். தலையைத் திருப்பாமல் பார்த்தான். எம்.எம்.எஸுக்கான அடையாளத்தைக் காட்டியது ஃபோன். கட்டை விரலால் அதை அழுத்தியவன் பிக்சல் பிக்சலாக படம் தெளிவாவதைச் சாலையிலிருந்து கண்ணை அதிக நேரம் விலக்காமல் பார்த்தான். முக்கால் வாசிப் படம் தெரிந்ததும் .. சடாரென பிரேக் போட்டான் … மழைத் தண்ணீரின் சறுக்கலில் வண்டி ஒரு சில அடிகள் இப்படியும் அப்படியும் ஓடி நின்றது .. “பொய்ய்ய்ங்ங்க் ” என ஹாரன் அடித்து பின்னால் வந்த வண்டிக்காரர் மழையிலும் கண்ணாடியை இறக்கி நடுவிரலால் திட்டி விட்டுப் போனார்.

லிஸியுடன் அவன் தனிமையில் இருந்த புகைப்படம். “பார்ட்னரின் மனைவியைப் பங்கு போடுவது தவறு. $500,000 கொடுத்தால் தவறுக்குப் பரிகாரம் செய்து விடலாம்” எனும் பொருள் பதிந்த ஆங்கில வாசகத்துடன்.

லிஸி

மீண்டும் அந்த படத்தை கையிலெடுத்தாள். கைகள் நடுங்கின. தன்னுடைய படம் தானா அது? யார்? யார் இதை அங்கு வைத்திருக்கக் கூடும்? திரையை விலக்கி யாராவது தன்னை நோட்டமிடுகிறார்களா என்று பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒருவரும் இல்லை. ஒரு வேளை வீட்டைச் சுற்றி அடர்ந்திருக்கும் மரங்களின் பின்னே மறைந்திருந்து பார்க்கிறார்களோ? உள்ளங்கையில் வேர்த்து ஈரமாகி, உடம்பும் வியர்த்து விட்டிருந்தது.

யார் செய்திருப்பார்கள்? முதலில் யார் இதை படமெடுத்திருக்கக் கூடும்? மீண்டும் படத்தைப் பார்த்தாள். வீட்டுக்குள்ளிருந்து, அதுவும் படுக்கையறைக்குள்ளே மிக அருகாமையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால்? மேலே கெஸ்ட் பெட்ரூமுக்கு ஒடினாள். புகைப்படம் எடுக்கப்பட்ட கோணத்தில் ஒரு சிறிய புத்தக ஷெல்ப். புத்தகங்கள் கலைந்திருந்தது. தனக்கு தெரியாமல் மறைவாக கேமராவைப் பொருத்தி படம் எடுத்திருக்கிறான் அந்தப் படுபாவி நித்தின். இன்று ஆஷிஷ் ஊருக்குப் போனதையறிந்து படத்தை வீட்டின் முன் வைத்து மிரட்டுகிறானா? ஒரு வேளை ஆஷிஷ் இதைப் பார்த்திருப்பானோ? இருக்காது… சத்தம் கேட்ட சமயத்தில் தான் அவன் இதை வைத்திருக்க வெண்டும். அதான் வைத்து விட்டு ஓடிய போது பார்த்தோமே .. தான் வாங்கித் தந்த சிகப்பு மழைக் கோட்டு தான் காட்டிக் கொடுத்ததே அந்தச் சண்டாளனை. நிலைகுலைந்து சத்தமாக அழுதாள்.. நித்தின் நீயாடா இப்படி? உன்னையா நான் கள்ளத்தனமாய்க் காதலித்தேன்?

நிதின்

அலுவலக வேலைகளில் கவனம் செல்லவில்லை. யார், யார், யார்? யார் அனுப்பியிருப்பார்கள் இந்தப் படத்தை. அதுவும் பலரும் அறியாத தனது இரண்டாவது தனிப்பட்ட செல்ஃபோனுக்கு? யாரையும் அனுமானிக்க முடியவில்லை. அனுப்பியவன் புத்திசாலி. தனது செல்ஃபோன் எண்ணை மறைத்திருக்கிறான். தகவல் 274 என்று சம்பந்தமில்லாத எண்ணிலிருந்து வந்ததாகக் காட்டியது.

நூறாவது முறையாக அந்தப் படத்தைப் பார்த்தான். லிஸியுடன் அவளது வீட்டிலிருந்த தனிமையான நேரத்தில் எடுக்கப்பட்டிருந்தது. கட்டிலுக்குப் பின்னாலிருந்த மூயுரல் படம், கர்ட்டன்ஸ், இருவரின் நிலை எல்லாம் இது மார்ஃபிங் அல்ல என்றது. வேறு ஒருவரும் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் லிஸி? கணினியில் தேடியதில் அனுப்பப்பட்ட தொலைபேசியின் நிஜ எண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தகவல் அனுப்பப்பட்ட இடத்தின் முகவரி கிடைத்தது….லிஸியின் வீடு!

லிஸி

பொதுவாக ஆஷிஷின் பிசினஸ் விஷயங்களில் அவள் தலையிட்டதில்லை என்றாலும் அவனது பார்ட்னரான நித்தினையும், அலுவலகத்தில் சிலரையும் சில விருந்துகளில் சந்தித்திருக்கிறாள். ஒரு முறை ஆஷிஷ், நித்தின் இருவருமே வெளியூர் செல்ல நேர்ந்தபோது அவர்களது அலுவலகத்தின் அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டாள். ஒரு வழக்கின் காரணமாக முன்னதாக திரும்பிய நித்தினுடன் சேர்ந்து பணியாற்றிய சூழ்நிலையில் அவனது எண்ண அலைகள் தனது எண்ணங்களோடு நேர்கோட்டில் ஒத்துப் போவதை உணர்ந்தாள். அவனது தனித்துவமான பல நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு கிட்டத்தட்ட அவனது அடிமையாகிப் போனாள். சதா சர்வமும் வியாபாரத்தையே நினைத்து, சுவாசித்துக் கொண்டிருந்த ஆஷிஷிடம் இல்லாத அன்பும் பரிவும் நித்தினின் அருகாமையில் கிடைத்த போது சற்றே திக்கு முக்காடினாள். மனம் கனத்துப் போன பல சமயங்களில் அரவணைத்து ஆறுதல் சொன்னவனிடம் தன்னையறியாமல் தன்னைத் தொலைத்தாள். ஆனால் அவன் பணத்துக்காக, தன்னிடம் பரிவு காட்டினான் என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவனை அப்படியே அடித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது!

நிதின்

அலுவலகத்தில் லிஸியைச் சந்தித்த முதல் சில நாட்களிலேயே ஒரு அன்னியோன்யம் ஏற்பட்டது. அவளது வெகுளித்தனமும், சிரித்துப் பேசும் பொழுது கூட கண்களில் இழைந்தோடிய மெல்லிய சோகமும் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. தனிமையான சில சந்திப்புகளில் முழுமையான அன்பின் தேடல் அவளிடமிருந்தது புரிந்தது. ஆத்மார்த்தமாக இருந்த அன்பின் பரிமாற்றம் காலப் போக்கில் மனச் சலனங்களினால் தாபமானது. அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லாதிருந்தது. ஆஷிஷ் ஊரிலிருந்து திரும்பிய பின்னரும் அவனுக்கு சந்தேகம் வராதவாறு அவ்வப்போது தொடர்பிலிருந்தது, உருகி உருகிப் பேசியது, வீட்டுக்கு அழைத்தது எல்லாம் நாடகமா? ஏற்கனவே திட்டமிட்டு காய் நகர்த்திய ஜாலக்காரியா அவள்? இதையெல்லாம் அறியாமல் அவளிடம் ஏமாந்தது அவமானமாக இருந்தது. இப்படி லாவகமாக ஏமாற்றி முட்டாளாக்கிய அவளைச் சும்மா விடக் கூடாது. தீர்த்துக் கட்டிவிட வேண்டியது தான். ஆனால் எப்படி?

லிஸி

நிஜமாகவே நித்தின் தான் செய்திருப்பானா?. அந்தச் சிகப்பு மழைக் கோட்டைப் பார்த்தவுடனே தெரிந்ததே அவன் தானென்று. $600க்கு பேர்பெட்ச் ஷோரூமில் அவனுக்காக பிரத்யேகமாக வாங்கியது. ஃபோன் செய்து பார்க்கலாமா, எடுக்கிறானா என்று? எடுத்தால் என்ன பேசுவது? சரி எடுத்தால் அவன் குற்றமற்றவன். இல்லையென்றால் அவன்தான். ஃபோன் செய்தபோது அவன் எடுக்கவில்லை. அழுகையாக வந்தது. கொன்று விட வேண்டியது தான். அவனைக் கொன்று விட்டு? வாழ் நாள் முழுதும் சிறையிலிருப்பதா? அதற்கு நாமே செத்துவிடலாம். நாம் செத்தால், அவனுக்கு தண்டனை?

நிதின்

எதற்காக அவள் இதைச் செய்ய வேண்டும்? பணத்திற்காகவா? அவளும் இதில் ஈடுபட்டிருக்கிறாளே? ஒரு வேளை ஆஷிஷிடமிருந்து ஓடிவிடப் போகிறாளோ? அதற்காகப் பணம் கேட்கிறாளோ? ஃபோன் செய்கிறாளே. என்ன நெஞ்சழுத்தம்? எடுக்கலாமா? எடுத்து என்ன பேசுவது? புரியவில்லை! வேண்டாம் யோசிப்போம்.. என்ன செய்வது. தீர்த்து விட வேண்டியது தான். மாட்டிக் கொண்டால்? ஆஷிஷ் என்ன நினைப்பான். குழப்பமாக இருந்தது. தற்கொலை செய்துக் கொள்ளலாமா – ஆனால் முதலில் அவளை கொன்று விட்டு அதன் பின்பு தற்கொலை செய்து கொள்ளலாம். ஃபோனை எடுத்து அவளை அழைத்தான்.

லிஸி

நல்லவேளை அவனே ஃபோன் செய்து கூப்பிட்டான். வழக்கமாக அவர்கள் சந்திக்கும் ரெஸ்டாரன்ட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறான்.. செத்துப் போக அது தான் சிறந்த இடம். அவன் முன்னாடியே சாக வேண்டும். அவனை இதில் மாட்டி விட வேண்டும். எப்படிச் சாவது. ஆஷிஷ் இரண்டு நாளுக்கு முன் கூடச் சொன்னானே.. தோட்டத்து எலிகளுக்காக மருந்து வாங்கி வைத்திருப்பதாகவும், புல்வெளியைச் சீர்ப்படுத்தும் தோட்டக்காரன் வந்தால் அவனிடம் கொடுக்கச் சொல்லி .. அதைச் சாப்பிட்டால்? எலி மருந்தில் மனிதர்கள் சாவார்களா?

நித்தின்

ஃபோன் செய்த போது கூட இந்த விஷயத்தைப் பற்றி மூச்சு விடவில்லை. தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.. கிராதகி. அவள் சாக வேண்டியவள் தான். எப்படிச் சாகடித்து, தானும் சாவது.. சட்டென்று ஆஷிஷ் தனது டேபிள் ட்ராயரில் வைத்திருக்கும், ஸ்ட்ரெஸ் ரிலீஃபுக்காகச் சாப்பிடும் வார்பாரின் மாத்திரை ஞாபகம் வந்தது .. தொழில் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் சொல்வானே .. ‘அதிக அளவில் வார்பாரின் சாப்பிட்டுச் செத்துப் போய்விடலாமெனத் தோன்றுகிறது’ என்று.. அது தான் சரி .. அவளுக்குத் தெரியாமல் கலந்து கொடுத்து விட்டுத் தானும் சாப்பிட்டு விட வேண்டியது தான்.

லிஸி

ஒன்றும் தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறான்.. ராஸ்கல் .. ஆயிற்று .. கிடைத்த சந்தர்ப்பத்தில் அவனுக்குத் தெரியாமல் ஒரு வழியாகக் குளிர் பானத்தில் மருந்தைக் கலந்தாகி விட்டது.. இன்னும் கொஞ்ச நேரம் தான் .. குடிப்பதற்கு முன் அவனிடம் கேட்க வேண்டும் .. நாக்கைப் பிடுங்கிக் கொண்டு அவனே செத்து விட வேண்டும்.

நிதின்

எப்படி அவளால் முடிகிறது? மனசில் வன்மத்துடன் எப்படி அப்பாவி போல் நடிக்க முடிகிறது. அவளைச் சாகடிப்பதில் தவறில்லை. இன்னும் சற்று நேரத்தில் இருவரும் பருகப் போகும் பானத்தில் வார்பாரினைக் கலந்தாகிவிட்டது. அதற்கு முன்னால் அவளிடம் கேட்க வேண்டும்.

லிஸி

‘என் இப்படி செய்தாய்? உன்னிடம் அன்பு செலுத்தியதற்கு நீ தரும் பரிசா இது?’

நிதின்

‘நான் கேட்க வேண்டியதை நீ கேட்கிறாயா? ராட்சஸி’’

Sorkamலிஸி

கைப்பேசி ஒலித்தது. ஆஷிஷ் கூப்பிடுகிறான். எடுத்தாள். ‘ஹலோ’ யாரோ ஒருவன் ஸ்பானிஷ் கலந்த ஆங்கிலத்தில் பேசினான் .. “ஆஷிஷ் நோ.. ..சேபர் ஆஷிஷ்?” காபா லுசிவியா ரோஹா?”.

நிதின்

274 என்ற எண்ணிலிருந்து மெசேஜ்… எப்படி? அவள் தான் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாளே? ஆங்கிலத்தில் மெசேஜ். “நான் டியுவானாவில் இருப்பவன்.. இந்த தொலைபேசி வைத்திருந்தவரை உங்களுக்குத் தெரியுமா?” அப்படியானால் அந்த எம்.எம்.எஸ்?

லிஸி

இப்போது ஆங்கிலம் தெரிந்த யாரோ ஒருவன் பேசினான். “இந்த நபர் வைத்திருந்த செல்ஃபோனில் கடைசியில் உங்கள் எண்ணுக்குப் பேசியிருக்கிறார். மணிப்பர்சில் இருந்த லைசன்சில் பெயர் ஆஷிஷ் என்று உள்ளது. இங்கே டியுவானாவில் அடித்த மழை புயலில் மின்சாரக் கம்பங்கள் விழுந்து விட்டன. அதில் ஒன்று இவர் மீது விழுந்து இறந்து விட்டார். இவர் உங்களுக்கு தெரிந்தவரா? சிகப்பு பேர்பெட்ச் ரெயின்கோட் அணிந்திருக்கிறார்.’. சடாரென்று எழுந்தாள்!

எழுந்த வேகத்தில் மேஜை மீது இடித்து மேஜையிலிருந்த இரண்டு குளிர்பானக் கண்ணாடி டம்ளர்களும் கீழே விழுந்து சிலீரென்ற சத்தத்துடன் உடைந்தன.

– மர்மயோகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad