Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நடிப்புலகச் சக்கரவர்த்தினி

Manorama_620x989”சிக்கலாரே, எப்டி இருக்கீய…. சொகமா இருக்கீயளா……….. அடி ஆத்தி…. இந்த நாயனத்துல வாசிச்சுக் காட்டுங்க…… ஏஏஏஏஏஏன்…..”

தில்லானா மோகனாம்பாளில் எல்லா நாதஸ்வரத்திலும் அதே சங்கீதம்தான் வருகிறதா, அல்லது சிக்கல் சண்முகசுந்தரம் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) வாசிக்கும் நாதஸ்வரம் மட்டும் சிறப்பாகச் செய்யப்பட்டதா என்று கேள்வி கேட்கும் நேரத்தில், ஒரு நிமிடம் சிவாஜி என்ற மாபெரும் ஜாம்பவான் அதே காட்சியில் இருக்கிறார் என்பதே நமக்கு மறந்துவிடுமளவுக்கு அதிகமான ஆளுமையுடன் நடிப்பதற்கு இயன்ற ஒரு சில நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர். அவர்தான் சமீபத்தில் காலமான பழம்பெரும் நடிகை மனோரமா அவர்கள்.

1958 ஆம் ஆண்டு தொடங்கி 2015 வரைத் திரையுலகில் ஜொலித்து, சுமார் ஆயிரத்து ஐநூறு படங்களுக்கு மேல் நடித்து முடித்தவர். 1985 ஆம் ஆண்டு அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டபொழுது கின்னஸ் சாதனையாளரானவர். அதன்பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களில் மேலுமொரு ஐநூறு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அவர் நடித்து வெளிவரும் படங்கள் சராசரியாக இரண்டு வாரங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைந்திருக்கிறது.  இவைதவிர ஐயாயிரத்துக்கும் அதிகமான மேடை நாடகங்களிலும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். நடித்தார் என்றால், ஏதோ ஓரிரு காட்சிகளில் என்றில்லை, பெரும்பாலும் முக்கியமான கதாபாத்திரங்களாகவே இருக்கும். தான் வரும் காட்சிகளிலெல்லாம் தன்னைச் சுற்றி நடிப்பவர்களையும், திரையரங்குகளில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களையும் ஒருசேரத் தன்பால் கவர்ந்து இழுக்கும் வல்லமை படைத்த கலைஞர் அவர் என்றால் மிகையாகாது. உலகத்திலேயே வேறு எவரும் சினிமா உலகில் இவ்வளவு பெரிய தொடர் சாதனையைப் படைத்ததில்லை என்றுதான் கூற வேண்டும்.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் வாழ்ந்து வந்த காசி கிளாக்குடையார் மற்றும் ராமாமிருதம் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர். கோபிசாந்தா என்பது அவரின் இயற்பெயர். அவரின் தந்தையார், பெண் குழந்தை பிறந்தது என்ற காரணத்தாலும், ராமாமிருதத்தின் தங்கையை இரண்டாம் தாராமாகத் திருமணம் செய்து கொண்டு அதனால் இவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கிய காரணத்தாலும், கோபிசாந்தாவையும் அவரின் அன்னையையும் வீட்டை விட்டி வெளியேற்றினார், அந்தத் தஞ்சாவூர் மண்ணிலேயே வாழ்வதற்கு இயலாத நிலையை உருவாக்கினர். இந்தக் கொடுமைகளால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்ளத் துணிந்த ராமாமிருதத்தை அக்கம் பக்கமிருந்தவர்கள் காப்பாற்றிட, அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளத்தூர் எனும் சிற்றூரில் சென்று தங்கினர், இதன்பிறகு கோபிசாந்தாவும், அவர் அன்னையும் பொருளாதார ரீதியாய் மிகவும் வரிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ராமாமிர்தம் பழக்கமில்லாத ஊரில், பலகாரம் சுட்டு விற்று வாழ்க்கை நடத்தித் தன் மகளை வளர்க்கலானார். கோபிசாந்தாவின் பதினோறு வயதில், ராமாமிருதத்துக்கு மிகுந்த உடல்நிலைக் குறைவு உண்டாக, கோபிசாந்தா படிப்பை நிறுத்தி ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற கட்டாயத்திற்குள்ளானார்.

முதன் முதலாக அவர் வேலைக்குச் சென்றது அங்கிருந்த ஒரு பணக்காரச் செட்டியாரின் வீட்டிற்கு அவர்களின் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்குத் தான். முதல் நாள் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேளையில், அந்தக் குழந்தை அவரைக் கடித்துவிட்டு, அங்கு வேலைக்கு இருந்த சமையற்காரியிடம் ஓடிவிட, வேலையை விட்டு நிறுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் சமையற்காரியைக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிச் சமையல் வேலையிலிறங்கினார் கோபிசாந்தா. வீட்டு வேலைகள் செய்து பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கோபிசாந்தா, தனது பனிரெண்டாம் வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் “வைரம் நாடக சபா”வில் சேர்ந்து பல நாடகங்களில், சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த கோபிசாந்தா, இலட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரனின் நாடகக் கம்பெனியான “எஸ். எஸ். ஆர் நாடக மன்ற”த்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்தக் கம்பெனிக்காக, நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்த கோபிசாந்தாவிற்கு நாடக இயக்குனர் திருவேங்கடம் ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் இருவரும் சேர்ந்து “மனோரமா” என்று பெயர் சூட்டினர்.

முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்களத் திரைப்படம் ஒன்றில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்தார் மனோரமா. அதன் பின்னர் எஸ்.எஸ். ஆர் படமொன்றில் மனோரமா நடிக்க, அந்தப் படம் வெளியாகாமல் போனது. 1958 ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் தயாரித்து வெளி வந்த “மாலையிட்ட மங்கை” திரைப்படம் மனோரமாவின் தமிழ்த் திரையுலகப் பிரவேசமாக அமைந்தது. அதன் பிறகு 1963 ஆம் ஆண்டு வெளிவந்த ”கொஞ்சும் குமரி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அவர், அதன் பிறகு முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகி என்ற அந்தஸ்தில் நடிக்கவில்லை. கவியரசு கண்ணதாசன் “கதாநாயகி” என்ற அந்தஸ்தினால் எந்த உயர்வும் இல்லை, படத்திற்குத் தலைமைக் கதாபாத்திரத்தில் நடித்தால் பெருமைக்குரிய விஷயமே என்று அறிவுரை வழங்க, அதனைக் கடைசிவரை முழுமையாக ஏற்றவராகவே இருந்தார் மனோரமா. தமிழ்த் திரையுலகை நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் ஆதிக்கம் செய்த ஒரே பெண்மணி அவரென்றால் மிகையாகாது.

மிகச் சிறப்பான நடிப்பாற்றல், தெளிவான வசன உச்சரிப்பு, உணர்ச்சிக் கொந்தளிப்பு, கணீர்க்குரல் பாடல் என அனைத்து வகையிலும் தமிழ்த் திரையுலகே கண்டிராத அளவுக்கு மிகவும் திறமை வாய்ந்த நடிகையாகத் திகழ்ந்த பெண்மணி மனோரமா ஆவார். தனது நடிப்புலக அனுபவங்களில், ஐந்து முதலமைச்சர்களுடன் பணிபுரிந்த பெருமை அவரையே சாரும். திரு. அண்ணாதுரை, திரு. மு. கருணாநிதி, திரு., எம். ஜி. இராமச்சந்திரன், செல்வி. ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் திரு. என்.டி. இராமாராவ் ஆகியவர்களுடன் பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. மு. கருணாநிதி எழுதிய “உதயசூரியன்” நாடகத்தில் அவர் கதாநாயகராக நடிக்க, மனோரமா கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்படத்துறையில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனில் தொடங்கி இன்றைய இளம் நகைச்சுவை நடிகர்கள் வரை ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நெடிய பாரம்பரியம் உண்டு. ஆனால், நகைச்சுவை நடிகைகளுக்கு அப்படியானதொரு தொடர்ச்சியான பாரம்பரியம் இல்லை என்கிற விமர்சனம் உண்டு. தமிழில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள் நீடித்து நிலைப்பது இல்லை. நகைச்சுவைக்கென வரும் நடிகைகள் குறைவான காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசித்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள். ஆனால், மனோரமா அதிலும்
மாறுபட்டவர். பெருமளவு ஆண்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதொரு துறையாக வர்ணிக்கப்படும் தமிழ்த்திரைப்படத்துறையில் அரை நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக அசைக்கமுடியாத நடிகையாக நிலைத்திருந்தவர்.

தமிழ்த் திரையுலகில் எம். ஜி. ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அனைத்துப் பிரபலமான கதாநாயகர்களுடனும் நடித்த மனோரமா திரையுலகில் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் பிரபலங்களாகத் திகழ்ந்த ஜெய் ஷங்கர், ஜெமினி கணேசன், நாகேஷ், சந்திரபாபு, தங்கவேலு, வீ.கே. ராமசாமி, சோ. ராமசாமி, எம். ஆர். ராதா, தேங்காய் சீனிவாசன் என அனைவருடனும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இன்றைய தனுஷ் மற்றும் சிம்பு முதல் நடித்து ஐந்து தலைமுறை நடிகர்களுடன் சரி சமமாக நடித்தவர் என்ற பெருமைக்குரியவர்   மனோரமா.

நாடகத் துறை, சின்னத்திரை மற்றும் திரைப்படத் துறை என்று அனைத்துத் துறைகளிலும் கோலோச்சிய மனோரமா, நடிக்காத கதாபாத்திரங்களே இல்லையெனுமளவுக்கு நம் கற்பனைக்கு  எட்டும் எல்லா விதக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் என்பதே உண்மை. அவரின் பணிக்காக ”கலை மாமணி”, மற்றும் “பத்மஸ்ரீ” விருதுகளைப் பெற்ற மனோரமா, ”புதிய பாதை” படத்துக்காகத் தேசிய விருது பெற்றவர். மலேசிய அரசிடமிருந்து “டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி” விருது பெற்றவர். கேரள அரசின் “கலா சாகர்” விருதையும் பெற்றார். இவைதவிர, “சினிமா எக்ஸ்பிரஸ் விருது”, சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதான “அண்ணா விருது”, ”என். எஸ். கே விருது”, “எம். ஜி. ஆர் விருது”, “ஜெயலலிதா விருது” எனப் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த் திரைப்பட ரசிகர்களால், “ஆச்சி” என்று அன்போடு அழைக்கப்பட்டவர் மனோரமா. “ஆச்சி” என்றால் செட்டிநாட்டு மொழியில் “அக்காள்” என்று அர்த்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்னக் கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’. போன்ற படங்கள் அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை.

நடிப்புலகில் கொடிகட்டிப் பறந்த மனோரமா, பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள மனோரமாவை ”மகளே உன் சமத்து” படத்தில் முதன் முதலாகப் பாடவைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ். அந்தப் பாடல்

“தாத்தா தாத்தா பிடி கொடு, இந்தத் தள்ளாத வயதில் சடுகுடு”..

என்பதே. எல்.ஆர். ஈஸ்வரியுடன் அவர் சேர்ந்து பாடிய பாடல். அதைத் தொடர்ந்து வி. குமாரின் இசையில் ”வா வாத்யாரே வூட்டாண்ட, நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்….. “

என்ற பாடல் மிகுந்த பிரபலமடைந்தது

“பூந்தமல்லியில ஒரு பொண்ணு பின்னால, நான் போயி வந்தேண்டி அவ புடவ நல்லால்ல… மந்தவெளியில ஒரு மனுஷன் பின்னால நான் மயங்கி நின்னேய்யா அவன் மூஞ்சி நல்லால்ல…”

இந்தப் பாடலை ரசிக்காத அந்தக் காலத்துத் தமிழர்களே இல்லையென்று கூறிவிடலாம்.

”தெரியாதோ நோக்கு, தெரியாதோ.. சின்னப் பருவத்திலே காதலிப்பது பைத்தியம் போல் ஆக்குமுன்னு தெரியாதோ……..”

நம் நெஞ்சை விட்டு அகலாத இன்னொரு பாடல். அதிலும் குறிப்பாக நாற்பது வயதை நெருங்கிய, அல்லது கடந்த அனைத்துச் தமிழ்ச் சமுதாயத்திற்கும் மிகவும் பிடித்தமான பாடல்.

”மெட்ராஸச் சுத்திப் பாக்கப் போறேன்… மெரினாவில் சுண்டல் வாங்கித் தாரேன்…..”

சமீபத்தில் வந்த ஏ.ஆர். ரஹ்மான் பாடல். இதுவும் பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே.

“டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லத் தட்டாதே…..”

இந்தப் பாடல்களைப் படிக்கும்பொழுதே அந்தக் கணீர்க் குரல் உங்களின் காதுகளில் ரீங்காரமிடுவது உறுதி. முழுநேரப் பாடகியாக இல்லாதவரெனினும், இசை நுணுக்கங்களையும், அவற்றின் ஏற்ற இறக்கங்களையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, மிகச் சிறப்பாகப்  பாடியவர் அவர்.

இதுபோலக் கலையுலகில் கொடிகட்டிப் பறந்த மனோரமாவின் சொந்த வாழ்வு அந்த அளவு பசுமையானதாக இருந்ததா என்றால் இல்லையென்றுதான் கூற வேண்டும். அவரே அப்படித்தான் கூறியிருக்கிறார். சபா நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார். ஆனால் இவர்களின் திருமணம் இரண்டு வருடங்களுக்கு மேல் தொடரவில்லை.

வாழ்வின் கடைசி மூச்சு உள்ள வரை நடிப்புலக வாழ்வைத் தொடர்ந்து கலைத்தொழிலில் முழுவதுமாய்த் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட  கலைச் செல்வி, மனோரமா அவர்கள் கடந்த பத்தாம் தேதி (10/10/15) நிலவுலக வாழ்வு நீத்து, மீளாத்துயிலில் ஆழ்ந்தது தமிழ்ச் சமுதாயம் முழுவதையும் வருத்தமடையச் செய்யும் ஒரு நிகழ்வாகும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதற்காகப் பனிப்பூக்களின் சார்பாக வேண்டிக் கொள்ளும்,

மதுசூதனன். வெ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad