\n"; } ?>
Top Ad
banner ad

காற்றில் உலவும் கீதங்கள் 2025: இந்த ஆண்டின் டாப் 10 பாடல்கள்!

தமிழ் இசையுலகம் ஒவ்வொரு ஆண்டும் புதுமையையும் உற்சாகத்தையும் அள்ளித் தெளித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல! மெலடி, துள்ளலிசை, நாட்டுப்புறம் எனப் பல ஜானர்களில் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் நிரந்தர இடம் பிடித்த பாடல்கள் ஏராளம். சமூக வலைத்தளங்களில் வைரலானவை, சினிமா ரசிகர்களின் வாயில் முணுமுணுக்கப்பட்டவை, இசை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவை என அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் (2025) அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 10 தமிழ்ப் பாடல்களின் பட்டியலை இங்கே வழங்குகிறோம்.

மோனிகா – கூலி

கடந்த சில வருடங்களைப் போல இல்லாவிட்டாலும், அனிருத் பாடல்களுக்கான மவுஸ் இன்னமும் குறையவில்லை என்பதற்கு இப்பாடல் இவ்வருடத்திய உதாரணம். இளைஞர்களை கவரும் இசை, ரசிகர்களைப் பற்றிக் கொள்ளும் நடனத் துணுக்கு, சமூக வலைத்தளங்களில் வேகமெடுக்கும் ஆர்வம் எனற வழக்கத்தைத் தனக்கான வெற்றி வழிமுறையாக்கி கொண்ட அனிருத், இப்பாடலிலும் அதைச் செய்து காட்டினார். படத்தின் கதைக்கு  தேவையில்லாத பாடல் என்றாலும், கதையோட்டத்திற்கு தேவையென கருதி சொருகிய பாடலில் வில்லன் ஆடிய ஆட்டத்திற்கு நல்ல வரவேற்பு.

 

வழித்துணையே – ட்ராகன்

சமீபத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இளம் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வருட தொடக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம். லியொன் ஜேம்ஸ் இசையில், சித் ஸ்ரீராம் மற்றும் சஞ்சனா பாடிய இப்பாடல், வெளிநாடுகளில் அழகாக படமாக்கப்பட்டிருந்தது. மேற்கத்திய இசையுடன் கர்னாடிக் இசையில் ஒரு காதல் துள்ளல் பாடலைக் கேட்க பேரனுபவமாக இருந்தது. கண்களுக்கு குளிர்ச்சியாக கயாது லோகர் வேறு இப்பாடலில் இருக்கிறார் என்பது இன்னொரு ப்ளஸ்.

 

ஊறும் ப்ளட் – டியுட்

வருடத்தின் இரண்டாம் பகுதியில் பிரதீப் ரங்கநாதன் கொடுத்த இவ்வருடத்திற்கான இரண்டாவது வெற்றியைக் கொடுத்த படம். யூ-ட்யூப் பாடல்கள் மூலம் பிரபலமாகி இருந்த சாய் அபயங்கர் தமிழில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே அறிமுகமான படமாக இது அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலமாக அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார் சாய் என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வித பாடல் என்றாலும், அதில் ஒரு மெல்லிய ராகத்தை உள்ளே புகுத்துவது இவருடைய பாடல் வெற்றியின் ரகசியம் எனலாம்.

 

ஜிங்குச்சா – தக் லைஃப்

நாயகனுக்கு பிறகு கமலும், மணிரத்னமும் இணைகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் மேஜிக் இப்படத்திலும் தொடர்ந்தது. கமலும், சிம்புவும் இணைந்து ஆடிய இப்பாடல், படத்தின் மேலான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது. ஆனால், படம் யாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை. கல்யாண பின்னணியில் வரும் இப்பாடலை கமல் எழுத, சக்திஸ்ரீ கோபாலன், வைசாலி சமந்த் மற்றும் ஆதித்யா ஆகியோர் பாடியிருந்தனர். கல்யாண வீடியோக்களுக்கு பின்னணியில் சேர்க்க ஒரு பாடல் கிடைத்தது தான் நல்ல விஷயம். 

 

முகை மழை – டூரிஸ்ட் ஃபேமிலி

இவ்வருடத்தின் சிறந்த குடும்பப் படம் என்று கொண்டாடப்பட்ட படம், டூரிஸ்ட் பேமிலி. ஈழத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பம் சந்திக்கும் நிகழ்வுகளை, அனுபவத் தொகுப்புகளாக, மனதிற்கு இதமான வகையில் எடுத்திருந்தார் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவித். தியேட்டர், ஓடிடி என்று அனைத்து தளங்களிலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த படம். ஷான் ரோல்டனின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கான நியாயத்தைச் சேர்த்து இருந்தன.

 

கனிமா – ரெட்ரோ

சூர்யா நடிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ஒரு நல்ல வரவேற்பாக இப்பாடல் அமைந்தது. ஆனால், பெரும்பாலான ரசிகர்களை இப்படம் கவரவில்லை. நாயகனின் சிரிப்பு என்பதைச் சுற்றி என்னென்னமோ கதை அமைத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விளங்காமல் போனது. ஆனால், சந்தோஷ் நாராயணனின் இப்பாடல், வெளியான வேகத்தில் சமூக வலைத்தளங்களில் பற்றிக்கொண்டது. 80ஸ் டி.ஆர். பாணி இசையை, 2கே கிட்ஸ்க்கு கொண்டு வந்திருந்தார் ச.நா. படத்தின் பாடலிலும் திரையில் தோன்றி சூர்யாவுடன் ஆட்டம் போட்டு இருந்தார்.

 

என்னை இழுக்குதடி – காதலிக்க நேரமில்லை

கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்த காதல் படத்தில் ரவி மோகன், நித்யா மேனன் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், இப்பாடலும் படத்திற்கான முகவரியாக அமைந்திருந்தன. ரசிகர்களைப் படமும் பெரிதும் ஏமாற்றவில்லை. பாடலாசிரியர் விவேக் எழுதிய இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தீ ஆகியோர், ஒரு வித்தியாசமான குரல் கூட்டணியில் பாடியிருந்தனர். படம் வெளிவரும் முன்பு, படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் வெளியிட்ட இந்த வீடியோ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

கோல்டன் ஸ்பர்ரோ – நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

ஒரு பக்கம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பலமொழி படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் புதுமுகங்களை வைத்து பாடல், இயக்கம் என்று தனது பன்முக திறமைகளை வெளிக்காட்டி கொண்டு இருந்தார் தனுஷ்.”நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற அழகான தலைப்பை “NEEK” என்று சுருக்கி, உண்மையான படப்பெயரே மறந்து போய் விட்டது. தனுஷ் ஒவ்வொரு காலத்தில், அனிருத், ஷான் ரோல்டன் என்று ஒவ்வொரு இசையமைப்பாளரிடம் கூட்டணி வைப்பார். இப்போது, ஜி.வி.பிரகாஷ் உடனான காலம். தவில் இசையில், ஆங்கிலக் கலப்பில் தனுஷ் எழுதிய இப்பாடல் இளசுகளிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

 

என் பாட்டன் – இட்லி கடை

முன்னபின்ன இருந்தாலும், இயக்குனராக தனுஷ் காட்டும் வெரைட்டி ஆச்சரியமூட்டும். பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், பிறகு இந்த இட்லி கடை என்று வெவ்வேறு களங்களில் படங்களை இயக்கி வருகிறார். அப்பாவின் இட்லி கடை என்ற கதையை இந்தத் தலைமுறைக்கு படமாக எடுத்து செல்லலாம் என்ற எண்ணமே ஆச்சரியம் தான். அப்படி இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷின் இசை பக்கப்பலமாக இருந்தது. ஆண்டனி தாசனின் குரலில் வரும் இப்பாடல், இப்படத்தின் ஆன்மாவை உணர்த்தும் பாடலாக அமைந்தது.

 

தீக்கொளுத்தி – பைசன் காளமாடன்

தென்மாவட்ட சாதி பூசல், கலவரப் பின்னணியில் ஒரு கபடி வீரனின் போராட்டக் கதையை அவருக்கே உரிய பாணியில் சொல்லி இருந்தார், இயக்குனர் மாரி செல்வராஜ். நாயகனின் விளையாட்டு வாழ்க்கை அனுபவத்தை விவரித்த இப்படத்தில், அவனுடைய காதல் வாழ்வின் வலியை வெளிப்படுத்தும் பாடலாக “தீக்கொளுத்தி” அமைந்தது. அந்த வலியை தனது குரலில் அழகாக வெளிப்படுத்தி பாடியிருந்தார் இசையமைப்பார் நிவாஸ் கே. பிரசன்னா. அமைதியாக ஆங்காங்கே அழகான பாடல்களை உருவாக்கிக்கொண்டு இருந்த நிவாஸ்க்கு, இப்படம் நல்ல ஒரு திறப்பாக அமைந்தது.

இந்த ஆண்டின் சிறந்த பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து, உங்கள் அபிமானப் பாடல் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை கமென்ட் பகுதியில் தெரிவியுங்கள்!

 

  • சரவணகுமரன்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad