\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இந்திரிய இன்பம்

Filed in இலக்கியம், கவிதை by on May 29, 2016 0 Comments

Tamil-village-girl-withflowers_620x775இரவினில் கட்டிலினில் இன்பக் களிப்பினில்
இருக்கும் உணர்வுகள் இறுதிகண்ட பின்னரே
இல்லாமல் போனதேன்? இதுவே மகிழ்ச்சியெனில்
இணைந்து முடிக்கையில் இலகுவாய் விலகுவதேன்?

இதயம் முழுக்க இனிக்க வைத்திடும்
இல்லாளின் ஸ்பரிசமெனில் இன்றுபோல் என்றுமே
இணக்கம் கொண்டு இன்புற்று இராமல்
இரைக்கெனப் பாய்ந்திடும் இனங்களாய்ப் பொருதுவதேன்?

பெண்டிருடன் கூடிடுதல் பேரின்பம் ஆகுமெனில்
பெற்றிடும் இன்பமெலாம் பேதையினால் கூடுமெனில்
பெட்டகத்தை நிரப்பிடவும் பேறுபல கிட்டிடவும்
பெருமுயற்சி தனையெடுத்துப் பேருவகைக்கு உழைப்பதுமேன்?

குலாவி மகிழ்வதும் கூடிக் களிப்பதும்
குலமகள் கோதிவிட்ட கூந்தலிலே துயில்வதும்
குவலயத்தில் இன்பமெனக் கூத்தாடும் மானுடரும்
குன்றுபோல் புகழ்நிறைக்கக் கூவிக்கூவி அலைவதுமேன்?

சந்திர மண்டலத்தைச் சாகசமாய்ச் சேர்ந்தவனும்
சடுதியிலே திரும்புவது சாணெண் உடலுக்கெனில்
சல்லாப வேட்கையுடன் சாவுவரைத் திரிவதின்றி
சகலரும் அமைதியின்றிச் சாதிக்கத் துடிப்பதுமேன்?

கன்னியரின் அங்கமொன்றே காளையற்கு நோக்கமெனில்
கட்டிலிலே சேர்வதொன்றே காலமெலாம் நினைப்புமெனில்
கழனியிலே கிடந்துழன்று காலைமாலை ஓய்வுமின்றிக்
கடுமுழைப்புக் காட்டியென்றும் காய்ந்தயர்ந்து உழலுவதேன்?

இந்திரிய சுகங்களதை ஈண்டிலையென மறுக்கவில்லை !
இன்பத்தை நெறியோடு ஈர்ப்பதிலொரு தவறுமில்லை !
இணைந்திருக்கும் பொழுதினிலும் ஈஸ்வரனை மனதிருத்தி
இறுதிவரை மகிழ்வுற்று ஈண்டுவாரா நெறியுணர்வோம் !!!

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad