\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஆட்டிஸம் – பகுதி 7

autism_2_620x238

(ஆட்டிஸம் – பகுதி 6)

செய்த விஷயங்களையே திரும்பத் திரும்பச் செய்வதென்பது
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான ஒரு பழக்கமாகும்.


தங்களுக்கென்று ஒரு சூழலை, கிட்டத்தட்ட ஒரு கூடு போல வகுத்துக் கொண்டு, அதனை விட்டு வெளியில் வராமல் வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களின் வழக்கமாகும். அந்தக் கூட்டை விட்டு வெளியே வந்தால் அவர்கள் மிகவும் அமைதியிழந்து காணப்படுவர். மன அழுத்தம் அதிகரித்து, பதட்டம் மிகுந்து துயரப்படுவர். சிகிச்சை செய்யும் முறைகளும், பள்ளிகளும் அந்தக் குழந்தைகளை வழக்கமான வழிமுறைகளிலிருந்து வெளிக்கொணர்ந்து, புதிதாகப் புரியும் செயல்களையும் சாவதானமாகவும், மகிழ்ச்சியாகவும் செய்வதற்கானப் பயிற்சி அளிப்பதே. வெளியுலகு பயத்தைத் தரும் என்பதே பொதுவான நிலையாகக் கொண்டவர்கள் பெரும்பாலான ஆட்டிஸக் குழந்தைகள். அந்த பயத்திலிருந்து வெளிக் கொணர்வதையே முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுவது இந்த சிகிச்சை முறை.

இந்தக் குழந்தைகளின் மூளை மிகவும் விசித்திரமாகச் செயல்படக் கூடியது. அந்த விசித்திரச் செயலின் வெளிப்பாடு திரும்பத் திரும்பச் செய்யப்படும் செயல்பாடுகளாக மாற்றமடைகிறது. எங்கள் மகனும் இதுபோன்ற செயல்களில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தான், இன்னும் சொல்லப் போனால் இப்பொழுதும் சிற்சில சமயங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறான். உதாரணமாகச் சொல்லப் போனால், அவனுக்குப் பிடித்த காலை உணவு வாஃபில் (waffle), தினமும் பள்ளி செல்வதற்கு முன்னால் வாஃபில் மட்டுமே சாப்பிடுவான். அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக, ஒரு நாள் ரொட்டித் துண்டைக் (bread) கொடுத்தோம். ரொட்டித் துண்டைத் தூக்கி எறிந்துவிட்டு, வாஃபிலை மட்டுமே உண்பான். பல மாதங்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு, வாஃபிலில் தடவிக் கொடுக்கும் அதே தேனை ரொட்டித் துண்டின் மீதும் தடவிக் கொடுக்க ஆரம்பித்தோம். அந்தச் சுவை ஒரே மாதிரியாக இருந்ததால், கொஞ்சம் கொஞ்சம் ரொட்டித் துண்டையும் சாப்பிட ஆரம்பித்தான். இப்படியே, படிப்படியாய், கொஞ்சம் கொஞ்சமாக வாஃபில் மட்டுமே தின்பதை நிறுத்தி, ரொட்டித் துண்டையும் சேர்த்து உண்ண ஆரம்பித்தான். இது, படிப்படியாக அந்தக் குழந்தைகளின் செயல்களை மாற்றுவதற்கான எடுத்துக்காட்டு. இதுபோல, பல விஷயங்களில் பொறுமையாகவும், உறுதியாகவும் பயிற்சி அளிப்பதன் முலம், இதனை மாற்றிட இயலும்.

திரும்பத் திரும்பச் செய்யும் செயல்கள் வெவ்வேறு
வகையானவை. மிகவும் முக்கியமான உதாரணமாக கைதட்டுவதைச் சொல்லலாம்.  குழந்தைகள் ஒரே வட்டமாக ஒடுவது, ஒரே காணொளியை மீண்டும் மீண்டும் பார்ப்பது, சொல்லிய ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்வது, மேலும் கீழும் குதித்துக் குதித்துச் செல்வது, திரும்பத் திரும்ப ஒரே வகையில் உடல் பாகங்களை அசைப்பதானால் உண்டாக்கும் ஒருவித தூண்டுதல் (stimming)  போன்றவற்றைச் சொல்லலாம். எங்கள் மகனிடம் இருக்கும் ஒரு போற்றுதலுக்குரிய வழக்கம், அவனுக்கு எழுத்துகளுக்கும், எண்களுக்கும் மேல் அளவிடற்கரிய ஈடுபாடு உண்டு. பெரும்பாலும் வார்த்தைகளும் சில சமயங்களில் எண்களுமாக, நிறைய எழுதுவான். எங்கள் வீட்டில், காகிதங்களும், எழுதுகோல்களும் எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறையும் அவன் எழுதி முடிக்கையில் அதை ஒரு சந்தர்ப்பமாக உபயோகித்து, அடுத்த நிலைக்கு வளர்வதற்குத் தேவையான மாற்றங்களைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்குவோம்.

ஒரு பந்தை எறிவது எப்படி, 20 லிருந்து தொடங்கி 1  வரை எழுதுவது எப்படி என்று பல புதிய விஷயங்களை அவனுக்கு அறிமுகப் படுத்துவோம். காலநேரம் என்பது இந்த விஷயத்தில் ரொம்பவும் முக்கியமானது. இரண்டு நிமிடங்கள் ஏதாவது எழுதுவான். அதன் பிறகு, சுமார் ஒன்றரை நொடிகள் வேறு ஏதோவொரு வேலையைச் செய்வான். நாங்களும் விடாமல் ஏதேனும் ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம், அவனுக்கு அவ்வளவாக ஈடுபாடில்லாத செயல்களிலும் எங்களைப் பின்பற்றும் சந்தர்ப்பத்தை நாங்களே வளர்த்துக் கொடுக்கிறோம். எப்பொழுதும் செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வது என்ற நிலையிலிருந்து புதிய விஷயங்களையும் செய்ய வைக்க முடியும். பல காலங்களாக முயற்சி செய்ததன் பலன், எங்கள் மகன் புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது வளர்ந்திருக்கிறது எனச் சொல்லலாம்.

இதுபோன்ற பயிற்சிகளில், தொடர்ச்சியாகவும், விடாமுயற்சியுடனும், உறுதியுடனும் செயல்படுவது என்பது மிகவும் முக்கியமான தேவையாகும். இது பல நாட்கள்,  ஏன் மாதங்கள் கூடத் தொடரும். மனதை உறுதியுடன் வைத்துக் கொண்டு, விடா முயற்சியுடன் தொடர வேண்டுமென்பது இன்றியமையாதது. குழந்தைகளின் மனநிலைக்கேற்ப தினந்தினம் சவாலாகத்தான் இருக்கும். இந்த முயற்சிகளுக்கு இடையில், குழந்தைகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்குச் சரியான அளவில் பயிற்சிகளைக் கொடுப்பது என்பதும் மிகவும் அவசியம். சில சந்தர்ப்பங்களில், சற்று அதிகமாகச் செய்ய வேண்டிய நிலையும் வரக்கூடும். அது போன்ற சந்தர்ப்பங்களில், சற்று அதிகப்படி எனக் கருதினாலும், அந்தச் சூழ்நிலைக்குத் தேவையென்பதை விளங்கிக் கொண்டு அதற்கேற்பச் செயல்படுவது அவசியம். அதாவது, அவர்களின் வழியிலேயே சென்று, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பதே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.

காலப்போக்கில், எங்கள் மகன் இந்த முறைக்கு நன்றாகப் பழகிக் கொண்டான். திரும்பத் திரும்பச் செய்யப்படும் செயல்களை மாற்றி, புதிய செயல்களைச் செய்வது என்பது கைவந்த கலையாகிவிட்டது அவனுக்கு. இசைப் பயிற்சிக்கு அவனை அழைத்துச் செல்வது வழக்கம், ஒரு குறிப்பிட்ட பாதையிலேயே செல்வோம். அவனுக்கு இந்தப் பாதை நன்றாகப் பரிச்சயமாகிவிட்டிருந்த பிறகு, ஒரு நாள், வீட்டிற்கு ஏதோ வாங்கவேண்டுமென்ற காரணத்தால் வேறு வழியில் காரில் செல்ல வேண்டியதாயிற்று. இது அவன் எதிர்பார்ப்பில் மிகப்பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவனுக்கு மிகுந்த வருத்தம், கோபம். ஏனெனில், நாங்கள் இசைப் பயிற்சி விட்டு, வேறு எங்கோ கூட்டிச் செல்கிறோம் என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நாங்கள் வீட்டை விட்டுக் கிளம்பும் முன்னரே, செல்லும் வழி குறித்தும், வழியில் எங்கேனும் செல்ல வேண்டுமென்றால் அந்த விவரங்கள் குறித்தும் முதலிலியே அவனிடம் விளக்கி விடுவோம். எந்த இடத்தில் வழக்கமான வழியிலிருந்து மாறி வேறொரு வழியில் செல்லத் தொடங்குவோமோ, அந்த இடத்திற்கு வரும்பொழுது, அவனுக்குப் பிடித்தமான இசையைப் போட்டு விடுவோம். ஆனாலும், அவன் அழுகை தொடர்ந்தது. ஆனால், அழுகையின் நேரம் ஐம்பது சதவிகிதமாகக் குறைந்தது. அவனுக்குப் பிடித்தமான உணவுப் பண்டங்களையும் உடன் எடுத்துச் செல்வோம். ஓரிரு வாரங்களில், பொதுவாக இந்த மாற்றங்கள் நல்ல வரவேற்பு அளிக்கத் தகுந்த நல்ல முன்னேற்றங்களை அவனிடம் ஏற்படுத்தி இருந்தது.

திரும்பத் திரும்ப ஒரே செயலைச் செய்யும் வழக்கத்தைக் குறைப்பதென்பது மிகவும் கடினமான விஷயம். சில காலங்கள் தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் நல்ல மாற்றங்களைக் காணலாம் என்பது மட்டும் உறுதி. இந்தப் பயணத்தில் உங்களின் “ஏர்லி சைல்ட்ஹுட்” பள்ளிகளும், சிகிச்சை அளிக்கும் நிறுவனங்களும், மற்ற பெற்றோர்களும் மிகப்பெரிய அளவில் உதவி புரிவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சமூக வலைத்தளங்களும், அதுபோன்ற இன்னபிற ஊடகங்களின் மூலமும் மற்ற பெற்றோர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலமும் இது குறித்த விழிப்புணர்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம். இது குழந்தைகளை விரைவாகக் குணப்படுத்தும் வகையில் மிகப் பெரிய உதவியாக அமையும்.

(தொடரும்)

  •         மூலம்: சுரேஷ் ரங்கமணி.
  •        மொழியாக்கம்: மதுசூதனன் வெ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad