\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கலைகளின் சங்கமம்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2016 0 Comments

MNTS_Sangamam2016_7_620x443
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பிப்ரவரி
6 சனிக்கிழமை அன்று ஹாப்கின்ஸ் உயர்நிலைப் பள்ளி அரங்கில் சங்கமம் 2016 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. குழந்தைகளும், பெரியவர்களும் பங்கு கொண்ட பல கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் பழமை மாறாது கருப்பட்டி பொங்கல் சேர்ந்த விருந்து என பல சிறப்புகள். இதற்கெல்லாம் மகுடமாக இருந்தது என பலரும் புகழ்ந்தது கலைகளின் சங்கமம் நிகழ்ச்சியைத் தான். பதினோரு வகையான தமிழர் கலைகளை முழு முயற்சியுடன் பயின்று ஒரே மேடையில், தொடரச்சியாக அரங்கேற்றியதும், கலைகளின் சிறப்பை வில்லுப்பாட்டில் அழகாக பாடி அறிமுகம் செய்தததும் பலரையும் மலைக்கச் செய்தது.

அலகினால் மாலை எடுத்தல், கோப்பையிலிருந்து திரவம் அருந்துதல், சுற்றி சுழன்று ஆடுதல் என வண்ணமிகு மயிலாட்டம்; முளைப்பாரி, தமிழர் விளையாட்டுகளை மையமாக வைத்து அழகாய் பாடி, ஆடிய கும்மியாட்டம்; ஒய்யார வரிசை, ஒயிலான நடை என அசத்திய ஒயிலாட்டம்; துள்ளி குதித்து, வேகமாக கம்பை சுழற்றி சிலிர்க்க வைத்த சிலம்பாட்டம்;  பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலை மையமாக்கி ஆடிப் பாடி நடித்து காட்டிய தெருக்கூத்து; அலங்கரித்த கரகத்தைத் தலையில் தாங்கி, சிலம்பம் சுற்றுதல், வளையம் (hula hoop) சுற்றுதல், படிக்கட்டு ஏறுதல்,  தரையில் படுத்து துணியை எடுத்தல் என அதிரடித்த கரகாட்டம்; ஊசி பாசியை கூவி விற்று அழகாய்க் குதித்தாடிய குறவன் குறத்தி ஆட்டம்; புலியாடை, புலி முகப்பூச்சு என மிடுக்காய் ஆடித் தெறிக்க விட்ட புலியாட்டம்; ஆட வைக்கும் தாளம், அழகான நடனம் என அதிர் வைத்த பறையாட்டம்; ஒருமித்த அசைவுகள், இனிய பாடல் தேர்வு, சீரான கோல் தட்டல் என அழகாக அடிய கோலாட்டம்; பொய்க்காலில் ஏறி நின்று, அலங்கார குதிரைகள் தாங்கி, ஒய்யாரமாக ஆடிய பொய்க்கால் ஆட்டம் என ஒவ்வொன்றும் காண்போரை இருக்கையின் விளிம்பிற்கே இழுத்து வந்தது என்றால் மிகையில்லை. இவையனைத்தையும் ஒரே நேரத்தில் மேடையில் கடைசியாக காட்சிப்படுத்தியது கண் கொள்ளாக் காட்சி.  

தமிழர் கலைகளை ஒருசேர மேடையில் அரங்கேற்ற வேண்டும் எனும் எண்ணத்தை நான்கு மாதங்களுக்கு முன்னர் திரு சிவானந்தம் மாரியப்பன் அவர்கள் பதிவு செய்தார். அந்தப் பட்டியலில் இருபதுக்கும் மேற்ப்பட்டத் தமிழர் கலைகள் இருந்தன. அவற்றில் சாத்தியமானது என பன்னிரண்டு கலைகளைத் தேர்வு செய்தோம். இவற்றை அரங்கேற்ற தேவையான ஆடை அலங்காரம், கருவிகளைப் பட்டியலிட்டு அவற்றை தமிழகத்தில் இருந்து வாங்கி கொண்டுவர தெளிவான திட்டத்தைத் தீட்டினோம். கரகாட்ட உடைகள், குறவன் குரத்தியாட்ட உடைகள், தோகையுடனான மயிலாட்ட பொம்மைகள், சிலம்பம், பறை, அலங்கார கரகம் என அனைத்தையும் நம்மூரிலிருந்து வரவழைத்து தந்தார் தோழர் திரு விஜய் பக்கிரி அவர்கள்.

கலைகளுக்கு மெருகேற்ற பாடல்களையும் இசை துணுக்குகளையும் அக்கறையுடன் தேர்வு செய்தோம். கும்மிக்கான பாடல்களை, இந்த நிகழ்ச்சிக்காகவே தனியாக எழுதி பாடி பதிவு செய்திருந்தோம். தமிழர் விளையாட்டுகளைப் பற்றிய கும்மி பாடல், நிகழ்ச்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒயிலாட்டம் தவிர்த்து அனைத்து கலைகளுக்கும் திரைப்படம் சாராத இசைகளையே தேர்ந்தெடுத்தோம். ஏழு நிமிடத்திற்குள் தெருக்கூத்து ஒன்றை அரங்கேற்றுவது பெரும் சவாலாகவே இருந்தது. பாவேந்தர் அளித்த சஞ்சீவி பர்வதத்தின் சாரல் நெடுங்கவிதை அங்கே கை கொடுத்தது. இரண்டு சமூகப் பாத்திரங்களின் அறிமுகப் பாடல்கள், புரட்சிகரமான முடிவுப் பாடல் என சுருக்கமாக சேதியை சொல்ல முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த மாபெரும் நிகழ்வை நினைவாக்க பெரும் பொருளுதவி தேவைப் பட்டதால் GiveMN வாயிலாக நிதி திரட்டினோம். இதன் மூலம் பொருள் தந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி. இங்கே பல கலைகளை அரங்கேற்ற பல கலைஞர்களை இனம் காணுதல் சவாலாகவே இருந்தது. கலைகள் வாரியாக இந்தப் பணியை செயற்குழு உறுப்பினர்களுடன் பிரித்து தேடலில் இறங்கி வெற்றியும் கண்டோம். மொத்தம் 44 கலைஞர்கள் மேடையில் ஒன்று கூடி இந்த மாபெரும் நிகழ்ச்சியை அரங்கேற்றினார்கள். ஒவ்வொரு கலைஞரும் போட்டிப் போட்டு தன் திறமைகளை மேடை ஏற்றினர். பார்வையாளர்களின் ரசனைக்கு இடைவெளி இல்லாமல் விருந்தளிக்கும் விதத்தில் ஒவ்வொரு கலைவடிவத்தையும் சரியான அளவில் தொகுத்திருந்தோம்.  

நிகழ்ச்சி முழுவதையும் வைத்த கண் மாறாது ரசித்த பார்வையாளர்கள், நிரம்பி வழிந்த அரங்கு, அரங்கு அதிர்ந்த கரவொலி என ஒவ்வொன்றும் நிகழ்ச்சியின் தரத்தைப் பறைசாற்றியது. மொத்தத்தில் சங்கத்தின் பெருமையை நிலை நாட்டும் நிகழ்வாக இது அமைந்தது என்றால் அது மிகையில்லை. இந்த முயற்சியில் பங்களித்ததில் நான் பெருமைகொள்கிறேன்.

ஆடிப்பாடிய கலைஞர்கள், உழைத்த நல்லுள்ளங்கள்,

காசுதந்த வள்ளல்கள், வித்திட்ட தமிழ்ச்சங்கம்  

என எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும், நலம்வாழ நல்வாழ்த்துகளும்!

பெருமையுடன்

சச்சிதானந்தன் வெ

 

கலைகளின் சங்கமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad