banner ad
Top Ad
banner ad

அசோகமித்திரனுக்கு அருகாமையில்….

அசோகமித்ரன்

சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது ஒரு அரிய வாய்ப்பாக, பழம் பெரும் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் அசோகமித்திரனைச் சந்தித்து  உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த எனது கல்லூரி நண்பன் ஸ்ரீராமிற்கு, இச்சமயத்தில் எனது இதயபூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன்.

எனது சந்திப்பைப் பற்றி எழுதுவதற்கு முன்னால், திரு. அசோகமித்திரன் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுவது பொருத்தமாக இருக்கும். தமிழ்ப் படிக்கும் ஆர்வலர்களுக்கு அவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லையெனினும், இந்தக் கட்டுரைக்கு முத்தாய்ப்பாய் அவரின் பின்புலம் குறித்து விளக்குவது சாலச் சிறந்தது என்ற எண்ணத்தால் இந்த அறிமுகம்.

அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலுள்ள செகந்தராபாத் நகரில் பிறந்தவர். இவரின் இயர்பெயர் தியாகராஜன். தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் சென்னைக்குக் குடியேறியவர், கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாகச் சென்னையிலேயே வசித்து வருபவர். சற்றே நகைச்சுவை கலந்து எதார்த்தமாக எழுதுவதே அவரின் சிறப்பு. தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மூன்று மொழிகளிலும் தேர்ச்சியும் புலமையும் பெற்றவர். ஆங்கில நாளிதழ்களில் இன்னமும் தொடர்ந்து எழுதி வருகிற இவர் அயோவா பல்கலைக் கழகத்தில் (Iowa University) எழுத்தாளர்களின் பயிலரங்கில் கலந்து கொண்டவர். கிட்டத்தட்ட இருநூறு சிறுகதைகளின் தொகுப்பான அப்பாவின் சிநேகிதர்கள் என்ற இவரது படைப்பு 1996 ஆம் ஆண்டில் ’சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. அப்பாவின் சிநேகிதர்கள் தொகுப்பில் பெரும்பான்மையானவை தந்தை மகனுக்கான உறவைக் குறித்தவை என்றாலும் சில கதைகளில் ’அப்பா’ என்ற கதாபாத்திரமே காட்டப்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவரின் கதைக் களம் சென்னை அல்லது ஹைதராபாத் நகர்களைக் கொண்டதாகவே அமைந்திருக்கும். தனது பழைய கால நினைவுகளைச் சற்றே சோகத்தின் இழையோட, அதே சமயத்தில் நகைச்சுவைக்கும் குறைவில்லாமல் எழுதுவதில் வல்லவரான இவரை, சோகமித்ரன் என்று குறிப்பிடுவாராம் எழுத்தாளர் சுஜாதா. அவர் சமுத்திரத்தைப் பற்றியெல்லாம் எழுதுவதில்லை, ஒரு துளி தண்ணீரைப் பற்றி மட்டுமே எழுதுவார். ஒரு வார்த்தையை அனாவசியமாக எழுதுபவரில்லை அவர் இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் பிரபலமான ஜெயமோகன் அசோகமித்திரனைப் பற்றிச் சிலாகிக்கும் கருத்து இது.

அசோகமித்திரனின் எழுத்துக்களைப் படிக்க வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு நாம் பரிந்துரை செய்வது; 18 ஆவது அட்சக்கோடு,  குழந்தைகள், பறவை வேட்டை, புலிக்கலைஞன், பிரயாணம், காலமும் ஐந்து குழந்தைகளும், விமோசனம், காத்திருத்தல், காட்சி, காந்தி, பார்வை, மாறுதல் மற்றும் குகை ஓவியங்கள் போன்றவை. அனைத்துப் படைப்புகளுமே மிகைப்படுத்தப்படாமல் நுட்பமான முறையில் ஒரு சிறிய விஷயத்தைக் கருவாக வைத்து எழுதப்பட்டது என்று கூறிவிடலாம்.

நண்பனின் ஏற்பாட்டில் ஒரு சனிக்கிழமை மதியம் இரண்டும் மணிக்கு அவரின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்திப்பதாக முடிவாயிற்று. ஒரு நேர்முகமாக இதனைச் செய்ய வேண்டும், வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குப் பயனுள்ள விஷயங்களைக் கேள்வி பதிலாகத் தொகுக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையுடன் சந்திப்புக்குத் தயாராகியிருந்தேன். மதியம் ஒன்றரை மணிக்குத் தொலைபேசியில் அழைக்க, அவரே எடுத்துப் பேசினார். ம்ம்ம்…. சொல்லுப்பா, ஆமா, ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடு என்று சற்றும் அலட்டல் இல்லாமல் பேசியது சற்று ஆச்சரியமாகவும், அதே சமயத்தில் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. தி. நகரில் வசிக்கும் அவரது இல்லத்திற்குச் சரியாக இரண்டு மணிக்குச் சென்று வீட்டிற்குள் நுழைய நம்மை அன்புடன் வரவேற்றார் எழுத்தாளர்.

எண்பத்தி நான்கு வயதைக் கடந்த மனிதர். நடப்பதில் சற்று நிதானம் தெரிந்தாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறார் என்பதைப் பார்த்து நமக்கு மகிழ்ச்சி. அனைத்துப் பற்களும் தெரிய, வெள்ளையான சிரிப்பு. அது சரி, இப்போ என்னைப் பாத்து என்ன ஆகணும், நான் என்ன அப்படி சாதிச்சுட்டேன், எங்கெங்கெ இருந்தோ வரேள் என்று கேட்க, நிஜமாக என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நானும் எழுதறேன் சார்……. ஆனா உங்க முன்னால….. என்று இழுக்க, அப்டில்லாம் ஒண்ணுமில்லப்பா….. வயசானாலே நன்னா எழுதுவான் அப்டிங்கறதெல்லாம் ஒண்ணுமில்ல.. இப்பக்கூட உன்ன மாதிரி சாஃப்ட்வேர் ஃபீல்ட இருக்குற ஆஸ்திரேலியா மக்கள் எல்லாரும் சேந்து ஒரு ஆன்லைன் மேகசீன் நடத்தறா… என்னென்னமோ எழுதறா, பிரமாதமா இருக்கு…. எப்டி உங்களுக்கெல்லாம் டைம் கிடைக்கறது?

நட்பான, எதார்த்தமான பேச்சு. எதிலும் ஆழமான புரிதல்கள் உள்ள மனிதர் என்று பார்த்த இரண்டு நிமிடங்களில் விளங்கி விடும். தனது குடும்பம், மகன்கள் என எல்லாவற்றையும் சாவதானமாக விளக்கிச் சொன்னார். அதே சமயத்தில், இடையிடையில் என்னைப் பற்றியும், என் குடும்பம் மற்றும் பனிப்பூக்கள் பற்றியும் ஆர்வமுடன் விசாரித்துக் கொண்டார். எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் நம்மை அசத்தியது.

இப்பவும் எழுதறேன்… எவ்வளவு முடியறதோ அவ்வளவு எழுதலாம்னு…. இங்கிலீஷ்லயும் கொஞ்சம்… ஆனந்தவிகடனுக்கும் எழுதறேன்… ஒரு வருஷத்துல மொத்தம் 12 கதைகளாவது எழுதிடுவேன் என்றார். இவற்றினூடே சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறாராம். நாம் அவரைச் சந்தித்த தினம் மாலை ஏதோவொரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகச் சொன்ன அவர், ஹால் மொதல் மாடியில இருக்கு, லிஃப்ட் இல்லை, படியில ஹேண்ட் ரெயில் கூட இல்லை. எப்டிப் போப்போறேனோ தெரியலை…. என்று சொல்லிச் சிரித்தார். ஆனால் ஒத்துண்டுட்டேன், போய்த்தான் தீருவேன், என்று தீர்மானமாகவும் சொன்னார்.

என்னமோ இந்த கம்ப்யூட்டரை ஆன் பண்னாலே என்னோட சைட்டுக்குப் (site) போற மாதிரி பண்ணிக் குடுத்திருந்தான் என் பையன், என்ன ஆச்சோ தெரியல, இப்ப வர மாட்டேங்க்றது’ என்றவரிடம், நான் வேணாப் பாக்கட்டுமா என்று நாம் கேட்க, நோக்கு டைம் ஆலயா என்றார். இல்ல சார் என்று கூறிவிட்டு, அறைக்குள் சென்று அவரின் லேப் டாப்பில் ஹோம் பேஜ் மாற்றிக் கொடுக்க, ஒரு முறை ரீஸ்டார்ட் (restart) செய்து நேராக அவரின் இமெயில் பேஜ் போவதை உறுதி செய்து கொண்டார். அப்பொழுது அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி ஐந்து வயதுக் குழந்தையின் குதூகலத்தை மிஞ்சும். நமக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.

அவரின் அமெரிக்கப் பயணம் குறித்துப் பேசினார், மகன்கள் செய்யும் வேலை, பேரக் குழந்தைகளின் படிப்பு, இன்னும் மறக்காத தனக்குப் பத்தொன்பதாம் வயது நடக்கையில் இறந்து போன அப்பா, கண்ணை மூடி நினைத்தால் பசுமையாய்த் தெரியும் சொந்த ஊர் செகந்தராபாத் என ஒரு மணிநேரம் அவரின் வாழ்க்கையில் என்னையும் ஒரு பங்காக்கினார். கேட்பதற்கு என்னிடம் எதுவுமில்லை, கேட்டுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்ற மன ஓட்டத்திலேயே அங்கு அமர்ந்து அவர் பேசுவதை முழுவதுமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இடம் பெறும் எல்லாச் சம்பவங்களுமே ஒரு காரணத்தால் விளைவது என்ற கர்ம பலன் தத்துவத்தில் முழுமையான நம்பிக்கை கொண்ட நாம், நமது கணக்கில் செய்யப்பட்ட ஏதோ ஒரு நற்கருமத்தால் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்ற நன்றிப் பெருக்கோடு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.

வெ. மதுசூதனன்.

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Dhamotharan.S says:

    God given the chances for to meet the great persons

  2. malar says:

    miga arumai .mikka mahizhtchi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad