\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நிறமற்ற சினிமா

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 0 Comments

படம் ஓடிக் கொண்டிருந்தது….

niramarrapadam_620x413அது நிறங்களின் சிறகை, திரை தாண்டி துளிர்த்துக் கொண்டிருக்கிறதோ… என்றொரு சந்தேகம்… சற்று நேரம் வரை வரவில்லை.. என் கண்கள் எனக்கு முன்னால் சற்று வலது பக்கம் அமர்திருந்த அவளைக் காணும் வரை…எனக்கு, திரை தாண்டிய நிறங்களின் கூடு என் மேல் பொழிகிறதோ என்று தோன்றவேயில்லை.. மாயங்களின் வலையை நான் பின்னிக் கொண்டே இருப்பதற்குத் தகுந்தாற் போல… அவள் முகம் இன்னும் சற்று மெல்ல திரும்பி இருந்தது…..என் கண்கள் பாதி கன்னம் தெரிந்த அவளைச் சற்று இடதுப் பக்கம் சரிந்து திரும்பிப் பார்த்தன….அதே போலத்தான்… குதிரைவால் பின்னலில்…..புசுபுசுத்தன கூந்தல்…. குண்டு முகம்.. சற்று பெரிய தலை……ஆம்… அவளைப் போலவேதான் இருந்தாள்… என்னால்.. நிம்மதிக்குள் இருக்க முடியாத வெறும் வெளியை….. அடித்து உதைத்துக் கட்டிப்போட முடியவில்லை…… விட்டு விட்டேன்.. கண்கள் சுழன்று காது கூட அவளின் காது தான் என்றது…… நிறங்களின் கூடு விரிய விரிய திரை தாண்டிய வெளிச்சக் கதவு அவளைத் தெறித்துக் கொண்டேயிருந்தது…. அவள் மேல் பட்டுப் படர்ந்த நிறக் கலவைகள் விழிகளின் வாக்கிய அமைப்பில் என் கவிதை தேடும் நிஜம் அவளாகவே பட்டது..

கண்டிப்பாகத் தெரிந்தது……அது அவளேதான்… ஆனால் குழப்பம்…. முண்டியடித்தது…

“அவள் இப்போது சென்னையில்தானே இருக்கிறாள்… எப்படி கோவைக்கு….?….. அதுவும்.. நான் படம் பார்க்கும்.. இந்த ஆடிட்டோரியத்துக்கு எப்படி வர முடியும் ?”

மனதுக்குள் நிறம் உடைந்த பானையை முழுக்க ஊற்றிக் கொண்டே சிதறிய யோசனைக்குள் அவள் வெண்ணிற இரவுகளைப் பட்டாம்பூச்சிகளாய்ச் சமைத்துக் கொண்டே பாதி கானகம் காட்டியது போல பாதிக் கன்னப் பரப்பில்.. பருக்கள் இரண்டை முத்துக்களாக்கிச் சாய்ந்து இருக்கையைச் சரி செய்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள்… நான் இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்.. கண்டிப்பாக அவளேதான். சந்தேகமில்லை… ஆனால் சந்தேகிக்க மனம் சந்தோசப்படுகிறது…….

நான் சொல்லி இருக்கிறேன்.. மாதம் இருமுறை… “வானங்கள்”- பிலிம் சொசைட்டியில் உலகச் சினிமா பார்ப்பது வழக்கம் என்றும்… அது சிங்காநல்லூர் ‘விக்ஸ்’- மினி தியேட்டரில் மாதம் இருமுறை திரையிடுவார்கள் என்றும் கூறி இருக்கிறேன்…எத்தனையோ உலகச் சினிமாக்களை விடிய விடிய அலைபேசியில் சொல்லி இருக்கிறேன்….”நீங்க சினிமா சொல்றதே அழகுங்க” என்பாள்… சோம்பல் முறித்து… நான் இங்கு கவிதை எழுதி விடுவேன்…

நாங்கள் பிரிந்த இந்த ஆறு மாதத்தில்… எங்களுக்குள் ஏதுமில்லை…என்றாகிப் போனது… ஆனால் அவள் நினைவுகளில் நான் என்னை மீட்டெடுத்துக் கொண்டிருப்பதை அவளால் நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும்…… அவள் ஒரு நிறப் பைத்தியம்…நான் அவள் பைத்தியம்….  நிறங்களை மாற்றி மாற்றி ஓவியக் காடு செய்வதில் அவள் ஒரு வெளி… அவளைக் காணுதல், கண்டடைதல் புதிர்க்குள் கண்கள் தேடுவது போல.. நான் தேடித் தேடித் தோற்றுப் போனவன்…….ஆனால், அவளுக்குள் நான் பேயைப் போல அமிழ்ந்திருப்பதாக அவளே என்னிடம் பலமுறை கூறி இருக்கிறாள்.. அவளால் என்னை மட்டும்தான் பிரியவே முடியாது என்று புலம்பி இருக்கிறாள்… தன்னைத் தானே நொந்து கொள்வாள்.. உங்கிட்ட அடிமையாய் இருக்க எப்படி மாறினேன் என்று ஓடி வந்து கட்டிப் பிடித்து.. கடித்து வைப்பாள்…காற்றில் பறப்பேன்…

அவள்.. வேகங்கள் எனக்குள் விர்விர்ரென நீண்டுக் கொண்டே இருப்பதில் அவள் சிரிப்பாள்.. சிலிர்ப்பாள்.. நான் முகத்தை துடைத்துக் கொண்டேன். முகத்தில் விழுத்த நிறக் கதையின் திரைக் கதைக்குள் அவளை நிறமற்று அவளைத் தேடிக் கொண்டேயிருந்தேன்.. அவளேதான்…… வந்திருக்கிறாள்…. வேண்டுமென்றே எனக்கு முன்னால்  என் கண்ணில் படும் படியாக அமர்ந்திருக்கிறாள்….. என்னைச் சோதிக்கிறாள்.. ஆம்.. கடவுளின் சூட்சுமம் நிறைந்தவள் ….. சோதிப்பாள்….. வாதிப்பாள்.. ஆமோதிப்பாள்.. பின் மௌனிப்பாள்…..இறுக முடிந்து கொள்வாள்…

கேட்டு விடத் தோன்றியது…. ஒரு வேளை அவளாக இல்லாமல் வேறு யாராவதாக இருந்தால்…… என்ன செய்வது…?… அவள் இல்லை என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது…அவள் போல இருந்து விட்டாலும் பரவாயில்லை… அவள் திரும்பவே வேண்டாம்…. அவள் என்னைத்தேடி வந்திருக்கிறாள் எனபதே பெருத்த காதலின் நுரைத்த தளும்பல்…. நான் யோசித்தேன்.. படத்தின் இசைக்குள் நிறம் வழிந்து கொண்டிருந்தது போல…வியாபித்திருந்த திரை முழுக்க அவளின் ஓரக் கன்னம்.. நிறம் காட்டிக் கொண்டிருந்தது….

அவள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.. அவ்வப்போது தலை கோதிக் கொண்டாள்… நிறம் பட்டு நிறம் பட்டு…. அவள்.. முகம் வழியும் நிறப் பிரிகைகளில் நான் யாதுமற்ற காட்சியாகிப் போனேன்.. முட்டிகளில் கைகளை ஊன்றி சற்று முன் சாய்ந்து அவள் கூந்தல் அருகே மிக அருகே நெருங்கி அமர்ந்தேன்.. அதே வாசம்…..அதே கூந்தல்தான்… அவளின் உடல் வாசம் எனக்குத் தெரியும்… அது…நெளிந்து கொண்டே இருக்கும்.. தாமரைக் கனவுகள் போல…

அவள் என்னைக் காதலிக்காமல் இருக்கப் போவதில்லை…. அதுவும் எனக்குத் தெரியும். அதை அவளாகவே புரிய வைக்க இன்று வந்திருக்கிறாள்.. சரி அவளாகவே பேசட்டும்…நான்.. புலம்பிக் கொண்டே இருந்தேன்…

படம் முடிந்து விட்ட பிறகும்… நிறம்.. வீசிக் கொண்டேயிருந்தது…

ஒரு மணி நேரத்துக்கு பின்னால்.. என் வீட்டில் தொலைபேசி சிணுங்கியது….

“என்ன… நியந்தா செத்துப் போயிட்டாளா…!!!!!?” என்று கத்திக் கொண்டு மயங்கிச் சரிந்தாள் என் அம்மா…

என்னால் எவ்வளவு முயன்றும்… என் புகைப்படத்தில் தொங்கிய மாலையைத்தான் தள்ளிவிட முடிந்தது…

கவிஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad